என் மலர்
நீங்கள் தேடியது "வங்கிப்பணி"
- ரத்தின பிரபாகர் கடந்த 6 வருடமாக 65 வங்கி தேர்வு மற்றும் இதர தேர்வுகள் 39 முறை எழுதி உள்ளார்.
- எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல் நமது லட்சியத்தை நோக்கி பயணம் செய்தால் கண்டிப்பாக வெற்றி அடையலாம்.
பொன்னேரி:
விடாமுயற்சியுடனும் முழு அர்ப்பணிப்புடனும் எந்த பணியை செய்தாலும் அதன் இலக்கை அடையலாம். அதன் முழுபலனும் கிடைக்கும். இதற்கு பொன்னேரியை அடுத்த சின்னகாவனத்தை சேர்ந்த வாலிபர் ரத்தின பிரபாகர் என்பவர் எடுத்துக்காட்டாக விளங்குகிறார். ரத்தின பிரபாகர் கடந்த 2016-ம் ஆண்டு பி.இ. மெக்கானிக்கல் படிப்பை முடித்தார். பின்னர் எம்.பி.ஏ. படித்தார். அரசு பணி மற்றும் வங்கி பணிக்கான போட்டிதேர்வுகளை தொடர்ந்து எழுதி வந்தார்.
ஆனால் அவருக்கு உடனடியாக பலன் கிடைக்கவில்லை. தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்தார். எனினும் மனம் தளராமல் ரத்தின பிரபாகர் தனது லட்சிய பாதையை நோக்கி பயணம்செய்தனர். அவரது விடாமுற்சிக்கு வெற்றியும் கிடைத்தது. 105-வது முறையாக தேர்வு எழுதியபோது அவர் வங்கித்தேர்வில் தேர்ச்சி அடைந்தார். தற்போது ரத்தின பிரபாகர் காஞ்சிபுரம் மாவட்டம் மானாமதியில் உள்ள இந்தியன் வங்கியில் ஊழியராக பணி செய்து வருகிறார்.
ரத்தின பிரபாகர் கடந்த 6 வருடமாக 65 வங்கி தேர்வு மற்றும் இதர தேர்வுகள் 39 முறை எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்வில் பலமுறை தோல்வி அடைந்தாலும் விடாமுயற்சியுடன் தனது லட்சியத்தை அடைந்த ரத்தின பிரபாகருக்கு அப்பகுதி கிராம சீரமைப்பு சங்கத்தின் சார்பில் நடந்த முப்பெரும் விழாவின் போது பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது, ரத்தின பிரபாகர் கூறும்போது, நான் கடந்த ஆறு வருடமாக இதுவரை 104 தேர்வுகள் எழுதியும் தேர்ச்சி பெறவில்லை.
விடாமுயற்சியுடன் 105-வது தேர்வில் வெற்றி பெற்று உள்ளேன். விடாமுற்சிக்கு பலன் கிடைத்தது. பலமுறை தேர்வில் தோல்வி அடைந்தாலும் பெற்றோர் மற்றும் நண்பர்கள் மிகவும் ஊக்கம் அளித்தனர். எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல் நமது லட்சியத்தை நோக்கி பயணம் செய்தால் கண்டிப்பாக வெற்றி அடையலாம். கண்டிப்பாக அனைவரும் சாதிக்கலாம் என்றார்.
விழாவின் போது விளையாட்டு போட்டி, சிலம்ப போட்டி, உட்பட பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டன. விடாமுற்சியுடன் சாதித்த ரத்தின பிரபாகரை நகர மன்ற துணைத் தலைவர் விஜயகுமார், உறுப்பினர்கள் பரிதா ஜெகன், செந்தில்குமார், பத்மா சீனிவாசன் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் பாராட்டினர். ரத்தின பிரபாகர், போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் மற்றும் தொடர்ந்து முயற்சித்து வருபவர்களுக்கு முன் உதாரணமாக இருப்பதாக தெரிவித்தனர்.






