என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரி திருக்கோவிலூர்-வேட்டவலம் சாலையில் வந்த அரசு பஸ்சை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    வேட்டவலம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்த வைப்பூர் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்திற்கு, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து குடிநீர் வந்து கொண்டிருந்தது.

    இந்த நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து ஆழ்துளை கிணறு நிரம்பி அதன் மீது வெள்ளம் சென்றதால் மின்மோட்டார்கள் பழுதடைந்து உள்ளது. இதனால் கிராமத்திற்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வருவதில்லை. மேலும் கிராமத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் பழுதடைந்து சரி செய்யாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரி திருக்கோவிலூர்-வேட்டவலம் சாலையில் வந்த அரசு பஸ்சை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊராட்சி மன்ற தலைவர் மீனாட்சி சம்பத் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். அதைத் தொடர்ந்து கீழ்பென்னாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத் அந்த கிராமத்திற்கு சென்று ஆழ்துளை கிணற்றில் புதிய மின்மோட்டார்கள் பொருத்தும் பணியையும், பழுதடைந்த மின்மோட்டார்களை சரி செய்யும் பணியையும் பார்வையிட்டார்.

    அப்போது உதவி பொறியாளர் ஜெயப்பிரகாஷ், ஊராட்சி செயலாளர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
    தக்காளியை அதிக விலைக்கு விற்க யாராவது பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
    சென்னை:

    பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ 85 முதல் 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மழைக்காலம் என்பதால் வரத்து இல்லாத நிலையில் தமிழகம் உள்பட இந்தியாவில் பல்வேறு இடங்களில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு சில்லறை விலையில் ரூ 130 முதல் 150 வரையும் மொத்த விலையில் ரூ 100 முதல் ரூ 130 வரையும் விற்கப்படுகிறது.

    இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். தக்காளி இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி, தக்காளி இல்லாமல் ரசம் வைப்பது எப்படி என்பதை கூகுளில் தேடி வருகிறார்கள். 

    இந்த நிலையில் தக்காளி விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    தக்காளி

    இதனிடையே தக்காளியை அதிக விலைக்கு விற்க யாராவது பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் எச்சரிக்கை விடுத்திருந்தார்

    இந்தநிலையில்,  வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    கோயம்பேடு சந்தைக்கு 620 டன் தக்காளி கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கனமழையால் தக்காளி அதிகம் விலையும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.  அறுவடை செய்யப்பட்ட தக்காளியை தமிழகம் கொண்டு வருவதில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. தக்காளி விலை உயர்வு தற்காலிகமானது தான். விரைவில் விலை குறையும், நடமாடும் காய்கறி கடைகள் மூலம் தக்காளி விற்பது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது என்றார்.

    நேற்று இரவு அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள 5-ம் பிரகாரத்தில் சிறப்பு அலங்காரத்தில் சண்டிகேஸ்வரர் உலா நடைபெற்றது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் விழா நாட்களில் மாடவீதியில் நடைபெறும் தேரோட்டம், சாமி வீதி உலா ஆகியவை ரத்து செய்யப்பட்டு, கோவிலின் 5-ம் பிரகாரத்திலேயே நடைபெற்றது.

    கடந்த 19-ந்தேதி விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் கோவிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. அன்று அதிகாலையில் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.அதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் கடந்த 20-ந்தேதி சந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், 21-ந்தேதி பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும், நேற்று முன்தினம் சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடந்தது.

    நேற்று சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா நிறைவு பெற்றது. இதையொட்டி நேற்று இரவு கோவில் வளாகத்தில் உள்ள 5-ம் பிரகாரத்தில் சிறப்பு அலங்காரத்தில் சண்டிகேஸ்வரர் உலா நடைபெற்றது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    எனது திருமணத்திற்கு நடிகர் துனியா விஜய் வரவில்லை என்றால் திருமணத்தை நிறுத்தி விடுவேன் என்று அவரது இளம் ரசிகை ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
    சிக்கமகளூரு :

    தாவணகெரே டவுன் ராமநகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவானந்த். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இவரும், இவரது மனைவி, மகள்கள் அனைவரும் பிரபல நடிகர் துனியா விஜயின் தீவிர ரசிகர்கள் என்று கூறப்படுகிறது. துனியா விஜயின் அனைத்து படங்களையும் இவர்கள் தவறாமல் பார்த்து வந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிவானந்த், புதிதாக வீடு கட்டினார். தனது வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு நடிகர் துனியா விஜய் வர வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். அதற்காக தீவிர முயற்சியும் மேற்கொண்டார்.

