என் மலர்
தமிழ்நாடு

பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு முழுவதும் நிறுத்தம்

- பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு வினாடிக்கு 550 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
- செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை தாண்டி உள்ளது.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம்.
வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டா புயல் காரணமாக பலத்த மழை கொட்டி தீர்த்ததால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமானது. இதனால் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடு என உயர்ந்தது. ஏரியின் பாதுகாப்பு கருதி கடந்த மாதம் 8-ந் தேதி கொசஸ்தலை ஆற்றில் அதிகபட்சமாக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
தற்போது பருவமழை முடிந்து போனதால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்தது. மேலும் கடந்த ஒரு மாதமாக கண்டலேறு அணையில் இருந்து மட்டும் கிருஷ்ணாநீர் பூண்டி ஏரிக்கு தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இதனால் பூண்டி ஏரியில் இருந்து கடந்த 2 மாதத்துக்கு மேலாக தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு 290 கன அடியாக குறைந்தது. இதனை கருத்தில் கொண்டு மதகுகள் வழியாக உபரி நீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
கடந்த 2 மாதத்துக்கு பின்னர் தற்போதுதான் உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 34.64 அடி ஆக பதிவானது. 3.038 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது.
பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு வினாடிக்கு 550 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 38 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை தாண்டி உள்ளது. ஏரியின் மொத்த உயரம் 24 அடி ஆகும். இதில் 23.22 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் 3435 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.
இதேபோல் புழல் ஏரியில் மொத்த உயரமான 21 அடியில் 20.27 அடிக்கு தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 3066 மி.கனஅடி தண்ணீர் இருக்கிறது.