என் மலர்tooltip icon

    வேலூர்

    தங்கக்கோவில் பிரதிஷ்டை செய்து 14-வது ஆண்டு விழாவையொட்டி கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை ஆகியவை நடந்தது.அதில் சக்தி அம்மா பங்கேற்று தலைமை தாங்கி யாகத்தை நடத்தினார்.
    வேலூர் ஸ்ரீபுரத்தில் உள்ள தங்கக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தங்கக்கோவில் பிரதிஷ்டை செய்து 14-வது ஆண்டு விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 6.30 மணியில் இருந்து காலை 7 மணிவரை கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை ஆகியவை நடந்தது.

    அதைத்தொடர்ந்து காலை 7 மணியில் இருந்து காலை 10 மணிவரை ஸ்ரீமகாலட்சுமி மூல மந்திர ஹோமம், ஸ்ரீசூக்த அஷ்ட லட்சுமி ஹோமம் நடந்தது. அதில் சக்தி அம்மா பங்கேற்று தலைமை தாங்கி யாகத்தை நடத்தினார். அப்போது மகா ஆரத்தி நடந்தது. ஸ்ரீலட்சுமிநாராயணிக்கு சக்தி அம்மா மகா அபிஷேகம், சிறப்புப்பூஜைகள் ஆகியவற்றை செய்தார். பின்னர் பக்தர்களுக்கு சக்தி அம்மா ஆசி வழங்கினார்.

    மேற்கண்ட நிகழ்ச்சியில் தங்கக்கோவில் இயக்குனர் சுரேஷ், நாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி, அறங்காவலர் சவுந்தரராஜன், மேலாளர் சம்பத் மற்றும் பக்தர்கள் சமூக விலகலை கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் கலந்து கொண்டனர். முன்னதாக பக்தர்கள் ஊர்வலமாக வந்து சக்தி அம்மாவுக்கு சீர்வரிசை அளித்தனர்.
    வேலூரில் கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
    வேலூர்:

    வேலூர் தெற்கு போலீசார் கொசப்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்.

    மேலும் அவரை போலீசார் சோதனை செய்தபோது அவரிடம் 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. அவர் வேலூர் கலாஸ்பாளையத்தை சேர்ந்த நவீன்குமார் (வயது 20) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
    வேலூர் அருகே வாகனம் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நேற்று அதிகாலை வாகனம் மோதி இறந்து கிடந்தார். இதைக்கண்ட பொதுமக்கள் விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு சென்று போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூதாட்டி மஞ்சள் நிற சேலை அணிந்திருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து இறந்த மூதாட்டி யார், எந்த பகுதியை சேர்ந்தவர்? அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
    வேலூர் பழைய பஸ்நிலையத்தில் முககவசம் அணியாத 109 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ்நிலையங்கள், மார்க்கெட், பஜார் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

    அதைத்தவிர பொதுஇடங்களில் முககவசம் அணியாத நபர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள், கடைகள், ஓட்டல், வணிகவளாகங்களில் கொரோனா தடுப்பு விதியை பின்பற்றாதவர்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் அபராதம் விதித்து வருகிறார்கள். ஆனாலும் பலர் கொரோனா பரவல் அச்சமின்றி பொதுஇடங்களில் முககவசம் அணியாமல் சுற்றித்திரிவதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன.

    அதையடுத்து முககவசம் அணியாத நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும்படி மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவிட்டார். அதன்பேரில் 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட பழைய பஸ்நிலையத்தில் நேற்று சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில், முககவசம் அணியாமல் பஸ் ஏற வந்த பயணிகள் மற்றும் அந்த வழியாக பிற இடங்களுக்கு சென்ற பொதுமக்கள், மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள் மடக்கி அவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் முககவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுரை கூறி, மாநகராட்சி சார்பில் முககவசம் ஒன்று வழங்கப்பட்டது.

    கொரோனா பரிசோதனை செய்ய மறுத்தவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு, உடனடியாக வசூல் செய்யப்பட்டது. இந்த சிறப்பு முகாமில் முக கவசம் அணியாத 109 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 44 பேருக்கு ரூ.200 வீதம் ரூ.8,800 அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
    திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி புது வசூர் கே.ஜி.என் நகரை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 38). வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கவிதா திருவண்ணாமலையில் தங்கியிருந்து டவுன் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

    நேற்று முன்தினம் கவிதாவுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் விஜயராகவன் வீட்டை பூட்டிவிட்டு கவிதாவை பார்ப்பதற்காக திருவண்ணாமலைக்குச் சென்று விட்டார்.

    இதனை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த 36 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். விஜயராகவன் வீட்டு கதவு திறந்து கிடந்தது கண்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அவருக்கு தகவல் தெரிவித்தனர். விஜயராகவன் வந்து பார்த்தபோது வீட்டிலிருந்து நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.

