என் மலர்
திருவள்ளூர்
- டாக்டர் தம்பதி குமரபிரபு- மகாலட்சுமி இருவரும் அக்குபஞ்ச்சர் மருத்துவம் பார்ப்பதுடன் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் தீபாவளி சீட்டும் நடத்தி வந்தனர்.
- 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர்:
மதுரை மாவட்டம் பசுமலை பகுதியைச் சேர்ந்தவர் குமரபிரபு. இவரது மனைவி மகாலட்சுமி. இருவரும் அக்குபஞ்ச்சர் டாக்டர்கள். இவர்கள் வாரத்திற்கு ஒரு முறை குன்றத்தூர் பகுதிக்கு வந்து அங்கு சிகிச்சை அளிப்பது வழக்கம்.
குன்றத்தூரில் உள்ள அவர்களது அக்குபஞ்ச்சர் மையத்தில் ஆவடி காவலர் குடியிருப்பில் வசித்து வரும் போலீஸ்காரர் தினேஷ்குமாரின் மனைவி சர்மிளா வேலை பார்த்து வந்தார்.
டாக்டர் தம்பதி குமரபிரபு- மகாலட்சுமி இருவரும் அக்குபஞ்ச்சர் மருத்துவம் பார்ப்பதுடன் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் தீபாவளி சீட்டும் நடத்தி வந்தனர். இதற்கு போலீஸ்காரர் மனைவி சர்மிளாவும் உடந்தையாக இருந்தார்.
இதில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் பணம் கட்டி இருந்தனர். ஆனால் அவர்களுக்கு கூறியபடி பணத்தை திருப்பி கொடுக்க வில்லை என்று தெரிகிறது. இதுபற்றி டாக்டர் தம்பதிகளிடம் கேட்டபோது உரிய பதில் கூறவில்லை.
இந்த நிலையில் பணம் கட்டி ஏமாந்த பொன்னேரி அருகே உள்ள தேவம்பட்டு கிராமத்தை சேர்ந்த சவுமியா உள்ளிட்ட ஏராளமானோர் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாணிடம் புகார் மனு அளித்தனர்.
இது தொடர்பாக மாவட்ட குற்றப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கந்தன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சின்னதுரை, சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் டாக்டர் தம்பதி குமரபிரபு- மகாலட்சுமி ஆன்லைன் வர்த்தகம், சீட்டுபணம், தீபாவளி சீட்டு என ரூ.1¼ கோடி வரை மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் மதுரைக்கு விரைந்து சென்று மோசடியில் ஈடுபட்ட குமரபிரபு, அவரது மனைவி மகாலட்சுமி ஆகிய இருவரையும் கைது செய்த னர். அவர்களுக்கு உடந்தையாக இருந்த போலீஸ்காரர் மனைவி சர்மிளாவையும் பிடித்தனர். அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்ப்பட்ட சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- தமிழக அரசை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பெரியபாளையம்:
அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தமிழக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் பணியினை சத்துணவு பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் இத்திட்டத்தை சத்துணவு திட்டத்துடன் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சத்துணவு பணியாளர்கள் திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர்.
பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தியும், தமிழக அரசை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்ப்பட்ட சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், மாவட்டத் தலைவர் சிவா, ஒன்றிய செயலாளர் தினேஷ், ஒன்றிய பொருளாளர் காந்திமதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- தீ பேருந்துகளில் பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- அலுவலகத்தில் இருந்த கணினி, ஆவணங்கள் உள்ளிட்டவை தீயில் கருகின.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த பாலவாயல் பகுதியில் உள்ள தனியார் ஆம்னி பேருந்து அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, பேருந்துகள் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், தனியார் ஆம்னி பேருந்து அலுவலகத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கொழுந்து விட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டுவர அம்பத்தூர் உள்பட 3 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தீ பேருந்துகளில் பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்நிலையில், அலுவலகத்தில் இருந்த கணினி, ஆவணங்கள் உள்ளிட்டவை தீயில் கருகின. மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த மாதம் 25-ம் தேதி பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவரிடம் புகார் மனு அளித்தனர்.
