என் மலர்tooltip icon

    வேலூர்

    • நந்தகுமார் எம்.எல்.ஏ. தகவல்
    • வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு

    வேலூர்:

    வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. இன்று காலை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தார்.

    பிரசவ வார்டு, அவசர சிகிச்சை பிரிவு, உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தார்.

    சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் அப்போது அவர்கள் ஒரு சில குறைகள் குறித்து தெரிவித்தனர்.

    உங்களுடைய குறைகள் விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என நோயாளிகளிடம் தெரிவித்தார்.

    இதுகுறித்து நந்தகுமார் எம்.எல்.ஏ. கூறியதாவது:- அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் கழிவறை வசதி குறைவாக உள்ளதாக நோயாளிகள் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் செயல்படாமல் உள்ள கழிவறையை திறந்து நவீன வசதிகளுடன் ஒரு வாரத்திற்குள் செய்து தர பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் நோயாளிகள் தங்கும் அறை ரூ.7 லட்சம் மதிப்பில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் கட்டி தரப்படும்.

    ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகள் சப்தகிரி ஏரியில் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

    இதனை தடுக்கும் வகையில் ரூ.5 கோடி மதிப்பில் மருத்துவ கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மதிப்பீடு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    விரைவில் அந்த நிதி வந்தவுடன் பணிகள் தொடங்கி முடிக்கப்படும். தினமும் சுத்திகரிக்கப்படும் 4 லட்சம் லிட்டர் தண்ணீர் கழிவறைகள் மற்றும் செடிகளுக்கு பயன்படுத்தப்படும்.

    ஆதரவு இல்லாமல் சிகிச்சைக்கு வந்துள்ளவர்களை தன்னார்வலர்கள் மூலம் கண்காணித்து அவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • 441 மது பாட்டில்கள் பறிமுதல்
    • போலீசார் சோதனையில் சிக்கினர்

    வேலூர்:

    வேலூரில் நேற்று தொழிலாளர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் தனியார் பார்களில் மது விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    தடையை மீறி மாவட்டம் முழுவதும் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் மாவட்ட முழுவதும் போலீசார் ஆங்காங்கே சோதனை நடத்தினர்.

    தடையை மீறி மது விற்பனை செய்யப்பட்டதாக 34 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 33 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் இருந்து 441 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • வண்டியின் கண்ணாடியை உடைத்து ரகளை
    • ெஜயிலில் அடைத்தனர்

    அணைக்கட்டு:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் இருந்து தனியார் கியாஸ் வாகனம் ஆசனாம்பட்டு பகுதியில் வந்துகொண்டு இருந்தது.

    இதன்பின்னால் பைக்கில் வந்த மேல்பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த விஜிகுமார் என்பவர் வேகமாக சென்று கியாஸ் வாகனத்தை இடித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் வாகனத்தில் இருந்த ஊழியர்கள் தட்டி கேட்டனர்.

    இதில் ஆத்திரமடைந்த பைக்கில் வந்த வாலிபர் அருகே இருந்த உருட்டு கட்டையை எடுத்து வண்டியின் கண்ணாடியை உடைத்து விட்டு 2 ஊழியர்களை கட்டையால் தாக்கியுள்ளார்.

    இதில் படுகாயமடைந்த ஊழியர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேலூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் தகவலறிந்து வந்த வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊழியர்களை தாக்கிய விஜிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • மத்திய பாதுகாப்பு படை போலீஸ்காரர் சுரேஷ் மது குடித்துவிட்டு போதையில் இருந்துள்ளார்.
    • காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    வேலூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் முனியப்பன் நாயக்கனூரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 39) மத்திய பாதுகாப்பு படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

    இவர் பணியின் காரணமாக நேற்று இரவு பெங்களூரில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்டு வந்தார்.

    பெங்களூரில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பி 2 ஏசி பெட்டியில் அவர் பயணம் செய்தார். அவரது சீட் அருகே குழந்தையுடன் பெங்களூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இருந்தார்.

    அதிகாலை 3 மணிக்கு ரெயில் ஆம்பூர் ரெயில் நிலையத்தை கடந்து வந்து கொண்டிருந்தது .அப்போது மத்திய பாதுகாப்பு படை போலீஸ்காரர் சுரேஷ் மது குடித்துவிட்டு போதையில் இருந்துள்ளார்.

