என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருவதால் பூந்தமல்லி பெங்களூர் -தேசிய நெடுஞ்சாலை பூந்தமல்லி பணிமனை அருகே தற்காலிக சிறப்பு பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது.
    • சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பயணிகள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தற்காலிக வெளியூர் சிறப்பு பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.

    பூந்தமல்லி:

    ஆயுத பூஜை பண்டிகை மற்றும் காலாண்டு தேர்வு விடுமுறை என தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழக அரசு சார்பில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    சென்னை மற்றும் புறநகரங்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். இதற்கான பயண முன்பதிவும் கடந்த வாரமே தொடங்கியது. பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து கிருஷ்ணகிரி, ஓசூர், வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், செய்யாறு, தர்மபுரி, காஞ்சிபுரம், திருத்தணி, திருப்பதி, பெங்களூர் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளியூர், வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் பூந்தமல்லி பகுதியில் தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருவதால் பூந்தமல்லி பெங்களூர் -தேசிய நெடுஞ்சாலை பூந்தமல்லி பணிமனை அருகே தற்காலிக சிறப்பு பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பயணிகள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தற்காலிக வெளியூர் சிறப்பு பேருந்து நிலையத்தில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ஏற்கனவே பூந்தமல்லியில் மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக அனைத்து வாகனங்களும் பூந்தமல்லி பைபாஸ் சாலை மார்க்கமாக திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் காலை, மாலை வேளைகளில் வழக்கமாக கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படும் நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் ஏற்படும் கூட்ட நெரிசல் காரணமாக மேலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் சரியான அறிவிப்பு, முறையான தகவல்கள், வழிகாட்டுதல்கள் இல்லாததால் பயணிகள் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

    இந்த தற்காலிக சிறப்பு பேருந்து நிலையத்தில் போதிய நிழற்குடைகள், இருக்கைகள், கழிவறை வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. இதனால் பயணிகள் திறந்த வெளியிலும் வெயில் மற்றும் மழையில் நின்று பேருந்துக்காக காத்திருந்து பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

    இதுகுறித்து பயணிகள் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது விட்டு விட்டு பெய்யும் மழையால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நிழற்குடை வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர போக்குவரத்து துறை மற்றும் பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் உடனடியாக எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பஸ்சை பின்நோக்கி எடுக்கும்போது அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த மூதாட்டி பேபி மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • பணிமனை மேலாளர் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தார்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அரசு மாநகர போக்குவரத்துக் கழக பஸ் பணிமனை உள்ளது. இங்கு ஊழியர் கோபு (50) இன்று காலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

    அப்போது அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருந்து வேளச்சேரி செல்லும் தடம் எண். 70 பஸ்சை பின்நோக்கி எடுக்கும்போது அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த மூதாட்டி பேபி (60) மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து பணிமனை மேலாளர் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டி பேபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்சார பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனத்துக்கு தூத்துக்குடி மாவட்டத்துக்கு டீலர்ஷிப் உரிமை கொடுப்பதாக கூறினர்.
    • நேரில் சென்று பணத்தை கேட்டபோது வெங்கடேசும் அவரது மனைவி பாண்டி லட்சுமியும் சேர்ந்து தகாத வார்த்தை கூறி தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனர்.

    பூந்தமல்லி:

    தூத்துக்குடி கார்டுவெல் காலனி பகுதியை சேர்ந்தவர் நிமேஷ் எட்வின் (43). இவர் கடந்த வாரம் பூந்தமல்லி போலீசில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

    அந்த புகாரில் பூந்தமல்லி முனிகிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் பாண்டி லட்சுமி தம்பதியினர் கரையான்சாவடி பகுதியில் இரு சக்கர வாகன விற்பனை நிறுவனம் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிறுவனத்தின் மின்சார பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனத்துக்கு தூத்துக்குடி மாவட்டத்துக்கு டீலர்ஷிப் உரிமை கொடுப்பதாக கூறினர்.

    அதற்காக ரூ.25 லட்சம் பணம் கொடுத்துள்ளேன். ஆனால் அவர்கள் கூறியபடி டீலர்ஷிப் உரிமையை கொடுக்கவில்லை. மேலும் நான் கொடுத்த பணத்தில் ரூ.8 லட்சம் மட்டுமே திருப்பி கொடுத்தனர். மீதியுள்ள ரூ.17 லட்சத்தை திருப்பி கேட்டபோது பணத்தை தராமல் இழுத்தடித்து வந்தனர்.

    இதையடுத்து நேரில் சென்று பணத்தை கேட்டபோது வெங்கடேசும் அவரது மனைவி பாண்டி லட்சுமியும் சேர்ந்து தகாத வார்த்தை கூறி தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனர்.

