என் மலர்
நீங்கள் தேடியது "Vellore Jalakandeswarar Temple"
- சென்னை மண்டல தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்
- தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது
வேலூர்:
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஜலகண்டேஸ்வரர் கோவில் சார்பில் இரண்டு அறைகளை சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களை வைத்து உள்ளனர்.
ஜலகண்டேஸ்வரர் கோவில் பயன்படுத்தப்படும் அறைகள் சேதம் அடைந்து வருவதாகவும் அதனை பராமரிப்பு செய்ய வேண்டி உள்ளதால் அறைகளை காலி செய்ய தொல்லியல் துறை உதவி பராமரிப்பு அலுவலர் அகல்யா உத்தரவிட்டார்.
இதனால் ஜலகண்டேஸ்வரர் கோவில் சார்பில் இந்து முன்னணி நிர்வாகிகளுக்கும் தொல்லியல் துறை அதிகாரிகளுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை மண்டல தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து இன்று ஜலகண்டேஸ்வரர் கோவில் முழுவதும் ஆய்வு செய்தார்.
அப்போது ஜலகண்டேஸ்வரர் கோவில் சார்பில் பயன்படுத்தும் அறைகளை 3 நாட்களில் காலி செய்து தர வேண்டும். உணவு உண்பதற்காக பயன்படுத்தப்படும் டேபிள் சேர்களை அப்புறப்படுத்த வேண்டும் என கோவில் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.
- பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- நந்திக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் கடந்த மாதம் 25-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். வழக்கமாக நடைபெறும் பிரதோஷ வழிபாடு அன்று வரும் பக்தர்களின் கூட்டத்தை விட நேற்று அதிகமாக இருந்தது. நந்திக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பிரதோஷத்தையொட்டி கோட்டைக்குள் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலர் கோட்டை பூங்காவில் அமர்ந்தும் பொழுது போக்கினர். ஏராளமான பக்தர்கள் வருகையால் கோவில் வளாகம் மற்றும் கோட்டை பூங்கா பரபரப்பாக காணப்பட்டது. இதையொட்டி ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- ஆடி வெள்ளி விழா 21-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 25-ந் தேதி வரை நடைபெறுகிறது.
- 6 வெள்ளிக்கிழமைகளிலும் அகிலாண்டேஸ்வரிக்கு சிறப்பு அலங்காரம் நடக்கிறது.
வேலூர் கோட்டை அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆடி வெள்ளி விழா வருகிற 21-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி 6 வெள்ளிக்கிழமைகளிலும் அகிலாண்டேஸ்வரிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடக்கிறது.
அதன்படி 21-ந் தேதி முதல் வெள்ளிக்கிழமையன்று மஞ்சள் காப்பு அலங்காரம், 28-ந் தேதி குங்கும அலங்காரம், ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி புஷ்ப பாவாடை அலங்காரம், 11-ந் தேதி சந்தன காப்பு அலங்காரம், 18-ந் தேதி மீனாட்சி அலங்காரம், 25-ந் தேதி சந்தன காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
மேலும் மழைவளம் பெருகி, தண்ணீர் பஞ்சம் நீங்க, கங்கா பாலார் ஈஸ்வரர் 23-வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி காலையில் பஞ்சபூத மகா யாகம் நடக்கிறது.
ஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனம் செய்து வருகிறது.
- பிரம்மோற்சவ விழா 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது
- 22-ந்தேதி ஆடிப்பூர தீர்த்தவாரி நடக்கிறது.
வேலூர் கோட்டை வளாகத்தில் அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் 4-வது மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம் 25-ந் தேதியும், அதைத்தொடர்ந்து மண்டல பூஜையும் நடைபெற்றது. இந்த நிலையில் 25-ம் ஆண்டு ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா நேற்று காலை 8 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
பிரம்மோற்சவ விழா வருகிற 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் காலையில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் சிறப்பு அலங்காரம், தீபாராதனையும் நடைபெறும். விழாவின் நிறைவு நாளான 22-ந் தேதி காலை 6.30 மணிக்கு ஆடிப்பூர தீர்த்தவாரி, 10.30 மணிக்கு அம்பாள் அபிஷேகம், வளையல் சாற்றுதல், அர்ச்சனை, தீபாராதனை ஆகியவை நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனத்தினர் செய்துள்ளனர்.
- இன்று இரண்டாம், 3-ம் கால பூஜைகள் நடைபெறுகிறது.
- நாளை இரவு உற்சவர் வீதி உலா நடை பெறுகிறது.
