என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திரா மாநில எல்லையோரத்தில் தோக்கமூர் கிராமம் உள்ளது.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திரா மாநில எல்லையோரத்தில் தோக்கமூர் கிராமம் உள்ளது. இங்கு பட்டியலினத்தைச் சேர்ந்த 100 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    தோக்கமூர், எளார்மேடு, எடகண்டிகை ஆகிய 3 கிராமமக்களுக்கும் பொதுவானதாக அப்பகுதியில் உள்ள திரவுபதியம்மன் கோவிலும் கோவிலுக்கு சொந்தமான 2.94 ஏக்கர் அரசு நிலமும் உள்ளது.

    பட்டியலின மக்கள் தங்கள் கால்நடைகளை மேய்க்கவும், வி.ஏ.ஓ அலுவலகம், அங்கன்வாடி மையம், அரசு பள்ளி மற்றும் நியாய விலை கடை உள்பட பல்வேறு தேவைகளுக்கு இந்த இடத்தை நடை பாதையாக பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு பட்டியலின மக்கள் அந்த நிலத்தை பயன்படுத்த முடியாத வகையில் சுற்றிலும் 8 அடி உயரம் மற்றும் 90 மீட்டர் நீளத்தில் தீண்டாமை சுற்றுசுவர் கட்டப்பட்டது. மேலும் மீதமுள்ள இடத்தில் முள்வேலியை அமைத்தனர்.

    இதற்கு பட்டியலின மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் இதற்கு மறுத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

    இந்த நிலையில் தீண்டாமை சுவரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும் விடுதலை சிறுத்தை கட்சி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீண்டாமை ஒழிப்பு முன்னணி என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகங்களில் பல கட்ட அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் தோக்கமூர் கிராமத்தில் கட்டப்பட்ட தீண்டாமை சுவரை அகற்ற திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று காலையில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் கண்ணன் தலைமையில் அதிகாரிகள் வந்தனர். அவர்கள் 5 ஜே.சி.பி. எந்திரங்கள் உதவியுடன் தீண்டாமை சுவரை இடித்து அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    அசம்பாவிதத்தை தடுக்க டி.எஸ்.பி.க்கள் கிரியாசக்தி, சாரதி ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    நிலத்தை சுற்றி இருந்த முள்வேலி அகற்றப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த பொது மக்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது முள்வேலியை அகற்றுவதற்கு முறையாக மனு அளிக்குமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அங்கு கட்டப்பட்டு இருந்த தீண்டாமை சுவர் முற்றிலும் இடித்து அகற்றப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முள்வேலியையும் உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • மூதாட்டி சாவித்திரியை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை நடந்தது? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருநின்றவூர்:

    ஆவடியை அடுத்த கோவர்த்தனகிரி, பொதிகை நகர், பவானி அம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் சாவித்திரி (வயது 71). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களது 3 மகன்கள் திருமணமாகி குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.

    இதையடுத்து மூதாட்டி சாவித்திரி மட்டும் வீட்டில் தனியாக தங்கி இருந்தார். அவரை குடும்பத்தினர் அடிக்கடி சந்தித்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று இரவு மூதாட்டி சாவித்திரியை பார்ப்பதற்காக அவரது மூத்தமகன் வழி பேரன் ஜெகன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் உள்ள அறையில் பாட்டி சாவித்திரி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தலையில் பலத்த வெட்டுக்காயம் இருந்தது. அறை முழுவதும் ரத்தக்கறையாக காணப்பட்டது. இதனால் அதிர்ந்து போன ஜெகன் இது பற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவல் அறிந்ததும் ஆவடி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மூதாட்டி சாவித்திரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மூதாட்டி சாவித்திரியை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை நடந்தது? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொலையுண்ட சாவித்திரி 3 வீடுகளை வாடகைக்கு விட்டு உள்ளார். அதில் வரும் பணத்தை அவர் சேமித்து வைத்து இருந்ததாக தெரிகிறது. எனவே வீட்டில் நகை-பணம் இருப்பதை அறிந்து அதனை கொள்ளையடிகும் முயற்சியில் இந்த கொலை நடந்ததா? என்றும் விசாரித்து வருகிறார்கள். ஆனால் வீட்டில் இருந்த நகை-பணம் கொள்ளை போக வில்லை என்று தெரிகிறது.

