என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • அதிகாலை நேரம் என்பதாலும் அதிக போக்குவரத்து இல்லாத காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    • சம்பவம் குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பூந்தமல்லி:

    பெங்களூரில் உள்ள தனியார் கம்பெனியில் தயாரிக்கப்பட்ட பேட்டரியில் இயங்க கூடிய 25 இருசக்கர வாகனங்களை ஏற்றி கொண்டு பெங்களூரிலிருந்து பல்லாவரம் நோக்கி கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. கண்டெய்னர் லாரியை கர்நாடாகவை சேர்ந்த சதாசிவா (23) என்பவர் ஓட்டி வந்தார். உடன் கிளீனர் சும்மன் (23), இருந்தார்.

    இன்று அதிகாலை தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ், குன்றத்தூர் அருகே சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பைபாஸ் சாலையில் உள்ள தடுப்பு சுவரின் மீது மோதி நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் கண்டெய்லர் லாரிலிருந்து அனைத்து பேட்டரி ஸ்கூட்டர்களும் கீழே விழுந்தது.

    இதனை கண்டதும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிரேன் உதவியுடன் சாலையில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தினார்கள். மேலும் கண்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் 25 பேட்டரி ஸ்கூட்டர்களும் சேதம் அடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் மற்றும் கிளீனர் காயமின்றி உயிர் தப்பினார்கள்.

    இந்த சம்பவம் குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். அதிகாலை நேரம் என்பதாலும் அதிக போக்குவரத்து இல்லாத காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அரசு பள்ளி மாணவர்களுக்கு செயற்கைகோள் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • மாணவிகள் இருவரும் திருப்பாச்சூரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    அரசு பள்ளி மாணவர்களுக்கு செயற்கைகோள் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் பல்வேறு கட்டமாக தேர்வு செய்யப்பட்டனர்.

    3-ம் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 75 பேர் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்படுவதை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இந்த குழுவில் திருவள்ளூர் மாவட்டம் சிறுவானூர் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன்-சரஸ்வதி தம்பதியின் மகள் இவாஞ்சலின், கை வண்டூர் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன்- கல்யாணி தம்பதியின் மகள் அனுஜாசிவானி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    இவர்கள், 75-வது ஆண்டு பவள விழா சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு உருவாக்கி வரும் 75 மாணவர் செயற்கைகோளில் ஒன்றை உருவாக்கும் வாய்ப்பை பெற்று உள்ளனர்.

    இதனால் மாணவிகள் இவாஞ்சலின், அனுஜா சிவானி ஆகிய இருவரும் மகிழ்ச்சியிலும், உற்சாகத்திலும் மிதந்து வருகிறார்கள்.

    இதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 2-ந்தேதிமுதல் 5-ந்தேதி வரை பெங்களூரு இஸ்ரோ மையத்தில் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழக அரசு பள்ளியில் உள்ள மாணவர்களால் "அகத்தியர்" என்ற பெயரில் செயற்கைகோள் உருவாக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து மாணவிகள் இவாஞ்சிலின், அனுஜா சிவானி ஆகிேயார் கூறியதாவது:-

    பெரிய விஞ்ஞானிகள் மட்டுமே வந்து செல்லக் கூடிய ஸ்ரீஹரிகோட்டாவுக்கு நாங்களும் சென்றது மகிழ்ச்சியாக உள்ளது. விஞ்ஞானிகள் எங்களுக்கு வகுப்பு எடுத்தது பெரிய அனுபமாகவும் உற்சாகமாகவும் இருந்தது.

    செயற்கைகோள் செய்யக்கூடிய மாணவியாக நாங்கள் சென்றது எங்களுக்கு பெருமிதம் ஆகும். தேர்வு செய்யப்பட்ட 75 பேருக்கும் பயிற்சி நடைபெறும். பின்னர் அவர்களை தனித்தனி குழுக்களாக பிரித்து அவர்கள் செய்ய வேண்டிய பணிகளை ஒப்படைப்பார்கள்.

    வானில் விமானத்தை வேடிக்கை பார்த்து வந்த நாங்கள் இப்போது செயற்கைகோளை தயார் செய்யப் போகிறோம் என்பதை நினைத்தால் நம்ப முடிய வில்லை.

