என் மலர்
வேலூர்
- கடன் வழங்க வலியுறுத்தல்
- போலீசார் பேச்சுவார்த்தை
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 39). இவர் குடியாத்தம் பகுதியில் வெங்காயம், பூண்டு வியாபாரம் செய்து வருகிறார்.
இவருக்கு மனைவி ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். வெங்கடேசன் வேலூர் ஆற்காடு ரோட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வீடு கட்டுவதற்காக ரூ.50 லட்சமும், தனிநபர் கடனாக ரூ.30 லட்சமும் கடனாக பெற்று உள்ளார்.
இதற்காக 1.25 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களை சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.
வாங்கிய கடனை திருப்பி செலுத்தி விட்டதாகவும், மீண்டும் வங்கியில் கடன் கேட்டு உள்ளார்.
ஆனால் வங்கி அதிகாரிகள் வெங்கடேசனுக்கு கடன் தர மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனை கண்டித்து இன்று காலை வெங்கடேசன் வங்கி முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து வெங்கடேசன் கூறுகையில் திறமையானவர்களுக்கு வங்கியில் கடன் கொடுக்க மறுக்கின்றனர்.
நகை சொத்து ஆவணம் கொடுத்தால் மட்டுமே கடன் பெறுவதாக கூறுகின்றனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து வங்கி சார்பில் கூறுகையில் வெங்கடேசன் வாங்கிய கடனை கடந்த 7 தவணைகளாக கட்டாததால் அவருக்கு கடன் தர மறுப்பு தெரிவித்ததாக கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வெங்கடேசனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- 40 பேர் பணியில் ஈடுபட்டனர்
- பிளாஸ்டிக் பைகள், உள்ளிட்டவை பயன்படுத்த கூடாது என எச்சரிக்கை
வேலூர்:
வேலூர் மாசுக்கட்டு ப்பாட்டு வாரியம் மற்றும் மாநகராட்சி இணைந்து கோட்டை முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கும் பணி இன்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட அலுவலர் ரவிச்சந்திரன், மாநகராட்சி 4-வது மண்டல சுகாதார அலுவலர் முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாநகராட்சி ஊழியர்கள் 40 பேர், மாசு கட்டுப்பாட்டு வாரிய ஊழியர்கள் 15 பேர், என 55 பேர் கோட்டை நுழைவாயில், கோட்டை வளாகம் முழுவதும் ஆங்காங்கே சுற்றுலா பயணிகள் வீசி சென்ற பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தனர்.
மேலும் கோட்டையினுள் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள், உள்ளிட்டவை பயன்படுத்த கூடாது என எச்சரிக்கை விடுத்தனர். மேலும் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்க ப்படும் பகுதி என எச்சரிக்கை பலகை வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் உதவி என்ஜினீயர்கள் சுஷ்மிதா, சவுந்தர்யா, உதவி மேலாளர் பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அன்னதான கூடத்தை நந்தகுமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- புதிய மேல் நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலில் ரூ. 89 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக முடி காணிக்கை செலுத்தும் மண்டபம் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை இன்று காலை நடந்தது.
அன்னதான கூடம்
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து ரூ. 42.5 லட்சத்திற்கு புதி யதாக கட்டப்பட்ட அன்னதான கூடத்தை திறந்து வைத்தார். மொத்தம் ரூ. 1.32 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் தொடக்கம், மற்றும் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு அணைக்கட்டு ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கரன், நகர செயலாளர் ஜாகிர் உசேன், பள்ளிகொண்டா பேரூராட்சி தலைவர் சுபபிரியா, துணைத்தலைவர் வசிம்அக்ரம் கோவில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி கணக்காளர் சரவண பாபு உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.
இதனை தொடர்ந்து செதுவாலை கிராமத்தில் புதிய மேல் நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டுவதற்கு நந்தகுமார் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
- பங்கேற்க கலெக்டர் அழைப்பு
- வருகிற 11-ந் தேதி நடக்கிறது
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 11-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 8.30 மணிமுதல் 3 மணிவரை வேலூர், வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.
முகாமில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
இதில் 150 -க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் முகாமில் பங்கு பெற உள்ளனர்.
10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ.டிகிரி, நர்சிங், பார்மசி ஆகிய கல்வி தகுதி தேர்ச்சி பெற்ற வேலை நாடுநர்கள் கலந்து கொள்ளலாம்.
தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டது.
தனியார்துறை பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களை முன்பதிவு செய்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு 0416-2290042, 9499055896, 8610977602, 8778078130, 8148727787,9095559590 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இவர் அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
- எஸ்.பி. அலுவலகத்தில் தாத்தா புகார்
- போலீசாரை அனுப்பி வழி ஏற்படுத்தி தருவதாக உறுதி
வேலூர்:
வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமையில் இன்று நடந்தது.