    மேலும் அவரது வீட்டின் அருகே மற்ற வீடுகள் உள்ளன. ஆனால் கொலை நடந்த போது அலறல் சத்தம் வெளியில் கேட்கவில்லை. இது போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக அருகில் வசிப்பவர்களிடமும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இதேபோல் சொத்து தகராறில் கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் சுமார் 25 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். 130 தெருக்கள் உள்ளன.
    • தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக ஊத்துக்கோட்டை தெருக்களில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கியது.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் சுமார் 25 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். 130 தெருக்கள் உள்ளன. இவற்றில் குவியும் குப்பைகளை அகற்ற 17 துப்புரவு பணியாளர்கள், 30 தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனைக் கண்டித்து துப்புரவு மற்றும் தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை அகற்ற மறுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக ஊத்துக்கோட்டை தெருக்களில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கியது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து பேரூராட்சித் தலைவர் அப்துல் நஷித், துணைத் தலைவர் குமரவேல் ஆகியோர் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேரூராட்சியில் குடிநீர் மற்றும் சொத்து வரி அதிகம் நிலுவையில் உள்ளது. வரிவசூல் சீரான உடன் சம்பள பாக்கித்தொகையை வழங்குவதாக கூறினர்.

    ஆனால் இதை ஏற்க மறுத்த தொழிலாளர்கள் இன்று மாலைக்குள் சம்பள பாக்கி வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    • முனுசாமி அமைந்தகரையில் உள்ள லேத் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.
    • முனுசாமி தனது வீட்டுக்கு திரும்பி வந்தபோது நகை, பணம் கொள்ளை போனது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    போரூர்:

    சென்னை, கே.கே. நகர், கிழக்கு வன்னியர் தெருவை சேர்ந்தவர் முனுசாமி அமைந்தகரையில் உள்ள லேத் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சோளிங்கரில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை சுருட்டி சென்றுவிட்டனர். நேற்று மாலை முனுசாமி தனது வீட்டுக்கு திரும்பி வந்த போது நகை, பணம் கொள்ளை போனது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து முனுசாமி கே.கே. நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • கவுதம் உள்பட 3 பேரும் சேர்ந்து சந்தோஷ்குமாரை தாக்கி கீேழ தள்ளினர். மேலும் அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
    • கவுதம், சகோதரர் கருப்பு முத்து, நண்பர் வெள்ளை முத்து ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    சிதம்பரத்தை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது28). இவர் பூந்தமல்லி அடுத்த குண்டு மேடு பகுதியில் உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். நேற்று சந்தோஷ்குமார் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து மதுகுடித்ததாக தெரிகிறது. அப்போது அவருக்கும் நண்பரை கவுதம் என்பவருக்கும் மோதல் ஏற்பட்டது.

    இதில் கவுதமின் செல்போனை சந்தோஷ்குமார் பறித்துக் கொண்டு வீட்டுக்கு சென்று விட்டார். இதுபற்றி கவுதமின் தாய் சென்று சந்தோஷ்குமாரிடம் கேட்டார். அப்போது சந்தோஷ்குமார், கவுதமின் தாயை அவதூறாய் பேசி அனுப்பி விட்டதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கவுதம், அவரது சகோதரர் கருப்பு முத்து மற்றும் நண்பர் வெள்ளை முத்து ஆகியோர் நேற்று இரவு இது தொடர்பாக சந்தோஷ்குமாரை வரவழைத்து கேட்டனர். அப்போது அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

    ஆத்திரத்தில் இருந்த கவுதம் உள்பட 3 பேரும் சேர்ந்து சந்தோஷ்குமாரை தாக்கி கீேழ தள்ளினர். மேலும் அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் வெள்ளவேடு போலீசார் விரைந்து வந்து சந்தோஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக கவுதம், சகோதரர் கருப்பு முத்து, நண்பர் வெள்ளை முத்து ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • நர்சுகளே மித்ராவுக்கு பிரசவம் பார்த்தனர். மித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்து, சிறிது நேரத்தில் இறந்துவிட்டது.
    • மித்ராவை சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

    செங்குன்றம்:

    செங்குன்றத்தை அடுத்த அலமாதி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பாலாஜி. இவருடைய மனைவி மித்ரா(வயது 20). நிறைமாத கர்ப்பிணியான இவர், பிரசவத்துக்காக அலமாதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.

    நேற்று முன்தினம் இரவு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் யாரும் இல்லை என கூறப்படுகிறது.

    இதனால் அங்கிருந்த நர்சுகளே, மித்ராவுக்கு பிரசவம் பார்த்தனர். மித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்து, சிறிது நேரத்தில் இறந்துவிட்டது. மேலும் தாய்க்கும் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக மித்ராவை சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மித்ராவின் உறவினர்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் இல்லாமல் நர்சுகளே பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்து விட்டதாக சோழவரம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • திருவள்ளூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் பெரியஎடப்பாளையம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சந்தானம் (வயது 26). இவர் கடந்த 6 மாத காலமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்தானம் வீட்டில் இருந்தபோது, அவருக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால் மனவேதனை அடைந்த அவர், தன் அறைக்குச் சென்று மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் குறித்து சங்கர் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு போலீஸ் என்று கூறி மிரட்டி அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை பஸ்சில் இருந்த பயணி ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
    • தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