    எங்களுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரன், கணித ஆசிரியர் ஜெக தீஸ்வரி ஆகியோருக்கு நன்றி.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மாணவிகள் இருவரும் திருப்பாச்சூரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். இவர்களில் இவாஞ்சலின் ஆட்டோ டிரைவரின் மகள் ஆவார்.

    • கடன் செலுத்த சென்ற பிரகாஷ் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
    • உறவினர்கள் பல இடங்களில் தேடியும் பிரகாஷை காணவில்லை.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள போந்தவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 35 ). இவர் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தனலட்சுமி (25). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். குடும்ப பிரச்சனை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனலட்சுமி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் காலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற பிரகாஷ் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

    கடன் செலுத்த சென்ற பிரகாஷ் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரைக் காணவில்லை.

    இதற்கிடையே போந்தவாக்கம் கிராம எல்லையில் உள்ள நாட்நாச்சியார் கோவில் அருகே பாசன கால்வாயில் பிரகாஷ் பிணமாக மிதந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து பிரகாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரகாஷ் கால் தவறி கால்வாயில் விழுந்த போது தண்ணீரில் மூழ்கி இறந்து இருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 19-ந்தேதி கருட சேவை நடக்கிறது.
    • 23-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    திருவள்ளூர் வீரராகவர் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு ஆண்டு தோறும் தை மற்றும் சித்திரை ஆகிய இரு மாதங்களில் பிரம்மோற்சவ விழா நடைபெறும். தை அமாவாசை அன்று சாலிஹோத்ர மகரிஷிக்கு வீரராகவர் பெருமாள் காட்சி அளித்த தினம் என்பதால் தை மாத பிரம்மோற்வம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்களை அனுமதிக்காமல் பிரம்மோற்சவ விழா நடை பெற்றது. இந்த நிலையில் இந்த ஆண்டு தை மாத  பிரம்மோற்சவ விழா இன்று காலை 6.15 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தங்கச் சப்பரம் வீதி உலா நடை பெற்றது. இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி எழுந்தருள்கிறார்.

    பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான வருகிற 19-ந் தேதி காலை 5மணிக்கு கருட சேவையும், கோபுர தரிசனமும் நடைபெறுகிறது. 21-ந் தேதி (சனிக்கிழமை) தை அமாவாசையை முன்னிட்டு ரத்னாங்கி சேவையில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    விழாவின் 7-ம் நாளான வருகிற 23-ந் தேதி (திங்கள்கிழமை) காலை தேரோட்டமும், 26-ந்தேதி இரவு வெட்டிவோ் சப்பரத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார்.

    பிரம்மோற்சவ நாளில் தினமும் காலை, மாலை இரு வேளையிலும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதிஉலா வருகிறார்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். கொரோன கட்டுப்பாடுகள் தற்போது முழுவதும் தளர்த்தப்பட்டு உள்ளதால் பிரம்மோற்சவ விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சேவல் சண்டை போட்டியை பார்க்க ஏராளமானோர் புதூர் கிராமத்தில் குவிந்தனர்.
    • காணும் பொங்கல் விழா அப்பகுதியில் களை கட்டியது.

    திருத்தணி:

    பொங்கல் பண்டிைக என்றாலே ஜல்லிக்கட்டு நினைவுக்கு வரும். இதற்கு அடுத்த இடத்தில் சேவல் சண்டை உள்ளது. பெரும்பாலான இடங்களில் சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கப்பட்டதால் நடத்தப்படுவதில்லை.

    இந்த நிலையில் திருத்தணி அருகே உள்ள ஆர்.கே.பேட்டை புதூர் கிராமத்தில் உரிய அனுமதி பெற்று இன்று சேவல் சண்டை நடத்தப்பட்டது.

    இதனால் புதூர் கிராமமே களை கட்டியது. இதில் பங்கேற்பதற்காக திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சண்டை சேவல்கள் வந்தன. சொகுசு கார்களில் பிரத்யேக கூண்டில் இந்த சேவல்கள் வெளி மாநிலங்களில் இருந்து பத்திரமாக கொண்டு வரப்பட்டது. இந்த சேவ்லகள் சுமார் 1½ அடி உயரம் வரை இருந்தது. கம்பீரமாக காணப்பட்ட சேவல்கள் ஒன்றோடு ஒன்று ஆக்ரோஷமாக மோதிக் கொண்டன.

