என் மலர்tooltip icon

    வேலூர்

    • 25-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • கொடி மரங்களுக்கு தங்க தகடுகள் பொருத்தும் பணி நடைபெறுகிறது.

    வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் வருகிற 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதன்படி கோவிலில் பெரிய கொடிமரத்துக்கு தங்க தகடுகள் பதிக்கும் பணி நேற்று நடந்தது. ஜலகண்டேஸ்வரர் கோவில் தர்ம ஸ்தாபன நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றது. பின்னர் தர்ம ஸ்தாபன நிர்வாகிகளான தலைவர் கலவை சச்சிதானந்த சுவாமிகள், செயலாளர் சுரேஷ்குமார், உப தலைவரான தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் டார்லிங் வெங்கடசுப்பு, பொருளாளர் ஏ.பி.சண்முகம், உதவி தலைவர் வி.எஸ்.ரமேஷ், இணை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது:-

    ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 4-வது மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி பல்வேறு முன்னேற்பாடு பணிகள் கடந்த ஒரு மாதமாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொடி மரங்களுக்கு தங்க தகடுகள் பொருத்தும் பணி நடைபெறுகிறது. அதன்படி சின்ன கொடிமரத்துக்கு ரூ.43 லட்சத்திலும், பெரிய கொடி மரத்துக்கு ரூ.2 கோடி மதிப்பிலும் தகடுகள் பொருத்தப்படுகிறது. இவை 100 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து கோவிலுக்கு பெருமை சேர்க்கும்.

    இதுதவிர லிங்கத்துக்கும் ரூ.35 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை சொர்ணபந்தனம் அமைக்கப்படுகிறது. கோவிலில் உள்ள வெள்ளி பொருட்களும் சீரமைக்கப்பட்டு வருகிறது. கோவிலின் பெருமைகள் கொண்ட புத்தக மலர் வெளியிடப்படும்.

    சாமி வீதி உலாவுக்காக உபயதாரர் மூலம் ரூ.5 கோடி மதிப்பில் தங்கதேர் அமைக்கப்பட்டு வருகிறது. கும்பாபிஷேகம் அன்று அதற்கும் பிரதிஷ்டை செய்யப்படும். கும்பாபிஷேகத்துக்கு பல்வேறு தரப்பினர் உதவிகள் செய்துள்ளனர். கும்பாபிஷேகத்துக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தர உள்ளதால் கோட்டைக்குள் 150 கார்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. சுமார் 10 ஆயிரம் பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும்.

    இந்த கும்பாபிஷேகத்தில் ஆதினங்கள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள், நீதிபதிகள், அதிகாரிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு தாலுகா அழிஞ்சு குப்பத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

    வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்த முகாமில் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கடராமன் ஒன்றிய குழு தலைவர் ஜே.சித்ரா ஜனார்தனன், ஒன்றிய குழு துணைப் தலைவர் டி.லலிதா டேவிட் பேரணாம்பட்டு தாசில் தாரர் நெடுமாறன் துணை தாசில்தார் பொறுப்பு பலராமன் சமூகத் திட்ட பாதுகாப்பு தாசில்தார் ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் எம் மோகன், எஸ் பாபு, ஜி டி கருணாகரன், என் கஜேந்திரன், வி பிரசன்னா தேவி. நி இஸ் எம் ராகசுதா மணிவண்ணன், ஆர் ரோஜா, ராஜா, லட்சுமி, சந்திரசேகர், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மசிகம் எஸ் குமாரி, ஏ ஹேமலதா ஆதி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் எஸ் ஓ வசீமுல்லா, வி பிரியா வடிவேலு, எஸ் உமாதேவி, சிவகுமார், எஸ் உதயகுமார், தலைமை சர்வேயர் ஹரி கிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர்களான எம் உதயகுமார், ஜெய்சங்கர், எம் சௌந்தரி, அன்பரசன், தனசேகரன், கிராம உதவியாளர்கள் கோபால், கமலாபுரம் சுரேஷ்குமார், கே சுந்தரேசன், மனோகரன், சத்யநாதன், சின்னச்சாமி, கே. நாகப்பன், வரதன், புகலூர் சுரேஷ்குமார், எஸ் சுபாஷ் சந்திர போஸ், குப்புசாமி, எம் அறிவழகன், வி அனிதா, விமல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கன மழையால் முறிந்து விழுந்தது
    • போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி

    அணைக்கட்டு:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனிடையே நேற்று இரவு 9 மணி முதல் சுமார் 3 மணி வரை அணைக்கட்டு, ஒடுகத்தூர் ஆகிய சுற்றுப்பகுதியில் மழை வெளுத்து வாங்கியது.

