என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது.
    • கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி கடந்த 1-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி எரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி கடந்த 1-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி எரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கன அடி விதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 4-ம் தேதி பூண்டி ஏரி சென்றடைந்தது. முதலில் வினாடிக்கு 20 கன அடி வீதம் வந்து சேர்ந்தது. தற்போது கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 2 ஆயிரத்து 450 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    இந்தத் தண்ணீர் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 320 கன அடி வீதம் வந்து கொண்டு இருக்கிறது. வரும் நாட்களில் கிருஷ்ணா நீரின் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 26.18 அடியாக பதிவானது. 1.008 டி.எம். சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் மூலம் 250 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக 13 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • குட்கா கடத்தலில் ஈடுபட்ட சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • கைதான சுரேசிடம் இருந்து ரூ.50ஆயிரம் ரொக்கம், 2 மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

    போரூர்:

    கோயம்பேடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் குட்கா சப்ளை நடப்பதாக துணை கமிஷனர் குமாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கோபால் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    கோயம்பேடு நூறடி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அவ்வழியே வந்த சரக்கு வேன் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஏராளமான குட்கா மூட்டைகள் இருந்தன.

    இதையடுத்து குட்கா கடத்தலில் ஈடுபட்ட சுரேஷ் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் படி அப்பகுதியில் உள்ள ஒரு குடோனில் சோதனை நடத்தினர். அங்கு மூட்டை, மூட்டையாக குட்கா, புகையிலை பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் ஒரு டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் கைதான சுரேசிடம் இருந்து ரூ.50ஆயிரம் ரொக்கம், 2 மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் பெங்களூரில் இருந்து பார்சல் சர்வீஸ் மூலம் குட்கா, புகையிலை பொருட்களை வரவழைத்து அதனை மாங்காட்டில் உள்ள குடோனில் பதுக்கி வைத்து சென்னை முழுவதும் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்து வருவது விசாரணையில் தெரிய வந்தது. குட்கா கடத்தல், விற்பனையில் ஈடுபட்டு வரும் கும்பல் குறித்து அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    • திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் பஸ் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • பலியான 2 பேரின் உடல்களும் சாலையின் நடுவே கிடந்ததால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருத்தணி:

    திண்டிவனம் அடுத்த அன்டபட்டு கிராமத்தை சேர்ந்த சீதாராமன் (வயது20), நாராயணன் (45) உள்பட 37 பேர் குழுவாக கடந்த வெள்ளிக்கிழமை திருப்பதி கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

    அவர்கள் நேற்று இரவு 11 மணி அளவில் திருத்தணி அடுத்த பொன்பாடி பகுதியில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்ற பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி சீதாராமன், நாராயணன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். மேலும் உடன் சென்ற பக்தர்கள் முகேஷ் கண்ணன், வடிவேல் அழகன் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைகாக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    பலியான 2 பேரின் உடல்களும் சாலையின் நடுவே கிடந்ததால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. உடல்களை போலீசார் மீட்ட பின்னரே போக்குவரத்து சீரானது.

    விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் பார்த்து உடன் வந்த மற்ற பக்தர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்து. திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் பஸ் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 4-ந்தேதி கலைவாணன், வீட்டில் இருந்து வெளியே வந்தபோது மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியா வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.
    • திருவள்ளூர் காந்திபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ், சந்தோஷ், சந்துரு என்கிற சந்திரசேகர், மற்றும் ஒரு சிறுவன் உள்பட மொத்தம் 4 பேரை கைது செய்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் காந்தி புரத்தைச் சேர்ந்தவர் பரசுராமன். இவரது மனைவி இந்திரா. இவர் திருவள்ளூர் நகராட்சி 16-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார்.

    இவரது மகன் கலைவாணன். இவர் தி.மு.க.வில் நகர மாணவரணி துணை அமைப்பாளராக உள்ளார். கடந்த 4-ந்தேதி கலைவாணன், வீட்டில் இருந்து வெளியே வந்தபோது மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியா வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த கலைவாணனுக்கு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேளாங்கண்ணியில் பதுங்கி இருந்த திருவள்ளூர் காந்திபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ், சந்தோஷ், சந்துரு என்கிற சந்திரசேகர், மற்றும் ஒரு சிறுவன் உள்பட மொத்தம் 4 பேரை கைது செய்தனர்.

