search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியிருப்புகளை இடித்துவிட்டு நான்கு வழி சாலை அமைக்க எதிர்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்
    X

    குடியிருப்புகளை இடித்துவிட்டு நான்கு வழி சாலை அமைக்க எதிர்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

    • உடனடியாக வீடுகளை காலி செய்யுமாறு வருவாய்த்துறையினர் மூலம் நெடுஞ்சாலை துறையினர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
    • அதானி குழுமத்தின் முன்னேற்றத்தை மட்டும் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் செயல்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த புது வாயல் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை, பழவேற்காடு மார்க்கமாக அதானி துறைமுகத்திற்கு கனரக வாகனங்கள் எளிதாக வந்து செல்ல தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நான்கு வழி சாலையாக மாற்றுவதற்காக ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன, இதன் ஒரு பகுதியாக பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட சின்னக்கவனம் கிராமத்தில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள், ஐந்து கோயில்கள் ஆகியவற்றை இடித்து தள்ளிவிட்டு நான்கு வழி சாலை, இணைப்பு மேம்பாலம் அமைப்பதற்காக அங்குள்ள குடியிருப்பு வாசிகளை உடனடியாக வீடுகளை காலி செய்யுமாறு வருவாய்த்துறையினர் மூலம் நெடுஞ்சாலை துறையினர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வரும் தங்களை திடீரென வீடுகளை காலி செய்து விட்டு வெளியேற கூறுவது ஏற்க முடியாது என்றும், புது வாயலில் இருந்து ஏலியம்பேடு, சின்ன கவுனம் இடையே பல ஏக்கர் பரப்பளவிலான தரிசு நிலங்கள் இருப்பதாகவும் அதன் வழியாக நான்கு வழி சாலையை அமைப்பதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் இது குறித்து ஏற்கனவே நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் தங்களது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்ட போதிலும், தங்களது கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் அதானி குழுமத்தின் முன்னேற்றத்தை மட்டும் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் செயல்படுவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அச்சம் தெரிவித்துள்ள கிராம மக்கள், நான்கு வழி சாலை திட்டத்தை மாற்று பாதையில் செயல்படுத்த வலியுறுத்தி பொன்னேரி-பழவேற்காடு இடையே செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த வட்டாட்சியர் செல்வகுமார், போராட்டம் நடத்திய மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரது சமாதானத்தை போராட்டக்காரர்கள் ஏற்க மறுத்துவிட்டதோடு நான்கு வழி சாலை திட்டத்தை கைவிடாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சார்பு ஆட்சியர் முன்னிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக அதிகாரிகள் அளித்த உறுதியை ஏற்று போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

    Next Story
    ×