என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • எளாவூர் பஜார் பகுதியில் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது ஷேர் ஆட்டோ சென்று கொண்டு இருந்தது.
    • விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த தேவராஜ் என்பவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    கும்மிடிப்பூண்டி அருகே ஷேர் ஆட்டோ மீது லாரி மோதல்- 2 பேர் பலி

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியில் இருந்து ஆரம்பாக்கம் நோக்கி இன்று அதிகாலை ஷேர் ஆட்டோ ஒன்று சென்றது. ஆட்டோவை ஆந்திர மாநிலம் ராமாபுரத்தை சேர்ந்த டிரைவர் ரத்தினம் என்பவர் ஓட்டினார்.

    இதில் பெத்திக்குப்பத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி தேவராஜ் (வயது 55), சின்ன ஓபுளாபுரத்தை சேர்ந்த திவாகர் வாசு (45), உள்ளிட்ட 5 பேர் பயணம் செய்தனர்.

    எளாவூர் பஜார் பகுதியில் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை மேம்பா லத்தின் மீது ஷேர் ஆட்டோ சென்று கொண்டு இருந்தது.

    அப்போது பின்னால் மரப்பலகைகள் ஏற்றி வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற ஷேர் ஆட்டோவின் மீது பயங்கரமாக மோதியது. இதில் நிலை தடுமாறிய ஷேர் ஆட்டோ தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பக்கவாட்டுச் சுவரின் மீது மோதி நின்றது.

    இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த தேவராஜ் என்பவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதேபோல் திவாகர் வாசு என்பவர் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்தபோது லாரியின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    மேலும் ஆட்டோ டிரைவர் ரத்தினம் உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் பலத்த காயம் அடைந்த ரத்தினம், சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    தகவல் அறிந்ததும் ஆரம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் பூமி என்பவர் ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த விபத்து காரணமாக அப்பகுதி கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கும்மிடிப்பூண்டி அருகே கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் மீது போதிய மின்விளக்குகள் இல்லாமல் இருப்பதாகவும், இதனால் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    • உடனடியாக வீடுகளை காலி செய்யுமாறு வருவாய்த்துறையினர் மூலம் நெடுஞ்சாலை துறையினர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
    • அதானி குழுமத்தின் முன்னேற்றத்தை மட்டும் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் செயல்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த புது வாயல் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை, பழவேற்காடு மார்க்கமாக அதானி துறைமுகத்திற்கு கனரக வாகனங்கள் எளிதாக வந்து செல்ல தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நான்கு வழி சாலையாக மாற்றுவதற்காக ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன, இதன் ஒரு பகுதியாக பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட சின்னக்கவனம் கிராமத்தில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள், ஐந்து கோயில்கள் ஆகியவற்றை இடித்து தள்ளிவிட்டு நான்கு வழி சாலை, இணைப்பு மேம்பாலம் அமைப்பதற்காக அங்குள்ள குடியிருப்பு வாசிகளை உடனடியாக வீடுகளை காலி செய்யுமாறு வருவாய்த்துறையினர் மூலம் நெடுஞ்சாலை துறையினர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வரும் தங்களை திடீரென வீடுகளை காலி செய்து விட்டு வெளியேற கூறுவது ஏற்க முடியாது என்றும், புது வாயலில் இருந்து ஏலியம்பேடு, சின்ன கவுனம் இடையே பல ஏக்கர் பரப்பளவிலான தரிசு நிலங்கள் இருப்பதாகவும் அதன் வழியாக நான்கு வழி சாலையை அமைப்பதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் இது குறித்து ஏற்கனவே நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் தங்களது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்ட போதிலும், தங்களது கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் அதானி குழுமத்தின் முன்னேற்றத்தை மட்டும் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் செயல்படுவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அச்சம் தெரிவித்துள்ள கிராம மக்கள், நான்கு வழி சாலை திட்டத்தை மாற்று பாதையில் செயல்படுத்த வலியுறுத்தி பொன்னேரி-பழவேற்காடு இடையே செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த வட்டாட்சியர் செல்வகுமார், போராட்டம் நடத்திய மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரது சமாதானத்தை போராட்டக்காரர்கள் ஏற்க மறுத்துவிட்டதோடு நான்கு வழி சாலை திட்டத்தை கைவிடாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சார்பு ஆட்சியர் முன்னிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக அதிகாரிகள் அளித்த உறுதியை ஏற்று போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

