search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வரத்து 320 கனஅடியாக அதிகரிப்பு
    X

    பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வரத்து 320 கனஅடியாக அதிகரிப்பு

    • சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது.
    • கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதை தொடர்ந்து பூண்டி ஏரிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்து உள்ளது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்மட்டம் குறைந்து வந்ததை தொடர்ந்து கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கடந்த 1-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் கடந்த 3-ந்தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக் குப்பம் ஜீரோ பாயின்டிற்கும், நேற்று காலை பூண்டி ஏரிக்கும் வந்தடைந்தது.

    கண்டலேறு அணையில் இருந்து முதலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது நீர் திறப்பு 2 ஆயிரத்து 450 அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே கடந்த பருவ மழையின் போது ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்துக்கு கால்வாய் கரைகள் சேதம் அடைந்தன. இந்தக் கரைகளில் சீரமைப்புபணிகள் நடைபெற்றதால் கிருஷ்ணா நீரை அருகே உள்ள கண்ணன் கோட்டை ஏரிக்கு திருப்பிவிட்டு இருந்தனர்.

    இதனால் கண்ணன்கோட்டை ஏரியில் நீர்மட்டம் முழு கொள்ளளவான 500 மில்லியன் கன அடியை எட்டியது. இதன் காரணமாக கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று மதியம் பூண்டி ஏரிக்கு சென்றடைந்தது.

    கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதை தொடர்ந்து பூண்டி ஏரிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டிக்கு நீர்வரத்து 320 கனஅடி ஆக உயர்ந்து உள்ளது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலைநிலவரப்படி நீர்மட்டம் 26.12 அடியாக பதிவானது. 1.007 டி. எம். சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக 13 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    Next Story
    ×