என் மலர்
வேலூர்
- அதிகாரிகள் உத்தரவால் நடவடிக்கை
- கலெக்டர் பார்வையிட்டார்
வேலூர்:
தமிழக சட்டமன்ற பொது தேர்தலின் போது பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டனர்.
அதன்படி வேலூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் விவி பேட் கண்ட்ரோல் யூனிட் உள்ளிட்ட எந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
இதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று காலையில் பார்வையிட்டார்.
தேர்தலின் போது பழுதடைந்த 62 மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் விவிபேட் உட்பட மொத்தம் 436 எந்திரங்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர்.
- மேம்பாலத்தின் வரைபடமும், திட்ட மதிப்பீடும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்
- கதிர் ஆனந்த் எம்.பி.தகவல்
வேலூர்:
வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
காட்பாடி ரெயில்வே மேம்பாலம் ஓடுதளத்தின் இணைப்புகள் வலுவிழந்திருந்ததால் அதனை சீர்செய்யும் பணிகள் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு பழுதுபார்க்கும் பணி முழு வீச்சில் நடைபெற்றது.
பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. ஒரே மாதத்தில் போர்க்கால அடிப்படையில் அந்தப் பாலத்தின் ஓடுத்தளம் முழுவதுமாக சரிசெய்யப்பட்டு முழு போக்குவரத்திற்கு தயார் நிலைக்கு உட்படுத்திய அதிகாரிகள், ரெயில்வே துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், போக்குவரத்துத்துறை போலீசார் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து கொள்கின்றேன்.
அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்தை கணக்கில் கொண்டு இப்போது இருக்கக்கூடிய பாலத்திற்கு அருகில் ஒரு புதிய மேம்பாலத்தை அமைத்திட தமிழக அரசு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.
தமிழக அரசின் ஆய்வு அறிக்கை வரப்பெற்ற உடன் குறுகிய காலத்திற்கு உள்ளாகவே ஆய்வு அறிக்கை பரிசீலிக்கப்பட்டு புதிய மேம்பாலத்திற்கான வரைபடமும், திட்ட மதிப்பீடு பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- போக்குவரத்து பாதிப்பு
- 50 பேர் கைது
வேலூர்:
அம்பேத்கர், பெரியார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் இழிவுபடுத்தி பேசி வருவதாக கூறி விடுதலைகள் சிறுத்தைகள் கட்சியினர் வேலூர் ராஜா திரையரங்கம் அருகே அண்ணாசாலையில் திடீரென இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அர்ஜூன்சம்பத்தை கைது செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட மாவட்டத் துணைச் செயலாளர் இளங்கோ, பொருளாளர் சச்சின் குமார், தொகுதி செயலாளர்கள் கோட்டி என்ற கோவேந்தன் வையாபுரி, விமல் உட்பட சுமார் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
- பெண்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர்
- ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்
வேலூர்:
நதிகளை பாதுகாக்கவும், புனிதப்படுத்தவும் வலியுறுத்தி வேலூரில் கடந்த புதன்கிழமை பாலாற்று பெருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று இரவு பெருவிழா நிறைவடைந்தது. இதையொட்டி, பாலாற்றுக்கு மகா தீபாராதனையுடன் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பில், நதிகளை பாதுகாக்கவும், புனிதப்படுத்தவும் வலியுறுத்தி, தமிழகத்தில் ஏற்கெனவே காவிரி, வைகை, தாமிரபரணி, தென்பெண்ணை ஆகிய நதிகளுக்கு விழாக்கள் நடத்தப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம், ஸ்ரீபு ரம் நாராயணி பீடம் ஆகியவற்றின் சார்பில் பாலாற்றுப் பெருவிழா வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி மஹாலில் புதன்கிழமை தொடங்கி 5 நாள்கள் நடை பெற்றது.
முதல் நாள் நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று விழாவை தொடங்கி வைத்தார்.
மூன்றாம் நாள் நிகழ்வில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தொடர்ந்து நாராயணி பீடம் ஸ்ரீசக்திஅம்மா தலைமையில் தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்ற இந்த விழாவில் காலை யாக நிகழ்ச் சிகளும், மாலையில் பாலாற்றுக்கு ஆரத்தி நிகழ்வும் நடைபெற்றன.
அத்துடன், முதல் நாள் நிகழ்வில் தேசிய அளவில் உள்ள சந்நியாசிகள் பங்கேற்கும் மாநாடு, 2 ஆம் நாள் நிகழ்வில் தமிழகத்தின் துறவிகள், ஆதீனங்கள் பங்கேற்கும் மாநாடும், 3-ம் நாள் நிகழ்வில்பெண் துறவிகள் பங்கேற்கும் மாநாடும், 4-ஆம் நாள் நிகழ்வில் பசு, நீர் நிலைகள் பாதுகாப்பு மாநாடும், 5– ஆம் நாளானஞாயிற்றுக்கிழமை கிராம கோயில் பூசாரிகள் பங்கேற்கும் மாநாடும் நடைபெற்றன.
