என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    செங்கம் அருகே பஸ்- மினிவேன் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பரிதாபமாக இறந்தார். 17 பேர் காயம் அடைந்தனர்.
    செங்கம்:

    பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. செங்கம் அருகே வந்தபோது திருக்கோவிலூரில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற மினி வேனும், பஸ்சும் மோதிக் கொண்டது.

    இதில் அரசு பஸ்சில் பயணம் செய்த ஒரு பெண்ணும், மினி வேனில் வந்த 17 நபர்களும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மேல்செங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 5 பேரை செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர்கள் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 13 பேர் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 48) என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    மேலும் போலீசார் விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கீழ்பென்னாத்தூரில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூரில் அவலூர்பேட்டை ரோட்டில் வசிப்பவர் ஜி.சேகர் (வயது 65). இவர், தான் வசிக்கும் மாடி வீட்டின் தரைதளத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவரும், குடும்பத்தினரும் காற்று வசதிக்காக வீட்டின் கதவை பூட்டாமல் திறந்து வைத்த படி படுத்துத் தூங்கி கொண்டிருந்தனர்.

    நள்ளிரவு 12 மணிக்குமேல் மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து அறையில் இருந்த பீரோவை சாவியால் திறந்து, அதில் வைத்திருந்த பையை எடுத்துப் பார்த்துள்ளனர்.

    அந்தப் பையில் வைத்திருந்த ரூ.70 ஆயிரம், 3 பவுன் நெக்லஸ், அரை பவுன் மோதிரம் ஆகியவற்றை திருடிக்கொண்டு பக்கத்தில் வசிக்கும் ஜவுளிக்கடை உரிமையாளரான பாபு என்ற பாலசுப்ரமணியின் வீட்டின் மொட்டை மாடியில் பை மற்றும் திருடிய 3 செல்போன்கள் மற்றும் ஒருசில பொருட்களை வீசி விட்டு சென்றுள்ளனர்.

    இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் சேகர் கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர் வரவழைக்கப்பட்டு கைரேகை, தடயங்களை பதிவு செய்தனர். மேலும் திருட்டுச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    திருவண்ணாமலையில் நேற்று பகலில் வழக்கம் போல் வெயில் கொளுத்தியது. மாலையில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
    செங்கம்:

    செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு முழுவதும் மழை பெய்தது. நேற்று அதிகாலை வரையிலும் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது.

    இதைத்தொடர்ந்து நேற்று மாலையும் மீண்டும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருவண்ணாமலையில் நேற்று பகலில் வழக்கம் போல் வெயில் கொளுத்தியது. மாலையில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 7 மணியளவில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் நடந்து மற்றும் வாகனங்களில் சென்ற பொதுமக்கள் சாலையோரம் மறைவான பகுதியில் ஒதுங்கி நின்றனர். மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. பின்னர் லேசான சாரல் மழையாக பெய்தது.
    தூசி அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூசி:

    தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தூசி அருகே குன்னவாக்கம் ஆற்றுப்படுகையில் இருந்து 5 மோட்டார் சைக்கிள்களில் ஒழுக்கு வாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் (வயது 29), பெருமாள் (31), அஜித் (22) உள்ளிட்ட 5 பேர் மோட்டார் சைக்கிள்களில் மணல் கடத்தி வந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடமுயன்றனர்.

    அவர்களில் சதீஷ், பெருமாள், அஜித் ஆகிய 3 பேரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். 5 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தற்போது தொற்றின் தாக்கம் குறைய தொடங்கி உள்ளது. தினமும் சுமார் 125 பேர் வீதம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-க்கும் கீழ் பதிவானது.

    நேற்று 96 பேர் மட்டுமே தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 1,234 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 50 ஆயிரத்து 440 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 48 ஆயிரத்து 591 பேர் குணமடைந்து உள்ளனர். 615 பேர் உயிரிழந்து உள்ளனர்.
    வேலூர் மாவட்டத்தில் வேலூர், குடியாத்தம், அணைக்கட்டு, பேரணாம்பட்டு, காட்பாடி பகுதிகளில் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது.காலையிலும் மழை விட்டு விட்டு பெய்தது.

