என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • கிராம நிர்வாக அலுவலர் ரகுவரன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதன் தொடர்ச்சியாக கிராமநிர்வாக அலுவலர் ரகுவரனுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
    • மோசடி தொடர்பாக ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

    திருத்தணி:

    திருத்தணி அடுத்த அருங்குளம் ஊராட்சி தலைவராக இருப்பவர் சரண்யா. இவரது கணவர் முரளி. அ.தி.மு.க பிரமுகர்.

    ஊராட்சி கிராம நிர்வாக அலுவலராக (பொறுப்பு) ரகுவரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரை ஊராட்சி தலைவியின் கணவர் முரளி அடிக்கடி திட்டி பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. மே1-ந்தேதி நடந்த கிராமசபை கூட்டத்தில் முரளி தலையீடு இருந்ததாக தெரிகிறது.

    இதற்கு கிராம நிர்வாக அலுவலர் ரகுவரன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதன் தொடர்ச்சியாக கிராமநிர்வாக அலுவலர் ரகுவரனுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ரகுவரன் திருவாலங்காடு போலீசில் புகார் செய்தார். மேலும் மோசடி புகாரும் கொடுத்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து ஊராட்சி தலைவி சரண்யாவின் கணவர் முரளியை போலீசார் கைது செய்தனர். மேலும் மோசடி தொடர்பாக ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போராட்டத்தில் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 20 அலுவலர்களும், ஊராட்சி செயலர்கள் 40 பேரும் பங்கேற்றனர்
    • கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கூறினர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில், எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது. இங்கு சுமார் 30 பேர் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக அலுவலர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த ஒன்றியத்தில் 53 ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சிகளில் 49 ஊராட்சி செயலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில், ஊராட்சி செயலர்களுக்கு பணி விதி வழங்கவேண்டும், கருவூலம் மூலம் ஊதியம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில், முதற்கட்டமாக இன்று நடைபெற்ற போராட்டத்தில் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 20 அலுவலர்களும், ஊராட்சி செயலர்களில் 40 பேரும் தற்செயல் விடுப்பு எடுத்து  கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் கூறினர்.

    இப்போராட்டத்தின் காரணமாக எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அலுவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இன்று நடைபெற்ற இப்போராட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் ந.பொன்னரசு தலைமையில் வட்ட கிளை தலைவர் சுபதாஸ், துணைத் தலைவர் குமரவேல், வட்ட கிளை செயலாளர்கள் வசந்தகுமார், சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • துண்டு பிரசுரங்களை விநியோகித்து போராட்டத்தில் ஈடுபடுவதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வந்தனர்.
    • நிலுவையில் உள்ள இறப்பு சான்று குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கண்டலம் ஊராட்சியில் கிராம நிர்வாக அதிகாரியாக கிருஷ்ணகுமார் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் சிலருக்கு இறப்பு சான்று தராமல் நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்துள்ளாராம். பட்டா கேட்டு மனு செய்தால் பெல்ட் ஏரியா என்று கூறி அதனையும் நிலுவையில் வைத்து விடுகின்றாராம்.

    இவ்வாறு இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் வைத்தனர். இந்நிலையில், இவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் சார்பாக ஊராட்சி மன்ற தலைவர் மதன் சத்யராஜ் புகார் மனு அனுப்பி இருந்தார். இருப்பினும், நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே, திருக்கண்டலம் ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அதிகாரியின் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை காலை பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டத் துணைத் தலைவரும், ஒன்றிய குழு உறுப்பினருமான பி.ரவி தலைமையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்,டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் கிராம நலச்சங்கம், சுமை தாங்கி தொழிலாளர்கள் சங்கம், மகளிர் சுய உதவி குழுக்கள், கிராம பொதுமக்கள் நாளை காலை போராட்டம் செய்ய முடிவு செய்திருந்தனர். இதற்காக துண்டு பிரசுரங்களை விநியோகித்து போராட்டத்தில் ஈடுபடுவதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில், இன்று காலை ஊத்துக்கோட்டை தாசில்தார் வசந்தி உத்தரவின் பேரில் துணை தாசில்தார் டில்லி ராணி, வருவாய் அலுவலர் சரவணன், கிராம நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார் ஆகியோர் திருக்கண்டலம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்துக்கு வந்தனர். இதனை அறிந்த ஏராளமான பொதுமக்கள் வருவாய்த்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் விரைந்து வந்தனர். பொது மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