கடந்த 5 நாள்களாக நடைபெற்று வந்த பாலாறு நதி பெருவிழா நேற்று இரவு 7 மணியுடன் நிறைவு பெற்றது.
இதையொட்டி, புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பாலாற்றில் சிறப்பு பூஜைகளும், யாகங்களும் நடைபெற்றன. தொடர்ந்துநாட்டிலுள்ள பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த புனித நீரைப் பாலாற்றில் ஊற்றி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பெண்களும் பாலாற்றில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.
இதையடுத்து, பாலாறு அன்னைக்கு மகா தீப ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வாரணாசியில் நடைபெறுவதைபோல் பாலாற்றை நோக்கி ஒரே நேரத்தில் மகா தீப ஆரத்தி காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
- குறைதீர் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காயிதே மில்லத் அரங்கு முன்பு தாங்கள் மறைத்து கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து 8 பேரும் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
- இதனை கண்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஒரே நேரத்தில் 8 பேர் தீக்குளிக்க முயன்றதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி பேஸ் 2 பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 60) வழக்கறிஞராக உள்ளார்.
இவரது சகோதரர்கள், சகோதரி மற்றும் குடும்பத்தினர் 8 பேர் இன்று காலை வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். குறைதீர் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காயிதே மில்லத் அரங்கு முன்பு தாங்கள் மறைத்து கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து 8 பேரும் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
இதனை கண்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஒரே நேரத்தில் 8 பேர் தீக்குளிக்க முயன்றதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுக்கு சொந்தமான நிலம் வேலூர் காந்தி ரோட்டில் உள்ளது. இந்த நிலத்திற்கு செல்ல விடாமல் அடியாட்களை வைத்து மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது.
- அரசு தவறும் பட்சத்தில் மக்கள் பிரச்சினையில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களில் ஈடுபடுவோம் என கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
வேலூர்:
வேலூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு காட்பாடியில் ரெயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்தார்.
இதையடுத்து அவர் மீது 6 பிரிவுகளின் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதையடுத்து அவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி இன்று வேலூர் ஜெயிலில் உள்ள எஸ்.ஆர்.கே.அப்புவை நேரில் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது;-
காட்பாடியில் நீண்ட காலமாக ரெயில்வே பாலத்தை திறக்காததால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை வேண்டுமென்றே ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
வருகிற 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு திட்டமிட்டபடி நடந்தே தீரும். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் பொதுக்குழுவிற்கு ஏற்கனவே அனுமதி அளித்து விட்டார்.
பணம் கொடுத்து மாவட்ட செயலாளர்களை ஈபிஎஸ் வளைப்பதாக டிடிவி தினகரன் கூறிவருகிறார். அவருக்கு எச்சரிக்கை விடுக்கிறோம், அவர் இந்த கட்சியால் ஆதாயம் பெற்று சுபயோகத்தை அனுபவித்து கொண்டிருப்பவர் அவருக்கு கட்சியை பற்றி பேச அருகதை கிடையாது. தொடர்ந்து இதுபோல் அவர் பேசினால் வழக்கு போட்டு அவரை நீதிமன்றத்தில் நிற்க வைப்போம்.
சசிகலா பாவம் நானும் இருக்கிறேன் என பேசி வருகிறார். அவரை பற்றி பேச அவசியம் இல்லை. உண்மையாக உழைத்தவர்களை உயிர்தொண்டர்களை பிரிக்க முடியாது கட்சியினால் ஆதாயம் அடைந்த சந்தர்ப்பவாதிகள், விரக்தியில் பேசி வருகிறார்கள்.
தொடர்ந்து மக்கள் பிரச்சனைகளுக்காக போராடும் அ.தி.மு.க.வினரை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளுக்கெல்லாம் அதிமுக ஒருபோதும் அஞ்சாது.
தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது, அரசு தவறும் பட்சத்தில் மக்கள் பிரச்சினையில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன், முன்னாள் எம்.பி. ஹரி, வேலூர் மாவட்ட பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனி சதீஷ்குமார், தாஸ், பி.எஸ்.பழனி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் உடன் இருந்தனர்.
- ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்
- பல்வேறு நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது
வேலூர்:
காட்பாடி விருதம்பட்டு மோட்டூர் பிள்ளையார் கோவில் அருகில் ஜூனியர் ரெட்கிராஸ் அலுவலகத்தில் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
காட்பாடி ரெட் கிராஸ் அவைத்தலைவர் செ.நா. ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். முன்னதாக அவை துணைத் தலைவர் ஆர் சீனிவாசன் வரவேற்று பேசினார். துணைத் தலைவர் ஆர் விஜயகுமாரி பொருளாளர் வி.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாண்மை குழு உறுப்பினர் எஸ் ரமேஷ் குமார் ஜெயின், ஸ்ரீதரன் ஜெயின், துளிர் பள்ளியின் தலைமை ஆசிரியை த.கனகா, சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முகாமினை காட்பாடி டி.எஸ்.பி. பழனி மற்றும் சென்னை மாநகராட்சியின் துணை கலெக்டர் பி.சுமதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ெதாடங்கி வைத்தனர்.