குடியாத்தத்தை சேர்ந்த வெங்கடேசன் என்ற மாற்றுத்திறனாளி மனு அளித்தார்.
அதில் என்னுடைய மனைவி அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் கடந்த 10 ஆண்டுகளாக கள்ளக்காதலில் ஈடுபட்டு வருகிறார் இதனை தட்டி கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.
எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் மேலும் கொலை மிரட்டல் விடுத்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.
இதேபோல் தொரப்பாடியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சுப்ரமணி கொடுத்த மனுவில் எனது மகன் வழி பேத்திக்கு 26 வயது ஆகிறது.
அவர் எந்த வேலைக்கும் செல்லாமல் எப்போதும் செல்போனிலேயே மூழ்கிக் கிடக்கிறார். அவருக்கு அறிவுரை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
வேலூர் அடுத்த மூஞ்சூர்பட்டை சேர்ந்த ரவி என்பவர் கொடுத்த மனுவில் தனது வீட்டிற்கு செல்லும் பாதையில் மரங்களை வெட்டி போட்டு ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். உடனடியாக போலீசாரை அனுப்பி வழி ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்தனர்.
- போலீசார் விசாரணை
- பூட்டிய வீடுகளில் புகுந்து துணிகரம்
குடியாத்தம்:
குடியாத்தம் ெரயில்வே மேம்பாலம் சக்தி நகரை சேர்ந்தவர் திருமால் நாதன். வியாபாரி.
இவரது மனைவி துளசி அங்கன்வாடி பணியாளர் இவர்கள் கடந்த 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தனர்.
இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் ரொக்கம் 1 ½ பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடி சென்றனர்.
அதே தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவரது வீட்டிலும் மர்ம கும்பல் புகுந்தனர். 4 பவுன் நகையை கொள்ளை யடித்துச் சென்றனர்.
அதே தெருவை சேர்ந்தவர் மதியழகன் தொழிலாளி. இவரது மனைவி செல்வி அங்கன்வாடி பணியாளர். இவர்கள் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு வீட்டை பூட்டி விட்டு சென்றனர்.
அப் போது பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரூ.23 ஆயிரம் ரொக்கம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம கும்பல் திருடி சென்றுள்ளனர்.
இதே போல் அருகே உள்ள ராணுவ வீரர் உயர்ந்தவன் வீட்டில் நகை, ரூ.10, ஆயிரத்தை திருடி சென்றனர். இவரது தம்பி வீரன். இவரும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரியா. இவர்கள் அருகே உள்ள ஊரில் திருவிழா நடப்பதால் அங்கு சென்றனர்.
இவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து மர்மகும்பல் 12 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
சம்பவம் குறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விவசாயிகள் மகிழ்ச்சி
- 15 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும்
அணைக்கட்டு:
அணைக்கட்டு பகுதியில் கேழ்வரகு விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த பள்ளிக்குப்பம், அகரம், குருவராஜபாளையம், ஒடுகத்தூர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
மலைப்பாங்கான இந்த பகுதிகளில் கிணற்று பாசனம் மூலம் மலர்கள், வாழை, சோளம், கம்பு, கரும்பு உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் விளைவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அணைக்கட்டு சுற்றுப்பகுதியில் உள்ள பள்ளிக்குப்பம் கிராமத்தில் தற்போது கேழ்வரகு செழித்து வளர்ந்துள்ளது.
கேழ்வரகில் வரக்கூடிய அனைத்து கதிர் பிடித்து மகசூல் அதிகரித்துள்ளது. விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செழிப்பாக நன்கு விளைந்துள்ள கேழ்வரகு இன்னும் 15 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
- ஏராளமானோர் கலந்துகொண்டனர்
- பக்தர்களுக்கு திருமாங்கல்யம் பிரசாதம் வழங்கப்பட்டது
குடியாத்தம்:
குடியாத்தம் தங்கம் நகர், மீனாட்சி அம்மன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மன் சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் நேற்று திருக்கல்யாண வைபவம் திருவிழா நடைபெற்றது.
தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.இதில் ஸ்ரீ மீனாட்சி அம்மன் நகர் குடியிருப்போர் நல சங்க சட்ட ஆலோசகர் கே.எம்.பூபதி, ஓய்வுபெற்ற துணைஆட்சியர் எம்.கஜேந்திரன், தொழிலதிபர் எம்.எஸ்.நாகலிங்கம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எல்.கமலவேணி, ஏ. பிரபாகரன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பக்தர்களுக்கு திருமாங்கல்யம் பிரசாதம் வழங்கப்பட்டது, தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.இரவு பூப்பல்லக்கு தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் குடியிருப்போர் நல சங்க செயலாளர் ஜி.லிங்கசாரதி, பொருளாளர் டி.கே.இளங்கோ, துணைத்தலைவர் எம்.ஆர்.சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
+2
- மகள் கீழே விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலமுரளி, மகளை பாய்ந்து பிடிக்க முயன்றார்.