    • பாலத்தின் நடுவே உடைப்பு ஏற்பட்டு அடித்துச் செல்லப்பட்டதால் அங்கு சாலை துண்டானது.
    • நெடியம் கிராமத்தில் இருந்து சொரக்காய் பேட்டை கிராமத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    பள்ளிப்பட்டு:

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று கனமழை பெய்யத் தொடங்கியது. பயங்கர இடி, மின்னலுடன் விடிய, விடிய மழை பெய்ததால் ஆந்திர மாநிலத்தில் உள்ள லவா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பள்ளிப்பட்டு அருகே இருக்கும் சானா குப்பம் கிராமத்தில் லவா ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தால் சிதைந்து போனது.

    பாலத்தின் நடுவே உடைப்பு ஏற்பட்டு அடித்துச் செல்லப்பட்டதால் அங்கு சாலை துண்டானது. இதனால் கிராமங்கள் துண்டிக்கப்பட்டு கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக பள்ளிப்பட்டுக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டு அந்த கிராமம் தீவு போல் மாறியது.

    மேலும் பள்ளிப்பட்டு வடக்கு பகுதியில் இருக்கும் ஆந்திர மாநிலம் புல்லூர் காட்டுப்பகுதியில் இருந்து உற்பத்தியாகும் லவா ஆறும், பள்ளிப்பட்டுக்கு மேற்கு பகுதியில் அம்மபள்ளி என்ற இடத்தில் இருந்து உற்பத்தியாகும் குசா ஆறும் பள்ளிப்பட்டு - சோளிங்கர் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே ஒன்றாகி கொசஸ்தலை ஆறாக பாய்கிறது.

    இந்த ஆற்றில் லவா ஆற்றில் இருந்து வந்த காட்டாற்று வெள்ளம் கலந்ததால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கிராம பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக சென்று இந்த வெள்ளப்பெருக்கை பார்த்து வியந்தனர்.

    இந்த திடீர் வெள்ளப்பெருக்கால் கொசஸ்தலை ஆற்றில் நெடியம் அருகே கடந்த மழை வெள்ளத்தில் சேதம் அடைந்த தரைப்பாலம் மேலும் சேதமடைந்து பாலத்தின் மீது வெள்ளம் ஓடியது.

    இதனால் நெடியம் கிராமத்தில் இருந்து சொரக்காய் பேட்டை கிராமத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மழை காலத்தில் சேதம் அடைந்த இந்தப் பாலத்தை அதிகாரிகள் இது நாள் வரை சீர்செய்யாமல் மண்ணைக் கொட்டி அதை தற்காலிகமாக சீர்செய்து இருந்ததால், தற்போது பெய்த கன மழையில் அந்த பாலம் மேலும் சேதம் அடைந்துள்ளது.

    • கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் பங்கேற்கவில்லை.
    • துறை அதிகாரிகளுக்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே கடிதம் அனுப்பியும் பங்கேற்கவில்லை என குற்றச்சாட்டு

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது. 20 ஒன்றிய குழு உறுப்பினர்களையும், 2 மாவட்ட குழு உறுப்பினர்களையும் உள்ளடக்கியது எல்லாபுரம் ஒன்றிய குழு ஆகும். இந்நிலையில், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது, குறைகளை அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டி நிவர்த்தி செய்வது என்பது உள்ளாட்சி அமைப்பைச் சேர்ந்த இவர்களது பணி ஆகும்.

    அந்த வகையில் 60 நாட்களுக்கு ஒரு முறை இவர்கள் ஒன்று கூடி விவாதம் மேற்கொள்வது வழக்கம். இவ்வாறு நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு சாதாரண ஒன்றிய குழு கூட்டம் என்பர். இக்கூட்டத்தில் பங்கேற்க வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, மின்வாரியத் துறை, வேளாண்மை துறை, காவல்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட 19 துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். இதற்கான கடிதத்தை ஒரு வாரத்திற்கு முன்னதாகவே வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் அடிப்படையில் கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கூறும் குறைகளை தங்களது துறையின் மூலம் தீர்த்து வைப்பர்.

    கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஒன்றிய குழு கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் பங்கேற்கவில்லை. இதனால் ஒன்றிய குழு உறுப்பினர்கள் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்க வேண்டும் என்று பல கூட்டங்களில் வலியுறுத்தி வந்தனர். இது குறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தி அனைவரும் கூட்டத்தில் கலந்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்வதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூறி வந்தனர்.

    இந்நிலையில், இன்று மதியம் ஒன்றிய குழு கூட்டம் மன்ற வளாகத்தில் ஒன்றிய குழு பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. துணை பெருந்தலைவர் வக்கீல் கே.சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் சுபதாஸ் அனைவரையும் வரவேற்று மன்ற பொருட்களை வாசிக்கலாமா? என்று கேட்டார். அப்போது ஒன்றிய குழு உறுப்பினர்கள் அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாமக கட்சிகளைச் சேர்ந்தவர்களான குழந்தைவேலு, சரவணன், தட்சிணாமூர்த்தி, குணசேகரன், சுரேஷ், ரவி, வித்யாலட்சுமி, ஜெயலட்சுமி, லதா, தனலட்சுமி, ஜமுனா, திருமலை, கல்பனா, புஷ்பா ஆகியோர் எந்தெந்த துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர் என்பதை முதலில் தெரியப்படுத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

    குறிப்பாக வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வந்துள்ளார்களா? என கேட்டனர். ஆனால், போக்குவரத்து துறை, வேளாண்மை துறை, கல்வித்துறை ஆகியவற்றை தவிர மற்றவர்கள் யாரும்? பங்கேற்கவில்லை என கூறினர். அப்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே கடிதம் அனுப்பியும் பங்கேற்கவில்லை. இது தொடர்கதையாக உள்ளது. எனவே, இது கண்டிக்கத்தக்க செயல் என்று கூறி கோஷம் எழுப்பினர். ஒன்றிய பெருந்தலைவர், துணைப் பெருந்தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் உறுப்பினர்களை அமைதிகாக்கும்படி கேட்டுக்கொண்டனர். கலெக்டரிடம் கூறி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அனைவரும் அடுத்த கூட்டத்தில் பங்கேற்பார்கள் என உறுதி கூறினர்.

    ஆனால், இதனை ஏற்காத ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தக் கூடாது, கூட்டத்தை ஒட்டு மொத்தமாக நாங்கள் அனைவரும் புறக்கணிக்கிறோம், அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்கும் வகையில் ஒரு தேதியை குறிப்பிட்டு கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்று கூறி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர், அனைத்து ஒன்றிய குழு உறுப்பினர்களும் அமைதியாக கலைந்து சென்றனர். இப்பிரச்சனையால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

    • தெர்மாகோல் அட்டையை எடுப்பதற்காக தண்ணீருக்குள் சென்றதாக கூறப்படுகிறது.
    • மாணவன் மரணம் குறித்து மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அருகே உள்ள நாலூரை சேர்ந்தவர் அருள்நீதி. இவரது மகன் பிரேம்(12), அங்குள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்தான். இந்நிலையில் பிரேம் இன்று தனது நண்பர்களுடன் நாலூர் இந்துஜா நகர் அருகே உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளான். அப்பொழுது தான் வைத்திருந்த தெர்மாகோல் அட்டையை எடுப்பதற்காக தண்ணீருக்குள் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஆழத்தில் சிக்கி தண்ணீரில் மூழ்கியுள்ளான்.

    உடன் இருந்த நண்பர்கள் தனது நண்பனை காணவில்லை என நீருக்குள் மூழ்கி தேடி சிறுவனை கரைக்கு கொண்டு வந்துள்ளனர். பின்னர் உடனடியாக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பரிசோதித்தபோது மாணவன் பிரேம் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் ஏரியில் குளிக்கும்போது இறந்த செய்தி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சோழவரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றனர்.
    • அசம்பாவிதத்தை தடுக்க நெடுவரம்பாக்கம் கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    பொன்னேரி:

    சோழவரம் அருகே உள்ள நெடுவரம்பாக்கத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது30). தனியார் பள்ளி யில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இவரது தம்பி இளங்கோ வன். இவர் நெடுவரம் பாக்கம் ஊராட்சி துணைத் தலைவராக உள்ளார். அண்ணன்-தம்பி இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

    அதே பகுதியில் உள்ள வாலிபர்கள் சிலருக்கு இடையே நேற்று மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட னர்.

