என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • கடன்தொல்லை காரணமாக சரவணன் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? அல்லது குடும்பத்தகராறு காரணமா? என்று பல்வேறு கோணங்களில் பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம்குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த தடப்பெரும்பாக்கம் ஏ.ஏ.எம். நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது45). விவசாயியான இவர் நெல்அறுவடை எந்திரம் வைத்தும் தொழில் செய்து வருகிறார்.

    இவரது மனைவி கீதா(40). இவர்களது 2-வது மகள் இந்துஜா (16). பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    நேற்று இரவு வழக்கம் போல் சரவணன் குடும்பத்துடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவு திடீரென சரவணன் அதே பகுதியை சேர்ந்த நண்பர் ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தான் குடும்பத்துடன் விஷம் குடித்து விட்டதாக கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர் அக்கம்பக்கத்தினருடன் வந்து பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் சரவணன், கீதா, அவர்களது மகள் இந்துஜா ஆகியோர் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடியபடி கிடந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்கள் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நேற்று இரவு சாப்பிட்டு முடித்ததும் சரவணன் குடும்பத்துடன் விஷம் குடித்து இருப்பது தெரிந்தது. வீட்டின் மற்றொரு அறையில் மூத்தமகள் தனியாக இருந்ததால் அவர் தப்பி இருக்கிறார்.

    கடன்தொல்லை காரணமாக சரவணன் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? அல்லது குடும்பத்தகராறு காரணமா? என்று பல்வேறு கோணங்களில் பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம்குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அங்கன்வாடி மையம் உள்ளிட்ட இடங்களில் கம்ப்யூட்டர், பேட்டரி, சிலிண்டர், மின்விசிறி உள்ளிட்ட பல பொருட்கள் தொடர்ந்து திருடு போனது.
    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த ஆண்டார் குப்பத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி, தொடக்கப்பள்ளி, சத்துணவு மையம், மகளிர் குழு கட்டிடம், அங்கன்வாடி மையம் உள்ளிட்ட இடங்களில் கம்ப்யூட்டர், பேட்டரி, சிலிண்டர், கேஸ் அடுப்பு, மின் அடுப்பு, மின்விசிறி உள்ளிட்ட பல பொருட்கள் தொடர்ந்து திருடு போனது.

    இது குறித்து பொன்னேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் ராகேஷ் (20) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கூட்டாளியான தினேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

    • ருடுபோன படகில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள 2 என்ஜீன்கள், மீன்பிடி உபகரணங்கள் இருந்தன.
    • மோட்டார் சைக்கிள், கார் வரிசையில் தற்போது படகையும் திருடிய பலே திருடர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    பழவேற்காடு நடுவூர் மாதா குப்பத்தைச் சேர்ந்தவர் சார்லஸ். இவருக்கு சொந்தமான மீன்பிடி படகில் அதே பகுதியை சேர்ந்தவர்கள் மீன்பி டித்தனர். பின்னர் கரை திரும்பிய அவர்கள் மீன்பிடி படகை பழவேற்காடு மீன் விற்பனை அங்காடி அருகே கடலோர காவல் படை நிலையம் எதிரில் நிறுத்தினர்.

    இதைத்தொடர்ந்து அவர்கள் அருகில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றனர். சிறிது நேரம் கழித்து வந்த போது நிறுத்தி இருந்த படகு மாயமாகி இருந்தது. அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது 4 பேர் கும்பல் படகை இயக்கி திருடி சென்று விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் படகின் உரிமையாளர் சார்லஸ் திருப்பாலைவனம் போலீசில் புகார் செய்தார். திருடுபோன படகில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள 2 என்ஜீன்கள், மீன்பிடி உபகரணங்கள் இருந்தன. மோட்டார் சைக்கிள், கார் வரிசையில் தற்போது படகையும் திருடிய பலே திருடர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பிளாஸ்டிக் பொருட்களை மறு சுழற்சி செய்வதற்கான ஆணை டிஸ்லரி மேலாளரிடம் வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகராட்சி சத்தியமூர்த்தி தெருவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தனியார் நிறுவனம் சார்பில் பிளாஸ்டிக் பொருட்களை திரும்ப பெற்று மறு சுழற்சி செய்து பள்ளிக்கு தேவைப்படும் உபகரணங்களை செய்து தரும் நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது

    இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் முதன்மை கல்வி அலுவலர் ராமன், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி மாவட்ட கல்வி அலுவலர் தேன்மொழி, நகர மன்ற தலைவர் நகர மன்ற துணைத் தலைவர், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

    பின்னர் மாவட்ட ஆட்சியர் அரசு பள்ளிகளில் மறு சுழற்சி செய்வதற்கான ஆணையை டிஸ்லரி மேலாளர் கணேசனிடம் வழங்கினார். மேலும் மாணவர்களின் பிளாஸ்டிக் மறுசுழற்சி செயல்முறை விளக்கத்தையும் கேட்டறிந்தார்

    நிகழ்வு முடிவதற்குள் மாவட்ட ஆட்சியர் புறப்பட்டு சென்ற நிலையில் பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கான நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.

