என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆன்லைன் வர்த்தகம்-தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1¼ கோடி மோசடி; டாக்டர் தம்பதி கைது
- டாக்டர் தம்பதி குமரபிரபு- மகாலட்சுமி இருவரும் அக்குபஞ்ச்சர் மருத்துவம் பார்ப்பதுடன் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் தீபாவளி சீட்டும் நடத்தி வந்தனர்.
- 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர்:
மதுரை மாவட்டம் பசுமலை பகுதியைச் சேர்ந்தவர் குமரபிரபு. இவரது மனைவி மகாலட்சுமி. இருவரும் அக்குபஞ்ச்சர் டாக்டர்கள். இவர்கள் வாரத்திற்கு ஒரு முறை குன்றத்தூர் பகுதிக்கு வந்து அங்கு சிகிச்சை அளிப்பது வழக்கம்.
குன்றத்தூரில் உள்ள அவர்களது அக்குபஞ்ச்சர் மையத்தில் ஆவடி காவலர் குடியிருப்பில் வசித்து வரும் போலீஸ்காரர் தினேஷ்குமாரின் மனைவி சர்மிளா வேலை பார்த்து வந்தார்.
டாக்டர் தம்பதி குமரபிரபு- மகாலட்சுமி இருவரும் அக்குபஞ்ச்சர் மருத்துவம் பார்ப்பதுடன் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் தீபாவளி சீட்டும் நடத்தி வந்தனர். இதற்கு போலீஸ்காரர் மனைவி சர்மிளாவும் உடந்தையாக இருந்தார்.
இதில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் பணம் கட்டி இருந்தனர். ஆனால் அவர்களுக்கு கூறியபடி பணத்தை திருப்பி கொடுக்க வில்லை என்று தெரிகிறது. இதுபற்றி டாக்டர் தம்பதிகளிடம் கேட்டபோது உரிய பதில் கூறவில்லை.
இந்த நிலையில் பணம் கட்டி ஏமாந்த பொன்னேரி அருகே உள்ள தேவம்பட்டு கிராமத்தை சேர்ந்த சவுமியா உள்ளிட்ட ஏராளமானோர் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாணிடம் புகார் மனு அளித்தனர்.
இது தொடர்பாக மாவட்ட குற்றப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கந்தன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சின்னதுரை, சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் டாக்டர் தம்பதி குமரபிரபு- மகாலட்சுமி ஆன்லைன் வர்த்தகம், சீட்டுபணம், தீபாவளி சீட்டு என ரூ.1¼ கோடி வரை மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் மதுரைக்கு விரைந்து சென்று மோசடியில் ஈடுபட்ட குமரபிரபு, அவரது மனைவி மகாலட்சுமி ஆகிய இருவரையும் கைது செய்த னர். அவர்களுக்கு உடந்தையாக இருந்த போலீஸ்காரர் மனைவி சர்மிளாவையும் பிடித்தனர். அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