- போராட்டம் காரணமாக, ஒப்பந்த தொழிலாளர்கள் பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம்,ஆரணி, சுப்பிரமணிய நகர் பகுதியில் சத்ய சாய்பாபா நகர் உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான செல்போன் கோபுரம் ஒன்று உள்ளது. இந்நிலையில், அதன் அருகே மற்றொரு செல்போன் கோபுரம் அமைக்கும் பணி துவங்கியது. இதனால் இப்பகுதி மக்கள் செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என்றும் இதனால் சுகாதார சீர்கேடு, உடல் உபாதைகள் உள்ளிட்டவை வரும் என்று கூறி உடனடியாக செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர். இது தொடர்பாக கடந்த மாதம் 25-ம் தேதி பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டு புகார் மனு அளித்தனர். இதனால் அப்பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நேற்று இரவு முதல் செல்போன் கோபுரம் பணி அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வந்தது. இதனை அறிந்த இப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் இன்று காலை பணி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆரணி பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் கலாதரன், பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி, வார்டு உறுப்பினர்கள் கௌசல்யா, அருணா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். ஆனால், பொதுமக்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன் பின்னர், பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.செல்போன் கோபுரம் என்பது அனைத்து இடங்களிலும் அமைக்கப்படுகிறது என்று கூறிய அவர்கள், செல்போன் கோபுரங்கள் அமைக்க கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்தும், கலெக்டரிடம் அனுமதி பெறுவது குறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விளக்கி கூறினார்.
செல்போன் அமைக்கும் பணிக்கு யாரும் இடையூறு செய்யக்கூடாது, உங்களது ஆட்சேபனையை தெரிவிப்பதாக இருந்தால் கலெக்டரை சந்தித்து புகார் அளியுங்கள் என்றும் அறிவுறுத்தினார். இதனை ஏற்று அப்பகுதி மக்கள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இப்பிரச்சினையால் சுமார் 2 மணி நேரம் இப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.
- பெரும்பேடு குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டு வந்திருந்த மீஞ்சூர் அடுத்த நாலூரை சேர்ந்த காமேஷ், தீபக் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்கு பதிவு செய்து லட்சுமிபுரம் பகுதி சேர்ந்த அஜித்,சூர்யா,ரஞ்சித், விஜய் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த பெரும்பேடு குப்பத்தில் மே தினத்தை முன்னிட்டு கைப்பந்து போட்டி நடைபெற்றது. அப்போது பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தை சேர்ந்த வாலிபர்களுக்கும், லட்சுமிபுரத்தை சேர்ந்த வாலிபர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. பின்னர் இது கோஷ்டி மோதலாக மாறியது. இருதரப்பினருனம் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இதன்தொடர்ச்சியாக பெரும்பேடு குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டு வந்திருந்த மீஞ்சூர் அடுத்த நாலூரை சேர்ந்த காமேஷ், தீபக் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் காயம் அடைந்த இருவரும் மேல் சிகிச்சைகாக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பொன்னேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்கு பதிவு செய்து லட்சுமிபுரம் பகுதி சேர்ந்த அஜித்,சூர்யா,ரஞ்சித், விஜய் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் சிலரை தேடிவருகிறார்கள்.
- தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
- சங்கத் தலைவர் ஆர். சுரேஷ்குமார் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது
பொன்னேரி:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் இணைக்கப்பட்ட திருவேங்கடபுரம், வேம்பாக்கம், தடப்பெரும்பாக்கம் சுற்று வட்டார வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி திருவேங்கடபுரம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது, சங்கத் தலைவர் ஆர். சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். தங்கராஜ், நாகராஜ், ரமேஷ், பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலாளர் செல்லதுரை வரவேற்புரை வழங்கினார்.
