என் மலர்
திருவள்ளூர்
- அரிசி ஆலை அருகில் உள்ள சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்த போது அங்குவந்த மர்ம கும்பல் லாரியை வழிமறித்து நிறுத்தினர்.
- இளவரசன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் பத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன்.லாரி டிரைவர். இவர் நேற்று இரவு பனப்பாக்கம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து 23 டன் நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு திருவள்ளூர் தனியார் அரிசி ஆலைக்கு லாரியை ஓட்டிச்சென்றார்.
அரிசி ஆலை அருகில் உள்ள சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்த போது அங்குவந்த மர்ம கும்பல் லாரியை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் டிரைவர் ஆனந்தனை தாக்கி கத்தி முனையில் மிரட்டி ரூ.5 ஆயிரத்தை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டது, வள்ளுவர்புரத்தைச் சேர்ந்த இளவரசன், ஈக்காடு பகுதியைச் சேர்ந்த யுவராஜ், வீரராகவபுரம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பது தெரிந்தது.
இதையடுத்து இளவரசன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு கிருஷ்ணா கால்வாயில் அதிகஅளவு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
- தண்ணீரின் வேகத்தில் இமானுவேல் இழுத்து செல்லப்பட்டார்.
பெரியபாளையம்:
வெங்கல் அருகே உள்ள பட்டாபிராம் அடுத்த தண்டுரை பகுதியை சேர்ந்தவர் இமானுவேல் (வயது18). இவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வருகிறார்.
தற்போது பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு கிருஷ்ணா கால்வாயில் அதிகஅளவு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை இமானுவேல், தனது நண்பர்களுடன் புழல் ஏரிக்கு செல்லும் கிருஷ்ணா கால்வாயில் இறங்கி குளித்தார்.
அப்போது தண்ணீரின் வேகத்தில் இமானுவேல் இழுத்து செல்லப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
இதுகுறித்து வெங்கல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் திருவூர் பகுதியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிருஷ்ணா கால்வாயில் மூழ்கிய மாணவர் இமானுவேலை தேடினர். இரவு வரை தேடியும் அவரை மீட்க முடியவில்லை.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக இமானுவேலை தேடும் பணி நடந்தது. அப்போது அதே பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் இமானுவேல் உடல் மீட்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது.
- கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதை தொடர்ந்து பூண்டி ஏரிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்து உள்ளது.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்மட்டம் குறைந்து வந்ததை தொடர்ந்து கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கடந்த 1-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த தண்ணீர் கடந்த 3-ந்தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக் குப்பம் ஜீரோ பாயின்டிற்கும், நேற்று காலை பூண்டி ஏரிக்கும் வந்தடைந்தது.
கண்டலேறு அணையில் இருந்து முதலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது நீர் திறப்பு 2 ஆயிரத்து 450 அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே கடந்த பருவ மழையின் போது ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்துக்கு கால்வாய் கரைகள் சேதம் அடைந்தன. இந்தக் கரைகளில் சீரமைப்புபணிகள் நடைபெற்றதால் கிருஷ்ணா நீரை அருகே உள்ள கண்ணன் கோட்டை ஏரிக்கு திருப்பிவிட்டு இருந்தனர்.
இதனால் கண்ணன்கோட்டை ஏரியில் நீர்மட்டம் முழு கொள்ளளவான 500 மில்லியன் கன அடியை எட்டியது. இதன் காரணமாக கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று மதியம் பூண்டி ஏரிக்கு சென்றடைந்தது.
கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதை தொடர்ந்து பூண்டி ஏரிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டிக்கு நீர்வரத்து 320 கனஅடி ஆக உயர்ந்து உள்ளது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலைநிலவரப்படி நீர்மட்டம் 26.12 அடியாக பதிவானது. 1.007 டி. எம். சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக 13 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- திருவள்ளூர் மாவட்டத்தில் நீர் நிலைகளை தூர்வாரி கூடுதல் தண்ணீரை சேமித்து வைக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
- ஏரிகளை தூர்வாரும் பணியை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்க்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் நீர் நிலைகளை தூர்வாரி கூடுதல் தண்ணீரை சேமித்து வைக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது கோடைக்காலம் தொடங்கி வெயில் வாட்டி வரும் நிலையில் ஏரி, குளங்களில் நீர் இருப்பு குறைந்து வருகிறது.
இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மேல்நல்லாத்தூர் ஏரி, நுங்கம்பாக்கம் ஏரி உள்ளிட்ட ஏரிகளை தூர்வாரி, புனரமைப்பு செய்யும் பணியை தொடங்க தனியார் தொண்டு நிறுவனம் முன்வந்து உள்ளது.
ஏரிகளை தூர்வாரும் பணியை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்க்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேல்நல்லாத்தூர், நுங்கம்பாக்கம் ஏரிகளை தூர்வாரி புனரமைப்பதன் மூலம் கூடுதல் தண்ணீரை சேமிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
- இப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமத்தில் கூட்டுறவு கடன் சங்க கட்டிடம் எதிரே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு இன்று விடியற்காலை சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் நோக்கிச் சென்ற லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த டிராக்டர் மற்றும் மினி வேன், கார் ஆகியவற்றின் மீது கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து பயங்கரமாக மோதியது.
இவ்விபத்தால் வாகனங்கள் சேதமடைந்தன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், இந்த விபத்தால் சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. தகவல் அறிந்த பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கிரேன் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு இடுப்பாடுகளை சீர் செய்து வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். இந்த விபத்தின் காரணமாக இப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- விளாபாக்கம் கண்டிகையை சுற்றி விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது.
- டீக்கடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணி வரை செயல்பட்டு வருகிறது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த தாமரைப்பாக்கம் அருகே செங்குன்றம்- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் விளாபாக்கம் கண்டிகை பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் சுதாகர். இவர் தந்தை காலத்தில் இருந்து இந்த டீக்கடையை நடத்தி வருகின்றார்.
விளாபாக்கம் கண்டிகையை சுற்றி விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தினக்கூலி 100 முதல் 200 ரூபாய் வரை கிடைக்கிறது.
இதனால் ஒரு டீ 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்கப்படுவதால் அதை வாங்கி அருந்துவதற்கு விவசாயிகள் ஒரு சிலர் யோசிக்கிறார்கள். இதனால் விவசாயிகளுக்கு குறைந்த செலவில் டீ வழங்கும் எண்ணத்தில் அவரது தந்தை காலத்தில் இருந்து குறைந்த விலைக்கு டீ விற்பனை செய்யப்படுகிறது. தனது தந்தை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் டீ வழங்கி வந்ததால் அதே வழியில் தானும் மிகவும் குறைவாக 5 ரூபாய்க்கு டீ வழங்கி வருவதாக சுதாகர் தெரிவித்தார்.
இந்த டீக்கடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணி வரை செயல்பட்டு வருகிறது. மேலும் ஏராளமான சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் தனது கடைக்கு டீ குடிக்க வருவதால் அன்றாட வருமானமும் பாதிப்பில்லாமல் கிடைப்பதாக தெரிவித்தார்.
மேலும் விவசாயிகளுக்கு 5 ரூபாய்க்கு டீ வழங்குவதால் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது என்றார்.
- பக்தர்கள் முருகனை தரிசித்துவிட்டு காணிக்கை செலுத்திவிட்டு செல்கின்றனர்.
- 6 கிலோ 252 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக கிடைத்ததாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
திருத்தணி:
திருத்தணி முருகன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். அதே போல் கிருத்திகை நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வருகை தந்து முருகனை தரிசித்துவிட்டு காணிக்கை செலுத்திவிட்டு செல்கின்றனர்.
திருத்தணி முருகன் கோவில் மலைக்கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் கோயில் ஊழியர்களின் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அதன்படி கடந்த 22 நாட்களில் 70 லட்சத்து 77 ஆயிரத்து 595 ரூபாய் பணம் வசூலாகி உள்ளது. மேலும் 466 கிராம் தங்கம், 6 கிலோ 252 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக கிடைத்ததாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
- கடந்த ஜனவரி மாதம் பூண்டி ஏரியில் போதுமான தண்ணீர் இருப்பு இருந்ததால் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் பெறவில்லை.