    அவர்கள் இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் நிமேஷ் எட்வின் தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து பூந்தமல்லி குற்றப்பிரிவு ஆய்வாளர் வள்ளி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று வெங்கடேஷ் மற்றும் அவரது மனைவி பாண்டிலட்சுமி இருவரையும் கைது செய்த போலீசார் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    • தகவல் தொழில்நுட்பத்தை தமிழகத்தின் வளர்ச்சிக்கும், கட்சியின் வளர்ச்சிக்கும் சரியாக பயன்படுத்துங்கள்.
    • எதையும் படிக்காமல் வாட்ஸ்அப்பில் வருவதையெல்லாம் படித்து விட்டு வாந்தி எடுப்பவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி திருத்த முடியாது.

    சென்னை:

    தி.மு.க.வுக்கு செப்டம்பர் மாதம் திராவிட மாதம்! நிறைவு நாளான நேற்று அதை கொண்டாடும் வகையில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் டுவிட்டர் ஸ்பேசில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    அவர் பேசியதாவது:-

    தகவல் தொழில்நுட்பத்தை தமிழகத்தின் வளர்ச்சிக்கும், கட்சியின் வளர்ச்சிக்கும் சரியாக பயன்படுத்துங்கள். எதையும் படிக்காமல் வாட்ஸ்அப்பில் வருவதையெல்லாம் படித்து விட்டு வாந்தி எடுப்பவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி திருத்த முடியாது.

    நமது கொள்கையை, சாதனைகளை சொல்லுங்கள் மதவாத, சாதியவாத சக்திகள் அவதூறு பேசுவார்கள். கொச்சையாக பேசுவார்கள், கோபப்படுத்த பேசுவார்கள். அதையெல்லாம் புறந்தள்ளிவிடுங்கள். பொய் செய்திகளுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்காதீர்கள்.

    அதே நேரத்தில் ஒரு செய்தி வந்தால் அதன் உண்மை தன்மையை ஆய்வு செய்யும் அளவுக்கு பொய் செய்திகளை பரப்பி 'கேம்' ஆடலாம் என நினைப்பவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்து பாடம் புகட்டுங்கள் என்றார்.

    • பெண் குளிக்கும்போது ஜன்னல் வழியாக சதீஷ்குமார் செல்போனில் ஆபாச படம் எடுத்துள்ளார்.
    • அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் அலமேலு அம்மன் குறுக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). இவர் அதே பகுதியில் பஞ்சர் கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் அந்த பகுதியில் ஒரு பெண் குளிக்கும்போது ஜன்னல் வழியாக சதீஷ்குமார் செல்போனில் ஆபாச படம் எடுத்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டார்.

    உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்த போது சதீஷ்குமார் செல்போனில் வீடியோ எடுத்தது தெரியவந்தது.

    அவரிடமிருந்து செல்போனை பிடுங்கி அவரைப் பிடித்து வைத்து திருவள்ளூர் மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்கை புகார் கொடுத்தார்.

    திருவள்ளூர் டி.எஸ்.பி சந்திரதாசன் தலைமையில், மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதீஷ்குமாரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

    அவரது செல்போனில் பெண்கள் குளியல் வீடியோ இருப்பதை உறுதி செய்த போலீசார் சதீஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் செல்போனில் வீடியோ எடுத்த சதீஷ்குமாரின் பஞ்சர் கடைக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் வந்து சதீசின் தந்தை தேவேந்திரனை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதுடன் கடையில் இருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தையும் தீ வைத்து கொளுத்திவிட்டு சென்றனர்.

    இது தொடர்பாக 3 பேர் மீது மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவர் குடிபோதையில் தகராறு செய்ததால் ஆர்த்தி கோபித்துக்கொண்டு வீட்டை விட்டுவிட்டு வெளியே சென்றார்.
    • ஆர்த்தியின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த கொடுர் பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி (33). கடந்த 29-ந் தேதி கணவர் குடிபோதையில் தகராறு செய்ததால் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டுவிட்டு வெளியே சென்றார். அதன் பிறகு அவர் இதுவரை வீடு திரும்பவில்லை.

    இதுகுறித்து ஆர்த்தியின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • திருவாலங்காடு ஒன்றியம் அரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள தொடக்க பள்ளியில் 32 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தணி:

    திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் அரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள தொடக்க பள்ளியில் 32 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு சத்துணவு அமைப்பாளராக ஜெயபாரதி பணியாற்றி வருகிறார். இவர் பள்ளி மாணவர்களின் மதிய உணவுக்கு தேவையான அரிசி மற்றும் காய்கறிகளை 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே பள்ளிக்கு வந்து சமையலரிடம் கொடுத்து விட்டு செல்வதாகவும், அவ்வாறு வழங்கப்படும் பொருட்கள் தரம் இல்லாமல் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், ஜெயபாரதியிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை.

    இதனையடுத்து ஜெயக்குமார் திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தார். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஜெயபாரதியின் கணவர் சண்முகம் தலைமையாசிரியர் ஜெயக்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார். சண்முகம் மீது கனகம்மா சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஜெயக்குமார் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருத்தணி சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆள் மாறாட்டம் செய்து நிலம் விற்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆள்மாறாட்டம் செய்து போலி பத்திரம் பதிவு செய்ய வந்த நபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருத்தணி:

    திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த சூரியநகரம் கிராமத்தில் 97 சென்ட் நிலம் சீனிவாசா ஆச்சாரி என்பவரது பெயரில் உள்ளது. இந்த நிலத்தை தெக்கலூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரது மனைவி பாரதி வாங்க தயாராக இருந்தார். இதை தொடர்ந்து நேற்று சூரியநகரம் கிராமத்தில் சீனிவாச ஆச்சாரி பெயரில் உள்ள நிலத்தை பதிவு செய்ய சார் பதிவாளர் அலுவலகத்திற்கு 2 பேர் வந்திருந்தனர்.