மாவட்டத் தலைவர் டி.நந்தன் மற்றும் அமைப்புச் செயலாளர் எஸ்.வி.முருகன், சட்ட ஆலோசகர் வழக்குறிஞர் விக்னேஷ் உதயன், . பாலச்சந்தர், மகேந்திரன், வழக்கறிஞர் சதீஷ் சரண்குமார், ராமு ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் கந்தன், இதயகுமார் ஆகியோருக்கு சங்கத்தின் சார்பாக நிதி உதவி வழங்கப்பட்டது. இறுதியில் செந்தூர் முருகன் டிரேடர்ஸ் உரிமையாளர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.
- குடோனில் இருந்து வெள்ளை நிறத்தில் புகை பரவியது. சிறிது நேரத்தில் அந்த புகை மண்டலம் பாதையே தெரியாத அளவுக்கு சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிக்குள்ளும் பரவத்தொடங்கியது.
- ரசாயனங்கள் தொடர்ந்து புகையாக மாறி வெளியேறியதால் அதனை உடனே கட்டுப்படுத்த முடியவில்லை.
செங்குன்றம்:
செங்குன்றம் அருகே உள்ள பாயாசம்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ரசாயன குடோன் உள்ளது.
நேற்று அதிகாலை மழை பெய்து கொண்டிருந்த போது குடோனில் இருந்த ரசாயன பொருட்கள் மீது தண்ணீர் பட்டதாக தெரிகிறது.
இதில் குடோனில் இருந்து வெள்ளை நிறத்தில் புகை பரவியது. சிறிது நேரத்தில் அந்த புகை மண்டலம் பாதையே தெரியாத அளவுக்கு சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிக்குள்ளும் பரவத்தொடங்கியது. இதனால் பொதுமக்கள் கண் எரிச்சல், மூச்சுத் திணறலால் அவதிப்பட்டனர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ரசாயன புகை வெளியேறுவதை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் ரசாயனங்கள் தொடர்ந்து புகையாக மாறி வெளியேறியதால் அதனை உடனே கட்டுப்படுத்த முடியவில்லை. அப்பகுதியில் ஆம்புலன்சுகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டது. பின்னர் சுமார் 15 மணிநேரம் போராடி குடோனில் இருந்து ரசாயன புகை வெளியேறுவது முற்றிலும் தடுக்கப்பட்டது. இரவு 9 மணி வரை ரசாயன புகை வெளியேறிய இடத்தில் ஆம்புலன்சில் ஊழியர்கள் தயார் நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சுண்ணாம்பு கலந்த மண்ணை கொட்டியும், நச்சுப்பொருட்களை பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டியும் புதைத்ததாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
- கிராம சபை கூட்டங்களில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
- ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
பொன்னேரி:
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம் மற்றும் சோழவரம் ஒன்றியத்தில் அடங்கிய ஊராட்சிகளில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கிராம வளர்ச்சித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் அத்திப்பட்டு ஊராட்சியில் துணைத் தலைவர் எம் டி ஜி கதிர்வேல் தலைமையிலும், நாலூர் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சுஜாதா ரகு தலைமையிலும், வண்ணிப்பாக்கம் ஊராட்சி மஞ்சுளா பஞ்சாட்சரம் தலைமையிலும், பிரயம்பாக்கம் ஊராட்சி இலக்கியா கண்ணதாசன் தலைமையிலும், பழவேற்காடு ஊராட்சி மாலதி சரவணன் தலைமையிலும், திருப்பாலைவனம் ஊராட்சி பவானி கங்கை அமரன் தலைமையிலும்,