    இதில், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள இறப்பு சான்று குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும், பெல்ட் ஏரியாவில் பட்டா கேட்டவர்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும், நாள்தோறும் கிராம நிர்வாக அதிகாரி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் அலுவலகத்துக்கு வருவார் என்று துணை தாசில்தார் டில்லி ராணி உறுதி கூறினார். இதனை பொதுமக்கள் ஏற்றுக் கொண்டு நன்றி கூறினார். இதனால் நாளை நடைபெற இருந்த போராட்டத்தை பொதுமக்கள் தற்காலிகமாக விலக்கிக் கொள்வதாக ஒப்புக் கொண்டனர். இதன் பின்னர், அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இப்பிரச்சினையால் சுமார் இரண்டு மணி நேரம் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • திருப்பணிகள் நடைபெற்றபோது கொடி மரங்களில் விரிசல் இருந்ததை கண்டுபிடித்தனர்.
    • கொடி மரங்கள் பிரதிஷ்டைக்கு பிறகு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பஜார் வீதியில் புகழ்பெற்ற ஸ்ரீ ராமலிங்க சாமுண்டேஸ்வரி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் சாமுண்டேஸ்வரி அம்மனுக்கு எதிரும், வள்ளி, தெய்வானை, சுப்ரமணிய சுவாமிக்கு எதிரும் என ஒரு கோவிலுக்குள் இரண்டு கொடி மரங்கள் உள்ளது என்பதே சிறப்பு ஆகும். பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் சாமுண்டேஸ்வரி அம்மனுக்கு எதிரே 1938-ம் ஆண்டு கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. வள்ளி, தெய்வானை, சுப்ரமணிய சுவாமிக்கு எதிரே 1968-ம் ஆண்டு கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது ஆகும்.

    இந்நிலையில், இக்கோவிலின் கோபுரங்கள் மற்றும் வாகனங்கள் பழுது பார்த்து வர்ணம் பூசி திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது இந்த கொடி மரங்களில் விரிசல் இருந்ததை கண்டுபிடித்தனர். எனவே, ஸ்ரீராமலிங்க சாமுண்டேஸ்வரி திருக்கோவிலின் நிர்வாக குழுவினர் மாசர்ல ஹேமபூசனம் தலைமையில் கொடி மரங்கள் இரண்டையும் மாற்றி புதியதாக பிரதிஷ்டை செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டனர். நேற்று காலை 10 மணிக்கு 85 ஆண்டுகளுக்குப் பின்னர் சாமுண்டேஸ்வரி அம்மனுக்கு எதிரிலும், 55 ஆண்டுகளுக்குப் பின்னர் வள்ளி, தெய்வானை, சுப்ரமணிய சுவாமிக்கு எதிரிலும் இரண்டு புதிய கொடி மரங்கள் திருக்கோவிலின் அர்ச்சகர்கள் சுப்ரமணிய குருக்கள், நடராஜ குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் பிரதிஷ்டை செய்தனர்.

    இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு கோவில் வளாகத்தில் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாசர்ல ஹேமபூசனம், புவனகிரி வெங்கடேசன், கொல்லி கே.லீலாராம், முனி சந்திரய்யா, ஆண்டனி அசோக் மற்றும் திருக்கோவிலின் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.

    • வருகிற 16-ந்தேதி வரை இந்த உண்டு உறைவிட பள்ளியில் கோடை கால சிறப்பு முகாம் நடை பெற உள்ளது.
    • வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு நீங்கள் அனைவரும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

    திருவள்ளுர்:

    திருவள்ளுர் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 200 பழங்குடியின மாணவ-மாணவிகளின் தனித் திறமைகளை வெளிக்கொண்டு வந்து அவர்களுக்கு கல்வியின் மீது ஆர்வத்தை தூண்டும் வகையிலும், சுய சிந்தனையையும், தொலைநோக்கு பார்வையும் வளர்க்கும் விதமாக செயல்பட்டு வரும் 'சிறகுகள் 200' என்ற திட்டத்தின் மூலம் சிறப்பு முகாம் பூந்தமல்லியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் தொடங்கியது.