வேலூர் :
வேலூரில் வரலாற்று புகழ்பெற்ற கோட்டையில் உள்ள அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 4-வது மகா கும்பாபிஷேக விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி ஆயத்த பணிகள், ராஜ கோபுரம், 2-வது கோபுரம், வலம்புரி விநாயகர், வெங்கடேச பெருமாள் சன்னதி, வள்ளி தேவ சேனா சமேத சுப்பிரமணியர் சன்னதி, அகிலாண்டேஸ்வரி அம்மன் சன்னதி, மூலவர் ஜலகண்டேஸ்வரர் சன்னதி, சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சன்னதிகளில் பாலாலயம் செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நடந்தது. பாலாலயம் செய்த பின்னர் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்க படவில்லை.
கோபுர கலசங்கள் கழற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்டன. அனைத்து மூலவர் சன்னதிகளில் முகவர்களுக்கு தங்க வெள்ளி கவசங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு மெட்டல் டிடெக்டர் கொண்டு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவில் வெளிபிரகார வளாகத்தில் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் கும்பாபிஷேகத்திற்கான யாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 21-ந் தேதி மகா கணபதி பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை மற்றும் மகா கணபதி ஹோமம் நடை பெற்றது. 22-ந் ேததி நவக்கிரக பூஜை, சுதர்சன பூஜை, சாந்தி ஹோமம் நடந்தது.
நேற்று ராஜகோபுரத்திற்கு கலசங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. முன்னதாக காலை ராஜகோபுர கலசத்துக்கு கோவில் நிர்வாகிகள் தலைமையில் பூஜை செய்யப்பட்டது. இரவு அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், மற்றும் முதல் கால பூஜைகள் நடந்தன.
இன்று (சனிக்கிழமை) காலை இரண்டாம் கால பூஜை மற்றும் மாலையில் 3-ம் கால பூஜைகள் நடைபெறுகிறது.
நாளை அதிகாலை நான்காம் கால பூஜையும், காலை 9.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் புதிய தங்க தேர், ராஜ கோபுரம், கோவில் விமானங்களுக்கு ஒரே நேரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
தொடர்ந்து மாலை 4 மணிக்கு மகா அபிஷேகம், 6 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 8 மணிக்கு உற்சவர் வீதி உலா நடை பெறுகிறது.
விழாவில் காஞ்சி காமகோடி பீடம் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், மகாதேவமலை மகானந்த சித்தர் சுவாமிகள், வேலூர் ஸ்ரீபுரம் சக்தி அம்மா, வேலூர் வனதுர்கா பீடம் துர்கா பிரசாத் சுவாமிகள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கங்கப்பா ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடக்கிறது.
கும்பாபிஷேக ஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரர் கோவில் தர்மஸ்தாபன தலைவர் சச்சிதானந்த சுவாமிகள், செயலாளர் சுரேஷ்குமார், இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், உப தலைவர்கள் ெவங்கடசுப்பு, தர்மலிங்கம், அச்சுதானந்தம், பொருளாளர் சண்முகம் மற்றும் உறுப்பினர்கள், நிர்வாகிகள், கோவில் சிவாச்சாரியார்கள், குருக்கள் செய்து வருகின்றனர்.
- 25-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
- கொடி மரங்களுக்கு தங்க தகடுகள் பொருத்தும் பணி நடைபெறுகிறது.
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் வருகிற 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதன்படி கோவிலில் பெரிய கொடிமரத்துக்கு தங்க தகடுகள் பதிக்கும் பணி நேற்று நடந்தது. ஜலகண்டேஸ்வரர் கோவில் தர்ம ஸ்தாபன நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றது. பின்னர் தர்ம ஸ்தாபன நிர்வாகிகளான தலைவர் கலவை சச்சிதானந்த சுவாமிகள், செயலாளர் சுரேஷ்குமார், உப தலைவரான தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் டார்லிங் வெங்கடசுப்பு, பொருளாளர் ஏ.பி.சண்முகம், உதவி தலைவர் வி.எஸ்.ரமேஷ், இணை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 4-வது மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி பல்வேறு முன்னேற்பாடு பணிகள் கடந்த ஒரு மாதமாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொடி மரங்களுக்கு தங்க தகடுகள் பொருத்தும் பணி நடைபெறுகிறது. அதன்படி சின்ன கொடிமரத்துக்கு ரூ.43 லட்சத்திலும், பெரிய கொடி மரத்துக்கு ரூ.2 கோடி மதிப்பிலும் தகடுகள் பொருத்தப்படுகிறது. இவை 100 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து கோவிலுக்கு பெருமை சேர்க்கும்.
