என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாயம் விளையாட்டில் வென்றவரை சரமாரியாக தாக்கிய வாலிபர் சிறையில் அடைப்பு
- ரவி பணத்தை வென்றதால் விளையாட மறுப்பு தெரிவித்து வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
- காயமடைந்த ரவியை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி அத்திகுளம் தெருவை சேர்ந்தவர் ரவி(வயது42). இவர் தனது வீட்டின் அருகே நேற்று முன் தினம் நண்பர்களுடன் பணம் வைத்து தாயம் விளையாடினார். அப்பொழுது இவர் கட்டிய பணத்தில் வெற்றி பெற்றார். இதனால் பணத்தை எடுத்துக் கொண்டு விளையாட்டில் இருந்து விலகி வீட்டிற்கு சென்றார்.
அப்பொழுது இவருடன் விளையாடிய ஆரணி சுப்பிரமணிய நகரை சேர்ந்த மோகன்(வயது28) என்பவர் ரவியை வழிமறித்து தொடர்ந்து விளையாடுமாறு கூறினார். ஆனால், ரவி பணத்தை வென்றதால் விளையாட மறுப்பு தெரிவித்து வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த மோகன், ரவியை வழி மறித்து சரமாரியாக தாக்கினார். இதனால், ரவி மயங்கி விழுந்தார்.
அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆரணி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து ரவியின் மனைவி மோகனா ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தியாகு தலைமையில் போலீசார், மோகனை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர், அவர் மீது வழக்கு பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்து பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.