    இதனால் அணைக்கட்டு- ஒடுகத்தூர் செல்லும் பிரதான சாலையில் எடைத்தெரு எனும் கிராமத்தில் சாலையோரம் இருந்த புளியமரம் முறிந்து சாலையில் விழுந்தது.

    இதனால் மரத்தின் அடியில் இருந்த மல்லிகை கடையின் மேல் பகுதி சிறிது சேதமாகியது. மேலும் பிரதான சாலை என்பதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் வாகனங்கள் செல்ல முடியாமல் நின்று கொண்டு இருப்பதாகவும் வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலறிந்து விரைந்து வந்த சப்- இன்ஸ்பெக்டர் தயாநிதி மற்றும் போலீசார் சாலையில் நடுவே போக்குவரத்துக்கு இடையூராக இருந்த புளியமரத்தினை பொக்லைன் எந்திரத்தின மூலம் அகற்றி போக்குவரத்துக்கு வழிவகை செய்தனர்.

    வேப்பங்குப்பம் போலீசார் கூறுகையில்:-

    தற்போது தொடர் மழைக்காலம் என்பதால் சாலையோரம் உள்ள பழமையான புளியமரங்கள் வேரோடு சாய்கின்றது. மரத்தின் கிளைகள் முறிந்து சாலையில் விழுந்து போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்ப்படுத்துகின்றது. சில நேரங்களில் வாகமத்தின் மீது கூட விழலாம் எனவே மழைக்காலங்களில் குடும்பத்துடன் வாகனத்தில் செல்லுவதை குறைத்துக்கொள்ள வேண்டும், குழந்தைகளை அழைத்து செல்லக்கூடாது எனவும் மரங்கள் நிறைந்த இடத்தில் செல்லும் போது முழு கவனமுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

    • பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
    • பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

    வேலூர்:

    வேலூர் வசந்தபுரம் பர்மா காலனியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் தனியார் செல்போன் நிறுவனம் டவர் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் செல்போன் டவர் அமைக்கும் பணியை கைவிடப்படாமல், தொடர்ந்து நடப்பதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் இன்று வசந்தபுரம் ரெயில்வே கேட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொதுமக்களிடம் சமரசம் பேசினார்.

    ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசாருக்கும், பொதுமக்களும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், கூட்டத்தை கலைக்க போலீசார் முயற்சித்தனர்.

    அப்போது மண்ணெண்ணெய் கேனுடன் அங்கு வந்த பெண், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். இதனை பார்த்த போலீசார் பெண்ணிடம் இருந்து மண்ணெண்ணையை பறிமுதல் செய்து, போராட்டக்காரர்களிடம் சமரசம் பேசினர்.

    இது குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • சட்டம் ஒழுங்கு சீர்கேடு கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்

    வேலூர்:

    வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே வேலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன், மாவட்ட பொருளாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனி சதீஷ்குமார், பகுதி செயலாளர்கள் குப்புசாமி, ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு கண்டித்தும், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

    • கோஷ்டி மோதல் -பரபரப்பு
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    இலவம்பாடி அரசு பள்ளியில் பணி மாறுதலாகி வேறு பள்ளிக்கு செல்லாத தலைமை ஆசிரியர் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட இலவம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் 280 மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்களுக்கு பாடம் நடத்த தலைமை ஆசிரியர் உள்பட 14 ஆசிரியர்கள் உள்ளனர்.

    பள்ளி தலைமை ஆசிரியராக பூட்டுத்தாக்கை சேர்ந்த கஜேந்திரன், கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியும் அதே பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

    பள்ளி தலைமை ஆசிரியர் கஜேந்திரனை கடந்த ஏப்ரல் மாதம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா அரசு பள்ளிக்கு பணி மாற்றம் செய்து கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    ஆனால் தலைமையாசிரியர் மாற்றம் செய்யப்பட்ட பள்ளிக்கு செல்ல மறுத்து, இலவம்பாடி அரசு பள்ளியிலேயே தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    மேலும் அவர் இலவம்பாடி பள்ளிக்கும் வர மறுத்து, தற்போது மருத்தவ விடுப்பு எடுத்துள்ளார். தற்போது 6-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

