என் மலர்
உள்ளூர் செய்திகள்

மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.
செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு
- பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
- பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
வேலூர்:
வேலூர் வசந்தபுரம் பர்மா காலனியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் தனியார் செல்போன் நிறுவனம் டவர் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் செல்போன் டவர் அமைக்கும் பணியை கைவிடப்படாமல், தொடர்ந்து நடப்பதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் இன்று வசந்தபுரம் ரெயில்வே கேட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொதுமக்களிடம் சமரசம் பேசினார்.
ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசாருக்கும், பொதுமக்களும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், கூட்டத்தை கலைக்க போலீசார் முயற்சித்தனர்.
அப்போது மண்ணெண்ணெய் கேனுடன் அங்கு வந்த பெண், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். இதனை பார்த்த போலீசார் பெண்ணிடம் இருந்து மண்ணெண்ணையை பறிமுதல் செய்து, போராட்டக்காரர்களிடம் சமரசம் பேசினர்.
இது குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