வஞ்சிவாக்கம் ஊராட்சி, வனிதா ஸ்ரீ ராஜேஷ் தலைமையிலும், திருவெள்ளை வாயல் ஊராட்சி முத்து தலைமையிலும், வாயலூர் கோபி தலைமையிலும், காட்டூர் செல்வ ராமன் தலைமையிலும், காட்டுப்பள்ளி சேதுராமன் தலைமையிலும், தட பெரும்பாக்கம் பாபு தலைமையிலும், கொடுர் கஸ்தூரி மகேந்திரன் தலைமையிலும், சிறுவாக்கம் சேகர் தலைமையிலும், ஆலாடு பிரசாத் தலைமையிலும், ஏ.ரெட்டிபாளையம் கவிதா மனோகரன் தலைமையிலும்,
சோழவரம் ஒன்றியம் ஜெகநாதபுரம் ஊராட்சி மணிகண்டன் தலைமையிலும், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி நந்தினி ரமேஷ் தலைமையிலும், அத்திப்பேடு ஊராட்சி ரமேஷ் தலைமையிலும், பஞ்செட்டி ஊராட்சி, சீனிவாசன் தலைமையிலும், ஆண்டார்குப்பம் ஊராட்சி ஆர்த்தி ஹரி பாபு தலைமையிலும், மாதவரம் ஊராட்சி சுரேஷ் தலைமையிலும், மாலிவாக்கம் ஊராட்சி பாரத் தலைமையிலும், ஆமுர் ஊராட்சி பிரியா ஆனந்தன் தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- வாயு கசிவு ஏற்பட்டதால் கண் எரிச்சல் ஏற்பட்டதுடன் மூச்சு திணறலும் உண்டானது. சாலையில் நடந்து சென்றவர்களும் இதேபோல் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
- தீயணைப்பு வீரர்கள் புகை மற்றும் வாயு கசிவை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
செங்குன்றம்:
செங்குன்றம் அருகே உள்ள பாயசம்பாக்கம், கிராண்ட்லைன் கன்னியம்மன்கோவில் தெருவில் கொரட்டூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான பிளீச்சிங் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை 6.30 மணி அளவில் தொழிற்சாலையில் திடீரென வெள்ளை புகையுடன் வாயு கசிவு ஏற்பட்டது. பாதையே தெரியாத அளவுக்கு வெண்புகை அப்பகுதி முழுவதும் பரவியது. இதனால் சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகள் பீதி அடைந்தனர்.
வாயு கசிவு ஏற்பட்டதால் கண் எரிச்சல் ஏற்பட்டதுடன் மூச்சு திணறலும் உண்டானது. சாலையில் நடந்து சென்றவர்களும் இதேபோல் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் செங்குன்றம், மாதவரம், அம்பத்தூர், மணலி ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். ஆம்புலன்ஸ் வாகனங்களும் விரைந்தன. விளாங்காடுபாக்கம் கல்மேடு ஆஸ்பத்திரி அருகிலும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
தீயணைப்பு வீரர்கள் புகை மற்றும் வாயு கசிவை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் ரசாயன புகை என்பதால் அதனை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. மதியம் 12 மணி வரை தொழிற்சாலையில் இருந்து வெள்ளைநிற புகையுடன் ரசாயன வாயு தொடர்ந்து வெளியேறிய படி இருந்தது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. ரசாயன வாயு வெளியேறிய இந்த பிளீச்சிங் பவுடர் தயாரிக்கும் கம்பெனியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் தொழிற்சாலையில் இருந்த ரசாயன பொருட்களை மண்ணில் புதைக்கும் படி கூறியதாக தெரிகிறது.
ஆனால் அந்த ரசாயன பொருட்கள் தொழிற்சாலையில் திறந்த வெளியில் சிதறி கிடந்து உள்ளன. இன்று அதிகாலை பலத்த மழை பெய்தபோது தண்ணீர் அந்த ரசாயன பொருட்கள் மீது பட்டதால் இந்த வெண்புகையுடன் வாயு கசிந்து இருப்பது தெரியவந்து உள்ளது. மேலும் தொழிற்சாலையில் ரசாயன கசிவால் வெப்பம் தாங்காமல் சில பொருட்கள் வெடித்தன.
இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் ரசாயனம் கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து புகை வெளியேறுவதை கட்டுப்படுத்தினர். மீதம் உள்ள ராசாயன பொருட்களை மண்ணில் புதைத்து வருகின்றனர்.