    அப்போது திருத்தணி சார்பதிவாளர் அஸ்வினி விற்க வந்த நபரின் ஆதார் அட்டையை வாங்கி பார்த்து உங்கள் பெயர், தந்தை பெயர் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

    அப்போது அவர்தன்னுடைய பெயர் சீனிவாசா ஆச்சாரி என்றும் தந்தை பெயரை பதிலளிக்காமல் தயக்கம் காட்டியுள்ளார். இந்த நிலையில் அவரது பின்புறத்தில் இருந்த சரவணன் என்பவர் சீனிவாச ஆச்சாரியின் தந்தை பெயரை கூறியுள்ளார். தந்தை பெயரை சொல்ல தயக்கம் காட்டியதால் சந்தேகம் அடைந்த சார் பதிவாளர் அஸ்வினி அவரது கைரேகையை பரிசோதித்தார்.

    அப்போது ஆள்மாறாட்டம் நடந்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் மற்றும் திருத்தணி போலீசாருக்கு அஸ்வினி தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த திருத்தணி போலீசார் சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து ஆள் மாறாட்டம் செய்து பத்திர பதிவு செய்ய வந்த 2 பேரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காசிநாதபுரம் மேட்டு தெருவில் வசிக்கும் சரவணன் (வயது 36), ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி சைனபுரம் கிராமத்தில் வசிக்கும் மோகன் (50) ஆகியோர் ஆள் மாறாட்டம் செய்து பத்திரப்பதிவு செய்ய வந்தது தெரிய வந்தது.

    திருத்தணி சார்பதிவாளர் அஸ்வினி அளித்த புகாரின் அடிப்படையில் ஆள்மாறாட்டம் செய்த இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆள்மாறாட்டம் செய்து போலி பத்திரம் பதிவு செய்ய வந்த நபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • புழல் விசாரணை சிறையில் 1700-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
    • கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    செங்குன்றம்:

    சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் 1700-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். தாம்பரம் பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சரவணன் (வயது 27) என்பவரும் கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் கைதாகி இங்கு அடைக்கப்பட்டு உள்ளார்.

    நேற்று இரவு சிறை போலீசார், கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கைதி சரவணன், தனது அறையில் உள்ள கழிப்பறையில் அமர்ந்து கொண்டு யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். உடனே போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து, அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதிக்கு சிறைக்குள் செல்போன் கிடைத்தது எப்படி? அந்த செல்போனில் அவர் யாருடன் பேசினார்? என விசாரித்து வருகின்றனர்.

    • பூண்டியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
    • 718 பயனாளிகளுக்கு ரூ. 2.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் வழங்கினார்.

    ஊத்துக்கோட்டை:

    பூண்டியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். பூண்டி ஒன்றிய குழு தலைவர் வெங்கடரமணா, துணைத்தலைவர் மகாலட்சுமி மோதிலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், 718 பயனாளிகளுக்கு ரூ. 2.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் வழங்கினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் வி. ஜி.ராஜேந்திரன், கிருஷ்ணசாமி, திருவள்ளூர் சார் ஆட்சியர் மகாபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வீட்டில் இருந்த மின்வயர் அறுந்து இருந்ததாக தெரிகிறது. இதனை நாகராஜ் சரி செய்ய முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.
    • திருநின்றவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருநின்றவூர் அடுத்த நடுகுத்தகை, அருந்ததி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ்(வயது33). பெயிண்டர். இவர் நேற்று மாலை வீட்டுக்கு வந்த போது மின்சாரம் இல்லை. வீட்டில் இருந்த மின்வயர் அறுந்து இருந்ததாக தெரிகிறது. இதனை நாகராஜ் சரி செய்ய முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். அவரை மீட்டு திருவள்ளுவர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே நாகராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருநின்றவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பயந்து போன சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது திடீரென தீக்குளித்தார்.
    • உடல் கருகிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள மோவூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள மாந்தோப்புக்குள் மாடு மேய்க்க சென்றார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் அவர் பேசினார். இதனை அங்கு மறைந்து இருந்த அதே கிராமத்தை சேர்ந்த அஜித்குமார், அஜித், கோகுல கிருஷ்ணன் உள்ளிட்டோர் தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.

    மேலும் இந்த வீடியோவை சிறுமியிடம் காட்டி மிரட்டினர். இதனால் பயந்து போன சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது திடீரென தீக்குளித்தார். உடல் கருகிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பென்னலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக சிறுமியை மிரட்டிய அஜித் குமார், அஜித் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் சிறுமிக்கு பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்தனரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×