என் மலர்
வேலூர்
- ஒடுகத்தூர் பெரிய ஏரியூரில் எருது விடும் விழா நடந்தது
- 8 பைக்குகள் திருட்டு
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் ஊராட்சியில் நேற்று மாடு விடும் திருவிழா நடைபெற்றது. இதற்காக ஏற்கனவே இரு புறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.
விழாவில், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு, ஏடிஎஸ்பி பாஸ்கரன், வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் உலகநாதன், ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும், முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவ குழுவினரும் அங்கு முகாமிட்டிருந்தனர்.
விழாவிற்கு, ஒன்றிய கவுன்சிலர் பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா தயாநிதி ஆகியோர் தலைமை தாங்கினர். மேட்டுக்குடி பாபு, நாட்டாண்மை தசரதன், கணாச்சாரியார் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, காலை 10 மணிக்கு ஆர்டிஓ பூங்கொடி, தாசில்தார் ரமேஷ், ஆர்ஐ நந்தகுமார் மற்றும் ஊர் முக்கியஸ்தாரர்கள், விழா குழுவினர் முன்னிலையில் உறுதி மொழி எடுத்தனர்.
விழாவிற்கு, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, ஆந்திரா, போன்ற பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான காளைகள் கொண்டுவரப்பட்டது.
இதில் சுமார் 300 காளைகள் பங்கேற்றன. பரிசோதனைக்கு பின்னர் காளைகள் அவிழ்த்து விப்பட்டது.
இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு ஆரவாரம் செய்தனர்.
விழாவில், குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த காளைக்கு முதல் பரிசு ரூ.70 ஆயிரம், 2ம் பரிசு 50 ஆயிரம், 3ம் பரிசு 35 ஆயிரம் என மொத்தம் 75 பரிசுகள் வழங்கப்பட்டது.
மாடு விடும் விழாவில் வீதியில் நின்றிருந்தவர்களை காளைகள் முட்டியதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
விழாவை கான வந்து இருந்த இளைஞர்களின் 8 இருசக்கர வாகனம் திருட்டு போய் விட்டதாக போலீசாரிடம் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்பின் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் 60 இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
- வருமான வரி சோதனை நடந்து வரும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் நேற்று முன்தினம் 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
வருமான வரி ஏய்ப்பு செய்ததாக தொழில் அதிபர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளில் நேற்று முன்தினம் காலை முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை அய்யப்பன் தாங்கல் அசோக் ரெசிடென்சி ஓட்டல், அண்ணா நகர் பகுதிகளில் சோதனை நடைபெற்றது. இதேபோல ஆதித்யா ராம், அம்பாலால் மற்றும் மற்றொரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 20 இடங்களில் அதிரடி சோதனை நீடித்து வருகிறது.
வேலூரை தலைமையிடமாகக் கொண்டு அம்பாலால் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் வேலூர் பழைய பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது. குடியாத்தத்தை சேர்ந்த ஜவரிலால் ஜெயின் இதனை நடத்தி வருகிறார்.
வேலூரில் உள்ள அம்பாலால் கிரீன் சிட்டி, விஐபி சிட்டி, அம்பாலால் உரிமையாளர் ஜவரிலால் ஜெயினுக்கு சொந்தமான ரியல் எஸ்டேட், எலக்ரானிக், வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் குடியாத்தம் சந்தபேட்டை பகுதியில் உள்ள அம்பாலால் குழுமத்திற்கு சொந்தமான கடை, வீடு, அலுவலகம் ஆகிய பகுதிகளிலும், வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள வீட்டு உபயோக பொருட்கள் கடையிலும், வருமானவரித்துறை யினர் சோதனை மேற்கொண்டனர்.
குடியாத்தம் சந்தப்பேட்டையில் உள்ள அம்பாலால் நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் இன்று 3வது நாளாக சோதனை நடைபெற்றது. அம்பாலால் குழுமத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 7½ கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இதில் சொத்து சம்பந்தமான ஆவணங்கள் வங்கி பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் போன்ற முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
இதேபோல குடியாத்தத்தில் உள்ள தனியார் பீடி கம்பெனி, விருதம்பட்டு பகுதியில் உள்ள 100ம் நம்பர் பீடி கம்பெனியிலும் இன்று 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
வருமான வரி சோதனை நடந்து வரும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வேலூர், குடியாத்தத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- அண்ணன் மனைவியான அண்ணியை கடந்த சில ஆண்டுகளாகவே ஒருதலையாக அவர் காதலித்து வந்துள்ளார்.