- கிருஷ்ணா நதி கால்வாய் தமிழகத்தில் 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாய்கிறது.
ஊத்துக்கோட்டை:
பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகை ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.507 டி.எம்.சி. ஆகும். இதில் பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்துவிடப்படுவது வழக்கம்.
இத்திட்டத்தின்படி ஆந்திரா அரசு வருடம்தோறும் தமிழகத்திற்கு 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.
கடந்த ஜனவரி மாதம் பூண்டி ஏரியில் போதுமான தண்ணீர் இருப்பு இருந்ததால் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் பெறவில்லை. இந்த நிலையில் தற்போது வாட்டி எடுத்து வரும் கோடை வெயில் காரணமாக ஏரிகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்ட வேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அரசு ஆந்திர அரசை கேட்டுக்கொண்டது.
அதன்பேரில் கடந்த 1-ந்தேதி கண்டலேறு பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் 152 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து 3-ந் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டிற்கு வந்தடைந்தது. வினாடிக்கு 20 கன அடி வீதம் வந்து கொண்டு இருந்தது.
கிருஷ்ணா நதி கால்வாய் தமிழகத்தில் 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாய்கிறது. கடந்த காலங்களில் பலத்த மழைக்கு ஜீரோ பாயிண்டில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் கரைகள் சேதம் அடைந்தன. இந்தக் கரைகள் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பூண்டி ஏரிக்கு அனுப்பி வைத்தால் கரைகள் சீரமைப்பு பணிகள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளதை கருத்தில் கொண்டு ஜீரோ பாயிண்ட்டுக்கு வந்து கொண்டிருக்கும் கிருஷ்ணா நீரை ஊத்துக்கோட்டை அருகே ஜங்காளபள்ளியில் உள்ள மதகுகள் வழியாக கண்ணன் கோட்டை நீர்த்தேக்கத்திற்கு திருப்பி விடப்பட்டது.
இதனால் கண்ணன்கோட்டை நீர் தேக்கத்தில் நீர்மட்டம் உயர்ந்து நேற்று முழு கொள்ளளவான 500 மில்லியன் கன அடியை எட்டியது. இதன் காரணமாக கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து ஜீரோ பாயிண்டில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று காலை சென்னை பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 26.07 அடியாக பதிவாகியது. 999 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வினாடிக்கு 170 கன அடி வீதம் வந்து கொண்டு இருக்கிறது. சென்னையில் குடிநீர் தேவைக்காக 2 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 13 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- உற்சவருக்கு பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- ஆரணி ஸ்ரீ ஆதிலட்சுமி சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் நரசிம்ம ஜெயந்தி திருவிழா நடைபெற்றது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 30-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி விழா நடைபெற்றது.
நகரத்தார் சிறுவாபுரி பாதயாத்திரை சங்கத்தினர் இங்குள்ள அவர்களுக்கு சொந்தமான அன்னதான மண்டப வளாகத்தில் இருந்து பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளுடன், விரதம் இருந்த பக்தர்கள் பால்குடங்களை ஏந்தியவண்ணம் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர், மூலவருக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதன் பின்னர், உற்சவருக்கு பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதன் பின்னர், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் பிரகார புறப்பாடு நடைபெற்றது.