    திருவண்ணாமலை :

    வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது.நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய மழை பெய்தது.

    கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. விவசாய நிலங்களிலும் மழை நீர் நிரம்பியது. பகலில் வெயில் அதிகமாக இருந்த நிலையில் இரவில் பெய்த மழை வெப்பத்தை தணிய வைத்ததால் இதமான குளிர் காற்று வீசியது.

    திருவண்ணாமலையில் இரவில் பெய்த மழையால் ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கோடை வெயிலில் வறண்ட குளங்கள் நிரம்பி வருகின்றன.

    மராமத்து பணிகள் எதுவும் செய்யாத நிலையில் மழை பெய்து வருவதால் மழைநீரை உரிய முறையில் சேமிக்க முடியாத நிலை உள்ளது.

    திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் தங்கியிருக்கும் சாமியார்கள் தொடர் மழை காரணமாக நிழற்குடைகளில் தஞ்சமடைந்துள்ளனர். பலர் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் கோவில், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கியிருக்கும் ஆதரவற்ற நபர்களும் தவித்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, போளூர், சேத்துப்பட்டு, செங்கம், வந்தவாசி, செய்யாறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    ஆரணியில் 115.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இரவு முதல் விடிய விடிய மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

    காமக்கூர்பாளையம் கிராமத்தில் அறுவடைக்கு தயாரான விளைநிலத்தில் மழை வெள்ளம் தேங்கி நின்றதால் நெற்பயிர்கள் சேதடைந்துள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் வேலூர், குடியாத்தம், அணைக்கட்டு, பேரணாம்பட்டு, காட்பாடி பகுதிகளில் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது.காலையிலும் மழை விட்டு விட்டு பெய்தது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளியில் இரவில் தொடங்கிய மழை விடிய, விடிய பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, அரக்கோணம், சோளிங்கர், காவேரிப்பாக்கம், பனப்பாக்கம் பகுதிகளில் விடிய விடிய பரவலாக மழை பெய்தது.


    கண்ணமங்கலம் ஏரிக்கு வரும் மேல்வல்லம் தடுப்பணையில் தண்ணீர் தேங்கி ஏரிக்கால்வாய் மூலம் லேசான தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் அவ்வப்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக, ஜவ்வாதுமலையில் உற்பத்தியாகும் நாகநதியில் நேற்று லேசான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் தடுப்பணை நிரம்பி தண்ணீர் வழிந்தோடுகிறது. மேலும் கண்ணமங்கலம் ஏரிக்கு வரும் மேல்வல்லம் தடுப்பணையில் தண்ணீர் தேங்கி ஏரிக்கால்வாய் மூலம் லேசான தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போல் கொளத்தூர், மேல்நகர் ஏரிக்கால்வாய்களிலும் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை பாசன ஆய்வாளர் முருகன் தெரிவித்தார்.
    தச்சூர் ஆற்றுப்படுகைப் பகுதியில் இருந்து டிராக்டரில் மணல் கடத்தி வந்த வடுகசாத்து கிராமத்தைச் சேர்ந்த பூங்காவனம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    ஆரணி:

    ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் ரகு மற்றும் போலீசார் நேற்று காலை ஆரணி கொசப்பாளையம் திருமலை சமுத்திரம் ஏரிக்கரை பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது தச்சூர் ஆற்றுப்படுகைப் பகுதியில் இருந்து டிராக்டரில் மணல் கடத்தி வந்த வடுகசாத்து கிராமத்தைச் சேர்ந்த பூங்காவனம் (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

    பெரணமல்லூரை அடுத்த முனுகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 35). இவர், கிராமம் அருகில் உள்ள செய்யாறு ஆற்றுப்படுகையில் இருந்து மாட்டுவண்டியில் மணல் கடத்தி வந்தார்.

