search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தத்தில் நிதி நிறுவனத்தில் ரூ.26 லட்சம் முதலீடு செய்த வாலிபர் தற்கொலை
    X

    குடியாத்தத்தில் நிதி நிறுவனத்தில் ரூ.26 லட்சம் முதலீடு செய்த வாலிபர் தற்கொலை

    • கடன் தொல்லையால் மனமுடைந்த பிரசாத் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தொங்கினார்.
    • குடியாத்தம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் காட்பாடியை தலைமை இடமாகக் கொண்டு பிரபல தனியார் நிறுவனம் இயங்கி வந்தது.

    தமிழகம் முழுவதும் இதில் ஏஜெண்டுகள் மூலம் பணம் வசூலிக்கப்பட்டது. ரூ.ஒரு லட்சத்திற்கு மாதந்தோறும் ரூ.7000 வரை வட்டி தருவதாக நிதி நிறுவனம் அறிவித்தது.

    இதனை நம்பி ஏராளமானோர் கோடிக்கணக்கில் பணத்தை செலுத்தினர். நிதி நிறுவன அதிபர்கள் தலைமறைவாகி விட்டனர். இதனால் ஏஜெண்டுகள் மற்றும் பணம் கட்டி ஏமாந்த பொதுமக்கள் பணம் திரும்ப கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் காந்திநகர் கல்லேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத் (வயது 39) என்ஜினியரான இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவருடைய மனைவி தனலட்சுமி மற்றும் ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. குடும்பத்துடன் ஸ்ரீபெரும்புதூரில் தங்கி இருந்தார்.

    இவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஏஜெண்டு ஒருவர் மூலம் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.26 லட்சம் கடன் வாங்கி முதலீடு செய்தார்.

    நிதி நிறுவனம் மூடப்பட்ட பிறகு இவருக்கு பணம் கிடைக்கவில்லை. இதனால் பிரசாத்துக்கு கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி தர ஆரம்பித்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு பிரசாத் வந்தார்.

    இன்று காலை கடன் தொல்லையால் மனமுடைந்த பிரசாத் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தொங்கினார்.

    இதனை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    குடியாத்தம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்வதற்கு முன்பாக பிரசாத் தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதனை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

    அதில் நான் தனியார் நிறுவனத்தில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கடன் வாங்கி பணம் செலுத்தினேன். நான் பணம் செலுத்திய ஏஜெண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

    கடன் நெருக்கடி காரணமாக நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு தனியார் நிறுவனம் நிதி நிறுவனம் தான் காரணம். இதன் மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×