- தந்தை, மகள் பலியானதை தொடர்ந்து நல்லூர் நீர்வீழ்ச்சியில் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்காடு:
சென்னை மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் பாலமுரளி (வயது 43). இவர், ஐ.டி. நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி சந்திரலட்சுமி. இவர்களுக்கு சவுமியா (13), சாய் சுவேதா (3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் சவுமியா சென்னையில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது 8-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார்.
பள்ளி விடுமுறை விடப்பட்டதால் தனது குடும்பத்தினருடன் பாலமுரளி கடந்த வெள்ளிக்கிழமை ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்தார். ஏற்காட்டில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி இருந்த அவர், குடும்பத்துடன் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்துள்ளனர்.
நேற்று மதியம் ஏற்காட்டில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நல்லூர் நீர்வீழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றார். இங்கு வழுக்கு பாறைகள் நிறைந்து காணப்படுவதால் அங்கு குளிப்பது ஆபத்தானது என்று வருவாய்த்துறையினர் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
அங்கு மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் பாலமுரளி உற்சாகமாக குளித்து மகிழ்ந்தார். இந்த மகிழ்ச்சி வெகு நேரம் நீடிக்கவில்லை. சவுமியா அங்குள்ள பாறையில் ஏறி விளையாடினாள்.
அப்போது உடை மாற்றும் அறை கட்டுவதற்காக நீர்வீழ்ச்சி அருகில் 30 அடி உயர பாறையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதில் சவுமியா ஏறினாள். மகள் ஏறுவதை பார்த்த பாலமுரளி, அங்கு செல்லாதே என்று கூறிக்கொண்டே பின்னால் அவரும் பாறையில் ஏறினார். பாறையின் உச்சிப்பகுதிக்கு சென்ற சிறுமி அங்கிருந்து எதிர்பாராதவிதமாக பாறையில் வழுக்கி கீழே விழுந்தாள். மகள் கீழே விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலமுரளி, மகளை பாய்ந்து பிடிக்க முயன்றார். ஆனால் அவரது முயற்சி பலனளிக்காமல் போகவே அவரும் பாறையில் இருந்து கீழே விழுந்தார்.
தந்தையும், மகளும் அடுத்தடுத்த பாறையில் மோதி நீர்வீழ்ச்சியில் விழுந்தனர். அவர்கள் இருவரது தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. கணவர், மகளின் உடலை கண்டு சந்திரலட்சுமி கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.
ஏற்காடு போலீசார் இருவருடைய உடல்களையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
2 உயிர்களை பலி வாங்கிய இந்த நல்லூர் நீர்வீழ்ச்சியில் குறிப்பிட்ட சில மாதங்கள் மட்டுமே நீர்வரத்து இருக்கும். இதர காலங்களில் பாறைகளில் பாசி படிந்து காணப்படும். இந்த நீர்வீழ்ச்சி பாதுகாப்பில்லாதது என்பது, ஏற்காடு பகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் வெளியூரிலிருந்து ஏற்காட்டிற்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு, இந்த இடத்தின் நிலை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இதனால் அவர்கள் பாறை மீது ஏறி நீராடி மகிழ முற்படும் போது, நீர்வரத்து காரணமாக பாறையின் மேற்பரப்பில் படிந்துள்ள பாசி வெளியில் தெரிய வாய்ப்பில்லை. அதனால் வழுக்கி விழுந்து உயிரிழப்பு ஏற்படுகிறது.
பாதுகாப்பில்லாத காட்டுப் பகுதிக்கு நடுவில் இந்த இடம் அமைந்துள்ளதால், பெரும்பாலும் ஆட்கள் நடமாட்டத்திற்கான வாய்ப்புகள் குறைவு. யாராவது ஆபத்தில் சிக்கி அபாயக்குரல் எழுப்பினாலும், பள்ளத்தாக்கு பகுதியென்பதாலும், தண்ணீர் பாறைகளின் மீதிருந்து ஆக்ரோசமாக விழுவதாலும், அந்த இரைச்சலில் அபாயக்குரல் கேட்பதற்கு வாய்ப்பில்லை.
எனவே பாதுகாப்பு வளையங்கள் அமைத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரையிலும், இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்லவும், குளிக்கவும் தடை விதிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
தந்தை, மகள் பலியானதை தொடர்ந்து நல்லூர் நீர்வீழ்ச்சியில் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்காக குழந்தைகளின் வற்புறுத்தலின்பேரில் அருவி, நீர்நிலைகளை கூகுள் மேப்பில் தேடி செல்லும் பெற்றோர்கள் அந்த அருவி, தடாகத்தின் தன்மை தெரியாமல் குளிக்கும் ஆர்வத்தில் சென்று அபாயத்தில் சிக்கி கொள்ள வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
- கடன் தொல்லையால் மனமுடைந்த பிரசாத் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தொங்கினார்.
