என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    கலசபாக்கம் அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கலசபாக்கம்:

    கலசபாக்கத்தை அடுத்த எம்.என்.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 42), விவசாயி. இவர் நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் இருந்து எம்.என்.பாளையத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வேலூரில் இருந்து திருவண்ணாமலையை நோக்கி வந்த ஒரு கார் திடீரென அவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதில் தூக்கி வீசப்பட்ட தேவேந்திரன் படுகாயம் அடைந்தார். அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    துப்புரவு பணியாளர்கள், பொறியாளர் பிரிவு ஊழியர்கள் நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்கக்கோரி ஆரணி நகராட்சி ஆணையாளரை முற்றுைகயிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆரணி:

    ஆரணி நகராட்சியில் ேவலை பார்க்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஒரு மாத சம்பளமும், பொறியாளர் பிரிவு ஊழியர்களுக்கு 2 மாத சம்பளமும் வழங்காமல் நிலுவையில் உள்ளது. நிலுைவயில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்கக்கோரி ஆரணி நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று காலை 10.30 மணியளவில் துப்புரவுப் பணியாளர்கள், பொறியாளர் பிரிவு ஊழியர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் எனக்கோரி கோஷம் எழுப்பினர். மேலும் தங்களின் சேம நலநிதியில் இருந்து கடன் உதவி கேட்டு விண்ணப்பித்த 100 பேருக்கும் வழங்காமல் காலம் கடத்தி வருவதை கண்டித்து தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர்.

    இதையடுத்து அலுவலக அறையில் அமர்ந்திருந்த ஆணையாளர் (பொறுப்பு) டி.ராஜவிஜயகாமராஜை சூழ்ந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் நகராட்சி அலுவலக வெளி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை அழைத்து நகராட்சி ஆணையாளர் பேச்சு வார்த்தை நடத்தினார். உங்களுக்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவைத் தொகையை வருகிற திங்கட்கிழமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், துப்புரவுப் பணியாளர்கள் முழு மனதோடு நகரில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளுங்கள், உங்களால் அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது.

    கொரோனா காலம் என்பதால் பொதுமக்களிடம் இருந்து சொத்து வரி, நகராட்சி கடைகளில் இருந்து வாடகை பாக்கி, குழாய் வரி பாக்கி, குத்தகை இன நிலுவை பாக்கிகள் உள்பட வரவேண்டிய நிலுவை பாக்கிகள் உள்ளிட்டவைகள் நகராட்சிக்கு அவர்களாகவே முன்வந்து செலுத்தினால் மட்டுமே தங்களுக்கு சம்பளம் வழங்கக் கூடிய சூழ்நிலை இருக்கிறது. அரசிடம் இருந்து தற்போது எந்த நிதியும் வரவில்லை. வந்ததும் உங்களுடைய கோரிக்கைகளுக்கான சேமநலநிதி பணமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், எனத் தெரிவித்தார். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.
    தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 3 மாதங்களாகியும் பணம் வழங்காததை கண்டித்து, விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் கதவுக்கு பூட்டு போட்டு பூட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் பேரூராட்சியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் இயங்கி வருகிறது. தேசூர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் நெல் மூட்டைகளை தேசூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக விவசாயிகளின் நெல் மூட்டைகளுக்கு பணம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து விவசாயிகள் பலமுறை ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரியிடம் கேட்டபோது அவர் விவசாயிகளை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. மேலும் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சுமார் ரூ.1 கோடிக்கு மேல் பணம் தராமல் காலம்தாழ்த்தி வருகிறார். மேலும் அதிகாரிகள் அலுவலகத்திற்கு வராததால் விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

    இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று தேசூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் கதவை பூட்டுப் போட்டு பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவலறிந்த தேசூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர். இந்த போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் லோகேஷ் தேசூர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் சீனிவாசன் என்ற வியாபாரி கடந்த 3 மாதங்களாக ரூ.54 லட்சம்பாக்கி வைத்துள்ளார். இதனால்தான் விவசாயிகளுக்கு பணம் கொடுக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.
    அவ்வப்போது பெய்து வரும் மழையினால் மாவட்டத்தில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விவசாயப் பணிகளை தொடங்கி உள்ளனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நள்ளிரவில் குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் நள்ளிரவில் இருந்து விடிய, விடிய நேற்று அதிகாலை வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்தது. அவ்வப்போது பெய்து வரும் மழையினால் பல்வேறு பகுதிகளில் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. இந்த மழையினால் மாவட்டத்தில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விவசாயப் பணிகளை தொடங்கி உள்ளனர்.

    தொடர்ந்து நேற்று பகலிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலையில் லேசான சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கலசபாக்கத்தில் 45 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது.

    மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    செய்யாறு- 23, போளூர்- 21.2, ஆரணி மற்றும் சேத்துப்பட்டு- 20, செங்கம்- 18.2, வெம்பாக்கம்- 11, கீழ்பென்னாத்தூர்- 10.2, ஜமுனாமரத்தூர் மற்றும் வந்தவாசி- 14, திருவண்ணாமலை- 7.
    தூசி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூசி:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா நெடும்பிரை கிராமத்தை சேர்ந்தவர் வேலு. அவரது மகன் ரஞ்சித்குமார் (வயது 30). இவர், செய்யாறு சிப்காட் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி சங்கீதா, மகள் பிரவீனா (3) உள்ளனர்.

    ரஞ்சித்குமார் நிலத்துக்கு பூச்சி மருந்து தெளிக்க இருந்தார். அதற்காக அவர் நேற்று முன்தினம் தனது மகளை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு, மாங்கால் கூட்ரோடு பகுதியில் பூச்சி மருந்து வாங்கிவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    தூசியை அடுத்த அழிஞ்சல்பட்டு கிராமம் மெயின் ரோட்டை கடக்கும் போது, அந்த வழியாக வந்த வட மாநிலத்தை சேர்ந்த ஜங்குசர்மா (45) என்பவர் திடீரென குறுக்கே வந்ததால் மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, ரஞ்சித்குமார் தனது குழந்தையோடு கீழே விழுந்தார். அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பிரவீனா, ஜங்குசர்மா ஆகியோர் லேசான காயத்துடன் தப்பினர்.

    அங்கிருந்தவர்கள் 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், வெங்கடேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போளூர் பகுதியில் 2 நாட்களில் 672 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    போளூர்:

    போளூர், களம்பூர், செங்குணம், ஆர்.குண்ணத்தூர், படவேடு, சந்தவாசல், வாழியூர் ஆகிய 7 இடங்களில் கடந்த 2 நாட்களில் 672 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டதாக, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தர் தெரிவித்தார்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தற்போது குறைந்து வருகிறது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று 71 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். 2 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,121 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுவரை மாவட்டத்தில் 50 ஆயிரத்து 862 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 49 ஆயிரத்து 118 பேர் குணமடைந்து உள்ளனர். 623 பேர் உயிரிழந்து உள்ளனர்.
    வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த மானை மீட்டு பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதியில் மான், மயில், குரங்கு, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    இந்த நிலையில் நேற்று ஒரு வயதுடைய மான் குட்டி வனப்பகுதியில் இருந்து வழித்தவறி கிரிவலப்பாதையில் உள்ள வரட்டுகுளம் அருகில் வந்துள்ளது. அப்போது அங்கு சுற்றித்திரிந்த நாய்கள், மானை கடித்துள்ளது. இதில் காயம் அடைந்த மான் பரிதாபமாக உயிரிழந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த மானை மீட்டு பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர்.
    திருவண்ணாமலையிலிருந்து கைரேகை பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் தலைமையில் கைரேகை நிபுணர் விஜயகுமார் தடயங்களை சேகரித்தனர்.
    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த கம்பன் நகர் பெரியார் வீதியில் வசிப்பவர் கார்த்திக். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது தம்பி திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரை அழைத்து வருவதற்காக வீட்டை பூட்டி விட்டு கார்த்திக் திருப்பூர் சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான 12 பவுன் நகைகள், வெள்ளி நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை திருடிக்கொண்டு தப்பி விட்டனர்.