    அறிவியல், கணினி அறிவியல், நாடகக் கலை, நடனம், பாட்டு, தற்காப்பு கலை, குறும்படம், கைவினைப் பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்டவைகள் குறித்து சிறப்பு நிபுணர்கள் மூலம் வருகிற 16-ந்தேதி வரை இந்த உண்டு உறைவிட பள்ளியில் கோடை கால சிறப்பு முகாம் நடை பெற உள்ளது. இதை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடி, ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பேசியதாவது:-

    காலை முதல் உடற்பயிற்சி, கலை நிகழ்ச்சிகள், ஸ்போக்கன் இங்லீஸ் என நாள் முழுவதும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சிகள் நடைபெறும் நாட்களில் இடைப்பட்ட நாட்களில் நானும் இங்கு வந்து ஆய்வு செய்வேன். நேர்மையுடன் கடின உழைப்புடன் செயல்பட்டால் தோல்வி என்பது இல்லை. உங்கள் அனைவருக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு நீங்கள் அனைவரும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

    மாவட்ட கலெக்டர், காவல் கண்காணிப்பாளர் என பல உயர்ந்த பதவிகளில் நீங்கள் வர வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் ஆசிரியர்கள் உங்களை இப்பயிற்சிக்கு அழைத்து வந்துள்ளார்கள். எனவே, இந்த 7 நாட்கள் உங்கள் அனைவருக்கும் நல்ல ஒரு வாய்ப்பாக அமையும் என நம்புகிறேன்.

    ஏதேனும் தேவைகள் என்றால் பயிற்சி ஆட்சியர் வரும்போது அவர்களிடம் தெரிவிக்கலாம். 20-25 வருடங்கள் கழித்து இதுபோன்ற நிகழ்ச்சி நடைபெறும்போது இந்த பயிற்சி பற்றி நீங்களும் ஒரு உயர்ந்த நிலையில் இருந்து சொல்ல வேண்டும் என்பது தான் மாவட்ட கலெக்டராக என்னுடைய கருத்து, என்னுடைய ஆசை. மேலும், இப்பயிற்சியை முறையாக பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) கேத்தரின் சரண்யா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோ.சரஸ்வதி, மாவட்ட கல்வி அலுவலர் (திருவள்ளூர்) தேன்மொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தாக்குதலில் படுகாயம் அடைந்த சுரேஷ்குமாருக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து வினோத் குமார், பாபுலால் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.

    திருவொற்றியூர்:

    கொருக்குப்பேட்டை போஜராஜன் நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார். தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார்.

    இவருக்கும் தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த வினோத் குமார், பழைய வண்ணாரப்பேட்டை மன்னப்பன் தெருவை சேர்ந்த பாபுலால் ஆகியோருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் சுரேஷ்குமார் பென்சில் பேக்டரி ரெயில்வே கேட் அருகில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது வினோத்குமாரும், பாபு லாலும் மதுகுடிக்க பணம் கேட்டனர். ஆனால் சுரேஷ் குமார் பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

    எனினும் ஆத்திரத்தில் இருந்த வினோத்குமாரும், பாபுலாலும் சம்பவத்தன்று சுரேஷ்குமாரை மதுகுடிக்கலாம் என்று கூறி அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகில் சென்றனர். திடீரென அவர்கள் அருகில் கிடந்த கல்லால் சுரேஷ்குமாரை தாக்கினர்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கினார். உடனே வினோத்குமாரும், பாபு லாலும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    தாக்குதலில் படுகாயம் அடைந்த சுரேஷ்குமாருக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா வழக்குப்பதிவு செய்து வினோத் குமார், பாபுலால் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் 1015 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
    • செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மி.கனஅடியில் 2,613 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    இன்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 8 டி.எம்.சிக்கு கீழ் குறைந்து காணப்படுகிறது. ஏரிகளில் மொத்தம் 7,310 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 7,657 மி.கன அடி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    கிருஷ்ணா தண்ணீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 2,450 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு 310 கனஅடியாக வருகிறது.