    இந்த மோதல் தொடர்பாக ஒரு தரப்பினருக்கு ஆதரவாக ஊராட்சி துணைத்தலைவர் இளங்கோவன், அவரது அண்ணன் லட்சுமணன் ஆகியோர் நேற்று இரவு சோழவரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றனர்.

    பின்னர் அண்ணன்-தம்பி இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

    நெடுவரம்பாக்கம் காலனி அருகே வயல்வெளி பகுதியில் வந்து கொண்டு இருந்தபோது கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மர்ம கும்பல் வழிமறித்தனர்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த லட்சுமணனும், இளங்கோவனும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் அவர்களை சுற்றி வளைத்து மர்ம கும்பல் சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்தில் பலத்த வெட்டுக் காயம் அடைந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    கொலை வெறி கும்பலிடம் இருந்து தப்பிக்க இளங்கோவன் ஓட்டம் பிடித்தார். ஆனால் அவரையும் ஓட, ஓட விரட்டி வெட்டினர். இதில் இளங்கோவனின் இரண்டு கைகளும் துண்டாகி தொங்கியது. மேலும் கழுத்து, தலையிலும் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.

    இதற்கிடையே அலறல் சத்தம் கேட்டு கிராமமக்கள் திரண்டு வந்ததும் கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய ஊராட்சி துணைத்தலைவர் இளங்கோவனை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான அவரது அண்ணன் லட்சுமணன் உடல் பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    கொலையாளிகள் யார்? என்று உடனடியாக தெரியவில்லை. கொலையாளிகளை படிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது. இதனால் அசம்பாவிதத்தை தடுக்க நெடுவரம்பாக்கம் கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    கொலையுண்ட லட்சுமணனுக்கு பவித்ரா என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கணவர் கொலையுண்டது பற்றி அறிந்ததும் பவித்ரா கதறி துடித்தது காண்போரை கலங்க வைத்தது.

    நெடுவரம்பாக்கம் காலனியில் உள்ள அம்பேத்கர் சிலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடைக்கப்பட்டது. இது தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்து இருந்தனர். இது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தாக தெரிகிறது.

    போலீசில் காட்டிக் கொடுத்துவிட்டதாக ஒரு தரப்பினரை எதிர்தரப்பினர் குற்றம்சாட்டி தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளனர்.

    இதன் தொடர்ச்சியாக நேற்றும் இருதரப்பினருக்கும் இடையே அடிதடி மோதல் ஏற்பட்டது. இது குறித்து போலீசில் புகார் தெரிவித்து விட்டு வந்து போதுதான் ஊராட்சி துணைத்தலைவர் இளங்கோவன், அவரது அண்ணன் லட்சுமணன் ஆகியோரை மர்ம கும்பல் வழிமறித்து வெட்டினர். இதில் லட்சுமணன் இறந்து போனார்.

    புகார் தெரிவித்ததும் சில போலீசார் நெடுவரம்பாக்கம் கிராமத்துக்கு வந்து விசாரித்து உள்ளனர். கொலை நடந்த போது போலீசார் அந்த கிராமத்தில் இருந்ததாக தெரிகிறது.

    ஆனால் புகார் தெரிவிக்க சென்ற அண்ணன்-தம்பி இருவரும் தாமதமாக மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். இதனை நோட்ட மிட்ட மர்ம கும்பல் ஒருவரை வெட்டி கொலை செய்துவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கல்வி ஒன்றே மனிதனை உயர்ந்த நிலைக்கு கொண்டு வரும் என்பதனை எடுத்துக்கூறினர்.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளும், விழா குழுவினர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 1962 முதல் 2023-ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடும் சங்கமம் திருவிழா நிகழ்ச்சி நேற்று மாலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு,பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளரும், பள்ளியின் தலைமை ஆசிரியருமான சு.சம்பத் தலைமை தாங்கினார். பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். அனைவரையும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஐ.ஏழுமலை வரவேற்றார். இதில்,எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினரும்,பிரிதிக்ஷா கல்வி குழுமத்தைச் சேர்ந்த பி.ஜே.மூர்த்தி,தணிகை ரியல் எஸ்டேட் அதிபர் எம்.ஆர்.தென்னரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு முன்னாள் மாணவர்களுக்கு சால்வை அணிவித்து,நினைவுப் பரிசை வழங்கி சிறப்புரை ஆற்றி பேசினர்.