    இதுபற்றி வேலூர் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் கைரேகைகள் சேகரிக்கப்பட்டது. அதில் 2 பேரின் கைரேகைகள் அவரது வீட்டிலிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொள்ளையர்கள் 2 பேர் வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

    அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளையர்களை விரைவில் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

    சத்துவாச்சாரி பகுதியில் கடந்த சில நாட்களாக பூட்டிய வீடுகளில் கொள்ளை நடப்பது தொடர்கதையாக உள்ளது. மேலும் செயின் பறிப்பு, பைக் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன.

    இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



    காட்பாடியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு இன்று நடைபெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
    வேலூர்:

    காட்பாடி பிரம்மபுரத்தை சேர்ந்த (வயது 14) சிறுமிக்கும் காங்கேயநல்லூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 22) என்ற வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    அதை தொடர்ந்து அவர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை காங்கேயநல்லூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடக்க இருந்தது.

    இந்த நிலையில் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு குழந்தை திருமணம் நடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் சிறுமி வீட்டுக்கும், வாலிபர் வீட்டுக்கும் நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கு 14 வயது ஆவதும் 10-ம் வகுப்பு படித்து வருவதும் தெரிய வந்தது.

    அதைத்தொடர்ந்து இருவருக்கும் இன்று நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் சிறுமியையும் வாலிபரையும் அவர்கள் வேலூரில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    இதேபோல வேலூர் சலவன்பேட்டை பகுதியில் 9-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் 35 வயது வாலிபருக்கும் இன்று காலை திருமணம் நடக்க இருந்தது.

    சமூகநலத்துறை அதிகாரிகள் நேற்று இரவு மாணவியின் வீட்டிற்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

    இது தொடர்பாக மாணவியின் பெற்றோரிடம் சமூகநலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தத்தில் கைதி தப்பி ஓடிய சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர், 2 போலீஸ்காரர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் மேல்பட்டி அருகே உள்ள மேல்கொத்தகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 72). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55), இருவருக்கும் நிலத்தகராறு சம்பந்தமாக முன்விரோதம் உள்ளது.

    நேற்று முன்தினம் மோகனின் மகன் சிவராமன் இவரது மனைவி விஷ்ணு பிரியா இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ராஜேந்திரன் மகன் சத்யராஜ் (30). அவர்களை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். மேலும் கத்தியால் சிவராமன் மற்றும் அவருடைய மனைவியை வெட்டினார்.

    இதில் படுகாயமடைந்த இருவரும் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக மேல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யராஜை கைது செய்தனர். அவரை குடியாத்தம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்துவதற்கு ஏற்பாடு செய்தனர்.

    மேல்பட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கரன், போலீஸ்காரர்கள் பாலாஜி, ஜலாலுதீன் ஆகியோர் சத்யராஜை குடியாத்தம் நீதிபதி குடியிருப்பில் உள்ள நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

    அப்போது சத்யராஜ் போலீசாரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். போலீசார் அவரை விரட்டிச் சென்றும் பிடிக்க முடியவில்லை.

    இந்த சம்பவம் குடியாத்தத்தில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சத்யராஜை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் விசாரணை நடத்தினார்.

    இதனைத் தொடர்ந்து கைதியை தப்பவிட்ட மேல்பட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கரன், போலீஸ்காரர்கள் பாலாஜி, ஜலாலுதீன் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
    குடியாத்தத்தில் போலீசாரை தள்ளிவிட்டு கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பேரணாம்பட்டு:

    வேலூர் மாவட்டம் மேல்பட்டி அருகே உள்ள மேல்கொத்தகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 72). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இருவருக்கும் நிலத்தகராறு சம்பந்தமாக முன்விரோதம் உள்ளது.

    கடந்த 13-ந்தேதி ராஜேந்திரனுக்கும் மோகனின் மகன் சிவராமன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் சிவராமன் தாக்கியதில் காயமடைந்த ராஜேந்திரன் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையே சிவராமனுக்கு சொந்தமான மாட்டுக்கொட்டகை தீயில் எரிந்து நாசமானது. ராஜேந்திரன் மகன் சத்யராஜ் (31) என்பவர் தீ வைத்ததால் மாட்டுக் கொட்டகை எரிந்துவிட்டதாக சிவராமன் மேல்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று சிவராமன் அவரது மனைவி விஷ்ணு பிரியா மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சத்யராஜ் அவர்களை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார்.

    மேலும் கத்தியால் சிவராமன் மற்றும் அவருடைய மனைவியை வெட்டினார். இதில் படுகாயமடைந்த இருவரும் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இது தொடர்பாக மேல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யராஜை நேற்று கைது செய்தனர். அவரை குடியாத்தம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்துவதற்கு ஏற்பாடு செய்தனர்.

    மேல்பட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கரன், காவலர்கள் பாலாஜி, ஜலாலுதீன் ஆகியோர் சத்யராஜை நேற்று இரவு குடியாத்தம் நீதிபதி குடியிருப்பில் உள்ள நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

    அப்போது சத்யராஜ் போலீசாரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். போலீசார் அவரை விரட்டிச் சென்றும் பிடிக்க முடியவில்லை. இந்த சம்பவம் குடியாத்தத்தில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சத்யராஜை தேடி வருகின்றனர்.
    2001-ல் இருந்து 2006 வரை வேலூர் மாவட்ட அரசு வழக்கறிஞராகவும், 2011 முதல் 2014 வரை பொது வழக்கறிஞராகவும் செங்குட்டுவன் பதவி வகித்தார்.
    வேலூர்:

    வேலூர் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி செங்குட்டுவன் (வயது 65). காட்பாடி திருநகரில் வசித்து வந்தார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் செங்குட்டுவன் மரணமடைந்தார்.

