search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலைமை ஆசிரியரை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
    X

    தலைமை ஆசிரியரை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

    • கோஷ்டி மோதல் -பரபரப்பு
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    இலவம்பாடி அரசு பள்ளியில் பணி மாறுதலாகி வேறு பள்ளிக்கு செல்லாத தலைமை ஆசிரியர் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட இலவம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் 280 மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்களுக்கு பாடம் நடத்த தலைமை ஆசிரியர் உள்பட 14 ஆசிரியர்கள் உள்ளனர்.

    பள்ளி தலைமை ஆசிரியராக பூட்டுத்தாக்கை சேர்ந்த கஜேந்திரன், கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியும் அதே பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

    பள்ளி தலைமை ஆசிரியர் கஜேந்திரனை கடந்த ஏப்ரல் மாதம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா அரசு பள்ளிக்கு பணி மாற்றம் செய்து கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    ஆனால் தலைமையாசிரியர் மாற்றம் செய்யப்பட்ட பள்ளிக்கு செல்ல மறுத்து, இலவம்பாடி அரசு பள்ளியிலேயே தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    மேலும் அவர் இலவம்பாடி பள்ளிக்கும் வர மறுத்து, தற்போது மருத்தவ விடுப்பு எடுத்துள்ளார். தற்போது 6-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

    தலைமை ஆசிரியர் கஜேந்திரன் பள்ளிக்கு வராததால், மாணவர்கள் ேசர்க்கையில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளியின் அத்தியாவசிய பணிகளும் மேற்கொள்ள முடியாத சூழல் நிலவி வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று பள்ளியில் குவிந்தனர். பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட கிராமத்திற்கு தலைமை ஆசிரியர் கஜேந்திரன் செல்லவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் பள்ளி நலனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    அப்போது தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த சிலர், போராட்டக்கார்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இருத்தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். இதில் இலவம்பாடி கிராமத்தை சேர்ந்த ராஜன்பாபு என்பவர் படுகாயம் அடைந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் சப்- இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    படுகாயம் அடைந்தவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தலைமை ஆசிரியர் பணியிடை மாறுதலுக்காக ஒரே ஊரை சேர்ந்த இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×