இதுதவிர லிங்கத்துக்கும் ரூ.35 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை சொர்ணபந்தனம் அமைக்கப்படுகிறது. கோவிலில் உள்ள வெள்ளி பொருட்களும் சீரமைக்கப்பட்டு வருகிறது. கோவிலின் பெருமைகள் கொண்ட புத்தக மலர் வெளியிடப்படும்.
சாமி வீதி உலாவுக்காக உபயதாரர் மூலம் ரூ.5 கோடி மதிப்பில் தங்கதேர் அமைக்கப்பட்டு வருகிறது. கும்பாபிஷேகம் அன்று அதற்கும் பிரதிஷ்டை செய்யப்படும். கும்பாபிஷேகத்துக்கு பல்வேறு தரப்பினர் உதவிகள் செய்துள்ளனர். கும்பாபிஷேகத்துக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தர உள்ளதால் கோட்டைக்குள் 150 கார்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. சுமார் 10 ஆயிரம் பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும்.
இந்த கும்பாபிஷேகத்தில் ஆதினங்கள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள், நீதிபதிகள், அதிகாரிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- 25-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
- சன்னதிகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் வருகிற 25-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடாக பாலாலய விழா நேற்று தொடங்கியது.
அதன்படி ஜலகண்டேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன் உள்பட மூலவ மூர்த்திகளுக்கு பாலாலயம் நடந்தது.
இதையொட்டி நேற்று முதல் மூலவர் மற்றும் மற்ற சன்னதிகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து கும்பாபிஷேகம் முடியும் வரை அத்தி மரத்தாலான மூர்த்திகளுக்கு அனைத்து பூஜைகளும் நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
- கும்பாபிஷேக விழா ஜூன் 25-ந் தேதி நடைபெற உள்ளது.
- யாகபூஜை ஜூன் 21-ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது.
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் 4-வது கும்பாபிஷேக விழா வருகிற ஜூன் மாதம் 25-ந் தேதி நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்துவதற்காக 13 துணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவில் கோபுரங்கள், கட்டிடங்கள், உட்பிரகாரங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் கோவில் ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களில் பொருத்தப்பட்டிருந்த 16 கலசங்கள், சாமி, அம்பாள் சன்னதிகளில் உள்ள கொடிமரங்கள் தங்க முலாம் பூசப்பட உள்ளது. இதையொட்டி கோவிலில் உள்ள 16 கலசங்களை புதுப்பித்து தங்க முலாம் பூசுவதற்காக அவை அங்கிருந்து மாற்றும் பணி நேற்று நடந்தது. இந்த பணியில் மதுரையை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர். கோவில் கோபுர கலசங்கள் புதுப்பிக்கப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டு விரைவில் அவை கோபுரங்களில் பொருத்தப்பட உள்ளது.
இதுகுறித்து கோவில் செயலாளர் சுரேஷ் கூறுகையில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகபூஜை ஜூன் 21-ந் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது. ஜூன் 25-ந் தேதி காலை 9.30 மணி முதல் 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும்.
கோவில் கோபுர கலசங்களை புதுப்பித்து தங்க முலாம் பூசப்பட்டு அவை விரைவில் அதே இடத்தில் வைக்கப்பட உள்ளது. சினிமா தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் ரூ.5 கோடி மதிப்பில் புதிதாக தங்கத்தேர் செய்து கோவிலுக்கு வழங்க உள்ளார். இதற்கான பணிகள் கோசாலையில் நடைபெற்று வருகிறது என்றார்.
- இந்த கோவிலில் 1922, 1997, 2011 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
- இதற்கான பணிகளை மேற்கொள்ள 13 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
வேலூர் கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமாக பக்தர்கள் வருகின்றனர். இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக ஜலகண்டேஸ்வரர் கோவில் தர்மஸ்தாபனம் தலைவர் கலவை சச்சிதானந்தாசுவாமிகள், உபதலைவர்களான தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் டார்லிங் வெங்கடசுப்பு, ரமேஷ், பொருளாளர் சண்முகம், செயலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
புகழ்மிக்க ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 1922, 1997, 2011 ஆகிய ஆண்டுகளில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து 4-வது முறையாக இந்தாண்டு வருகிற ஜூன் மாதம் 25-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ள 13 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவினரும் ஒவ்வொரு பணியை மேற்கொள்ள உள்ளனர். அதற்கு முன்பாக தங்க தகடுகளால் கொடிமரம், கலசங்கள், மூலவருக்கு சொர்ணபந்தனம் அமைக்கப்படுகிறது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஆதினங்கள், மடாதிபதிகள் உள்ளிட்ட ஆன்மிகவாதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.