    • மகன் ஹேமந்த்குமாருக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கலையரசனும், நித்யாவும் தூக்கு போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.
    • கலையரசனுக்கு கடன் கொடுத்தவர்கள் யாரேனும் நெருக்கடி கொடுத்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

    திருவள்ளூர்:

    வாலாஜாபாத் அடுத்த அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கலையரசன் (வயது 34). விசேஷ நிகழ்ச்சிகளுக்கு சமையல் ஆர்டர் எடுத்து செய்து வந்தார். இவரது மனைவி நித்யா (30). இவர்களது மகன் ஹேமந்த்குமார் (வயது 6).

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹேமந்த்குமார் குடும்பத்துடன் திருவள்ளூர் அருகே உள்ள மப்பேடு, வாசனாம்பட்டு பகுதியில் உள்ள மாமியார் வீட்டுக்கு வந்தார். அங்கேயே அனைவரும் தங்கி இருந்தனர்.

    நேற்று இரவு வழக்கம் போல் அனைவரும் சாப்பிட்டு விட்டு அவர்களது அறையில் தூங்கினர். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் கலையரசன் குடும்பத்தினர் அறையில் இருந்து வெளியே வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த மாமனார் அறைக்கு சென்று பார்த்த போது கலையரசனும், நித்யாவும் தூக்கில் பிணமாக கிடந்தனர். அருகில் உள்ள படுக்கையில் பேரன் ஹேமந்த்குமார் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மகன் ஹேமந்த்குமாருக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கலையரசனும், நித்யாவும் தூக்கு போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து மப்பேடு போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இறந்துபோன 3 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கலையரசன் குடும்பத்துடன் தற்கொலை செய்வதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இது குறித்து அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கேட்டரிங் தொழில் சரியாக இல்லாததால் குடும்பம் நடத்த கலையரசன் மிகவும் கஷ்டப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதன்பிறகு அவர் மாமனார் வீட்டுக்கு வந்து உள்ளார். அங்கும் அவர் மிகவும் மனவேதனையுடன் இருந்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்துள்ளனர்.

    இந்நிலையில் கலையரசனும், நித்யாவும் தங்களது மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு அவர்களும் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளனர்.

    கலையரசனுக்கு கடன் கொடுத்தவர்கள் யாரேனும் நெருக்கடி கொடுத்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

    மகனை கொன்று பெற்றோர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டின் உரிமையாளர் அனுசுயா மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
    • கொள்ளை சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வடமதுரை ஊராட்சியை சேர்ந்த செங்காத்தாகுளம், பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் அனுசுயா(வயது70) ஆவார். இந்த மூதாட்டிக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த வாரம் வீட்டை பூட்டிக்கொண்டு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர், அங்கிருந்து மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அனுசுயாவின் வீட்டை அவரது உறவினர்கள் பார்த்துக் கொண்டனர்.

    இந்நிலையில், இன்று காலை மூதாட்டி அனுசுயாவின் வீட்டிற்கு அவரது உறவினர் வந்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டிலிருந்த சுமார் ஒரு கிலோ வெள்ளி பொருட்களையும்,வீட்டில் வைத்திருந்த ரூ.10,௦௦௦ ரொக்கப்பணத்தை கொள்ளை அடித்து சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். மேலும், அனுசுயாவுக்கும் தகவல் கூறினர்.சென்னையில் இருந்து அனுசுயா வந்து பொருட்களை சரி பார்த்தால்தான், தங்க நகைகள் எதுவும் கொள்ளையடிக்கப்பட்டதா? என்ற விபரம் தெரியவரும். இந்தக் கொள்ளை சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