    இந்த நிலையில் நிகழ்ச்சி முடிந்து மாணவ மாணவியர்கள், அரசு அதிகாரிகள், நகராட்சி, நிர்வாகிகள் என அனைவரும் எழுந்து நின்று தேசிய கீதம் பாடினர். ஆனால் தேசிய கீதத்தை அவமதிக்கும் விதமாக முதன்மை கல்வி அலுவலர் ராமன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். மாணவ, மாணவிகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அதிகாரி, தேசிய கீதத்தை அவமதித்து செல்போனில் உரையாடிக்கொண்டிருந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    சமீபத்தில் தேசிய கீதத்தை அவமதித்து செல்போனில் பேசிக் கொண்டிருந்த காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • மாணவியின் உடல் வைக்கப்பட்டு இருந்த குளிர்சாதன சவப்பெட்டியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது.
    • 3 பெண்கள் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் சாலையை சேர்ந்தவர் நந்தினி. இவருடைய மகள் அபிநயா (வயது16). ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த வாரம் காது வலிக்காக திருவொற்றியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அபிநயாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவி பலியானார்.

    நேற்று மதியம் மாணவி அபிநயாவின் உடல் இறுதி சடங்கிற்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது மாணவியின் உடல் வைக்கப்பட்டு இருந்த குளிர்சாதன சவப்பெட்டியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது.

    இதில் அருகில் நின்று கொண்டு இருந்த மாணவியின் உறவினர் அஜித் (வயது19) உள்பட 20 பேர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அஜித் பரிதாபமாக இறந்தார். மேலும் 3 பெண்கள் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தனர். இதனால் அருகில் இருந்தவர்கள் பதட்டம் அடைந்தனர்.

    அப்போது உடனடியாக வாலிபர் ஒருவர் முதல் உதவி சிகிச்சை அளித்து 2 பெண்ணின் உயிரை காப்பாற்றிய தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

    மின்சாரம் தாக்கியதில் சவுமியா, சுந்தரி உள்ளிட்டோர் மயங்கி விழுந்ததும் அவர்களை உடனடியாக வீட்டில் உள்ள மற்றொரு அறைக்கு தூக்கிச்சென்று வாய்மூலம் மூச்சுக்காற்றை ஊதியதாக தெரிகிறது. இதன் பின்னர் முதல் உதவி சிகிச்சை அளித்ததும் அவர்கள் நிலைமை ஓரளவு சீரானது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சோகத்திலும் விரைந்து செயல்பட்டு முதல் உதவி சிகிச்சை அளித்து காப்பாற்றிய அந்த வாலிபரை பொதுமக்கள் பாராட்டினர்.

    • தரமற்ற சிமெண்ட், கல் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி கட்டிடத்தை கட்டி வருவதாக மாணவர்களும், பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
    • சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் இப்பணியின் தரத்தை ஆய்வு செய்து விரைவாகவும், தரமாகவும் கட்டிடத்தை கட்டி முடிக்க வேண்டும்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி மொத்த காய்கறி மார்க்கெட் அருகே ஆதிதிராவிட மாணவர் விடுதி ஒன்று தாட்கோ நிதி உதவியுடன் ரூ.1 கோடியே 25 லட்சம் செலவில் கட்டி முடிக்க பணியானை வழங்கப்பட்டது. மூன்று அடுக்குகளுடன் 12 அறைகள் கொண்ட இக்கட்டிடம் கட்டும் பணி கடந்த ஒரு ஆண்டாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. மேலும், தரமற்ற சிமெண்ட், கல் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி கட்டிடத்தை கட்டி வருவதாக மாணவர்களும், பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

    மேலும், பணி நடைபெறும் இடத்தில் என்ன? பணி நடைபெறுகிறது. எவ்வளவு? தொகையில் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. எந்த? நிதியில் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. எப்பொழுது? பணியை துவங்கி எப்பொழுது? பணி முடிவடையும் என்ற அறிவிப்பு பலகையும் அமைக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் இப்பணியின் தரத்தை ஆய்வு செய்து விரைவாகவும், தரமாகவும் கட்டிடத்தை கட்டி முடிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அடிப்படை வசதிகளை செய்து தராத மாவட்ட நிர்வாகத்தையும், ஊராட்சி மன்ற நிர்வாகத்தையும் கண்டித்து இளைஞர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சுமார் ஒரு மணி நேரம் இப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் ஊராட்சியை சேர்ந்த அம்பேத்கர் நகர் பகுதியில் சாலை வசதி சரியில்லை, மின்விளக்கு வசதி சரியில்லை, குடிநீர் மேல்நிலைத் தொட்டி பழுதடைந்து உள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தராத தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும், ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    எனவே, பெரியபாளையத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கோஷமிட்டனர். பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனுவை வழங்கினர். வட்டார வளர்ச்சி அலுவலக நிதி அல்லது ஊராட்சி மன்ற நிதி ஆகியவற்றில் இருந்து தேவையான அனைத்து வசதிகளையும் விதிகளுக்கு உட்பட்டு போர்க்கால அடிப்படையில் செய்து தருவதாக உறுதி கூறினார். இதன் பின்னர், அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இப்பிரச்சினையால் சுமார் ஒரு மணி நேரம் இப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.

    • விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.
    • விபத்து குறித்து மெளலியின் தந்தை குட்டி பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    பெரியபாளையம்:

    சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மௌலி (வயது23) ஆவார். இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் இதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் அஜய் (வயது24) என்பவரை அழைத்துக்கொண்டு பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு வந்து கொண்டிருந்தனர். ஜனப்பன்சத்திரம்-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் தானாகுளம் என்ற பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் மெளலி மற்றும் அஜய் தவறி கீழே விழுந்தனர்.

    விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாடியநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே மௌலி இறந்து விட்டதாக கூறினர். அஜய்க்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்த விபத்து குறித்து மெளலியின் தந்தை குட்டி பெரியபாளையம் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    • சர்புதீன் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு வந்தார்.
    • கடந்த 15-ந் தேதி சர்புதீனை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    செங்குன்றம்:

    கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்ட ராமலிங்கம் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த என்.ஐ.ஏ., அதிகாரிகளால் சர்புதீன் (வயது 62) என்பவர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சர்புதீன் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு வந்தார். கடந்த சில நாட்களாக அவரது உடல் நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து கடந்த 15-ந் தேதி சர்புதீனை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி சர்புதீன் இறந்தார். இது குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகிறார்கள்.

    • வீரராகவ பெருமாளை நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.
    • இன்று மாலை 6 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது.

    திருவள்ளூரில் உள்ள வீரராகவபெருமாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

    இக்கோவிலுக்கு அமாவாசை தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    இன்று மாசி அமாவாசை என்பதால் நேற்று இரவு முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சென்னை, காஞ்சீபுரம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கோவில் மற்றும் குளக்கரையில் குவிந்தனர்.

    இன்று அதிகாலை அவர்கள் கோவில் குளக்கரையில், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் கோவிலில் கண்ணாடி மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் வீரராகவ பெருமாள் மற்றும் மூலவர் வீரராகவ பெருமாளை நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.

    இன்று மாலை 6 மணிக்கு வீரராகவர் கோவிலில் தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. இந்த தெப்ப உற்சவத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள், கோவில் குளத்தைச் சுற்றி வந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் கட்சி அளிப்பார்.திருவள்ளூர் கட்டபொம்மன் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இதேபோல் ராஜாஜிபுரம் காளமேகம் தெருவில் உள்ள ஓம் ஸ்ரீ பவானி அம்மன், ஓம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரிஅம்மன் கோவில், புட்லூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், ஒதப்பை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், மேல்நல்லாத்தூர் அங்காள பரமேஸ்வரி கோவில் ஆகிய கோவில்களில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
    • விபத்தால் அப்குதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருத்தணி:

    திருத்தணியில் இருந்து திருவள்ளூர் நோக்கி இன்று காலை அரசு பஸ்(எண்97) சென்று கொண்டு இருந்தது. சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

    திருத்தணி அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் லக்ஷ்மபுரம் என்ற பகுதியில் சென்று கொண்டு இருந்த போது பின்னால் எம்சாண்ட் மணல் ஏற்றி வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து பஸ்சின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது.

    இதில் பஸ்சின் பின்பகுதி முழுவதும் நசுங்கியது. சுமார் 20 பயணிகள் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    தகவல் அறிந்ததும் கனகம்மாசத்திரம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலத்த காயம் அடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லாரி அதிவேகமாக வந்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த விபத்தால் அப்குதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அத்திப்பட்டு புதுநகரில் வல்லூர் அனல் மின் நிலையம் உள்ளது.
    • மின் உற்பத்தி தொடங்க பழுதை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பொன்னேரி:

    அத்திப்பட்டு புதுநகரில் வல்லூர் அனல் மின் நிலையம் உள்ளது. இங்குள்ள மூன்று அலகுகளில் தலா 500 மெகாவாட் என 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் 1-வது அலகில் கொதிகலன் குழாயில் திடீரென பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

    மின் உற்பத்தி தொடங்க பழுதை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். கொதிகலன் பழுது விரைவில் சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×