search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சசிகலா, டி.டி.வி. தினகரன் மீது கே.பி. முனுசாமி பாய்ச்சல்
    X

    சசிகலா, டி.டி.வி. தினகரன் மீது கே.பி. முனுசாமி பாய்ச்சல்

    • தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது.
    • அரசு தவறும் பட்சத்தில் மக்கள் பிரச்சினையில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களில் ஈடுபடுவோம் என கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

    வேலூர்:

    வேலூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு காட்பாடியில் ரெயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்தார்.

    இதையடுத்து அவர் மீது 6 பிரிவுகளின் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதையடுத்து அவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி இன்று வேலூர் ஜெயிலில் உள்ள எஸ்.ஆர்.கே.அப்புவை நேரில் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது;-

    காட்பாடியில் நீண்ட காலமாக ரெயில்வே பாலத்தை திறக்காததால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்‌. அவரை வேண்டுமென்றே ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

    வருகிற 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு திட்டமிட்டபடி நடந்தே தீரும். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் பொதுக்குழுவிற்கு ஏற்கனவே அனுமதி அளித்து விட்டார்.

    பணம் கொடுத்து மாவட்ட செயலாளர்களை ஈபிஎஸ் வளைப்பதாக டிடிவி தினகரன் கூறிவருகிறார். அவருக்கு எச்சரிக்கை விடுக்கிறோம், அவர் இந்த கட்சியால் ஆதாயம் பெற்று சுபயோகத்தை அனுபவித்து கொண்டிருப்பவர் அவருக்கு கட்சியை பற்றி பேச அருகதை கிடையாது. தொடர்ந்து இதுபோல் அவர் பேசினால் வழக்கு போட்டு அவரை நீதிமன்றத்தில் நிற்க வைப்போம்.

    சசிகலா பாவம் நானும் இருக்கிறேன் என பேசி வருகிறார். அவரை பற்றி பேச அவசியம் இல்லை. உண்மையாக உழைத்தவர்களை உயிர்தொண்டர்களை பிரிக்க முடியாது கட்சியினால் ஆதாயம் அடைந்த சந்தர்ப்பவாதிகள், விரக்தியில் பேசி வருகிறார்கள்.

    தொடர்ந்து மக்கள் பிரச்சனைகளுக்காக போராடும் அ.தி.மு.க.வினரை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளுக்கெல்லாம் அதிமுக ஒருபோதும் அஞ்சாது.

    தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது, அரசு தவறும் பட்சத்தில் மக்கள் பிரச்சினையில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன், முன்னாள் எம்.பி. ஹரி, வேலூர் மாவட்ட பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனி சதீஷ்குமார், தாஸ், பி.எஸ்.பழனி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×