    அவர் குழந்தையுடன் பயணம் செய்த இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனை இளம் பெண் கண்டித்தார். ஆனாலும் சுரேஷ் விடவில்லை. தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டார்.

    இதனால் இளம்பெண் அலறி கூச்சலிட்டார். அங்கிருந்த பயணிகளிடம் நடந்த சம்பவத்தை இளம்பெண் கூறினார். பயணிகள் சுரேஷை இருக்கையில் இருந்து வெளியே இழுத்து வந்தனர். அப்போது போதையில் இருந்த போலீஸ்காரர் சுரேஷ் ரகளையில் ஈடுபட்டார்.

    அதற்குள் ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தது. பயணிகள் இது குறித்து காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக பி2 ஏசி பெட்டி அருகே வந்து தயாராக நின்றனர். ரெயில் நின்றதும் உள்ளே வந்து ரகளையில் ஈடுபட்ட சுரேஷை பிடித்து வெளியே இழுத்துச் சென்றனர்.

    மேலும் இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் காட்பாடி ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார்.

    சம்பவம் நடந்த இடம் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியாகும். எனவே சுரேஷ் ஜோலார்பேட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.அவரிடம் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர். இந்த சம்பவம் ரெயில் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இந்த தேர் திருவாரூர், ஸ்ரீவில்லிபுத்தூர் தேருக்கு அடுத்தப்படியாக தமிழகத்தின் 3-வது பெரிய தேர் ஆகும்.
    • சிவ...சிவ... கோஷம் விண்ணதிர திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

    கொங்கு ஏழு சிவஸ்தலங்களுள் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரமூா்த்தி நாயனாா் தேவார திருப்பதிகம் பாடி உயிா்ப்பித்து எழச்செய்த திருத்தலமாகவும் திருப்பூர் மாவட்டம் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசி லிங்கேஸ்வரா் கோவில் விளங்குகிறது.

    இக்கோவிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் பஞ்சமூர்த்திகள் அபிஷேகம், புறப்பாடு நடைபெற்றது.நேற்று 1-ந்தேதி காலை 5மணிக்கு பூர நட்சத்திரத்தில் அதிர்வேட்டு, மேளதாளம் மற்றும் பஞ்ச கவ்யங்கள் ஒலிக்க பெரிய தேரில் உற்சவர் சோமஸ்கந்தர்- உமாமகேஸ்வரியும், சிறிய தேரில் கருணாம்பிகை அம்மனும் எழுந்தருளினர்.

    பின்னர் ஏராளமான பக்தர்கள் ரதத்தின் மேல் சென்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அதிகாலை 4மணிக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    இன்று 2-ந்தேதி காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ ,சிவ பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேரோட்டத்தில் கோவை சிரவையாதீனம் கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், கோவை பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கூனம்பட்டி ஆதீனம் ராஜசரவணமாணிக்க வாசக சுவாமிகள், அவிநாசி வாகீசர் மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி கோவை, ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவில் முகப்பில் இருந்து புறப்பட்ட தேரானது சிறிது தொலைவு இழுத்து செல்லப்பட்டு வடக்கு ரத வீதியில் நிலை நிறுத்தப்படுகிறது. நாளை 3-ந்தேதி காலை 8மணிக்கு வடக்கு ரத வீதியில் இருந்து திருத்தேர் வடம் பிடித்து நிலை சேர்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 4ந்தேதி காலை 8மணிக்கு அம்மன் திருத்தேர் வடம் பிடித்து நிலை சேர்த்தல் நடக்கிறது. மேலும் ஸ்ரீசுப்ரமணியர் (சிறிய தேர்), கரிவரதராஜ பெருமாள் (சப்பரம்), சண்டிகேஸ்வரர் (சிறிய தேர்) வலம் வருதல் நடக்கிறது.

    அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் கோவில் முகப்பில் உள்ள தேர் நிலையில் தொடங்கி ரத வீதிகள் வழியாக மீண்டும் நிலை வந்து சேரும் வகையில் இன்று முதல் 3 நாட்கள் நடத்தப்படுகிறது. 92 அடி உயரம், 400 டன் எடை கொண்ட இந்த தேர் திருவாரூர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தேருக்கு அடுத்தப்படியாக தமிழகத்தின் 3-வது பெரிய தேர் ஆகும். எனவே தேரோட்டத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    தேரோட்டத்தையொட்டி இன்று முதல் 3 நாட்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.தேரோடும் வீதிகளில் திருத்தேரில் அசைந்தாடி வரும் அம்மையப்பரை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தேர் திருவிழாவையொட்டி ஆன்மீக சொற்பொழிவு, நாட்டியாஞ்சலி, பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, பக்தி இன்னிசை, கம்பத்தாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    • தண்ணீர் தேடி வந்தது
    • வனத்துறையினர் விசாரணை

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கோடை காலத்தில் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக, மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் உள்ள மான்கள் தண்ணீர் மற்றும் இரைத்தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது தொடர் கதையாகி வருகிறது.

    இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சோளிங்கர் காப்புக்காட்டில் இருந்து வெளியில் வந்த புள்ளிமான், அப்பகுதியில் உள்ள ெரயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது, அவ்வழியாக வந்த ெரயில் மோதி உயிரிழந்தது.

    இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மானை மீட்டு, கால்நடை மருத்துவர்கள் மூலமாக பிரேதப் பரிசோதனை முடித்து, அங்கேயே தீ வைத்து எரித்தனர். மேலும், இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தலையில் பலத்த காயம் ஏற்பட்டது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    விரிஞ்சிபுரம் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 56). அங்குள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    அவரது தங்கை குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று இரவு வீட்டின் மாடிப்படி ஏறிய போது காசிநாதன் தவறி கீழே விழுந்தார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அவரை மீட்டு அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த காசிநாதன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு ஒளிபரப்பு செய்யப்பட்டது
    • சமூக ஆர்வலர்கள் உள்பட பலரும் ஆர்வமுடன் பார்வையிட்டனர்

    வேலூர்:

    பிரதமர் மோடியின் மனதின் குரல் 100-வது நிகழ்ச்சியையொட்டி வேலூர் கோட்டை 3டி ஒளி வெள்ளத்தில் ெஜாலித்தது.

    பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் வானொலியில் நாட்டு மக்களுடன் நேரடியாக உரையாடி வருகிறார்.

    அதன் 100-வது நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இந்நிகழ்ச்சியை வெற்றிப்பெறச் செய்யும் வகையில் நாடு முழுவதும் வரலாற்றுச் சிறப்புமிக்க 13 இடங்களில் 2 நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அந்த வகையில் சுதந்திரப் போராட்ட வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டை மதில்கள் சனி, ஞாயிற்றுக்கிழமை இரவு 3டி ஒளி வெள்ளத்தில் ஜொலித்தன. தவிர முதல் நாளான சனிக்கிழமை சிறப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அப்போது வேலூர் கோட்டை சுவற்றில் 3டிதொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமான முறையில் பிரதமர் இதுவரை ஆற்றிய முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    மேலும் விடுதலைப் போராட்ட வரலாற்றின் சுருக்கமும் ஒளிபரப்பப்பட்டது. இதனை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் சமூக ஆர்வலர்கள் உள்பட பலரும் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

    • வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த வேப்பம்பட்டு ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் தலைமை தாங்கினார்.

    ஒன்றிய கவுன்சிலர் மணிமேகலை ஜெயக்குமார், துணைத் தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் முருகன் வரவேற்றார். யுவராஜ், ஹஜீராரசூல், சவுந்தர்ராஜன், புவியரசி இளங்கோ, ரோஸ் பழனி, மகாலட்சுமி முருகன், சுமித்ராநவின், வரதம்மாள்ராமலிங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதில் வளர்ச்சி திட்டம் தயாரித்தல், குடிநீர் வினியோகம், தூய்மையான கிராமமாக உருவாக்குதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என்பது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குடிசை கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையானது
    • பொது மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள குடிசை கிராமத்தில் அமைந்திருக்கும் 100 வருடங்கள் வரலாற்று சிறப்பு மிக்க பழமை வாய்ந்த ஸ்ரீபட்டாபி ராமசாமி பெருமாள் கோவிலில் ஸ்ரீராம பெருமானின் 48வது மண்டல பூஜை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

    ஸ்ரீராமர் சீதைக்கு மாலை மாற்றுதல் வைபவம் நடைபெற்றது. இதில் சீதை நடனம் ஆடிய நிலையில் ஸ்ரீ ராம பெருமாள் அருகில் கொண்டுவரப்பட்டது.