    அதேபோல் மற்றொரு நபர் தனது மாட்டுவண்டியில் மணல் கடத்தி வந்தபோது பெரணமல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமளவல்லி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அவர்களை மடக்கினர். அதில் சீனிவாசன் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். மற்றொரு நபர் மாட்டு வண்டியை விட்டு விட்டு தப்பியோடி விட்டார். 2 மாட்டுவண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சீனிவாசனை கைது செய்து தப்பியோடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    கலசபாக்கம் அருகே வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கலசபாக்கம்:

    கலசபாக்கம் அடுத்த காஞ்சி கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (வயது 59). இவர் தடைசெய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை வாங்கிவந்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கலசபாக்கம் அடுத்த மாதிமங்கலம் பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த அவரை கடலாடி போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 48 வெளிமாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
    புதுப்பாளையத்தில் அதிகாரிகள் வருவதை பார்த்ததும் போலி டாக்டர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு போலி டாக்டர்கள் சிகிச்சையளித்து வருவதாக புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து அவர்களை பிடிக்க நேற்று மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கண்ணகி தலைமையில், செங்கம் மருத்துவ அலுவலர் அருளானந்தம் மற்றும் மருத்துவ குழுவினர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் உள்பட போலீசார் புதுப்பாளையம் பகுதிக்கு சென்றனர்.

    அதிகாரிகள் வருவதை பார்த்ததும் போலி டாக்டர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். உரிய மருத்துவ படிப்பு படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்ததாக துரைஜெயராமன் (வயது 70) மற்றும் குமார் (45) ஆகிய இருவர் மீது போலீஸ் நிலையத்தில் சுகாதாரத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர். முன்னதாக குமார் என்பவர் நடத்தி வந்த மருத்துவமனையில் இருந்த பொருட்களை சுகாதாரத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
    சுற்றுலா பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். சானிடைசர் பயன்படுத்த வேண்டும்.
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குவது சாத்தனூர் அணை. கொரோனா வைரஸ் தாக்கத்தால் சுற்றுலாத் தலங்களை சுற்றிபார்க்க தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி முதல் தடைவிதித்தது. அதைத்தொடர்ந்து சாத்தனூர் அணை மூடப்பட்டது.

    சாத்தனூர் அணை மூடப்பட்டதால் அரசுக்கு ரூ.15 லட்சம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டதோடு சுற்றுலா பயணிகளை நம்பி இருந்த வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தமிழக அரசு சில தளர்வுகளுடன் சாத்தனூர் அணையை சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்க்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

    அதைத்தொடர்ந்து 75 நாட்களுக்கு பிறகு நேற்று காலை சாத்தனூர் அணை சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க திறக்கப்பட்டது. இதுகுறித்து உதவி பொறியாளர் சிவக்குமார் கூறுகையில் சுற்றுலா பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.

    நீச்சல் குளத்தில் குளிக்கவோ, படகு சவாரி செய்யவோ அனுமதி இல்லை என்று கூறினார். 75 நாட்களுக்குப் பிறகு சாத்தனூர் அணையை சுற்றி பார்க்க அனுமதித்தால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி‌ அடைந்துள்ளனர்.
    தாய் மற்றும் பாட்டி இறந்த விரக்தியில் என்ஜினீயர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
    ஜோலார்பேட்டை:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் ஜெகன் (வயது 23). என்ஜினீயரிங் படித்துவிட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ராணிப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    இவரது தாயார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மேலும் தனது பாட்டி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ஓட்டலில் தினசரி சாப்பிட்டு வந்த அவர் மன வேதனையில் காணப்பட்டார்.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று முன்தினம் இரவு ஜெகன் காட்பாடி ரெயில் நிலையம் அருகே ஆலப்புழையில் இருந்து தன்பாத் நோக்கி சென்ற ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு சென்று ஜெகன் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×