- வேப்பங்குப்பம் போலீசாரிடம் அண்ணி கொழுந்தன் மீது புகார் கொடுத்தார்.
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த மேல்அரசம்பட்டு, பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி. இவரது மனைவி (வயது 46). விவசாயிக்கு 42 வயதில் தம்பி உள்ளார்.
அவர் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
அண்ணன் மனைவியான அண்ணியை கடந்த சில ஆண்டுகளாகவே ஒருதலையாக அவர் காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று அண்ணி குளியலறையில் குளித்து கொண்டிருந்தார்.
இதனை நோட்டமிட்ட கொழுந்தன் அக்கம் பக்கம் யாரும் இல்லை என தெரிந்து கொண்டு குளியல் அறையை எட்டிப்பார்த்தார்.
அப்போது திடீரென கதவை திறந்து உள்ளே சென்று அண்ணியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அண்ணி கொழுந்தனை தள்ளிவிட்டு கூச்சலிட்டபடி வெளியே ஓடி வந்தார்.
அப்போது இதனைப்பற்றி யாரிடமாவது கூறினால் உன்னை கொன்றுவிடுவேன் என கொலைமிரட்டல் விடுத்துள்ளார். ஆனாலும் எதையும் மறைக்காமல் தன் கணவரிடம் இதனைப்பற்றி கூறியுள்ளார்.
இதன்பின் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே அருகே இருந்த வேப்பங்குப்பம் போலீசாரிடம் அண்ணி கொழுந்தன் மீது புகார் கொடுத்தார்.
போலீசார் விசாரணை நடத்தி கொழுந்தனை கைது செய்த சிறையில் அடைத்தனர்.
- ஆன்லைன் முகவரியில் தனது வங்கி விவரங்களை பதிவு செய்தார்
- போலீசார் விசாரணை
வேலூர்:
பேரணாம்பட்டை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் ஐதராபாத்தில் உள்ள ஒரு கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார். உடல் நிலை சரியில்லாததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேரணாம்பட்டு வந்தார்.
அவரது செல்போன் மூலம் வங்கி லோன் ஆப் செயல்பாட்டுக்கு கொண்டு வர முயற்சி செய்தார். ஆனால் வங்கியின் லோன் ஆப் செயல்படவில்லை.
இது குறித்து செல்போனில் வந்த வங்கி உதவி எண்ணை தொடர்பு கொண்டார். அதில் பேசிய மர்ம நபர்கள் ஆன்லைன் முகவரி அனுப்பினர். அதில் வங்கியின் விவரங்களை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தினர்.
இதனை நம்பிய பேராசிரியர் ஆன்லைன் முகவரியில் தனது வங்கி விவரங்களை பதிவு செய்தார்.
இதைத் தொடர்ந்து 3 நாட்களில் பேராசிரியரின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.13 லட்சத்து 15 ஆயிரத்தை எடுத்துக் கொண்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பேராசிரியர் இது குறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆந்திர வாலிபர் கைது
- வேலூர் ஜெயிலில் அடைப்பு
வேலூர்:
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து கேரளா மாநிலம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று வந்து கொண்டிருந்தது. இதில் கேரளாவைச் சேர்ந்த டாக்டர் பிரீத்தி மற்றும் சசிதரன் உள்ளிட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
காட்பாடி அருகே ரெயில் வந்த போது டாக்டர் ப்ரீத்தி வைத்திருந்த செல்போன் உள்ளிட்ட பைகள் மற்றும் சசிதரன் உள்ளிட்ட 5 பேரின் செல்போன்கள் ஒரு லேப்டாப் ஆகியவற்றை மர்ம நபர் ஒருவர் திருடி சென்று விட்டார்.
இதுகுறித்து காட்பாடி ரெயில்வே போலீசில் புகார் அளித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் சித்தூர் மாவட்டம் கெங்கரெட்டி பாளையத்தை சேர்ந்த ஹரிஷ் பாபு (வயது 29) என்பவர் நேற்று காட்பாடி ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.
அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர் அப்போது அவரிடம் பல்வேறு ரெயில்களில் செல்லக்கூடிய ரெயில் டிக்கெட் இருந்தன.
இது பற்றி விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண் டாக்டர் உள்பட பயணிகளிடம் திருடியது தெரியவந்தது.
அவரிடம் இருந்து 6 செல்போன்கள் ஒரு லேப்டாப் மற்றும் பெண் டாக்டரின் பை பறிமுதல் செய்யப்பட்டது. அதில் 27 ஆயிரத்து மதிப்பிலான பொருட்கள் இருந்தன.
ஹரிஷ் பாபு கடந்த ஜனவரி மாதம் முதல் ரெயில்களில் திருடுவதை தொடங்கியுள்ளார். திருமணம் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு அவர் ரெயிலில் டிக்கெட் எடுத்து பயணம் செய்து சக பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
போலீசார் ஹரிஷ் பாபுவை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
- விவசாயிகள் வலியுறுத்தல்
- எந்தவித கடன் வசதியும் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு
குடியாத்தம்:
குடியாத்தம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் தாலு காக்களைச் சேர்ந்த விவசாயி களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் கலைவாணி அனைவரையும் வரவேற்றார்.
கூட்டம் துவங்கிய உடன் கடந்தமாதம் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் மற்றும் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் பேசிய விவசாயி பழனிவேலன் வளத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கடன் விவசாயிகள் மீது சிலர் போலியாக கடன் பெற்றனர் இது குறித்து வழக்கு நடைபெற்று மோசடிக்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது ஆனாலும் அந்த 87 விவசாயிகளுக்கு எந்தவித கடன் வசதி கிடைக்கவில்லை.
விவசாயி சேகர் குடியாத்தம் உழவர்சந்தை அருகே உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உள்ளிட்ட ஏராளமான கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினார்கள்.அப்போது விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு பல்வேறு துறைகளைச் சார்ந்த உயர் அதிகாரிகள் வருவதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
இந்தக் கூட்டத்தில் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து பேசிய உதவி கலெக்டர் வெங்கட்ராமன் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு முக்கியமான துறைகளின் அதிகாரிகள் வருவதில்லை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும்.விவசாயிகள் வைத்த குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என்றார்.
- 18-ந்தேதி 1008 வலம்புரி சங்காபிஷேகம் நடக்கிறது.
- 19-ந்தேதி திருக்கல்யாணம், சுவாமி திருவீதி உலா நடக்கிறது.
வேலூர் கோட்டையில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா வருகிற 18, 19 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது.
விழாவில் முதல் நாளான 18-ந் தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு ருத்ராபிஷேகம், கால சாந்தி பூஜை நடக்கிறது. 11 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் மற்றும் 1008 வலம்புரி சங்காபிஷேகம், உச்சிக்கால பூஜை, மாலை 3.30-க்கு விநாயகர், வெங்கடேச பெருமாள், முருகர், அம்பாள் ஆகியோருக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. இதையடுத்து 4.30 மணி அளவில் சனி மகா பிரதோஷ அபிஷேகம், தீபாராதனையும், 6 மணிக்கு ஜலகண்டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், சிவராத்திரி முதல் ஜாம பூஜை, தீபாராதனை நடக்கிறது.
இரவு 7.30-க்கு தங்கத்தேரில் சுவாமி, அம்பாள் பிரகாரவலமும்,8.30 மணிக்கு 108 வலம்புரி சங்கு பூஜை ஹோமமும் நடைபெறுகிறது. 9 மணிக்கு மகா சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகளும், 9.30 மணிக்கு ஜலகண்டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், 108 வலம்புரி சங்காபிஷேகம் மற்றும் மகா சிவராத்திரி 2-ம் ஜாம பூஜை, தீபாராதனை நடக்கிறது. 11.30 மணியளவில் ருத்ராபிஷேக பூஜை தொடங்குகிறது. நள்ளிரவு 12 மணிக்கு லிங்கோத்பவர் 3-ம் ஜாம பூஜை மற்றும் மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.