    சேவல் சண்டைக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதில் கிளிக்கொண்டை சேவல், வெள்ளைக் கொண்டை வெள்ளை சேவல், முள்ளு சேவல் உள்ளிட்ட பல வகையான சேவல்கள் பங்கேற்றன. சுமார் 500-க்கும் மேற்பட்ட சேவல்கள் போட்டி களத்தில் இறக்கப்பட்டது. 3 சுற்றுகள் நடத்தப்பட்டு சண்டையில் வெற்றி பெற்ற சேவல் அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற சேவல்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டன.

    இந்த சேவல் சண்டையில் தங்களது சேவல்கள் பங்கேற்பதை கவுரவமாக கருதுவதாக இதில் பங்கேற்றவர்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனர். இதையொட்டி அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சேவல் சண்டை போட்டியை பார்க்க ஏராளமானோர் புதூர் கிராமத்தில் குவிந்தனர். இதனால் காணும் பொங்கல் விழா அப்பகுதியில் களை கட்டியது.

    • பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு வினாடிக்கு 550 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
    • செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை தாண்டி உள்ளது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம்.

    வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டா புயல் காரணமாக பலத்த மழை கொட்டி தீர்த்ததால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமானது. இதனால் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடு என உயர்ந்தது. ஏரியின் பாதுகாப்பு கருதி கடந்த மாதம் 8-ந் தேதி கொசஸ்தலை ஆற்றில் அதிகபட்சமாக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

    தற்போது பருவமழை முடிந்து போனதால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்தது. மேலும் கடந்த ஒரு மாதமாக கண்டலேறு அணையில் இருந்து மட்டும் கிருஷ்ணாநீர் பூண்டி ஏரிக்கு தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இதனால் பூண்டி ஏரியில் இருந்து கடந்த 2 மாதத்துக்கு மேலாக தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு 290 கன அடியாக குறைந்தது. இதனை கருத்தில் கொண்டு மதகுகள் வழியாக உபரி நீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

    கடந்த 2 மாதத்துக்கு பின்னர் தற்போதுதான் உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 34.64 அடி ஆக பதிவானது. 3.038 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது.

    பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு வினாடிக்கு 550 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 38 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை தாண்டி உள்ளது. ஏரியின் மொத்த உயரம் 24 அடி ஆகும். இதில் 23.22 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் 3435 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.

    இதேபோல் புழல் ஏரியில் மொத்த உயரமான 21 அடியில் 20.27 அடிக்கு தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 3066 மி.கனஅடி தண்ணீர் இருக்கிறது.

    • எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மத்திய மாவட்டம், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு வடமதுரை பஸ் நிறுத்தம் அருகே உள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு, எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் எம்.மகேந்திரன் தலைமை தாங்கினார். திருவள்ளூர் மாவட்ட 15-வது வார்டு அதிமுக மாவட்ட கவுன்சிலரும், ஒன்றிய கழக இணைச் செயலாளருமான எம்.அம்மினி மகேந்திரன் முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளராக எல்லாபுரம் ஒன்றிய பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ் கலந்து கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில், பாசறை மாவட்ட தலைவர் ஜி.ராஜீவ் காந்தி, மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் எம்.ராஜா, ஒன்றிய மாணவர் அணி இணைச் செயலாளர் கே.புஷ்பராஜ், கிளைச் செயலாளர் சி.கே.சீனிவாசன், தமிழ்மன்னன், சரவணன், முருகன், நாகப்பன், ஜெகதீஷ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ரவி பணத்தை வென்றதால் விளையாட மறுப்பு தெரிவித்து வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
    • காயமடைந்த ரவியை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி அத்திகுளம் தெருவை சேர்ந்தவர் ரவி(வயது42). இவர் தனது வீட்டின் அருகே நேற்று முன் தினம் நண்பர்களுடன் பணம் வைத்து தாயம் விளையாடினார். அப்பொழுது இவர் கட்டிய பணத்தில் வெற்றி பெற்றார். இதனால் பணத்தை எடுத்துக் கொண்டு விளையாட்டில் இருந்து விலகி வீட்டிற்கு சென்றார்.