    இந்த விஷயம் அறிந்த நடிகர் துனியா விஜய் கிரகப்பிரவேஷம் தினத்தன்று சிவானந்தின் வீட்டுக்கு சென்று இன்ப அதிர்ச்சி அளித்தார். இந்த நிலையில் சிவானந்த், தனது மூத்த மகள் அனுஷாவிற்கு திருமணம் நிச்சயம் செய்துள்ளார். வருகிற 29-ந் தேதி அனுஷாவிற்கு தாவணகெரே டவுனில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்து திருமணம் நடக்க உள்ளது.

    இந்த நிலையில் தனது திருமணத்திற்கு நடிகர் துனியா விஜய் வந்தால்தான் தாலி கட்டிக்கொள்வேன் என்று அனுஷா அடம்பிடிக்கிறாராம். இதையடுத்து தனது மகளின் திருமணத்திற்கு நடிகர் துனியா விஜயை அழைக்க சிவானந்த் தீவிர முயற்சி மேற்கொண்டார். ஆனால் அவரை நேரில் சந்திக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் துனியா விஜய்க்கு கூரியர் மூலமும், சமூக வலைத்தளங்கள் மூலமும் மகளின் திருமண பத்திரிகையை சிவானந்த் அனுப்பி வைத்துள்ளார். இதனால் துனியா விஜய், அனுஷாவின் திருமணத்திற்கு வருவாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதுபற்றி அனுஷா கூறுகையில், ‘‘நாங்கள் துனியா விஜயின் தீவிர ரசிகர்கள். எங்கள் வீட்டுக்கும் துனியா குணா என்று அவரது பெயரைத்தான் வைத்துள்ளோம். என்னுடைய திருமணத்திற்கு அவர் வரவில்லை என்றால் கண்டிப்பாக நான் திருமணத்தை நிறுத்தி விடுவேன்’’ என்று கூறினார்.
    போளூர் ஒன்றியத்தில் வடகிழக்கு பருவமழையினால் நேற்று வரை 3,700 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முருகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) சத்தியமூர்த்தி, உதவி வேளாண் இயக்குனர் குணசேகரன், வேளாண் அலுவலர் சதீஷ்குமார், துணை வேளாண் அலுவலர் ராமு மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள் போளூர் ஒன்றியத்தில் உள்ள பெரியகரம், ரெண்டேரிப்பட்டு உள்பட பல கிராமங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது வடகிழக்கு பருவமழையினால் நேற்று வரை 3,700 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்து உள்ளது என்றும், மேலும் கணக்கெடுப்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    கோவில்பட்டியில் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பல்லக்கு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர நாராயணன் (வயது 60). இவர் கோவில்பட்டி முத்துநகரில் தொடக்கப்பள்ளி நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சண்முகசுந்தரி (55).

    இவர்களுக்கு சுப்பிரமணியன் (27), ஸ்ரீ பாலாஜி (17) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். சுப்பிரமணியன் எம்.பி.ஏ. படித்து விட்டு வெளியூரில் வேலை செய்து வருகிறார். ஸ்ரீ பாலாஜி, கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    நேற்று காலையில் வழக்கம்போல் சங்கர நாராயணன் முத்துநகரில் உள்ள தனது தொடக்கப்பள்ளிக்கு சென்றார். பின்னர் ஸ்ரீபாலாஜி தாயார் சண்முகசுந்தரியை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு தங்களது பள்ளிக்கூடத்துக்கு சென்று இறக்கி விட்டார்.

    பின்னர் ஸ்ரீபாலாஜி தான் படிக்கும் பள்ளிக்கு செல்வதாக கூறிச் சென்றார். ஆனால், அவர் அங்கு செல்லாமல் தனது வீட்டுக்கு சென்றார்.

    இதற்கிடையே, சங்கர நாராயணன் பள்ளிக்கூட வேனில் மாணவ-மாணவிகளை அழைத்து வருவதற்காக தனது வீட்டின் அருகில் உள்ள வழியாக சென்றார். அப்போது அங்கு ஸ்ரீபாலாஜியின் மோட்டார் சைக்கிள் நின்றதால், வேனை நிறுத்தி விட்டு தனது வீட்டுக்கு சென்றார். வீட்டின் கதவை நீண்ட நேரமாக தட்டியும் திறக்காததால், மாற்றுச்சாவி மூலம் கதவை திறந்தார்.