முகாமில் சர்க்கரை நோய், தோல் நோய்கள், மற்றும் மூட்டு நோய்கள் போன்ற அனைத்து நோய்களுக்கும் சித்த மருத்துவர் வசந்த் மில்டன் ராஜ் மற்றும் மருத்துவர் வானதி குழுவினர் இலவசமாக சிகிச்சை அளித்தனர்.
இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றுக் கொண்டனர். அனைவருக்கும் சித்த மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.
- மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் டீக்காராமன் தொடங்கி வைத்தார்
- ஏராளமானோலர் கலந்து கொண்டனர்.
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ராஜீவ்காந்தி தேசிய ஆட்டோஓட்டுநர்கள் நலச்சங்கம் இன்று தொடங்கப்பட்டது.
வேலூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் டீக்காராமன், நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி கொடிஏற்றி இனிப்பு வழங்கி பேசினார்.
வாகித்பாஷா முன்னிலை வகித்தார். மண்டல தலைவர்கள் ரகு, ஜான்பீட்டர், வார்டு தலைவர்கள் பாஸ்கரன் கவுஷிக் கப்பல்மணி, துளசிராமன், தங்கமணி, ஹரிகிருஷ்ணன். முபாரக்பாஷா, இம்தியாஸ்காதரி மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இதில் ஆட்டோ சங்க தலைவர் முனியப்பன், செயலாளர்கள் வெங்கடேசன், பொருளாளர் பூபதி துணைத் தலைவர்கள், குமரன். பாலா.துணைசெயலாளர்கள், பாபு, தண்டபாணி. மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- மாணவர்களுக்கு சிரமம் ஏற்படுவதால் முன்கூட்டிய அறிவிப்பு
- 17-ந்தேதி 12 மையங்களில் நடக்கிறது
வேலூர்:
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 12 மையங்களில் 'நீட்' தேர்வை 7 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
மருத்துவ படிப்பில் சேருவதற்கான 'நீட்' தேர்வு வருகிற 17-ந்தேதி தேசிய தேர்வுகள் முகமை சார்பில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடக்கிறது.
இதற்காக, நாடு முழுவதும் 546 முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சென்னை, வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், தேர்வுக்கு சில நாட்களே உள்ள நிலையில், தேர்வை சிறப்பாக நடத்தி முடிக்க தேசிய தேர்வுகள் முகமை தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, கடந்த ஆண்டு வரை தேர்வுக்கான 'ஹால் டிக்கெட்' வெளியிடும் போது தான், தேர்வர்களுக்கு எந்த மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரியவரும். இது, தேர்வு நேரத்தில் தேர்வர்களுக்கு சிரமமாக உள்ளதாக புகார் எழுந்தது.
இதையடுத்து 'நீட்' தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு, எந்த நகரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ளும் வசதியை, முதல்முறையாக தேசிய தேர்வுகள் முகமை இந்த ஆண்டு ஏற்படுத்தியுள்ளது.
இதுதவிர, 'நீட்' தேர்வுக்கு இறுதி செய்யப்பட்ட மையங்களில், தேர்வுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் தேவையான வசதிகள் செய்வதற்கான நடவடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொள்ளவும், 'நீட்' தேர்வு மைய நகர ஒருங்கிணைப்பாளர்களுக்கு தேசிய தேர்வுகள் முகமை அறிவுறுத்தியுள்ளது.
அதற்கேற்ப, 'நீட்' தேர்வு மையங்கள் குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளது.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 'நீட்' தேர்வுக்கு, காட்பாடி சிருஷ்டி வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளி மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வி.ஐ.டி. பல்கலைக்கழகம், சன்பீம் பள்ளி, கிங்ஸ்டன் பள்ளி, சாயிநாதபுரம் டி.கே.எம். மகளிர் கல்லூரி மற்றும் வி.வி.என்.கே.எம். சீனியர் செகண்டரி பள்ளி, திருமலைக்கோடி ஸ்பார்க் பள்ளி, ஸ்ரீபுரம் நாராயணி பள்ளி, சென்னாங்குப்பம் வித்யாலட்சுமி பள்ளி, வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் கல்லூரி, ராணிப்பேட்டை டி.ஏ.வி. பெல் பள்ளி ஆகிய 12 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 7 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுத உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- குற்றங்களை தடுக்க நடவடிக்கை
- கலெக்டர் தகவல்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே செல்லும் கழிவுநீர் கால்வாயை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார் உதவி கலெக்டர் பூங்கொடி மற்றும் தாசில்தார் செந்தில் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது:-
வேலூர் மாநகராட்சி பகுதியில் வெள்ள தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
கால்வாயில் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் கால்வாய்களில் குப்பைகளை கொட்ட கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் மாநகராட்சி ஊழியர்களும் கால்வாய்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் வாரத்திற்கு ஒரு முறை இதே போல் ஆய்வு நடைபெறும். பொதுமக்கள் யாரும் கால்வாய்களில் குப்பை கொட்ட கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.
