என் மலர்
திருவண்ணாமலை
- அரசுப் பள்ளியில் நடந்தது
- நீர்நிலைகளில் குளிக்கும் போது உரிய கவச உடைகளை அணிந்து குளிக்க வலியுறுத்தல்
வந்தவாசி:
வந்தவாசி காமராஜர் நகரில் அமைந்துள்ள வந்தவாசி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப் பள்ளியில் தீத்தடுப்பு குறித்து செயல் விளக்கம் நேற்று நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியை சித்ரா தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியை கண்மணி வரவேற்றார்.
தீப்பற்றினால் எப்படி அணைப்பது, தீவிபத்திலிருந்து எவ்வாறு காத்துக் கொள்வது என்பது குறித்து வந்தவாசி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபாகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர்.
மேலும் மாணவர்கள் நீர்நிலைகளில் குளிக்கும் போது பெற்றோர் துணையுடன் உரிய கவச உடைகளை அணிந்து கொண்டு குளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
- உடல்நிலை சரியாகாததால் விரக்தி
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அடுத்த சுமங்கலி கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 63). இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் உடல்நிலை மிகவும் மோசமானதால் கடந்த 6-ந் தேதி வயல்வெளிக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட உறவினர்கள் கன்னியப்பனை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கன்னியப்பனின் மகன் ஆனந்தராஜ் மோரணம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மனைவி உடல் கருகி பலி
- கணவருக்கு சிகிச்சை
ஆரணி:
ஆரணி டவுன், அருணகிரிசத்திரம், கண்ணப்பன் தெருவில் வசிப்பவர் சரவணன் (வயது 52). ஆரணி தீயணைப்பு நிலையத்தில் 'சிறப்பு நிலைய அலுவலராக' பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி ஜெய லட்சுமி(48). இவர்களுக்கு விக்னேஷ், ஜெகதீசன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இருவரும் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று மதியம் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது சரவணன், வீட்டில் 6 மாதமாக உபயோகப்படுத்தாமல் இருந்த ஸ்டவ் அடுப்பை எடுத்து அதில் மண்ணெண்ணை ஊற்றி வேகமாக பம்ப் செய்தார். இதில் எதிர்பாராத நிலையில் ஸ்டவ் வெடித்தது.
அந்த நேரத்தில் ஜெயலட்சுமி காஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். ஸ்டவ் வெடித்ததில் மண்ணெண்ணை சிதறி கியாஸ் அடுப்பில் பற்றி எரிந்தது.
இதனால் ஜெயலட்சுமி, சரவணன் ஆகி யோரது உடையில் தீப்பிடித்து மளமளவென எரிந்தது. சமையல் அறை மிகவும் சிறிதாக இருந்தது. இதனால் இருவராலும் வீட்டைவிட்டு வெளியேற முடி யவில்லை. இந்நிலையில் ஜெயலட்சுமி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.
70 சதவீத அளவுக்கு தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சரவணனை அப்பகுதி மக்கள் மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் சரவணனை பரிசோதனை செய்து மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சரவணன் சிகிச்சை பெற்று வருகிறார்.
- வேலூரில் இருந்து வந்தவாசி வழியாக சென்றது
- பஸ்களை சரி செய்ய வலியுறுத்தல்
வந்தவாசி:
வேலூரில் இருந்து ஆற்காடு, செய்யாறு, வந்தவாசி வழியாக மேல்மருவத்தூருக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது வந்தவாசியில் பலத்த மழை பெய்தது. இதனால் பஸ்சின் உள்ளே மழை நீர் ஒழுகியது. பஸ்சில் பயணம் செய்த சில பயணிகள் பஸ்சில் உள்ளே குடை பிடித்துக்கொண்டு பெரும் சிரமத்துடன் சென்றனர்.
போக்குவரத்து துறை நிர்வாகம் அரசு பஸ்களை முறையாக பராமரிப்பு செய்யாத காரணத்தால் பஸ் முழுவதும் மழைநீர் ஒழுகும் அவல நிலை ஏற்பட்டது.
எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைக்காலங்களில் ஒழுகும் நிலையில் இருக்கும் அரசு பஸ்களை சரி செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- நண்பனின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள சென்ற போது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வெம்பாக்கம்:
வெம்பாக்கம் அடுத்த மாமண்டூர் பெரிய தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 24). சிப்காட்டில் வேலை செய்து வந்தார்.
