என் மலர்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரில் பெண் ஒருவர் மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக மாவட்ட கலெக்டர் முருகேசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் போளூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மேஜர் சவுத்திரி தலைமையிலான மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஜமுனாமரத்தூர் பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவர் ஆங்கில மருத்துவம் பார்ப்பது தெரியவந்தது.
இதையடுத்து மருத்துவக் குழுவினர் அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர், ஜமுனாமரத்தூரை சேர்ந்த கிருஷ்ணவேணி (வயது 40) என்பதும், அவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு டிப்ளமோ சித்தா முடித்தவர் என்பதும் வீட்டிலேயே கிளினிக் வைத்து ஆங்கில மருத்துவம் பார்ப்பதும் தெரியவந்தது.
மேலும் அங்கு மருந்து, மாத்திரை, ஊசி போன்றவை இருந்ததும் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து மருத்துவக்குழுவினர் அங்கிருந்த மருந்து பொருட்களை பறிமுதல் செய்தனர். அத்துடன் கிருஷ்ணவேணியை ஜமுனாமரத்தூர் போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து மருத்துவ அலுவலர் மேஜர் சவுத்திரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணவேணியை கைது செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை ஆதிசேஷன் நகரை சேர்ந்தவர் ராதா (வயது41). இவர் நேற்று மாலை கிரிவலப்பாதையில் ரமணாசிரமம் செல்லும் வழியில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் சென்று வழிபட்டார்.
இரவு7.30 மணி அளவில் வீட்டுக்கு செல்வதற்காக அக்னி தீர்த்தக்குளம் அருகில் அமைந்துள்ள டீக்கடைகள் இருக்கும் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அந்த பகுதியில் உள்ள ஒரு மின் விளக்கு எரியாததால் இருட்டாக இருந்தது.
இதனை நோட்டமிட்டு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென ராதா அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்தார். அந்த வழியாக கிரிவலம் சென்ற பக்தர்கள் வாலிபரை பிடிக்க முயன்றனர்.ஆனால் அவர் தப்பி சென்றுவிட்டார். தாலி செயினை மர்ம நபர் பறித்து சென்றதால் வேதனை அடைந்த அவர் கதறி அழுதார்.
சம்பவ இடத்திற்கு வந்த ராதாவின் உறவினர்கள் அவருக்கு உடனடியாக மஞ்சள் கயிறு அணிவித்தனர். அருகில் உள்ள அம்மன் சன்னதியில் இருந்து குங்குமம் எடுத்து அவரது நெற்றியில் வைத்தனர். இதுபற்றி ராதா டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் போலீஸ் வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்தது. செயின் பறிப்பு நடந்த இடத்தில் கண்காணிப்புகேமரா இருப்பதால் அதன் காட்சிகளை பார்த்து செயின் பறித்த நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் நடந்த செயின் பறிப்பு சம்பவம் திருவண்ணாமலை மக்களிடமும், கிரிவலம் சென்ற பக்தர்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிரிவலப்பாதையில் இதே போன்று அடிக்கடி வழிப்பறி நடக்கிறது. கடந்த வாரம் எமலிங்கம் பகுதியில் கிரிவலம் சென்ற ஒரு இளம் பெண்ணிடம் செல்போன் பறிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற செயல்களில் சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. திருட்டு கும்பலை கைது செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 553 ஆக உயர்ந்துள்ளது. இதில், 50 ஆயிரத்து 84 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 834 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் நேற்று கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்தனர். மாவட்டத்தில் இதுவரை 635 பேர் தொற்றுக்கு உயிரிழந்து உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.
16-வது மாதமாக இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
இந்த மாதத்துக்கான பவுர்ணமி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.38 மணிக்கு தொடங்கி மறுநாள் (சனிக்கிழமை) காலை 8.51 மணிக்கு நிறைவடைகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் திருவண்ணாமலையில் பவுர்ணமிகிரிவலம் நாட்களான நாளை, நாளை மறுநாள் மலைச் சுற்றும் பாதையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுகிறது. எனவே, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வரவேண்டாம்.
தமிழக அரசின் கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நெறிமுறைகளின் படி தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆரணியை அடுத்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு. அவரது மனைவி பாஞ்சாலை (வயது 60). இவர், நேற்று முன்தினம் வீட்டில் மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது, விஷ பூச்சிகள் கடித்து இருக்கலாம் என கருதி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாஞ்சாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