    நேற்று காலை கார்த்திக்கின் வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை அருகில் உள்ளவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா தலைமையிலான போலீசார் திருட்டு நடந்த கார்த்திக்கின் வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    திருவண்ணாமலையிலிருந்து கைரேகை பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் தலைமையில் கைரேகை நிபுணர் விஜயகுமார் தடயங்களை சேகரித்தனர். அதன் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    மற்றொரு திருட்டு

    இதேபோல் வந்தவாசி பெட்டிநாயுடு தெருவில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    வெளியூர் சென்றிருந்ததால் இவரது வீடும் பூட்டப்பட்டிருந்தது. இவரது வீட்டின் பூட்டையும் உடைத்து பீரோவில் இருந்த ரூ.4,800 ரொக்கம் மற்றும் 6 பட்டு சேலைகள், வெள்ளி நகைகள் ஆகியவை திருடப்பட்டிருந்தது.

    இது குறித்து பக்கத்து வீட்டுக்காரர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் வந்தவாசி தெற்கு போலீசார் திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டனர். வந்தவாசி தெற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகிறார்.
    இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கம்:

    செங்கம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் நூருல்அமின் (வயது 45) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 84 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 1,232 பேர் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 50 ஆயிரத்து 631 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 48 ஆயிரத்து 780 பேர் குணமடைந்து உள்ளனர். 619 பேர் உயிரிழந்து உள்ளனர்.
    அவலூர்பேட்டையில் பஸ் நின்றபோது பாம்பு, டிரைவர் சீட்டில் பதுங்கி இருந்துள்ளது. திருவண்ணாமலை பஸ்நிலையம் வந்த பின்னரே அந்த பாம்பு வெளியில் வந்தது. நல்லவேளை பாம்பால் டிரைவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
    திருவண்ணாமலை:

    விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டையில் இருந்து நேற்று காலை ஒரு டவுன் பஸ் திருவண்ணாமலைக்கு வந்தது. திருவண்ணாமலை பஸ் நிலையம் வந்ததும் டிரைவர் சீட்டுக்கு அடியில் பதுங்கி இருந்த ஒரு பாம்பு திடீரென வெளியே வந்தது.

    சுமார் 3 அடி நீளம் கொண்ட அந்த பாம்பு பயணிகளை கண்டதும் வேகமாக ஊர்ந்து செல்ல முயன்றது. பஸ்சில் பாம்பை பார்த்த பயணிகள் பயத்தில் அலறினர். சில பயணிகள் கத்திக்கொண்டே அடித்துக் கொல்ல முயன்றனர்.

    ஆனால் அந்த பாம்பு பஸ்சின் மேற்கூரைக்கு சென்று விட்டது. அங்கு அந்த பாம்பு தலையை தூக்கிக் கொண்டு நின்றது.

    தகவல் அறிந்த நகராட்சி ஊழியர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களிடம் சிக்காமல் சிறிது நேரம் அந்த பாம்பு போக்கு காட்டியது. பின்னர் அந்த பாம்பை அவர்கள் லாவகமாக பிடித்தனர். இதனையடுத்து பாம்பை அவர்கள் வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

    அவலூர்பேட்டையில் பஸ் நின்றபோது பாம்பு, டிரைவர் சீட்டில் பதுங்கி இருந்துள்ளது. திருவண்ணாமலை பஸ்நிலையம் வந்த பின்னரே அந்த பாம்பு வெளியில் வந்தது. நல்லவேளை பாம்பால் டிரைவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

    இந்த பாம்பு கொம்பேறி மூக்கன் வகையைச் சேர்ந்தது என்று பஸ்சில் பயணம் செய்த பயணிகள் தெரிவித்தனர்.

    ×