19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், சிவராத்திரி 4-ம் ஜாம பூஜையும், 7 மணிக்கு சுவாமி திருக்கல்யாணமும், 9 மணிக்கு சுவாமி திருவீதி உலாவும், தீபாராதனையும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகள் ஜலகண்டேஸ்வரர் கோவில் தர்ம ஸ்தாபனம் சார்பில் நடைபெறுகிறது.
- அம்பாலால் நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் இன்று 2-வது நாளாக சோதனை நடைபெற்றது.
- குடியாத்தத்தில் உள்ள தனியார் பீடி கம்பெனியில் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.
வேலூர்:
வருமான வரி ஏய்ப்பு செய்ததாக தொழில் அதிபர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளில் நேற்று காலை முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
வேலூரில் உள்ள அம்பாலால் கிரீன் சிட்டி, விஐபி சிட்டி, அம்பாலால் உரிமையாளர் ஜவரிலால் ஜெயினுக்கு சொந்தமான ரியல் எஸ்டேட், எலக்ட்ரானிக், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடை.
குடியாத்தம் சந்தைபேட்டை பகுதியில் உள்ள அம்பாலால் குழுமத்திற்கு சொந்தமான கடை, வீடு, அலுவலகம் ஆகிய பகுதிகளிலும், வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள வீட்டு உபயோக பொருட்கள் கடையிலும், வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர்.
அதேபோல காட்பாடி அடுத்த விருதம்பட்டு பகுதியில் உள்ள 100-ம் நம்பர் பீடி கம்பெனியிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. வேலூர் காட்பாடியில் காலை 10 மணிக்கு தொடங்கிய வருமான வரித்துறை சோதனை இரவு 11 மணி வரை அதாவது 13 மணி நேரம் நீடித்தது.
இதில் சொத்து சம்பந்தமான ஆவணங்கள் வங்கி பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை போன்ற முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
குடியாத்தம் சந்தைப்பேட்டை அம்பாலால் நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் இன்று 2-வது நாளாக சோதனை நடைபெற்றது. இதேபோல குடியாத்தத்தில் உள்ள தனியார் பீடி கம்பெனியில் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.
- காதலர் தினத்தில் குவிந்தனர்
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
வேலூர்:
காதலர் தினத்தையொட்டி காதலர்கள் பரிசு பொருட்கள், வாழ்த்து அட்டையை ஒருவருக்கொருவர் வழங்கி தங்களின் அன்பை பரிமாறிக்கொண்டனர்.
மேலும் அவர்கள் தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு சென்று காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். வேலூரில் காதலர் தினத்தையொட்டி பரிசு பொருட்கள், வாழ்த்து அட்டை, ரோஜாப்பூக்களின் விற்பனை அதிகமாக காணப்பட்டது.
வேலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் வேலூர் கோட்டைக்கு காதலர் தினத்தையொட்டி ஏராளமான காதல் ஜோடிகள் வந்தனர். கோட்டை மற்றும் கோட்டை யின் முன்பகுதியில் உள்ள பூங்காவில் காதல் ஜோடியினர் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர்.
கோட்டை பூங்கா மற்றும் கொத்தளத்தில் ஜோடிகள் அத்துமீறல்களை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பூங்காவில் இருந்த காதல் ஜோடிகளை போலீசார் விரட்டி அடித்தனர்.
இதேபோல கோட்டை நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காதல் ஜோடிகளை திருப்பி அனுப்பினர்.
கோட்டைக்குள் செல்ல காதல் ஜோடிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருசக்கர வாகனங்களில் வந்த காதல் ஜோடிகளை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்களில் பலர் அருங்காட்சியகம் மற்றும் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றனர்.
- மாநகராட்சி மேயரிடம் நிர்வாகிகள் மனு
- மரக்கன்றுகள் வழங்கினர்
வேலூர்:
தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் துணைத்தலைவர் டி.எம்.விஜயராகவலு, செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், பொருளாளர் ஆர்.சீனிவாசன், செயற்குழு உறுப்பினர் மற்றும் வேலூர் மத்திய சிறையின் கண்காணிப்பாளர் சார்பில் சிறை அலுவலர் ஆர்.குணசேகரன் ஆகியோர் மாநகராட்சி மேயர் சுஜாதாவை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
வேலூர் தெற்கு போலீஸ் நிலையம் அருகே முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க அலுவலக கட்டிடம் இயங்கி வருகிறது.