    • கிராமபுறங்களில் ஏற்படும் வளர்ச்சி மத்திய அரசின் திட்டங்களின் மூலம் இந்திய நாட்டிற்கான வளர்ச்சியாக மாறும் எனவும் அப்போது எடுத்துரைக்கப்பட்டது.
    • முன்னதாக கல்லூரி மாணவர்களுக்கு இந்த திட்டம் குறித்த பல்வேறு திறனறிதல் போட்டிகள் நடத்தப்பட்டு அதற்கான பரிசுகளும், சான்றிதழ்களூம் வழங்கப்பட்டன.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த கவரைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கதர் மற்றும் கிராம தொழில் ஆணையம் சார்பில் மக்கள் கல்வி திட்டம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

    கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் மாநில இயக்குனர் பி.என்.சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் மாணவர்கள் எதிர்காலத்தில் தொழிலதிபர்களாக முன்னேறும் வகையில் பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்தும், மாணவர்கள் மற்றும் நடுத்தர இளைஞர்கள் வாழ்க்கையில் தொழிலதிபர்களாக உருவாகும் வகையில் வகுக்கப்பட்டு உள்ள மத்திய அரசின் சிறப்பு திட்டங்கள் மற்றும் இதற்காக வங்கி கடன்களில் உள்ள மானிய தள்ளுபடி போன்றவை படகாட்சிகள் மூலம் விளக்கப்பட்டது.

    நாட்டில் கதர் பொருட்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதற்காக மேம்படுத்தப்பட்ட தனி கவனத்திற்கு உரிய சிறப்பு திட்டங்களின் பயன்கள், அதனை பெறும் வழிமுறைகள் மற்றும் அதனால் கிராம புற மக்கள் அடையும் வளர்ச்சி குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் கிராமபுறங்களில் ஏற்படும் வளர்ச்சி மத்திய அரசின் திட்டங்களின் மூலம் இந்திய நாட்டிற்கான வளர்ச்சியாக மாறும் எனவும் அப்போது எடுத்துரைக்கப்பட்டது. முன்னதாக கல்லூரி மாணவர்களுக்கு இந்த திட்டம் குறித்த பல்வேறு திறனறிதல் போட்டிகள் நடத்தப்பட்டு அதற்கான பரிசுகளும், சான்றிதழ்களூம் வழங்கப்பட்டன. கல்லூரி டைரக்டர் கபிலன், மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்

    • எருக்குவாய் கண்டிகை கிராமத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • அனுமதி இன்றி 3 மாட்டு வண்டிகள், ஒரு டிராக்டரில் மணல் கடத்தி வந்தவர்கள் போலீசாரை கண்டதும் வாகனங்களை அப்படியே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். எருக்குவாய் கண்டிகை கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக அனுமதி இன்றி 3 மாட்டு வண்டிகள், ஒரு டிராக்டரில் மணல் கடத்தி வந்தவர்கள் போலீசாரை கண்டதும் வாகனங்களை அப்படியே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    எனவே, மணலுடன் மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும்,வழக்கு பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • பொன்னேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் நடைபெற்றது.
    • செயற்கையாக அதானி குழும பங்குகளை உயர்த்தியும், பங்குச்சந்தையில் மோசடி வேலைகள் நடந்துள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் நடைபெற்றது. கட்சியின் நடவடிக்கைகள், வரவு செலவு கணக்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் அதானி குழுமம் தொடர்பான பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளை ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்தி உள்ளது.

    செயற்கையாக அதானி குழும பங்குகளை உயர்த்தியும், பங்குச்சந்தையில் மோசடி வேலைகள் நடந்துள்ளது. கருப்பு பணத்தை வெள்ளை பணமாக்கும் நடவடிக்கைகளிலும் செயற்கையாக பங்குகளின் மதிப்பை அதிகமாக்கி சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் செபி, ரிசர்வ் வங்கி ஆகியவை தலையிடவில்லை எனவும், நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கை குழு விசாரிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது.

