என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

2 மாத சம்பளம் பாக்கி- குப்பைகளை அகற்ற மறுத்து தொழிலாளர்கள் போராட்டம்
- ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் சுமார் 25 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். 130 தெருக்கள் உள்ளன.
- தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக ஊத்துக்கோட்டை தெருக்களில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கியது.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் சுமார் 25 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். 130 தெருக்கள் உள்ளன. இவற்றில் குவியும் குப்பைகளை அகற்ற 17 துப்புரவு பணியாளர்கள், 30 தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து துப்புரவு மற்றும் தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை அகற்ற மறுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக ஊத்துக்கோட்டை தெருக்களில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கியது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து பேரூராட்சித் தலைவர் அப்துல் நஷித், துணைத் தலைவர் குமரவேல் ஆகியோர் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேரூராட்சியில் குடிநீர் மற்றும் சொத்து வரி அதிகம் நிலுவையில் உள்ளது. வரிவசூல் சீரான உடன் சம்பள பாக்கித்தொகையை வழங்குவதாக கூறினர்.
ஆனால் இதை ஏற்க மறுத்த தொழிலாளர்கள் இன்று மாலைக்குள் சம்பள பாக்கி வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.






