என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆரணி- வேலூர் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்ட காட்சி.
கழிவுநீர் செல்ல வழி இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல்
- போக்குவரத்து பாதிப்பால் மாணவர்கள் அவதி
- நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி
ஆரணி:
ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் பகுதியில் பஜனை கோவில் தெரு உள்ளது. இங்கு 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் ஊராட்சி சார்பில் கால்வாய் அமைக்கப்பட்டது. இங்கு அமைக்கப்பட்ட கால்வாயில் கழிவு நீர் செல்வதற்கு வழி இல்லாததால் வீடுகளின் அருகேவும், தெருக்களிலும் கழிவு நீர் தேங்கி நிற்கிறது.
இதனால் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், நகராட்சியிலும் கழிவு நீர் செல்ல நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை மனு அளித்துள்ளனர்.
ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த கழிவுநீர் அருகே உள்ள சேவூர் கிராம வழியாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பஜனை கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் கூறினர். ஆனால் இதற்கு சேவூரை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பஜனை கோவில் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை ஆரணி- வேலூர் சாலையில் 50-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் அவதி அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆரணி தாலுகா போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






