என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    போளூரில் பெயிண்டு அடிக்கும் போது தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போளூர்:

    போளூர் அருகே தேவிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 35), பெயிண்டர். இவர் போளூர் அண்ணாநகர் விரிவாக்கத்தில் உள்ள வேல்முருகன் என்பவர் வீட்டில் கடந்த 2-ந் தேதி பெயிண்டு அடித்துக் கொண்டிருந்தார். அப்போது 7 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். உடனே அவருக்கு போளூரில் முதலுதவி அளித்து வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தரணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    போளூர் அருகே மது, சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போளூர்:

    போளூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாவடி தெருவில் மதுபான பாட்டில்கள் விற்ற சாந்தி (வயது 59) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் மாட்டுப்பட்டி தெருவில் சாராயம் விற்ற வசந்தி (65) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர். இதேபோல் சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் நேற்று பெருமாள்பேட்டை கிராமத்தில் மது விற்ற முருகன் (43) என்பவரை கைது செய்தனர்.அவரிடம் இருந்து 3 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    திருவண்ணாமலையை அடுத்த நார்த்தாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை அடுத்த நார்த்தாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமைகலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்து பேசும் போது கூறியதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 38 ஆயிரத்து 317 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இந்த சிறப்பு முகாமில் நார்த்தாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இருந்து மாற்றுத்திறனாளிகள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு முகாமில் தினமும் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் கொரோனா தடுப்பூசிசெலுத்தி கொள்கின்றனர்.

    அதன்படி மாவட்டம் முழுவதும் கடந்த 30-ம் தேதி வரை நடந்த முகாம்களில் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டநபர்களில் மொத்தம் 1 லட்சத்து 44 ஆயிரத்து 717 பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 1,602 பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.

    அதேபோல் 44 வயதுக்கு மேற்பட்டவர்களில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 893 பேர் முதல் தவணைதடுப்பூசியும், 37 ஆயிரத்து 477 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர்.மொத்தம் 2 லட்சத்து 82 ஆயிரம்பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், ஆர்.டி.ஓ. வெற்றிவேல், வட்டார மருத்துவ அலுவலர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்களப் பணியாளர்களாக அறிவிக்கக்கோரி அங்கன்வாடி பணியாளர்கள் போளூரில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    போளூர்:

    போளூர் வட்டாரத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் 111 பேரும், உதவியாளர்கள் 106 பேரும் என 216 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவுப்படி, நகரம் மற்றும் கிராமங்களில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியும், வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி எத்தனை பேருக்கு போடப்பட்டுள்ளது உள்பட பல்வேறு கணக்குகளை எடுத்து வருகிறார்கள்.

    தினமும் காலை 7 மணி அளவில் இந்த பணி தொடங்குகிறது. இவர்களுக்கு முககவசம், சானிடைசர் திரவம் போன்ற கொரோனா தடுப்பு பொருட்கள் வழங்கவில்லை.

    இவர்களையும் முன்களப்பணியாளர்களாக அரசு அறிவித்து சலுகைகள் வழங்க கோரி நேற்று போளூரை அடுத்த வசூரில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க நிர்வாகி மோகனாம்பாள் தலைமை தாங்கினார். இதில் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து. தகவல் அறிந்ததும் போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் கூறி கலைந்து போக கூறினர்.

    அப்போது மாவட்ட திட்ட அலுவலர் கந்தன் அங்கு வந்தார். அவர் உங்களின் கோரிக்கைகளை உயர் அதிகாரிகளிடம் கூறி ஆவன செய்வதாக கூறினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    தூசி அருகே மதுகுடித்ததை தந்தை கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    தூசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள சித்தாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமிகாந்தன். இவரின் மகன் சூரியகோட்டி (வயது 21). இவர் ஐ.டி.ஐ. படித்து விட்டு வேலை தேடி வந்தார். ஆனால் கொரோனா ஊரடங்கால் சரியான வேலை கிடைக்கவில்லை. சூரியகோட்டி அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.

    அவர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததை தந்தை லட்சுமிகாந்தன் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டின் மாடியில் உள்ள அறைக்குச் சென்று, மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டுக் கொண்டார்.

    தூக்கில் தொங்கிய அவர் அலறினார். அவரின் அலறல் சத்தத்ைதக் கேட்டதும் அங்கிருந்தவர்கள் ஓடி வந்து, அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், சூரியகோட்டி இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து லட்சுமிகாந்தன் தூசி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி அருகே திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    ஆரணியில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் கவிதா விசாரணை நடத்தி வருகிறார்.

    ஆரணி அருணகிரிசத்திரம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த தனசேகரன்- ஜெயகாந்தி என்பவரின் மகன் பாலமுருகன். இவருக்கும் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த பரந்தாமன் மகள் உமாசங்கரி (வயது 26) என்பவருக்கும் கடந்த மாதம் 23-ந் தேதி பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.