இவரது நண்பருக்கு நிச்சயதார்த்தம் நடப்பதால் அதில் கலந்து கொள்வதற்காக முத்து தனது பைக்கில் நேற்று மாலை வெம்பாக்கத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராகுல் என்கிற ராகவன் (வயது 20). கூலி தொழிலாளி. இவர் வெம்பாக்கம் அடுத்த சித்தாதூரில் உள்ள தனது அக்காவை பார்த்து விட்டு காஞ்சிபுரம் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது வெள்ளக்குளம் அருகே வரும்போது இவரது பைக்கும், முத்து ஒட்டி வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதியது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு முத்துவும், ராகவனும் பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தூசி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பயணிகள் இதுகுறித்து ஆரணி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- போலீசார் குடிபோதையில் இருந்த பழனிக்கு பஸ் கட்டணத்திற்கான பணத்தை வழங்கினர்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவர் செஞ்சி பகுதியில் மூட்டை தூக்கும் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
பழனி நேற்று இரவு தனது சொந்த ஊரான வந்தவாசிக்கு செல்ல, செஞ்சி பஸ் நிலையத்திற்கு வந்தர். மதுபோதையில் விழுப்புரத்திலிருந்து ஆரணி வழியாக வேலூர் செல்லும் பஸ்சில் ஏறி ஆரணி பழைய பஸ் நிலையம் வந்தடைந்தார்.
தன்னிடம் இருந்த பணத்தை மர்மநபர்கள் யாரோ கொள்ளையடித்து விட்டதாகவும், எனவே சொந்த ஊருக்கு செல்ல பணம் இல்லை எனக்கூறி, பஸ் நிலையத்தில் அரசு பஸ் டயர் சக்கரத்தின் முன்பு படுத்து கொண்டு சாகப்போவதாக கூறி ரகளையில் ஈடுபட்டார்.
அங்கிருந்த பயணிகள் இதுகுறித்து ஆரணி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் குடிபோதையில் இருந்த பழனிக்கு பஸ் கட்டணத்திற்கான பணத்தை வழங்கினர். அவரை சொந்த கிராமத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தி வழி அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- ஆபரேஷன் மூலம் செவ்வந்தியின் கர்ப்பபை அகற்றப்பட்டது.
- அரசு ஆஸ்பத்திரி முன்பு வேலூர் புறநகர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள தோக்கவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயமோகன். திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவருடைய மனைவி செவ்வந்தி (வயது 25) தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் செவ்வந்தி 2-வதாக கர்ப்பமானார். அவருக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அவரை செங்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதனை தொடர்ந்து செவ்வந்தியை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆபரேஷன் மூலம் பெண் குழந்தை பிறந்தது.
அப்போது செவ்வந்திக்கு ரத்தப்போக்கு அதிகமாக ஏற்பட்டது. இதனையடுத்து அவரது கர்ப்பபையை நீக்க ஆபரேஷன் செய்ய வேண்டும் என டாக்டர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதனால் ஆபரேஷன் மூலம் செவ்வந்தியின் கர்ப்பபை அகற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி செவ்வந்தி பரிதாபமாக இறந்தார். அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை கண்டித்து இன்று காலை திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரி முன்பு வேலூர் புறநகர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது . போலீசார் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது செவ்வந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டதும் வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்கிறோம் என தெரிவித்தோம் ஆனால் அவர்கள் ஆபரேஷன் மூலம் சரி செய்து விடலாம் என கூறினர். ஆபரேசனுக்கு பிறகும் செவ்வந்தி பலியாகியுள்ளார்.
திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் 3-வதாக கர்ப்பிணி ஒருவர் பலியாகி உள்ளார். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும் என கூறினர்.
அவர்களிடம் மருத்துவ கல்லூரி முதல்வர் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சம்பவம் திருவண்ணாமலையில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை நகராட்சி, பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும், ரோட்டரி டயாலிசிஸ் சென்டரில் முதல்- அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அறிமுக விழா நடந்தது.
பயனாளி களுக்கு முதல்- அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டையினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை தலைவர் பிச்சாண்டி, திருவண்ணா மலை நாடாளுமன்ற உறுப்பினர்.
