என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை அருகே வீட்டு திண்ணையில் தூங்கிய தாய்-மகளிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை அடுத்த ஆனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தம்மாள் (வயது 58) இவரது மகள் கஸ்தூரி (40) இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். இவர்கள் இரவு தங்கள் வீட்டு திண்ணையில் படுத்து தூங்கி உள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் தாய் மற்றும் மகள் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்து சென்றுதப்பி விட்டான். இது குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் ஏ.எஸ்.பி.கிரண்ஸ்ருதி, தாலுகா இன்ஸ்பெக்டர் ஹேமமாலினி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மோப்பநாய் சிறிய தூரம் ஓடி நின்றுவிட்டது. இந்த நகை பறிப்பில் ஈடுபட்டது உள்ளூர் நபரா? வெளியூர் நபரா ?என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாய் மற்றும் மகளிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் ஆனந்தல் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆரணியில் மேலும் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பள்ளிக்கு மீண்டும் 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் ஒரு மாணவனுக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதியானதால் கடந்த 23-ந் தேதி முதல் 25-ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு எஸ்.வி. நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சுதா, ஆரணி நகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து ஆரணி கல்வி மாவட்ட அலுவலர் த.சம்பத் பள்ளிக்கு மீண்டும் 3 நாள்விடுமுறை அறிவித்துள்ளார். இதனால் நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
    பவுர்ணமி முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல்கள் அனைத்தும் திறக்கப்பட்டு காணிக்கை பணம் எண்ணப்பட்டது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    ஒவ்வொரு பவுர்ணமிக்கும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் கிரிவலம் சென்று பிரார்த்தனை செய்து கொள்வார்கள்.

    இதைத்தொடர்ந்து பவுர்ணமி முடிவடைந்ததும் கோவில் உண்டியல்களை திறந்து பக்தர்கள் செலுத்தும் காணிக்கை எண்ணப்படும்.

    தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்ல அனுமதி இல்லாத நிலையில் சாமி தரிசனத்திறகு அனுமதி கொடுக்கவில்லை.

    இந்த நிலையில் பவுர்ணமி முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல்கள் அனைத்தும் திறக்கப்பட்டு காணிக்கை பணம் எண்ணப்பட்டது. கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது.

    இதில் அருணாசலேஸ்வரர் கோவில் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களும் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. உண்டியல் காணிக்கையாக ரூ. 55 லட்சத்து 15 ஆயிரத்து 309 வசூலாகி இருந்தது தெரியவந்தது.

    மேலும் 268 கிராம் தங்கம், 221 கிராம் வெள்ளி பொருட்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கொரோனா பரவலுக்கு முன்பு பவுர்ணமி கிரிவலம் முடிந்து உண்டியல் எண்ணும் போது ரூ.1 கோடிக்கு மேல் காணிக்கை பணம் வசூலாகி இருக்கும். ஆனால் தற்போது கோவில் திறக்க பல்வேறு தடைகள் விதிக்கப்படுவதால் காணிக்கை பணம் கணிசமாக குறைந்துவிட்டது. இந்த மாதம் பாதி தொகையாக ரூ. 55 லட்சம் தான் வசூலாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    செய்யாறு அருகே கூலி தொழிலாளி வீட்டில் 18 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செய்யாறு:

    செய்யாறு தாலுகா அரசூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலு (வயது 45). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று வேலு மற்றும் அவரது மனைவி கோவிந்தம்மாள் வீட்டைப் பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளனர். பி்ன்னர் மாலையில் வீடு திரும்பியபோது பூட்டி இருந்த கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 18 பவுன் நகைகள், ரூ.2 ஆயிரத்து 400 ரொக்கம்திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்த தகவலின்பேரில் செய்யாறு சரக போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில் அனக்காவூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொடுத்த புகாரின் பேரில் அனக்காவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர்மட்டம் உயர நடவடிக்கை மேற்கொண்ட கலெக்டர், கூடுதல் கலெக்டர் மற்றும் திட்ட இயக்குநருக்கு அமைச்சர் எ.வ.வேலு பாராட்டு தெரிவித்தார்.
    திருவண்ணாமலை:

    தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர் சம்பந்தமாக நடத்தப்பட்ட ஆய்வில் திருவண்ணாமலை மாவட்டத்திலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவது தெரியவந்தது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பண்ணை குட்டைகள்

    இதைத்தொடர்ந்து எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு கலெக்டர் முருகேஷ் அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து மாவட்டம் முழுவதும் ஒரே மாதத்தில் 1,121 பண்ணை குட்டைகள் அமைக்க செய்து உலக சாதனை படைத்தார். இதற்காக 4 நிறுவனங்கள் உலக அங்கீகார சான்றுகளை சமீபத்தில் வழங்கின.

    இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர்மட்டம் உயர நடவடிக்கை மேற்கொண்ட கலெக்டர், கூடுதல் கலெக்டர் மற்றும் திட்ட இயக்குநருக்கு பாராட்டு தெரிவித்தார்.

    இதன் பின்னர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்ததால் பெரும்பாலான பண்ணைக்குட்டைகள் நிரம்பி உள்ளன. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இது பற்றிய தகவலும் சமீபத்தில் வெளியானது.

    இதனை அறிந்த தலைமைச் செயலாளர் இறையன்பு, திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷுக்கு பாராட்டு கடிதம் அனுப்பி உள்ளார்.

    அதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 1,121 பண்ணை குட்டைகள் அமைத்து நீர்மட்டம் உயர செய்ததுடன், உலக சாதனை நிகழ்த்தியதற்காகவும் கலெக்டர் மற்றும் அலுவலர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.


    இதையும் படியுங்கள்...பஸ்களில் இலவச பயண திட்டத்தில் 26 கோடி பெண்கள் பயணம்- அமைச்சர் ராஜகண்ணப்பன்
    திருவண்ணாமலை அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தாலுகா கொளக்குடி அருகில் உள்ள அழகானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 27), ஆட்டோ டிரைவர். இவர் திருவண்ணாமலை அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர்.

    திருவண்ணாமலை அருகே விபசாரத்தை நடத்தும் புரோக்கர்கள் 3 பேர் மற்றும் விபசாரத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் என மொத்தம் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி மேற்பார்வையில் திருவண்ணாமலை டவுன், கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் திருவண்ணாமலை நகரத்தில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது, விபசாரத்தை நடத்தும் புரோக்கர்கள் 3 பேர் மற்றும் விபசாரத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் என மொத்தம் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து புரோக்கர்கள் 3 பேர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். விபசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் திருப்பத்தூரில் உள்ள பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    ஆரணியில் மயான பிரச்சினை தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு பொதுமக்கள் தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு பொது மருத்துவமனை அருகில் பெரியார்நகர் உள்ளது. அங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள். பெரியார்நகர் அருகில் ஒரு மயானம் உள்ளது. அந்த மயானம் ஆரணி காந்திநகரில் வசிக்கும் மக்களுக்குரியதாகும். காந்திநகர் மக்கள் இறந்தவர்களின் சடலங்களை பல ஆண்டுகளாக மயானத்தில் அடக்கம் செய்து வருவார்கள். அவ்வாறு உடல்களை அடக்கம் செய்யும்போது குடியிருப்பு பகுதியில் வீடுகளின் முன்பாக இறுதிச்சடங்குகளை செய்வதாக கூறப்படுகிறது. மயானப் பகுதியை பெரியார்நகர் மக்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தெரிகிறது.

    இதுகுறித்து காந்திநகர் மக்கள் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு, பெரியார்நகரில் இருக்கும் மயானம் காந்திநகர் மக்களுக்கு சொந்தமானது என தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து மயானத்தை காந்திநகர் பகுதி மக்கள் சுத்தம் செய்து, சுற்றுச்சுவர் கட்ட ஏற்பாடு செய்து வந்தனர். இதற்கு பெரியார்நகர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே, பெரியார்நகர் மக்கள் ஆரணி தாசில்தார், நகராட்சி ஆணையாளர், போலீசார் என பலரிடம் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

    இந்தநிலையில் நேற்று திடீரென பெரியார்நகர் மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் கோட்டை மைதானம் அருகில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு இல்லாததால் அலுவலகம் முன்பு பெரியார்நகர் மக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தருமன் ஆகியோர் விரைந்து வந்து தர்ணா போராட்டம் செய்த பெரியார்நகர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மக்களுக்கு குடியிருப்பும் அவசியம், மயானமும் அவசியம் ஆகும். இதுதொடர்பாக தாசில்தாருக்கு தகவல் தெரிவித்து, சமரச பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்கிறோம். 29-ந்தேதி சுமூக தீர்வு காணப்படும். அதுவரை போராட்டம் நடத்துவதை கை விடுங்கள், எனப் போலீசார் கூறினர்.

    இதையடுத்து பெரியார்நகர் மக்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தர்ணா போராட்டத்தால் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்றப்பின்னணி உள்ள 71 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    தமிழகத்தில் குற்றச் செயல்களை தடுக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் ஆங்காங்கே சில குற்றச் செயல்கள் நடைபெற்றன. இந்த நிலையில் அவரது உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் இரவு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் ரவுடிகளை கைது செய்யும் பணி நடந்தது.

    அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்திலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி மேற்பார்வையில் அனைத்து போலீஸ் நிலையங்களில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட குற்றப்பின்னணி உள்ள 71 பேரை நேற்று முன்தினம் இரவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இது போன்ற நடவடிக்கைகளில் போலீசார் அவ்வப்போது ஈடுபட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    விபத்தில் இறந்த டிரைவர் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு விரைவு பஸ் கோர்ட்டு ஊழியர்களால் ஜப்தி செய்யப்பட்டது.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு சாமந்திபுரம் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் அர்சுனன். கடந்த 2004-ம் ஆண்டு சந்தவாசல் பகுதியில் அரசு விரைவு பஸ் மோதியதில் அர்சுனன் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மனைவி வள்ளியம்மாள் மற்றும் குடும்பத்தினர் திருவண்ணாமலை மாவட்ட கோர்ட்டில் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி, லாரி டிரைவர் அர்சுனன் குடும்பத்தினருக்கு 6 லட்சத்து 68 ஆயிரத்து 148 ரூபாய் நஷ்டஈடு வழங்க போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டார். ஆனால் போக்குவரத்து கழகம் நஷ்டஈடு வழங்காமல் காலதாமதம் செய்து வந்தது.

    இதனையடுத்து அர்சுனன் குடும்பத்தினர் நிறைவேற்றுதல் மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அர்சுனன் குடும்பத்திற்கு 6 லட்சத்து 72 ஆயிரத்து 106 ரூபாய் வழங்க போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார். ஆனாலும் போக்குவரத்து கழகம் நஷ்டஈடு வழங்கவில்லை. தொடர்ந்து அர்சுனன் குடும்பத்தினர் மீண்டும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த மாவட்ட நீதிபதி திருமகள், அரசு விரைவு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று திருச்சியில் இருந்து கண்ணமங்கலம் வழியாக வேலூர் சென்ற விரைவு பஸ்சை ஆரணி கோர்ட்டு அமீனா மற்றும் பணியாளர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    முன்னதாக அந்த பஸ்சில் இருந்த பயணிகள் வேறு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவத்தால் கண்ணமங்கலம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் பாலமுருகன்நகர் பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவர் ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். அவருக்கு திடீரென உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு, நெசல் துணை சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து மாணவரின் குடும்பத்தாருக்கும், விண்ணமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவரின் சகோதரிக்கும், மேலும் சுப்பிரமணிய சாஸ்திரியார் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

    இதையடுத்து ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மகேஸ்வரி, ஆரணி மாவட்ட கல்வி அலுவலர் சம்பத், எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுதா ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாணவர் படிக்கும் பள்ளிக்கு நேற்று முதல் நாளை (சனிக்கிழமை) வரை 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக, மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

    பின்னர் பள்ளியை தூய்மைப்படுத்த நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பள்ளியில் பணியாற்றி வரும் ஒரு ஆசிரியருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
    ஆரணியில் குடியிருப்பு பகுதியில் ஒரு தனியார் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.
    ஆரணி:

    ஆரணி சைதாப்பேட்டை கமண்டலநதி தெருவில் வசிப்பவர் ஜெகதீசன். இவர், தனக்கு சொந்தமான காலி இடத்தில் ஒரு தனியார் செல்போன் நிறுவனத்திடம் டவர் அமைக்க 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தம் செய்தார். அங்கு, செல்போன் டவர் அமைக்கும் பணி அப்போதே தொடங்கி உள்ளனர். அதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, பணியை கிடப்பில் போட்டனர்.

    இந்தநிலையில் நேற்று செல்போன் டவர் அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கினர். அப்பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் தருமன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட பொதுமக்களிடமும், தனியார் செல்போன் டவர் அமைக்கும் நிர்வாகிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதற்கு அப்பகுதி பொதுமக்கள் நீதிமன்றம் உத்தரவு பெற்று வந்தாலும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம். இது, மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதி. எனவே அங்கு செல்போன் டவர் அமைத்தால் சுற்று வட்டார மக்களுக்கு செல்போன் கதிர்வீச்சால் பாதிப்பு ஏற்பட்டு பல்வேறு வகையான உடல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கருவுற்ற தாய்மார்களின் குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறக்கும் நிலை ஏற்படும்.

    குழந்தைகள் ஊனமுற்றதாக இருக்கும். மலட்டுத்தன்மை ஏற்படும் என்பது உள்பட பல்வேறு காரணங்களை கூறி பொதுமக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து கோஷம் எழுப்பினர். செல்போன் டவர் அமைக்கும் பணி நடக்காமல் சம்பந்தப்பட்டவர்களிடம் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் பெற்ற பின்னரே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    ×