    அவருடைய உடல் திருநகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று மாலை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எரிவாயு தகன மேடையில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

    2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டு வேலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஏ.சி.சண்முகத்தை 59,393 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    30 ஆண்டுகளுக்கு பின்னர் வேலூரில் அ.தி.மு.க. சார்பில் வெற்றிபெற்ற 2-வது வேட்பாளராக இவர் கருதப்படுகிறார்.

    2001-ல் இருந்து 2006 வரை வேலூர் மாவட்ட அரசு வழக்கறிஞராகவும், 2011 முதல் 2014 வரை பொது வழக்கறிஞராகவும் பதவி வகித்தார். 1980-ம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் தனது மாணவர் நாட்களில் அ.தி.மு.க. உறுப்பினராக இருந்தார்.

    அ.தி.மு.க இரண்டாக உடைந்தபோது அ.ம.மு.க.வில் சேர்ந்தார். பின்னர் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

    செங்குட்டுவனின் மனைவி ஜெயந்தி வேலூர் எல்.ஐ.சி. அலுவலகத்தில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார் அவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
    கொலை செய்யப்பட்ட விக்னேஷ் யாருடன் வெளியே சென்றார் என போலீசார் விசாரணை நடத்தினர்.
    வேலூர்:

    வேலூர் கஸ்பா, வ.உ.சி.தெருவை சேர்ந்தவர் புஜ்ஜி என்கிற விக்னேஷ் (வயது 24), பால் கறக்கும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை கஸ்பா சுடுகாட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல்வேறு இடங்களில் கத்தி வெட்டு காயங்கள் இருந்தன. தகவல் அறிந்த வேலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விக்னேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும், அவரை சுடுகாட்டிற்கு அழைத்து சென்று வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. கொலை செய்யப்பட்ட விக்னேஷ் யாருடன் வெளியே சென்றார் என போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் கரிமுல்லா என்ற விஜயகுமார் (26), பெருமாள் நகரைச் சேர்ந்த விஷ்ணு (25), கஸ்பா சுண்ணாம்புக்கார தெருவைச் சேர்ந்த சுபாஷ் (21), செல்வபுரத்தைச் சேர்ந்த நவீன் (20), கஸ்பா மசூதி தெருவைச் சேர்ந்த அசார் என்ற காஜாகவுஸ் முகைதீன் (23) ஆகியோருடன் வெளியே சென்றது தெரியவந்தது.

    போலீசார் 5 பேரையும் பிடித்து விசாரித்தனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    அதன்விவரம் வருமாறு:-

    15-ந் தேதி இரவு விக்னேஷ் அவரது நண்பர்கள் விஜயகுமார் உள்பட 5 பேருடன் சேர்ந்து கஸ்பா சுடுகாட்டில் அமர்ந்து மது குடித்தனர். அப்போது விஜயகுமாரின் தங்கை குறித்து விக்னேஷ் கேலி செய்து ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை விஜயகுமார் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் கத்தியை எடுத்து விஜயகுமாரின் கையில் வெட்டினார். அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே விஜயகுமார் அருகில் உள்ள அவரது வீட்டிற்கு ஓடிச் சென்று பெரியகத்தியை எடுத்து வந்தார். அவர் விக்னேசை வெட்டியதாக தெரிகிறது. அவருடன் சேர்ந்து விஷ்ணுவும் கத்தியால் குத்தினார். இருவரும் வெட்டியதில் விக்னேஷ் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இந்த கொலைக்கு சுபாஷ், நவீன், அசார் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளது போலீசாருக்கு தெரியவந்தது. இதை அவர்கள் போலீசாரிடம் வாக்குமூலமாக தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து விஜயகுமார் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாணியம்பாடி அருகே கார் டயர் வெடித்து பைக் மீது மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் தொடர்பாக அம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 25). டெய்லர்.

    அதே ஊரை சேர்ந்தவர் மணிகண்டன் (30). கட்டிட மேஸ்திரி. இவர்கள் இருவரும் பைக்கில் வாணியம்பாடி நெடுஞ்சாலையில் உள்ள புத்துகோவில் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து வேலூர் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. காரின் டயர் திடீரென வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டி ஓடி மணிகண்டன், ஜெயச்சந்திரன் வந்த பைக் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திலேயே ஜெயச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது மணிகண்டன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கே.வி.குப்பம் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கே.வி.குப்பம்:

    கே.வி.குப்பத்தை அடுத்த மாச்சனூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே ஊரை சேர்ந்த வேல்முருகன் (வயது 45) என்பவர் வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டு இருந்தார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
    ×