    இந்த திருக்கல்யாண நிகழ்வை ஏற்ப்பாடு செய்த ராஜ்குமார் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பள்ளி விடுமுறையில் பாட்டி வீட்டிற்க்கு சென்றபோது பரிதாபம்
    • விளையாட சென்றபோது ஏற்பட்ட விபரீதம்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள மருதவல்லி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா இவர் கிராம பகுதிகளில் நடக்கும் வாரச் சந்தைக்கு சென்று கீரைகளை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    பள்ளிக்கு விடுமுறை என்பதால் 2-ம் வகுப்பு படிக்கும் தனது மகனான ஜெயகுமார் (வயது 8) என்பவரை அணைக்கட்டு அருகே ஊனை கிராமத்தில் இருக்கும் பாட்டி வீட்டிற்க்கு அழைத்து சென்று விட்டுள்ளர்.

    குழந்தை களுடன் விளையாட சென்ற ஜெயகுமார் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் ஜெயக்கு மாரை அக்கம்பக்கம் தேடி வந்தனர்.

    இதனைய டுத்து நேற்று அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் தகவல் கொடுத்தனர். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் கருணகரன், சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் ஊனை கிராமத்தை சுற்றியுள்ள கிணறு, குழம், குட்டைகளில் தேடிதல் வேட்டையில் ஈடுப்பட்டனர்.

    அந்த கிராமத்தில் உள்ள ஏரியின் நடுவே இருக்கும் சிறிய கிணற்றின் நீரில் ஜெயகுமார் பிணமாக மிதந்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விளையாட சென்ற சிறுவன் தண்ணீரிலர் மூழ்கி இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    • குடியாத்தம் சிரசு திருவிழாவை முன்னிட்டு நடந்தது
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

    குடியாத்தம்:

    குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு விழாவையொட்டி நேற்று நள்ளிரவு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் மிகவும் புகழ்பெற்ற கோவிலாகும். இங்கு நடைபெறும் கெங்கையம்மன் சிரசு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. திருவிழாவை காணவும், லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குடியாத்தம் வருவார்கள்.

    இந்த ஆண்டு கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு தொடங்கியது. குடியாத்தம் ராபின்சன் குளக்கரை பகுதியில் அலங்கரிக்கப்பட்ட பூங்கரகம் ஊர்வலம் தொடங்கியது.

    தொடர்ந்து முத்தாலம்மன் கோவில் சென்று அங்கிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் ஊர்வலமாக வந்து இன்று அதிகாலை 5 மணி அளவில் கோவிலை வந்தடைந்தது.

    சுமார் 3 மணிநேரம் மக்கள் வெள்ளத்தில் பூங்கரகம் மிதந்து வந்தது. இரவென்றும் பாராமல் காப்பு கட்டும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். பூங்கரகம் கோவில் வளாகத்தை சுற்றி வந்து மூலவர் சன்னதி அடைந்தது.

    காப்பு கட்டும் நிகழ்ச்சியை முன்னிட்டு விடியவிடிய வாணவேடிக்கை நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, கோயில் ஆய்வாளர் பாரி, ஊர்நாட்டாமை ஆர்.ஜி.சம்பத், ஊர் தர்மகர்த்தா கே.பிச்சாண்டி திருப்பணிக் குழு தலைவர் ஆர்.ஜி.எஸ். கார்த்திகேயன் உள்ளிட்ட விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    காப்பு கட்டும் நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர்.

    வரும் 14-ந்தேதி தேர்த்திருவிழாவும், 15-ந்தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும், வரும் 17-ந்தேதி பூப்பல்லக்கும் நடைபெறுகிறது.

    ×