வேலூர் மாநகராட்சியில் குற்றங்களை தடுக்கும் வகையில் மேலும் 650 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. குறிப்பாக பாலாற்றில் பல்வேறு மறைமுக குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. ஏற்கனவே ஒரு குற்ற சம்பவம் நடந்துள்ளது இதனால் இப்பகுதியில் 15 சிசிடிவி கேமரா பொருத்தப்பட உள்ளது.
மாநகராட்சியில் வாகனங்கள் மீது சிமெண்டு சாலை மற்றும் தாசாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் சாலையை தோண்டி புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது.
வாகனங்களை அப்புறப்படுத்தாமல் ரோடு போட்ட காண்ட்ராக்டர்களுக்கு சோகாஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காதவாறு சாலை அமைக்கும் பகுதியில் ஒரு நாள் முன்னதாக அந்த தெருவில் உள்ளவர்களுக்கு தெரிவிக்கப்படும். வேலூர் மாநகராட்சி பகுதியில் 2 காரணங்களுக்காக சில இடங்களில் சாலை அமைக்கும் பணி தாமதமாகி வருகிறது.
வீடுகளுக்கு குழாய் இணைப்பு கொடுக்கும் பணிகள் முடிவடைந்தவுடன் இரண்டு மாதங்களில் அனைத்து சாலைகளும் போடப்படும். கடந்த ஆண்டு அதிக அளவில் நீர்வரத்து இருந்த பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.
சேம்பாக்கம் கன்சால்பேட்டை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது விரைவில் ஆக்கிரமிப்பு அகற்ற பணி நடைபெறும் என தெரிவித்தார்.
- கலெக்டர் உத்தரவால் நடவடிக்கை
- 131 வாகனங்கள் ேசாதனை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட பள்ளி வாகனங்களை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் ஆய்வு செய்யும் பணிகள் நேற்று நடைபெற்றது.
இந்த ஆய்வின் போது போக்குவரத்து துறையின் வேலூர் துணை போக்குவரத்து ஆணையர் எம்.எஸ்.இளங்கோவன், வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆர்.செந்தில்வேலன், குடியாத்தம் உதவி கலெக்டர் எஸ்.தனஞ்செயன், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் குடியாத்தம் கே.கருணாநிதி, வேலூர் எஸ்.சக்திவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் குடியாத்தம், பேர்ணாம்பட்டு, பரதராமி, கே.வி.குப்பம், லத்தேரி, பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 131 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.
- ஸ்ரீ நாராயணி மருத்துவமனைக்கு தமிழக அரசின் அங்கீகாரம்
- சக்தி அம்மா, கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினர்
வேலூர், ஜூலை.3-
வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடம் சக்தி அம்மா ஆசியுடன் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மிக குறைந்த கட்டணத்தில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீ நாராயணி மருத்துவமனையில், மேலும் ஒரு மைல்கல்லாக, கல்லீரல் நோய்கள் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக தமிழக அரசால் வழங்கப்பட்ட அங்கீகாரத்தினை, ஸ்ரீ சக்தி அம்மா மற்றும் தமிழக கவர்னர் ஆர் என் ரவி, ஸ்ரீ நாராயணி மருத்துவமனையின் இயக்குநர் பாலாஜியிடம் வழங்கினர்.
இதுகுறித்து ஸ்ரீ நாராயணி மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் பாலாஜி கூறுகையில்:- ஸ்ரீ நாராயணி மருத்துவமனை சிறப்பான சிகிச்சையினை மிகக்குறைந்த கட்டணத்திலும் சிறப்பான முறையிலும் வழங்குவதில் முதன்மையான மருத்துவமனையாக விளங்கி வருகின்றது.
இம்மருத்துவமனிைல் ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறப்பு மையம் செயல்பட்டு வரும் வேளையில், தற்போது கல்லீரல் நோய்கள் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
கல்லீரல் நோய்தொற்று, கல்லீரல் வீக்கம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும், மாற்று அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக் கப்பட்டவர்களும் இனி நம் வேலூர் மாவட்டத்திலேயே சிறப்பான சிகிச்சையினை பெற்று பயன்பெறலாம் என்றார்.