    இதில், எல்லாபுரம் ஒன்றிய முன்னாள் துணைப் பெருந்தலைவர் ஏ.வி.ராமமூர்த்தி, கும்மிடிப்பூண்டி சப்-ரிஜிஸ்டார் எஸ்.ஏ.சீனிவாசன், எல்லாபுரம் ஒன்றிய துணை பெருந்தலைவர் வக்கீல் கே.சுரேஷ், ஊத்துக்கோட்டை வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆ.சீனிவாசன், வட்டாட்சியர் கே.நடராஜன், ஊத்துக்கோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மு.தமிழ்ச்செல்வன், பெரியபாளையம் வியாபாரிகள் சங்கத் தலைவர் பா.தனசேகர், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் பி.என்.ரவிச்சந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இ.ராஜா, எல்லாபுரம் வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் வி.மூர்த்தி,தலைமை ஆசிரியர்கள் பி.ஹேமலதா,பி.சகிலா, ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி வெஸ்லி, ரிட்டையர்டு அக்ரி ஏசுபாதம், பேன்சி ஸ்டோர் சூரியபிரகாஷ்,நேதாஜி மக்கள்மன்ற நிறுவனத் தலைவர் தேவராஜ்,பவுன் புரோக்கர் சுரேந்திரன், வக்கீல் ஆர்.எல்.சுரேஷ், முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு இப்பள்ளியின் சிறப்புகள் குறித்தும், பள்ளியின் மாணவப்பருவம் குறித்தும் தங்களது அனுபவங்களை எடுத்துக்கூறி கல்வி ஒன்றே மனிதனை உயர்ந்த நிலைக்கு கொண்டு வரும் என்பதனை எடுத்துக்கூறினர்.

    மேலும், பள்ளியின் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்ய உள்ளதையும், ரூ.10 லட்சம் செலவில் சுற்று சுவர் கட்ட உள்ளதையும், மாணவர்களின் படிப்புக்கும், முன்னேற்றத்திற்கும் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய உள்ளதையும் எடுத்துக் கூறினர்.

    முன்னதாக பள்ளி மாணவர்களின் பரதநாட்டியம்,தம்பாட்டம், கோவலன் கண்ணகி காவியம், சிலம்பம், கராத்தே உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முடிவில், பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத்தலைவர் எல்.சினு, துணைச் செயலாளர் ஏ.ராஜமுகமது, துணைச்செயலாளர் எல்.கீதாவேலு ஆகியோர் நன்றி கூறினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளும், விழா குழுவினர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

    • கால்தவறி அவர் மாடியிலேயே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த புவனேஸ்வரி பரிதாபமாக இறந்தார்.
    • பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருநின்றவூர்:

    ஆவடி, காமராஜர் நகர், முத்துக்குமரன் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி புவனேஸ் வரி (வயது35). இவர்களது வீட்டின் அருகே உள்ள தென்னை மரத்தில் காய்ந்த ஓலை தொங்கியது. இதனை அகற்ற நினைத்த புவேனஸ்வரி வீட்டின் மாடியில் நின்றபடி தென்னை ஓலையை இழுத்தார்.

    அப்போது கால்தவறி அவர் மாடியிலேயே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த புவனேஸ்வரி பரிதாபமாக இறந்தார்.

    • தேர்வு தோல்வியால் பிளஸ்-2மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருநின்றவூர்:

    ஆவடி, கோவர்த்தனகிரி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்.தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவரது மகன் தேவா(வயது17). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அவர் நடந்து முடிந்த பிளஸ்-2 தேர்வை சரியாக எழுதவில்லை. இதுபற்றி அவர் பெற்றோரிடம் கூறிவந்தார். அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது. அப்போது தேவா தமிழ் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடத்தில் தோல்வி அடைந்து இருந்தார். அவர் தமிழ், கம்ப்யூட்டர் அப்ளிகேசனில் குறைந்த மதிப்பெண்ணும் பெற்று இருந்ததாக தெரிகிறது.