    திருநின்றவூர்:

    ஆவடியில் இருந்து கோயம்பேடு நோக்கி நேற்று இரவு மாநகர பஸ் சென்று கொண்டிருந்தது. ஒரு தம்பதியினர் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தனர். அப்போது அவர்களது பின்பக்கம் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூங்குவது போல நடித்து திடீரென இளம்பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணும், அவரது கணவரும் அந்த நபரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அடாவடியாக பேசிய அந்த நபர் தான் ஆவடியில் போலீசாக பணிபுரிவதாக கூறி அந்த தம்பதியரை மிரட்டினார். இதனால் பஸ்சில் இருந்த பயணிகளும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். பின்னர் அந்த நபர் இறங்கி சென்று விட்டார்.

    பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு போலீஸ் என்று கூறி மிரட்டி அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை பஸ்சில் இருந்த பயணி ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

    ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் அந்த நபர் பணி செய்யவில்லை. அவர் குறித்து விசாரணை நடத்திவருவதாக ஆவடி போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • கும்மிடிப்பூண்டிக்குட்பட்ட ஒன்றியத்துக்கு உட்பட்ட காரணி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டார்.
    • கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, பட்டா வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் தெரிவித்தனர்.

    திருவள்ளூர்:

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மொத்தம் 1159 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் 526 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் அதன் தலைவர்கள் தலைமையில நடைபெற்றது.

    கும்மிடிப்பூண்டிக்குட்பட்ட ஒன்றியத்துக்கு உட்பட்ட காரணி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டார்.

    கிராம சபை கூட்டத்தில் ஊராட்சிகளின் வரவு-செலவு அறிக்கை, ஊரகப்பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதேபோல் கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை ஊராட்சியில் தலைவர் ரமேஷ் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, பட்டா வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் தெரிவித்தனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 274 ஊராட்சிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 359 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன.

    • திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக ஆரணி ஆறு விளங்குகிறது.
    • ஆரணி ஆற்றின் கரைகளை பலப்படுத்த உத்தரவிடப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக ஆரணி ஆறு விளங்குகிறது.

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருந்து தொடங்கி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை பெரியபாளையம் ஆரணி பொன்னேரி லட்சுமிபுரம் அணைக்கட்டை அடைந்து பழவேற்காடு கடலில் சென்று அடைகின்றது.

    இந்த ஆற்றில் போதிய தடுப்பணைகள் இல்லாததால் ஆண்டுதோறும் 7 டி.எம்.சி முதல் 15 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கின்றன இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழையால் 17 ஆயிரம் கன அடி நீர் ஆரணி ஆற்றில் வெளியேறியது. இதனால் சோமஞ்சேரி ஏ.ரெட்டிபாளையம், மனோபுரம், பிரளம்பாக்கம் வஞ்சிவாக்கம் ஆண்டார்மடம், பெரும்பேடுக்குப்பம் ஆகிய பகுதிகளில் ஆற்றின் கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.

    இதைத்தொடர்ந்து ஆரணி ஆற்றின் கரைகளை பலப்படுத்த உத்தரவிடப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வருகிற பருவமழைக்கு முன்பு கரைகளைப் பலப்படுத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் ஆரணி ஆற்றில் கரைகளை பலப்படுத்தும் பணியை மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏ.ரெட்டிபாளையம் பகுதியில் கரைகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    பின்னர் காட்டூர் தத்தை மஞ்சி ஏரிகளை இணைக்கும் பணியினை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது ஆர்.டி.ஓ. காயத்ரி, தாசில்தார் செல்வகுமார், உதவி செயற்பொறியாளர் வெற்றிவேலன், இளநிலை பொறியாளர் பாலு, உதவி பொறியாளர் சரவணன் ஏ. ரெட்டிபாளையம் ஊராட்சித் தலைவர் கவிதா மனோகரன் உடன் இருந்தனர்.

    • ரேஷன் அரிசி கடத்துபவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து நீடித்து வருகிறது.
    • செங்குன்றம் அருகே வடகரை பகுதியில் உள்ள குடோனில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    பொன்னேரி:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை மர்மநபர்கள் ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு கடத்தி கூடுதல் விலைக்கு விற்பது அதிகரித்து வருகிறது.

    இதனை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ரேஷன் அரிசி கடத்துபவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் செங்குன்றம் அருகே வடகரை பகுதியில் உள்ள குடோனில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில், துணை கண்காணிப்பாளர் நாகராஜன், இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் அதிகாரிகள் வடகரையில் உள்ள ஒரு குடோனில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 200 மூட்டைகளில் 6 டன் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. இது தொடர்பாக தண்டையார்பேட்டையை சேர்ந்த விக்னேஷ், தங்கராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். ரேஷன் அரிசி மூட்டைகள், சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×