    பாலமுருகன் சென்னை ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று அவர் வேலைக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த உமாசங்கரி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் மாமியார் ஜெயகாந்தி, மாமனார் தனசேகரன் ஆகியோர் ஜன்னல் வழியாக பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ஆரணி டவுன் போலீசுக்கும், உமாசங்கரியின் பெற்றோருக்கும் தெரிவிக்கபட்டுள்ளது. அதன்பேரில் ஆரணி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உமாசங்கரி தற்ெகாலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் திருமணமாகி ஒரு மாதமே ஆனதால் ஆரணி உதவி கலெக்டர் ஆர்.கே.கவிதா விசாரணை நடத்தி வருகிறார்.
    கண்ணமங்கலம் அருகே விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கண்ணமங்கலம்:

    ஆந்திர மாநிலம், பலமனேர் அருகே உள்ள ரெண்டகுல்லா கிராமத்திலிருந்து திண்டிவனம் நோக்கி தக்காளி பாரம் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று நேற்று முன்தினம் நள்ளிரவில் கண்ணமங்கலம் அருகே ஆரணி செல்லும் ரோட்டின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டிரைவர் ராஜப்பா (வயது 52) சம்பவ இடத்திலேயே பலியானார். கிளினர்ராக சென்ற சுப்பிரமணி (50) லேசான காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார், சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லாரி டிரைவர் ராஜப்பாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 185 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி 2 பேர் உயிரிழந்து உள்ளார். நேற்று வரை 49 ஆயிரத்து 524 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனா். இதில் 47 ஆயிரத்து 811 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். 1,114 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 599 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர்.
    சேத்துப்பட்டு அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டை அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 48), விவசாயி. இவர் உடல் நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த அவர் வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூசி அருகே மணல் கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூசி:

    வெம்பாக்கம் தாலுகா தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையில் தலைமை காவலர்  மற்றும் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது உக்கல் கிராமத்தை சேர்ந்தவர்கள் செய்யாறு ஆற்றுப்படுகையில் இருந்து 8 மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கடத்தி வந்தனர்.

    அவர்களை போலீசார் மடக்கி கைது செய்தனர். கைதானவர்கள் உக்கல் கிராமத்தைச் சேர்ந்த ஞானவேல் (வயது 57), முத்து (60), குமார் (60), பையாகுட்டி (45), செல்வம் (41), மணிகண்டன் (38), வெங்கடேசன் (57) என தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 8 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய வீரன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ரேசன் கார்டை அடமானம் வைத்து மது குடித்ததால் மகனை இரும்பு ராடால் அடித்து கொலை செய்த தந்தை ஆரணி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவரது மகன் பாஸ்கர் (வயது 33) கூலி வேலை செய்து வந்தார்.

    பாஸ்கரும் அவரது மனைவி ரம்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக 6 ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். மனைவி பிரிந்து சென்றதால் பாஸ்கர் தந்தை தட்சணாமூர்த்தி, தாய் பவானி ஆகியோருடன் வாழ்ந்து வந்தார்.

    பாஸ்கருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. அவர் தந்தை தட்சிணாமூர்த்தி தாய் பவானியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அவர்கள் பணம் கொடுக்க மறுத்துவிட்டனர்.

    இதனால் பாஸ்கர் வீட்டில் இருந்த ரேசன் கார்டை எடுத்து சென்று அடமானம் வைத்து பணம் வாங்கினார். அந்த பணத்தில் மது குடித்தார்.

    குடிபோதையில் வீட்டுக்கு வந்த பாஸ்கரிடம் தாய் பவானி ரேசன் கார்டை எங்கே என்று கேட்டார். அப்போது பாஸ்கர் குடிபோதையில் தாயை தாக்கினார்.

    இதனை பார்த்த தட்சணாமூர்த்தி ஆத்திரமடைந்தார். அங்கிருந்த இரும்பு ராடால் பாஸ்கரை தாக்கினார்.இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பாஸ்கர் சுருண்டு விழுந்து இறந்தார்.

    மகன் இறந்ததை பார்த்து தாயும், தந்தையும் கதறி அழுதனர்.

    பின்னர் தட்சணாமூர்த்தி களம்பூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாஸ்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் ஆரணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    கண்ணமங்கலம் அருகே குடும்ப தகராறு காரணமாக ஒரே சேலையில் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள அனந்தபுரம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது36). பொக்லைன் ஓட்டி வந்தார். இவரது மனைவி இந்துமதி (34). இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது.

    இன்று அதிகாலை கண்ணன்-இந்துமதி ஆகிய இருவரும் தங்கள் வீட்டிலேயே ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக தொங்கினர்.

    உறவினர்கள் அங்கு வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் இருவரது பிணத்தையும் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஒரே சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

    இருவரும் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வது சாத்தியமா? இல்லை இச்சம்பவத்தில் வேறு யாராவது சம்பந்தப்பட்டுள்ளார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு உமாதேவி (9) என்கிற மகளும், விக்னேஷ் (7) என்கிற மகனும் உள்ளனர். பொற்றோரை இழந்து அவர்கள் தவித்து வருகின்றனர்.

    ×