    சிறு முதலீட்டாளர்கள் பாதிப்புகளை நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது எனவும், ஆனால் அதானி குழும மோசடிகள் குறித்து விசாரணை நடத்திட உச்சநீதிமன்றம் உத்தரவிடவில்லை என்றார். செபி, ரிசர்வ் வங்கி ஆகியவை விசாரிக்காத நிலையில் மத்திய அரசும் கோரிக்கைகளை நிராகரித்து வருவதாகவும், உச்சநீதிமன்றமும் முறையாக விசாரிக்க உத்தரவிட மறுப்பதாக தெரிவித்தார்.

    இதற்கு முன்பாக இரண்டு பங்கு சந்தை மோசடிகளில் கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், அதானி விவகாரத்திலும் நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கை குழு விசாரணை நடத்திட வேண்டும் என்றார். திரிபுராவில் தைரியமாக 94% வாக்காளர்கள் வந்து வாக்களித்துள்ள நிலையில் ஆளுங்கட்சிக்கெதிரான வாக்குகள் பதிவாகி இருக்கும் என ஆளும் பாஜக பதட்டத்தில் உள்ளதாகவும், மக்களை பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், நேற்றும் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் பல்வேறு தாக்குதல் நடைபெற்று வருவதாகவும், தேர்தல் முடிவுகள் வரும் வரையில் தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும், தவறு செய்தவர்களை கைது செய்யவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரகாஷ் காரத் கேட்டு கொண்டார்.

    அதானி என்ற பெயரை கூட நாடாளுமன்றத்தில் உச்சரிக்க பிரதமர் மறுக்கிறார் என சாடினார். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு கவனிப்பதில்லை எனவும் குற்றம் சாட்டினார். இந்தி மொழி திணிப்பு குறித்த கேள்விக்கு நாடு முழுவதுமுள்ள 22மொழிகளை தேசிய அளவிலான மொழிகளாக பட்டியலிடப்பட்டுள்ள நிலையில் அனைத்து மொழிகளும் ஒரே மாதிரி நடத்தப்பட வேண்டும் என்றார். அனைத்து மொழிகளையும் அரசு ஊக்கப்படுத்தி, விளம்பரப்படுத்த வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

    • தெப்பக்குளத்தில் 3 முறை உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
    • 2-வது நாள் விழா இன்றும் 3-வது நாள் விழா நாளையும் நடைபெறுகிறது.

    திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற திருத்தலமாகும். கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாத தெப்ப உற்சவம் 3 நாள்கள் நடைபெறுவது வழக்கமாகும்.

    அதேபோல் இந்த ஆண்டுக்கான மாசி மாத தெப்ப உற்சவம் கோலாகலமாக தொடங்கியது. நேற்று முதல் நாள் தெப்ப உற்சவம் நடைபெற்றது.

    முன்னதாக கோவிலில் இருந்து வைத்திய வீரராகவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக புறப்பட்டார். இதைத் தொடர்ந்து குளக்கரையில் ஸ்ரீதேவி, பூ தேவி சமேதராய் வீற்றிருந்த வீரராகவருக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றன.

    பின்னர் மின் அலங்காரம் செய்யப்பட்ட தெப்பக்குளத்தில் 3 முறை உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தெப்பத் திருவிழாவை கண்டு ரசித்தனர். தெப்ப திருவிழாவின் 2-வது நாள் விழா இன்றும் 3-வது நாள் விழா நாளையும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து உள்ளனர்.

    • விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
    • விபத்து குறித்து மெளலியின் தந்தை குட்டி பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.

    பெரியபாளையம்:

    சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மௌலி (வயது 23). இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் அஜய் (24) என்பவரை அழைத்துக் கொண்டு பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார்.