    இதனால் மாணவர் தேவா மிகவும் மனவேதனை அடைந்தார். அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி அடுத்த தேர்வில் பரீட்சை எழுதி கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.

    எனினும் தேர்வு தோல்வியால் மிகுந்த மனவேதனையில் இருந்த தேவா வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது பெற்றோர் கதறி துடித்தனர்.

    தேர்வு தோல்வியால் பிளஸ்-2மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • படகு சவாரி முடித்து கரைக்கு திரும்பியவுடன் அவர்களுக்கு சுவையான உணவு வழங்குகிறார்கள்.
    • ஏரியை ஆண்டுக்கு ஒருமுறை தூர்வாராவிட்டால் ஏரி முற்றிலும் அழிந்து விடும் என்று மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    சென்னை:

    சென்னையை அடுத்த பழவேற்காட்டில் புலிகாட் ஏரி உள்ளது. இந்த ஏரி 15367 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. அதில் 300 ஹெக்டேர் தமிழ்நாட்டிலும், மீதமுள்ள பகுதிகள் ஆந்திராவிலும் உள்ளது.

    இந்த ஏரியை சுற்றியுள்ள 13 கிராமங்களில் சுமார் 20 ஆயிரம் மீனவர்கள் உள்ளனர். நகர்ப்புற பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் மற்றும் குப்பைகளால் இந்த ஏரியின் பரப்பளவு பாதியாக குறைந்து விட்டது.இதனால் இந்த ஏரியில் தற்போது மீன் பிடிப்பதும் குறைந்துவிட்டது. இங்குள்ள மீனவர்கள் கடலுக்கு சென்றாலும் அதிக அளவில் மீன்கள் சிக்குவதில்லை.

    எனவே இங்குள்ள மீனவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காகவும், குடும்பத்தை நடத்துவதற்காகவும் இந்த ஏரியை சுற்றுலா பகுதியாக மாற்றி வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக படகு சவாரி அழைத்து செல்கிறார்கள். 2 மணி நேர படகு சவாரிக்கு ரூ.1500 வரை கட்டணம் வசூலிக்கிறார்கள்.

    படகு சவாரி முடித்து கரைக்கு திரும்பியவுடன் அவர்களுக்கு சுவையான உணவு வழங்குகிறார்கள். சுற்றுலா பயணிகள் இரவில் கடற்கரை பகுதியில் தங்குவதற்கும் ஏற்பாடு செய்கிறார்கள். இதற்காக தார்ப்பாய் மூலம் கூடாரம் அமைத்து கொடுக்கிறார்கள்.

    மேலும் இங்கு குளிர் காய நெருப்பு மூட்டியும் கொடுக்கிறார்கள். இதற்கு குறிப்பிட்ட கட்டணம் என்பதில்லை. பேரம் பேசி பணம் கொடுக்கலாம். சுற்றுலா பயணிகளும் இதை அற்புதமான அனுபவமாக உணருகிறார்கள்.

    மேலும் இந்த ஏரியின் அழகை படம்பிடிக்க விரும்பும் புகைப்பட கலைஞர்களும் இங்கு படகில் சென்று ஏரியின் அழகை படம் பிடிக்கிறார்கள்.

    இந்த ஏரியின் முகத்துவாரத்தை தூர்வார தமிழக அரசு சிறிதளவு நிதி ஒதுக்கி உள்ள நிலையில், ஆந்திர அரசு ரூ.128 கோடி செலவில் தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து ஏரியை தூர்வார திட்டமிட்டு உள்ளது. இங்கு தமிழகம் தரப்பில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த ரூ.3.5 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஏரியில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மீன் பிடித்தபோது மீனவர்கள் ரூ.1 லட்சம் வரை சம்பாதித்தார்கள். இப்போது ரூ.10 ஆயிரம் கிடைத்தாலே பெரிய விஷயம் என்கிறார்கள். இதனாலேயே மீனவர்கள் சுற்றுலா பயணிகள் மூலம் சம்பாதிக்க தொடங்கி உள்ளனர்.

    இந்த ஏரியை ஆண்டுக்கு ஒருமுறை தூர்வாராவிட்டால் ஏரி முற்றிலும் அழிந்து விடும் என்று மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    ×