- குடியாத்தம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் காட்பாடியை தலைமை இடமாகக் கொண்டு பிரபல தனியார் நிறுவனம் இயங்கி வந்தது.
தமிழகம் முழுவதும் இதில் ஏஜெண்டுகள் மூலம் பணம் வசூலிக்கப்பட்டது. ரூ.ஒரு லட்சத்திற்கு மாதந்தோறும் ரூ.7000 வரை வட்டி தருவதாக நிதி நிறுவனம் அறிவித்தது.
இதனை நம்பி ஏராளமானோர் கோடிக்கணக்கில் பணத்தை செலுத்தினர். நிதி நிறுவன அதிபர்கள் தலைமறைவாகி விட்டனர். இதனால் ஏஜெண்டுகள் மற்றும் பணம் கட்டி ஏமாந்த பொதுமக்கள் பணம் திரும்ப கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காந்திநகர் கல்லேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத் (வயது 39) என்ஜினியரான இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவருடைய மனைவி தனலட்சுமி மற்றும் ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. குடும்பத்துடன் ஸ்ரீபெரும்புதூரில் தங்கி இருந்தார்.
இவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஏஜெண்டு ஒருவர் மூலம் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.26 லட்சம் கடன் வாங்கி முதலீடு செய்தார்.
நிதி நிறுவனம் மூடப்பட்ட பிறகு இவருக்கு பணம் கிடைக்கவில்லை. இதனால் பிரசாத்துக்கு கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி தர ஆரம்பித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு பிரசாத் வந்தார்.
இன்று காலை கடன் தொல்லையால் மனமுடைந்த பிரசாத் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தொங்கினார்.
இதனை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
குடியாத்தம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்வதற்கு முன்பாக பிரசாத் தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதனை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அதில் நான் தனியார் நிறுவனத்தில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கடன் வாங்கி பணம் செலுத்தினேன். நான் பணம் செலுத்திய ஏஜெண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
கடன் நெருக்கடி காரணமாக நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு தனியார் நிறுவனம் நிதி நிறுவனம் தான் காரணம். இதன் மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தினசரி 30 பேர் வீதம் பயிற்சி பெறும் வகையில் ஏற்பாடு
- சிறைவாசிகளுக்கு எம்.எஸ் ஆபீஸ் பயிற்சி அளிக்கப் படவுள்ளது
வேலூர்:
தமிழகத்தில் உள்ள சிறைச் சாலைகளில் சீர்திருத்த நடவடிக் கையாக அனைத்து மத்திய சிறைகளிலும் கணினி பயிற்சி மையம் அமைக்கப்படும் என சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரி கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூரில் தெரிவித் திருந்தார்.
அதன்படி, வேலூர் ஆண்கள் மத்திய சிறையுடன் விஐடி பல்கலைக்கழகம் இணைந்து இல்லவாசிகளுக்கான கணினி பயிற்சி மையம் நேற்று தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் விஐடிதுணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோர் பங்கேற்று கணினி பயிற்சி மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
அப்போது, வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி செந்தாமரைக்கண்ணன், வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இங்கு தினசரி 30 பேர் வீதம் பயிற்சி பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதற் கட்டமாக சிறைவாசிகளுக்கு எம்.எஸ் ஆபீஸ் பயிற்சி அளிக்கப் படவுள்ளது.
- பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு
- பிளாஸ்டிக் தடை செய்ய வேண்டும்
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்டத்தில் உள்ள 247 கிராம ஊராட்சிகளில் குடிநீர் சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் திட திரவக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு மற்றும் செயல்பாடுகளை ஏற்படுத்துவதற்காக" நம்ம ஊரு சூப்பரு" என்ற பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது .
வருகிற 15-ந் தேதி வரை பல்வேறு செயல்பாடுகள் இதன் மூலம் நடைபெற உள்ளது. கிராமங்களில் கழிப்பறைகள் அமைத்தல் மற்றும் பொது இடங்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணிகள் சுத்தமான மற்றும் பசுமையான கிராமங்களை ஊக்கு விக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீடுகள் மற்றும் நிறுவனங்களில் தண்ணீர் சுகாதாரம் கழிவு மேலாண்மை முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர்.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டும். அதற்கு பதிலாக மாற்றுப் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பேரணி நடைபெற உள்ளது.
பள்ளி மாணவர்கள் மூலம் பள்ளி வளாகத்தில் பெரிய அளவிலான சுத்தம் செய்தல் பள்ளி கல்லூரிகளில் சுகாதார மற்றும் கழிவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
இதில் பொதுமக்கள் தன்னார்வ தொண்டர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஊராட்சிகளில் தூய்மை பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