    அப்பொழுது இவருடன் விளையாடிய ஆரணி சுப்பிரமணிய நகரை சேர்ந்த மோகன்(வயது28) என்பவர் ரவியை வழிமறித்து தொடர்ந்து விளையாடுமாறு கூறினார். ஆனால், ரவி பணத்தை வென்றதால் விளையாட மறுப்பு தெரிவித்து வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த மோகன், ரவியை வழி மறித்து சரமாரியாக தாக்கினார். இதனால், ரவி மயங்கி விழுந்தார்.

    அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆரணி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்தச் சம்பவம் குறித்து ரவியின் மனைவி மோகனா ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தியாகு தலைமையில் போலீசார், மோகனை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர், அவர் மீது வழக்கு பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்து பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.

    • பல்வேறு இடங்களில் தேடியும் இளம் பெண் சுக்கிளாரா மற்றும் குழந்தை பவியா கிடைக்கவில்லையாம்.
    • பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன தாய் மற்றும் குழந்தையை தேடி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்வேல்(வயது31). டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் இவருக்கு திருமணம் ஆனது. சுக்கிளாரா(வயது26) என்ற மனைவியும், பவியா(வயது3) என்ற மகளும் உள்ளனர்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுக்கிளாரா தனது குழந்தையை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வருவதாக தனது கணவரிடம் கூறிவிட்டு கடைவீதிக்கு சென்றார். பின்னர், வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் இளம்பெண் சுக்கிளாரா மற்றும் குழந்தை பவியா கிடைக்கவில்லையாம்.

    இதனால் காணாமல் போன தனது மனைவி மற்றும் குழந்தையை கண்டுபிடித்து தருமாறு டிரைவர் தமிழ்வேல் நேற்று பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். எனவே, போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன தாய் மற்றும் குழந்தையை தேடி வருகின்றனர்.

    • ரத்தின பிரபாகர் கடந்த 6 வருடமாக 65 வங்கி தேர்வு மற்றும் இதர தேர்வுகள் 39 முறை எழுதி உள்ளார்.
    • எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல் நமது லட்சியத்தை நோக்கி பயணம் செய்தால் கண்டிப்பாக வெற்றி அடையலாம்.

    பொன்னேரி:

    விடாமுயற்சியுடனும் முழு அர்ப்பணிப்புடனும் எந்த பணியை செய்தாலும் அதன் இலக்கை அடையலாம். அதன் முழுபலனும் கிடைக்கும். இதற்கு பொன்னேரியை அடுத்த சின்னகாவனத்தை சேர்ந்த வாலிபர் ரத்தின பிரபாகர் என்பவர் எடுத்துக்காட்டாக விளங்குகிறார். ரத்தின பிரபாகர் கடந்த 2016-ம் ஆண்டு பி.இ. மெக்கானிக்கல் படிப்பை முடித்தார். பின்னர் எம்.பி.ஏ. படித்தார். அரசு பணி மற்றும் வங்கி பணிக்கான போட்டிதேர்வுகளை தொடர்ந்து எழுதி வந்தார்.

    ஆனால் அவருக்கு உடனடியாக பலன் கிடைக்கவில்லை. தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்தார். எனினும் மனம் தளராமல் ரத்தின பிரபாகர் தனது லட்சிய பாதையை நோக்கி பயணம்செய்தனர். அவரது விடாமுற்சிக்கு வெற்றியும் கிடைத்தது. 105-வது முறையாக தேர்வு எழுதியபோது அவர் வங்கித்தேர்வில் தேர்ச்சி அடைந்தார். தற்போது ரத்தின பிரபாகர் காஞ்சிபுரம் மாவட்டம் மானாமதியில் உள்ள இந்தியன் வங்கியில் ஊழியராக பணி செய்து வருகிறார்.