    தலைமை ஆசிரியர் கஜேந்திரன் பள்ளிக்கு வராததால், மாணவர்கள் ேசர்க்கையில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளியின் அத்தியாவசிய பணிகளும் மேற்கொள்ள முடியாத சூழல் நிலவி வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று பள்ளியில் குவிந்தனர். பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட கிராமத்திற்கு தலைமை ஆசிரியர் கஜேந்திரன் செல்லவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் பள்ளி நலனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    அப்போது தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த சிலர், போராட்டக்கார்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இருத்தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். இதில் இலவம்பாடி கிராமத்தை சேர்ந்த ராஜன்பாபு என்பவர் படுகாயம் அடைந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் சப்- இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    படுகாயம் அடைந்தவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தலைமை ஆசிரியர் பணியிடை மாறுதலுக்காக ஒரே ஊரை சேர்ந்த இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 24-ந்தேதி நடக்கிறது
    • கலெக்டர் அறிவிப்பு

    வேலூர்:

    தமிழக முன்னாள் முதல் -அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்டந்தோறும் துறைவாரியாக பல் வேறு நலத்திட்ட முகாம்கள் நடத்திட தமிழக அரசு நடவ டிக்கை எடுத்துள்ளது.

    அதன் ஒரு பகுதியாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் மாநிலம் முழுவதும் 100 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் கள் நடத்தப்பட உள்ளது.

    இந்தமுகாம்களில் பொதுமக்களுக்கு ரத்த அழுத்த பரிசோ தனை, சிறுநீர் பரிசோதனை, பெண்களுக்கான மார்பக புற்றுநோய் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மேலும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.

    இந்தமுகாம் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவல கத்தில் நேற்று நடந்தது.

    அதில் ஏழை, எளிய மக்கள் பயன்பெ றும் வகையில் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்டபீஞ்சமந்தை அரசு உயர்நிலைப் பள்ளி, பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாத்கர் அரசு உயர்நிலைப் பள்ளி என 2 இடங்களில் மருத்துவ முகாம் வருகிற 24-ந் தேதி நடத்தப்பட உள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.

    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, துணை கலெக்டர் (பயிற்சி) பிரியா, இணை இயக்குனர் (நல பணிகள்) பாலசந்தர், துணை இயக்குனர் (பொதுசுகாதாரம்) பானுமதி, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ கண் காணிப்பாளர்ரவிதிலகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.3 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்
    • 4 பேர் கைது

    வேலூர்:

    ஊசூர் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் அருள் (வயது 34). இவர் அரியூரில் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். இந்தநிலையில் சம்பவத் தன்று விடுதிக்கு ஆட்டோ வில் 4 பேர் வந்தனர். விடுதிக்குள் புகுந்த அவர்கள் பணம் கேட்டு அருளை மிரட்டினர்.

    அவர் பணம் இல்லை என்று கூறியதால் கத்தியை காட்டி மிரட்டி, அவரை தாக்கி ரூ.3 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து அவர் அரியூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அவரிடம் பணத்தை பறித்துச் சென்றது, அரியூரை சேர்ந்த அப்பு என்ற ரோஹித்குமார் (33), சுரேஷ்பாபு (37), சிவக்கு மார் (33), லோகேஷ் (23) ஆகி யோர் என்பது தெரியவந்தது.

    அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள்
    • அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது

    வேலூர்:

    வேலூர் கஸ்பாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சின்ன அல்லாபுரத்தை சேர்ந்த ஒருவரை 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் அந்தப் பெண்ணை, கணவர் தனது மதத் திற்கு மாறிவிடுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இதுதொடர்பாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் மனைவியை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து அந்த பெண் வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • ரெயில் பயணிகளுக்கு ரூ.10 லட்சம் வரை பயணக் காப்புறுதி திட்டம்
    • அதிகாரிகள் தகவல்

    வேலூர்:

    காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து பாரத் கவுரவ் சிறப்பு சுற்றுலா ரெயில் சேவை தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ரெயில்வே தென் மண்டல பொது மேலாளர் ரவிக்குமார் மற்றும் சென்னை மண்டல துணை மேலாளர் மாலதி ஆகியோர் காட்பாடி ரெயில் நிலையத்தில் ஆய்வு செய்தனர். அவர்கள் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்தியன் ெரயில்வே சுற்றுலா பிரிவில், பயணிகளுக்காக பிரத்யேக பாரத் கவுரவ் சுற்றுலா ரெயிலை புதியதாக அறிமுகப்படுத்தி உள்ளது.