சிறையிலிருந்து விடுதலையான சிறைவாசிகளின் மேம்பாட்டிற்காக கட்டிடத்திலிருந்து வசூலிக்கப்படும் வாடகையானது தொண்டு நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
இந்த கட்டிடத்திற்கு வேலூர் மாநகராட்சி வரி விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அவர்களுக்கு மரக்கன்றுகளை மேயர் சுஜாதா வழங்கினார்.
- பயணிகள் அவதி
- உதிரி பாகம் வருவதில் தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் தகவல்
வேலூர்:
காட்பாடி ரெயில் நிலையம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த பழமையான ரெயில் நிலையத்தின் வழியாக தினமும் சுமார் 120 ரெயில்கள் சென்னை மார்க்கமாகவும், ஜோலார்பேட்டை மார்க்கமாகவும், திருப்பதி மார்க்கமாகவும், வேலூர் மார்க்கமாகவும் இயக்கப்பட்டு வருகின்றன.
தினமும் சுமார் 30 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகத்தில் உள்ள மிக முக்கிய ரெயில்வே சந்திப்புகளில் காட்பாடி ரெயில் நிலையமும் ஒன்று. இங்கு 5 பிளாட்பாரங்கள் உள்ளன.
இதில் பயணிகள் எளிதில் சென்று வர வசதியாக எக்ஸ்லேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. ரெயில் நிலைய நுழைவு வாயில் மற்றும் 2-வது பிளாட்பாரத்திலும் எக்ஸ்லேட்டர் ( நகரும் படிக்கட்டுகள்) ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே அமைந்துள்ள எக்ஸ்லேட்டர் பழுதடைந்துள்ளது.
இதனால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுடன் அதிக பைகள் எடுத்துச் செல்லும் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். உடனடியாக அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்
எக்ஸ்லேட்டர் பழுது பார்க்கும் பணி நடந்து வருகிறது. அதற்கான உதிரி பாகம் வெளியூரில் இருந்து வர உள்ளதால் தாமதம் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- காலை 9 மணி முதல் 2 மணி வரை வழங்கபடுகிறது
- 5 லட்சம் பேருக்கு வழங்க இலக்கு
வேலூர்:
தேசிய குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் திட்டத்தின் கீழ் 1 முதல் வயதுக்குட்பட்ட வர்களுக்கும் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கும் (கர்ப்பிணிகள் மற்றும் பாலுட்டும் தாய்மார்கள் தவிர) இன்றும் விடுப்பட்டவர்களுக்கு அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்படுகிறது.
அனைத்து துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவைகள் மூலமாக சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படுகிறது.
1 வயதிலிருந்து 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை மாத்திரையும், 2 முதல் 19 வயது உடையவர்களுக்கு 1 மாத்திரையும், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு 1 மாத்திரையும் வழங்கப்படுகிறது.
இந்த மாத்திரையானது காலை 9 மணி முதல் 2.00 வரை வழங்கப்பட்டது. இதனை காலை சிற்றுண்டிக்கு பிறகு அல்லது மத்திய உணவிற்கு பிறகு எடுத்துக் கொள்ள வேண்டும்.
வேலூர் மாவட்டத்தில் 1 லிருந்து 19 வயதுக்குட்பட்ட 3,90,303 குழந்தைகளுக்கும் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 1,13,203 பெண்களுக்கும் மொத்தம் 5,03,506 நபர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்க இலக்கு நிர்ணயக்கப்பட்டு வழங்கபட்டது.
நீ கூட திருவண்ணாமலை திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் இன்று குடற்புழு மாத்திரை விநியோகம் செய்யப்பட்டது.
குடற்புழு நீக்கத்தினால் ரத்த சோகை தடுக்கப்படுகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்கவும், அறிவு திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.
குழந்தைகள் நாள்தோறும் அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளிக்கு வருவது அதிகரிக்கிறது. மேற்படி முகாமினை பயன்படுத்தி கொண்டு குடற்புழு தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.