    அப்போது வீட்டில் ஸ்ரீ பாலாஜி சேலையில் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஸ்ரீபாலாஜியை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஸ்ரீபாலாஜி இறந்ததாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாணவர் ஸ்ரீபாலாஜி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாணவர் ஸ்ரீபாலாஜி வகுப்பில் நன்றாக படிக்கும் மாணவர் ஆவார். அவரது உடலைப் பார்த்து பெற்றோர்கள், சக மாணவ-மாணவிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

    மாணவர் தற்கொலையால், அவர் பயின்ற பள்ளிக்கூடத்துக்கும், அவரது தந்தைக்கு சொந்தமான பள்ளிக்கூடத்துக்கும் நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்தது
    போளூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போளூர்:

    போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் போலீசார் வசூர் கூட்ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தியதில், திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தை அடுத்த ராஜபாளையத்தை சேர்ந்த தண்டபாணி மகன் கார்த்திக் (வயது 19), ஆலங்காயத்தை அடுத்த புலவர்பள்ளியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பரமேஷ் (19) என்பதும், மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திரிபுராவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு ஆளாவதாக திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி குற்றம்சாட்டினார்.
    அகர்தலா:

    நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவருமான சயானி கோஷ், நேற்று முன்தினம் திரிபுரா மாநிலம் அகர்தலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது முதல்வர் பிப்லப் தேவை கடுமையாக சாடினார். அவரை மிரட்டும் தொனியில் பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. முதல்வரின் பிரசார கூட்டத்திற்கு இடையூறு செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

    இதனையடுத்து சயானி கோஷை போலீசார் நேற்று கைது செய்தனர். கொலை முயற்சி, இரு குழுக்களிடையே விரோதத்தை தூண்டுதல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    இதையடுத்து சயானி கோஷ் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், சயோனி கோஷ்க்கு இன்று ஜாமீன் வழங்கியது. 

    அபிஷேக் பானர்ஜி

    இதற்கிடையே திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி அகர்தலாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திரிபுராவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு ஆளாவதாக குற்றம்சாட்டினார். 

    ‘வாக்குச்சாவடிக்கு வருவதை உறுதிசெய்ய பாஜக கொடியை ஏந்த வேண்டும் என்றால், அதைச் செய்யுங்கள். குண்டர்களிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டுமானால் அவர்களின் அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள். ஆனால் வளர்ச்சிக்கு ஆதரவான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள்’ என்று அபிஷேக் பானர்ஜி கேட்டுக்கொண்டார்.

    வெம்பாக்கம் அருகே சமையல் மாஸ்டர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    வெம்பாக்கம்:

    செய்யாறு அடுத்த கூழமந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (45) சமையல் மாஸ்டர். இவரது மனைவி அஞ்சலை. இவர்களுக்கு சுவேதா, சதீஷ்குமார் என்ற மகனும்  மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் ரமேஷ் வெளியில் சென்றுள்ளார். மகன், மகள் இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். காலை 11 மணி அளவில் அஞ்சலை பக்கத்து தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். ஒரு மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் வெளிப்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 26 சவரன் நகையும் 1.25 லட்சம் ரொக்கப்பணமும் திருடு போனது தெரிந்தது. நகை-பணத்தை கொள்ளை அடித்த மர்மநபர்கள் வீட்டின் தோட்டத்து பக்கமாக சென்றிருப்பது தெரியவந்தது.

    கொள்ளை போன நகை-பணம் மதிப்பு ரூபாய் 10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தூசி போலீசில் ரமேஷ் கொடுத்த புகார் மீது தூசி சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குமரன் நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் சஞ்சீவி சுரேந்தர் (வயது 14). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சஞ்சீவி சுரேந்தர் அடிக்கடி தனது செல்போனில் விளையாடிக்கொண்டு இருந்தார். இதனை அவரது தந்தை கண்டித்தார். மேலும் அவரிடம் இருந்த செல்போனையும் பறித்தார்.

    இதன்காரணமாக மிகுந்த மனவேதனை அடைந்த சஞ்சீவி சுரேந்தர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழா நாளையுடன் முடிவடைகிறது. நேற்று ராஜ அலங்காரத்தில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் பிரகார உலா வந்தார்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் கடந்த 19-ந்தேதி கோவிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது.

    தொடர்ந்து நேற்று முன்தினம் கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

    வழக்கமாக மகாதீபம் மலை உச்சியில் ஏற்றப்பட்ட பிறகு 2-வது நாள் காலையில் மகாதீபம் ஏற்றப்பட்ட அண்ணாமலையார் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் ஆகியோர் கிரிவலம் வருவார்கள்.

    கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக சாமி கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக நேற்று காலையில் அருணாசலேஸ்வரர் மற்றும் பராசக்தி அம்மன் உற்சவ உலா கோவிலின் 5-ம் பிரகாரத்தில் நடைபெற்றது.

    அப்போது அருணாசலேஸ்வரருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. விழா நாட்களில் சாமி உலா செல்லும் நிகழ்ச்சி வாகனத்தில் நடைபெற்றது.

    நேற்று அருணாசலேஸ்வரர் மற்றும் பராசக்தி அம்மன் உலா செல்லும் நிகழ்ச்சி திருவூடல் நிகழ்ச்சியை போன்று சாமி தூக்கும் பக்தர்கள் சாமியை சுமந்தபடி சென்றனர்.

    தொடர்ந்து நேற்று இரவில் பிரம்ம தீர்த்த குளத்தில் பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. இன்று (திங்கட்கிழமை) சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும், நாளை (செவ்வாய்க்கிழமை) சண்டிகேஸ்வரர் உற்சவ உலாவுடன் தீபத்திருவிழா நிறைவு பெறுகிறது.
    வரத்து குறைவு எதிரொலியால் தக்காளி விலை கிடு கிடு வென உயர்ந்து வருகிறது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டது.
    சென்னை:

    தக்காளி விலை விளைச்சல் அதிகமாக இருக்கும் போது ஒரு கிலோ ரூ.5-க்கு கூட விற்பனையான செய்திகள் பல முறை வெளிவந்து இருக்கிறது. இந்த நிலையில் தற்போது அதன் விலை யாரும் எதிர்பாராத வகையில் உயர்ந்து கொண்டே போகிறது.

    சென்னை கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.65 முதல் ரூ.80 வரை விற்பனை ஆன நிலையில், நேற்று முன்தினம் ரூ.85 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. அந்த நேரத்தில் சில்லரை விற்பனை கடைக்காரர்கள் ஒரு கிலோ ரூ.120 வரை விற்பனை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று அதன் விலை கிடு கிடுவென உயர்ந்து, ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.40 வரை அதிகரித்து, ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.140 வரை (நவீன் மற்றும் நாட்டு தக்காளி ரகத்துக்கு ஏற்ப) விற்பனை ஆனது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து தான் வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதிகளில் மழை பெய்த காரணத்தினால் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் அதன் விலை அதிகரித்து இருந்தது. தற்போது ஆந்திராவில் பெருவெள்ளம் வந்ததால், அங்கு தக்காளி விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டு, வரத்து மேலும் குறைந்துள்ளது. இதன் காரணமாகவே விலை கடுமையாக உயர்ந்து இருக்கிறது' என்றனர்.

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாளொன்றுக்கு 100 லாரிகளில் வந்து கொண்டு இருந்த தக்காளி வரத்து ஏற்கனவே பாதியாக குறைந்திருந்த நிலையில், தற்போது விளைச்சல் பாதிப்பால், அதைவிட குறைவான அளவிலேயே தக்காளி வரத்து இருக்கிறது. ஆந்திராவில் வெள்ளப்பெருக்கு வருவதற்கு முன்பு 10 முதல் 15 நாட்களுக்குள் விலை குறையத் தொடங்கிவிடும் என்று வியாபாரிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால் இப்போது இருக்கும் நிலையை பார்க்கையில், விலை தற்போதைக்கு குறையுமா? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், அதை வாங்கி விற்கும் சில்லரை கடைகளில் ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில இடங்களில் அதை விட கூடுதலாகவும் கடைக்காரர்கள் விற்பதை பார்க்க முடிந்தது.

    குழம்பு வகைகள் உள்பட சில குறிப்பிட்ட உணவு வகைகளுக்கு தக்காளி அவசியம். அந்த வகையில் இல்லத்தரசிகளின் மாதாந்திர பட்ஜெட்டில் தக்காளி கடைசி இடத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. கிலோ கணக்கில் தக்காளியை வாங்கி பிரிட்ஜில் வைக்கும் இல்லத்தரசிகள், தற்போது அன்றாட பயன்பாட்டுக்கான தேவைக்கு மட்டும் கிராம் கணக்கில் வாங்குகின்றனர். சிலர் கடைகளுக்கு வந்து விலையை கேட்டு, வாங்காமல் செல்வதும் நடக்க தான் செய்கிறது.
    ×