சி.என்.அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி. மாநில தட்கள் சங்கத் துணைத்தலைவர். எ.வ.வே.கம்பன், இணை இயக்குநர் சுகாதரா துறை ஏழுமலை. மாநில கைப்பந்து சங்க துணை தலைவர். ஸ்ரீதரன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- போக்குவரத்து பாதிப்பால் மாணவர்கள் அவதி
- நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி
ஆரணி:
ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் பகுதியில் பஜனை கோவில் தெரு உள்ளது. இங்கு 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் ஊராட்சி சார்பில் கால்வாய் அமைக்கப்பட்டது. இங்கு அமைக்கப்பட்ட கால்வாயில் கழிவு நீர் செல்வதற்கு வழி இல்லாததால் வீடுகளின் அருகேவும், தெருக்களிலும் கழிவு நீர் தேங்கி நிற்கிறது.
இதனால் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், நகராட்சியிலும் கழிவு நீர் செல்ல நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை மனு அளித்துள்ளனர்.
ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த கழிவுநீர் அருகே உள்ள சேவூர் கிராம வழியாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பஜனை கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் கூறினர். ஆனால் இதற்கு சேவூரை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பஜனை கோவில் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை ஆரணி- வேலூர் சாலையில் 50-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் அவதி அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆரணி தாலுகா போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- அதிகாரிகள் மிரட்டல் விடுப்பதாக புகார்
- போக்குவரத்து பாதிப்பு
செய்யாறு:
செய்யாறு நகராட்சி அலுவலகத்தில் இன்று காலை துப்புரவு தொழிலாளர்கள் திடீரென முற்றுகையிட்டனர்.
அப்போது தங்களுக்கு 3 மாதம் சம்பள பாக்கி உள்ளது. 18 வருடமாக வைப்புதொகை நிலுவையில் உள்ளது. அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டால் மிரட்டல் விடுப்பதாகவும், 462 ரூபாய் சம்பளம் தர வேண்டும் ஆனால் 300 ரூபாய் தருவதாகவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் அங்கிருந்து சென்று செய்யாறு- ஆற்காடு சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து செய்யாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகராட்சி கமிஷனர் ரகுராமன் மற்றும் செய்யாறு சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதின் பேரில் துப்புரவு தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மாலையில் சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது
- அன்னதானம் வழங்கப்பட்டது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவலில் நேற்று சம்வஸ்திராபிஷேகம் நடைபெற்றது. இதைமுன்னிட்டு காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது.
இதில் கொளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணிஆனந்தன், துணை தலைவர் சாலம்மாள், கண்ணமங்கலம் மின் வாரிய உதவி பொறியாளர் சிலம்பரசன் மற்றும் உபயதாரர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழு தலைவர் சரவணன், பெரியதனம் சாமி நடராஜன், ஆறுமுகம் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- ேநாய் பரவும் அபாயம்
- அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
செங்கம்:
செங்கம் நகரில் பல்வேறு காய்கறி மற்றும் பழ வகைகள் விற்பனை செய்யும் கடைகள், நடமாடும் ஆட்டோகளில் காய்கறி விற்பனை மற்றும் நடமாடும் பழக்கடைகள் அதிக அளவில் செயல்படுகிறது.
செங்கம்- போளூர் தேசிய நெடுஞ்சாலையில் மில்லத் நகர் முதல் தொடங்கி குயிலம் கூட்ரோடு, நீதிமன்றம் செல்லும் ரோடு, போளூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறமும் கெட்டுப்போன காய்கறிகள், பழ வகைகளை சாலையின் 2 பக்கமும் வியாபாரிகள் கொட்டி விட்டு செல்கின்றனர்.
அதேபோல மக்கிய நிலையில் குப்பைகள், கோழி மற்றும் ஆட்டு இறைச்சி கழிவுகள் சாலை ஒரங்களில் கொட்டிச் செல்கின்றனர். இதனால் குப்பைகள் சாலை இருபக்கத்திலும் மக்கி துர்நாற்றம் வீசுகிறது.
குறிப்பாக மழை நேரங்களில் துர்நாற்றம் அதிக அளவு வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்படுகிறது.
குப்பைகள், கெட்டுப்போன காய்கறிகள் பழ வகைகள், இறைச்சி கழிவுகள் சாலையின் இரு புறங்களிலும் கொட்டுவதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குப்பைகளை சாலையின் ஒரங்களில் வீசி செல்வோர் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும் எனவு வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