    ரத்தின பிரபாகர் கடந்த 6 வருடமாக 65 வங்கி தேர்வு மற்றும் இதர தேர்வுகள் 39 முறை எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்வில் பலமுறை தோல்வி அடைந்தாலும் விடாமுயற்சியுடன் தனது லட்சியத்தை அடைந்த ரத்தின பிரபாகருக்கு அப்பகுதி கிராம சீரமைப்பு சங்கத்தின் சார்பில் நடந்த முப்பெரும் விழாவின் போது பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது, ரத்தின பிரபாகர் கூறும்போது, நான் கடந்த ஆறு வருடமாக இதுவரை 104 தேர்வுகள் எழுதியும் தேர்ச்சி பெறவில்லை.

    விடாமுயற்சியுடன் 105-வது தேர்வில் வெற்றி பெற்று உள்ளேன். விடாமுற்சிக்கு பலன் கிடைத்தது. பலமுறை தேர்வில் தோல்வி அடைந்தாலும் பெற்றோர் மற்றும் நண்பர்கள் மிகவும் ஊக்கம் அளித்தனர். எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல் நமது லட்சியத்தை நோக்கி பயணம் செய்தால் கண்டிப்பாக வெற்றி அடையலாம். கண்டிப்பாக அனைவரும் சாதிக்கலாம் என்றார்.

    விழாவின் போது விளையாட்டு போட்டி, சிலம்ப போட்டி, உட்பட பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டன. விடாமுற்சியுடன் சாதித்த ரத்தின பிரபாகரை நகர மன்ற துணைத் தலைவர் விஜயகுமார், உறுப்பினர்கள் பரிதா ஜெகன், செந்தில்குமார், பத்மா சீனிவாசன் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் பாராட்டினர். ரத்தின பிரபாகர், போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் மற்றும் தொடர்ந்து முயற்சித்து வருபவர்களுக்கு முன் உதாரணமாக இருப்பதாக தெரிவித்தனர்.

    • பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை முக்கிய குற்றவாளிகளில் சுமார் 90 பேரை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும் எவ்வித அசாம்பாவிதமுமின்றி பொங்கள் தினங்களை கொண்டாட வேண்டி நாளை (17-ந் தேதி வரை) திருவள்ளூர் மாவட்டம் காவல்துறையின் சார்பாக காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 8 - உதவி மற்றும் துணை காவல் கண்காணிப்பா ளர்களும், 10 - காவல் ஆய்வாளர்களும், 80 - உதவி ஆய்வாளர்களும், 400 காவல் ஆளினர்களும் மற்றும் 100 - ஊர் காவல் படையினர்களும் சேர்ந்து சுமார் 600 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    பொதுமக்கள் அதிகமாக கூடும் திருத்தலங்கள், பஜார் வீதிகள், சினிமா தியேட்டர்கள், சுற்றுலா தலங்களான பூண்டி நீர்தேக்கம் மற்றும் பழவேற்காடு போன்ற பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்கள், மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் வாகன சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அமைதியான முறையில் பொங்கல் தினங்களை கொண்டாட வேண்டி முக்கிய குற்றவாளிகளை கைது செய்யவும் அவர்களை கண்காணித்து வரவும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை முக்கிய குற்றவாளிகளில் சுமார் 90 பேரை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • உயிருக்கு போராடிய அஸ்வினை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
    • போலீசார் விரைந்து வந்து அஸ்வினின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    செங்குன்றம்:

    சோழவரம் அருகே உள்ள விஜயநல்லூர், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கமலநாதன். இவரது மகன் அஸ்வின் (வயது 28) ரவுடி. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

    நேற்று இரவு அப்பகுதியில் உள்ள உறவினரை சந்திக்க அஸ்வின் வந்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த மர்ம கும்பல் அவரை கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அஸ்வின் அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார். ஆனாலும் மர்ம கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர்.

    இதில் தலை, கழுத்து, முகத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அஸ்வின் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்ததும் கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    உயிருக்கு போராடிய அஸ்வினை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அஸ்வினின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்று உடனடியாக தெரியவில்லை. கொலையுண்ட அஸ்வின் தற்போது புதூரில் வசித்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 2 பேருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு உள்ளது. இதனால் அஸ்வின், கடந்த 3 மாதத்திற்கு முன்பு விஜயநல்லூரில் இருந்து புதூருக்கு இடம்மாறி சென்று இருக்கிறார்.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று இரவு விஜயநல்லூரில் உள்ள உறவினரை சந்திக்க வந்தபோது மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளார்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×