    வழியில் ஜனப்பன்சத்திரம்- பெரியபாளையம் நெடுஞ்சாலையில் தானாகுளம் என்ற பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. இதில் மெளலி மற்றும் அஜய் இருவரும் கீழே விழுந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பாடியநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே மௌலி இறந்து விட்டதாக தெரிவித்தனர். அஜய்க்கு முதல் உதவி சிகிச்சை அளித்து பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து மெளலியின் தந்தை குட்டி பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    • இரும்பு உருக்கு தொழிற்சாலையின் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு உள்ளது.
    • பலத்த காயம் அடைந்த தொழிலாளி ராமேஸ்வரகுமார் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்கு தொழிற்சாலையின் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு உள்ளது. இங்கு வசித்து வரும் பீகாரை சேர்ந்த தொழிலாளி ராமேஸ்வரகுமாரை (வயது 24), அவருடன் பணியாற்றி வரும் நண்பர்களான சக தொழிலாளிகள் 4 பேர் இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த தொழிலாளி ராமேஸ்வரகுமார் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து வடமாநில தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கிய அவரது நண்பர்களான பீகாரைச்சேர்ந்த பிர்ஜேஸ்ஷா (36), பிட்டு குமார் (27), நஜ்முன்ஹாசன் (27) மற்றும் ரித்துன்ஜெய் தாகூர் (28) ஆகிய 4 பேரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • போலீசார் யோகானந்தம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தணி:

    திருத்தணி சித்துர் சாலையில் உள்ள நாகாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் யோகானந்தம் (வயது 53). இவர் திருவள்ளூரில் பொருளாதார குற்ற தடுப்புப்பிரிவில் தலைமை போலீசாராக பணியாற்றி வருகின்றார். இவரது மனைவி உமாமகேஸ்வரி (50). இவர் முருக்கம்பட்டு கிராமத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். யோகானந்தம் மற்றும் அவரது மனைவி உமாமகேஸ்வரி இருவரும் நேற்று காலை வழக்கம்போல் வீட்டை பூட்டிக்கொண்டு வேலைக்கு சென்றனர். பின்னர் மாலை இருவரும் வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 1¾ பவுன் நகை, ரூ.25 ஆயிரத்து 500 ரொக்கபணம் திருடு போனது தெரியவந்தது. திருட்டு சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருத்தணி போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இதையடுத்து போலீசார் யோகானந்தம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஊராட்சி செயலாளர்களை வட்டம் விட்டு வட்டாரம் பணியிட மாறுதல் செய்து வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து மீண்டும் அதே வட்டாரத்தில் பணி வழங்க வேண்டும்.
    • ஊரக வளர்ச்சி அளவில் பணி புரியும் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் அதிகபட்சமாக 20 கி.மீ. தொலைவிற்குள் பணி மாறுதல் வழங்கி பயண நேரத்தை குறைக்க வேண்டும்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்டத் தலைவர் மெல்கி ராஜா சிங் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் சி.காந்திமதி நாதன், மணிகண்டன், இளங்கோவன், ஜெய்ஹிந்த், பிரபு, சந்தானம் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது, திருவள்ளூர் மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை வட்டம் விட்டு வட்டாரம் பணியிட மாறுதல் செய்து வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து மீண்டும் அதே வட்டாரத்தில் பணி வழங்க வேண்டும்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி அளவில் பணி புரியும் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் அதிகபட்சமாக 20 கி.மீ. தொலைவிற்குள் பணி மாறுதல் வழங்கி பயண நேரத்தை குறைக்க வேண்டும். விடுமுறை நாட்கள் மற்றும் இரவு நேரங்களில் ஆய்வு கூட்டங்களை நடத்துவதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் ராஜேந்திரன், மணி சேகர், மீரா, கண்ணன், ஜார்ஜ், தேவ சகாயம், ஜெய்சங்கர் முனுசாமி, சோமசேகர், பிரசாத், சரவணமூர்த்தி, நா.சீனிவாசன், பரசுராமன், இரா. ஸ்ரீராம் காந்தி, மகேந்திரன், பாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×