    இதில் 3 குளிர்சாதன பெட்டிகள், 8 சிலிப்பர் பெட்டிகள், 1 பேண்ட்ரி கார், 2 பவர் கார்கள் என மொத்தம் 14 பெட்டிகள் இந்த ரெயிலில் உள்ளது.

    பாரத் கவுரவ் சுற்றுலா பிரிவு தென் மண்டலம் சார்பில், வருகிற ஜூலை மாதம் ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி யாத்திரை என்ற பெயரில் சுற்றுப்பயணம் திட்டம் அறிமுகப்படுத்த பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் வருகிற ஜூலை 1-ந் தேதி, இந்த சுற்றுப்பயணம் தொடங்குகிறது. 11 இரவுகள் மற்றும் 12 பகல்கள் அடங்கிய இந்த ஆன்மீக சுற்றுலா ஐதராபாத், ஆக்ரா, மதுரா, வைஷ்ணவ தேவி (கட்ரா) அமிர்தசரஸ், புது டெல்லி ஆகிய இடங்கள் பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு ரெயில் கொச்சு வேலி, நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூர் வழித்தடத்தில் செல்லும்.

    இந்த ஆன்மீக சுற்றுலாவை கான ஒருவருக்கு சிலிப்பர் பெட்டிக்கு ரூ. 22 ஆயிரத்து 35-ம், குளிர் சாதன வசதி பெட்டிக்கு ரூ.40 ஆயிரத்து 380 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    உள்ளூர் இடங்களை பார்வையிடுவதற்கு போக்குவரத்து மற்றும் ரெயில் பயணத்தின் போது தென்னிந்திய சைவ உணவு, சுற்றுலா மேலாளர், தனியார் பாதுகாவலர் என சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் பயணிகளுக்கு ரூ.10 லட்சம் வரை பயணக் காப்புறுதி திட்டமும் வழங்கப்பட உள்ளது.

    இதில் மத்திய, மாநில மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் இந்த சுற்றுலா ரெயிலில் பயணித்தால், எல்.டி.சி. சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஒரு தலை காதலால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அருகே ஒருதலை காதலால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றர்.

    வேலூர் அடுத்த பாகாயம் அருகே உள்ள மேட்டு இடையம்பட்டி கிராமம், கணவாய்மேடு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் மணிகண்டன்(வயது 26), கட்டிட மேஸ்திரி. இவர் அதே பகுதியில் உள்ள உறவினர் பெண்ணை ஒரு தலையாக கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

    மேலும் அந்தப் பெண்ணிடம் தனது காதலை கூறியதாக தெரிகிறது. ஆனால் அவர் தன் பெற்றோர் பார்த்து சொல்பவரே திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறியுள்ளார். இதனால் மணிகண்டன் தனது பெற்றோரை அழைத்துக்கொண்டு அவர் வீட்டுக்குச் சென்று பெண் கேட்டுள்ளார்.

    ஆனால் அவருக்கு தங்கள் மகளை தரமாட்டோம் என பெண்ணின் பெற்றோர் கூறியதாக தெரிகிறது. இதனால் மன வேதனை அடைந்த மணிகண்டன் நேற்று முன்தினம் அருகிலுள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பாகாயம் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தடுப்புகளை உடைத்து எதிர் திசையில் பாய்ந்த லாரி
    • டிரைவர் கட்டுபாட்டை இழந்தது

    வேலூர்:

    ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதியில் இயங்கி வரும் கார் நிறுவனத்தில் இருந்து 7 கார்களை ஏற்றிக்கொண்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கார் தொழிற்சாலைக்கு கன்டெய்னர் லாரி பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

    வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே வந்து கொண்டிருந்தபோது இடது புறத்தில் இன்று பயணிகளை இறக்கிக் கொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென வலது புறம் வந்தது. இதனைக் கண்ட லாரி டிரைவர் லாரியை வலது புறமாக திருப்பி பிரேக் பிடித்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் உள்ள தடுப்பில் மோதி எதிரே உள்ள சாலைக்கு பாய்ந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு போலீசார் லாரியை மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×