உற்சவர் பிரகார புறப்பாடு
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோவிலின் செயல் அலுவலர் எஸ்.செந்தில்குமார் தலைமையில் நகரத்தார் சிறுவாபுரி பாதயாத்திரை சங்கத்தின் நிர்வாகிகளும், விழா குழுவினரும் செய்திருந்தனர். மதியம் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி ஸ்ரீ ஆதிலட்சுமி சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி மற்றும் நரசிம்ம ஜெயந்தி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதை முன்னிட்டு இன்று காலை பெருமாளுக்கு விசேஷ அலங்காரம், திருமஞ்சனம், லட்சுமி நரசிம்மருக்கு திருமஞ்சனம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதன் பின்னர், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அனைத்து பக்தர்களுக்கும் தீர்த்தம், பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சத்யநாராயண பூஜை நடைபெற்றது. பின்னர், கருட வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு ஊராட்சி, அகரம் கிராமத்தில் உள்ள வில்லியர் காலனியில் பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் விரதமிருந்து பால்குடம் சுமந்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பின்னர்,
சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மதியம் கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் பால்ராஜ் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் ரோஜா மற்றும் தேவன் ஆகியோர் முன்னிலையில் கிராமப் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
- புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் பிர சித்தி பெற்ற மிகவும் பழமையான ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.
ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் தர்மகர்த்தா பூவை எம். ஞானம் தலைமையில் கும்பாபிஷேக விழா குழு அமைக்கப்பட்டு கோவில் முழுமையாக புதுப் பிக்கப் பட்டது. இதையடுத்து கோவில் வளாகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு கடந்த 1-ந்தேதி கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் விழா தொடங்கியது.
2-ம் நாள் யாகசாலை பூஜையில் திசா ஹோமம், மூர்த்தி ஹோமம், வாஸ்து சாந்தி, கிராம சாந்தி , எந்திர பூஜைகள் நடைபெற்றன. 3-ம் நாள் பூஜையில் லட்சுமி சஹஸ்ரநாமம் பாராயணம், மந்திர வேள்வி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜை கள் நடைபெற்றன.
நான்காம் நாள் நேற்று சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, கணபதி பூஜை, நான்கு கால பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதனை தொடர்ந்து இன்று காலை சிறப்பு பூஜை கள் செய்யப்பட்டு கலசங்களில் கொண்டுவரப்பட்ட புனித நீர் ஊத்துக்கோட்டு எல்லையம்மன் கோயில் கோபுர கலசத்தின் மீது ஊற்றி சிவாச்சாரியார் களால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபி ஷேகத்தை கண்டுகளித்து தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மாலை அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தாவும், முன்னாள் நகர்மன்ற தலைவருமான பூவை எம்.ஞானம், நிர்மலா ஞானம் மற்றும் குடும்பத் தினர் செய்திருந்தனர்.
- நிகழ்ச்சியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கந்தன், இதயகுமார் ஆகியோருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
- ராமு, செந்தூர் முருகன் டிரேடர்ஸ் உரிமையாளர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் இணைக்கப்பட்ட திருவேங்கடபுரம், வேம்பாக்கம், தடப்பெரும்பாக்கம் சுற்று வட்டார வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி திருவேங்கடபுரம் சங்க அலுவலகத்தில் சங்க தலைவர் ஆர்.சுரேஷ்குமார் தலைமையில் தங்கராஜ், நாகராஜ், ரமேஷ், பிரதாப் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. சங்க செயலாளர் செல்ல துரை அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கந்தன், இதயகுமார் ஆகியோருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட தலைவர் டி.நந்தன், அமைப்பு செயலாளர் எஸ். வி. முருகன், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் விக்னேஷ், உதயன், பாலச்சந்தர், மகேந்திரன், வழக்கறிஞர் சதீஷ் சரண் குமார், ராமு, செந்தூர் முருகன் டிரேடர்ஸ் உரிமையாளர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பலத்த காயம் அடைந்த கலைவாணனுக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் காந்தி புரத்தைச் சேர்ந்தவர் பரசுராமன். இவரது மனைவி இந்திரா. இவர் திருவள்ளூர் நகராட்சி 16-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். இவரது மகன் கலைவாணன். இவர் தி.மு.க.வில் நகர மாணவரணி துணை அமைப்பாளராக உள்ளார். மேலும் சாமியானா பந்தல், சமையல் பாத்திரங்களை வாடகைக்கு கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை கலைவாணன் வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல் திடீரென அவரை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த கலைவாணனுக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