ரசாயன புகை வெளியேறியதால் தொழிற்சாலை அருகில் உள்ள பகுதியில் வசிக்கும் கர்ப்பிணி பெண்களை ஆம்புலன்சு மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று மே தினத்தையொட்டி தொழிற்சாலைக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இன்று காலை தொழிலாளர்கள் வருவதற்கு முன்பே ரசாயன வாயு வெளியேறிதால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.
இதுகுறித்து செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.
- திருத்தேரின் சக்கரத்தில் உப்பு, மிளகு போட்டு கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி கோஷமிட்டு வழிபட்டனர்.
- வருகிற 4-ந் தேதி தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
திருவள்ளூரில் உள்ள வைத்திய ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது. இந்த கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி தினந்தோறும் காலையும், மாலையும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. 60 அடி உயரமும், 21 அடி அகலமும் கொண்ட திருத்தேரில் காலை 5 மணிக்கு உற்சவர் ஸ்ரீ வீரராகவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளினார்.
இதனைத்தொடர்ந்து 7.30 மணிக்கு திருத்தேர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் தேரடியில் இருந்து புறப்பட்டு பனகல் தெரு, குளக்கரை சாலை, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு வழியாக தேர் மீண்டும் தேரடியை வந்தடைந்தது.
இதில் திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் வேண்டுதலை நிறைவேற்ற திருத்தேரின் சக்கரத்தில் உப்பு, மிளகு போட்டு கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி கோஷமிட்டு வழிபட்டனர். வருகிற 4-ந் தேதி காலை 10 மணிக்கு கோவில் திருகுளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
தேரோட்ட விழாவையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கமலஹாசன், அந்தோணி ஸ்டாலின் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- உடனடியாக அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
- பென்னாலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூனிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 33). போலீஸ்காரரான இவர் ஊத்துக்கோட்டையில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் எழுத்தாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மதியழகி. இவர்களுக்கு தனுஸ்ரீ, மிதுனா என்ற 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் வீட்டில் இருந்த போலீஸ்காரர் ஏகாம்பரத்துக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே போலீஸ்காரர் ஏகாம்பரம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் மாரடைப்பால் இறந்து இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். இதனை கேட்டு அவரது மனைவி கதறி துடித்தார்.
33 வயதான போலீஸ்காரர் மாரடைப்பால் இறந்து போன சம்பவம் உடன் பணியாற்றும் மற்ற போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பென்னாலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது.
- கடந்த ஜனவரி மாதம் பூண்டி ஏரியில் போதுமான தண்ணீர் இருப்பு இருந்ததால் கிருஷ்ணா நதிநீரை பெறவில்லை.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்துவிடப்படுவது வழக்கம்.
கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் படி ஆந்திரா அரசு வருடம் தோறும் தமிழகத்திற்கு 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி. எம். சி. தண்ணீரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.
கடந்த ஜனவரி மாதம் பூண்டி ஏரியில் போதுமான தண்ணீர் இருப்பு இருந்ததால் கிருஷ்ணா நதிநீரை பெறவில்லை. இந்த நிலையில் தற்போது பூண்டி ஏரியில் நீர் இருப்பு வெகுவாக குறைந்தது. ஏரியில் மொத்தம் 1 டி.எம்.சி(மொத்த கொள்ளளவு3.2டி.எம்.சி) தண்ணீர் மட்டுமே உள்ளது. மேலும் கோடை வெயில் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளிலும் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும் படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர். இதனை ஏற்று கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு நேற்று காலை தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
இந்தத் தண்ணீர் நாளை இரவு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைய வாய்ப்பு உள்ளது. கிருஷ்ணா தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு இன்று காலை தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 250 கன அடி வீதம் திறந்து விடப்படுகிறது. இதனால் பூண்டி ஏரியில் கூடுதல் தண்ணீரை சேமித்து வைக்க முடியும்.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியில் 1068 மி.கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.
பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 15 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.