    ஏற்கனவே பூண்டி ஏரியில் உள்ள தண்ணீர் புழல் ஏரிக்கு அனுப்பப்படுகிறது. எனவே பூண்டி ஏரியில் கூடுதலாக கிருஷ்ணா தண்ணீரை சேமித்து வைக்க முடியும். மேலும் கிருஷ்ணா நீர் தொடர்ந்து வரும் என்பதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் தண்ணீரை அனுப்பி சேமித்து வைக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    ஏற்கனவே புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் போதுமான தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீரை கொண்டு இந்த ஆண்டு முழுவதும் சென்னையில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் சப்ளை செய்யமுடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் 1015 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இங்கிருந்து புழல் ஏரிக்கு 300 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மி.கனஅடியில் 2,613 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. புழல் ஏரியில் 3,300 மி.கனஅடியில் 2,459 மி.கனஅடியும், சோழவரம் ஏரியில் 1,081 மி.கன அடியில் 62 கனஅடியும் தண்ணீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 468 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

    • விபத்து குறித்து திருவொற்றியூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • விபத்து ஏற்படும் பதைபதைக்கும் காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.

    திருவொற்றியூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரகு (வயது 19). இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக திருவொற்றியூர் பெரியார் நகரில் தங்கி எல்லையம்மன் கோவில் அருகே எலக்ட்ரானிக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு அவர் வீட்டில் இருந்து கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது முன்னால் மணலியில் இருந்து பிராட்வே நோக்கி சென்ற மாநகர பஸ்சை (56டி) இடது புறமாக முந்தி செல்ல முயன்றார். அப்போது சாலையோரத்தில் சென்ற சரக்கு ஏற்றி செல்லும் சைக்கிளின் மீது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் நிலை தடுமாறிய ரகு மோட்டார் சைக்கிளோடு சாலையில் விழுந்தார்.

    அப்போது பின்னால் வந்த மாநகர பஸ்சின் சக்கரத்தில் அவர் சிக்கிக்கொண்டார். இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து திருவொற்றியூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் விபத்து ஏற்படும் பதைபதைக்கும் காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ சமூகவலை தளத்தில் பரவி வருகிறது.

    • நகரின் சாலையோர கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற முடியாத நிலை உள்ளது.
    • கழிவுநீர் கால்வாயை சரியாக சுத்தம் செய்து பராமரிக்காத காரணத்தால் கால்வாய் நிறைந்து கழிவுநீர் தற்போது ரோட்டிலேயே குளமாக தேங்கி கிடக்கிறது.

    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்ட்டை சேர்ந்த பகுதி சரண்யா நகர். இங்கு சுமார் 40 குடியிருப்புகள் உள்ளன. இந்த நகரின் சாலையோர கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற முடியாத நிலை உள்ளது.

    கழிவுநீர் கால்வாயை சரியாக சுத்தம் செய்து பராமரிக்காத காரணத்தால் கால்வாய் நிறைந்து கழிவுநீர் தற்போது ரோட்டிலேயே குளமாக தேங்கி கிடக்கிறது.

    இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசு உற்பத்தி மையமாக இந்த பகுதி மாறி உள்ளது. எனவே குழந்தைகள் அதிகமாக உள்ள குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்காமல் பராமரிக்க பேரூராட்சி நிர்வாகம் முன் வரவேண்டும் என்பது இந்த பகுதி குடியிருப்புவாசிகளின் கோரிக்கையாக உள்ளது.

    • மாதம் ரூ.16000 சம்பளத்தில் பணிபுரிய 78 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
    • நிகழ்ச்சியில் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் ப. மரியதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி உலகநாத அரசினர் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் முதல் கட்ட பயிற்சிக்காக, வங்கி, நிதி, சேவைகள் மற்றும் காப்பீடு (BFSI) ஆகிய பாடங்களை கல்லூரியில் கணினி சாராத மூன்றாமாண்டு பயிலும் 122 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.

    அவர்களுக்கு செப்டம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை பயிற்சியளிக்கப்பட்டது. மாதிரி தேர்வு ஏப்ரல் 2023ல் நடத்தப்பட்டு (IIFL) சமஸ்தா, புளுசிப், பேங்க்பஸார் மற்றும் முத்தூட் நிதி நிறுவனங்களில் மாதம் ரூ.16000த்தில் பணிபுரிய 78 மாணவர்களுக்கு கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர் மா.திருச்சேரன் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகள் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் ப. மரியதாஸ், வணிக கூட்டுறவியல் தலைவர் தி.கிருபாநந்தன், பொருளியல் துறைத்தலைவர் முனைவர் பா.எழிலரசு, வரலாற்று துறைத்தலைவர் முனைவர் சு.ஜெகஜீவன்ராம், உடற்கல்வி இயக்குனர் முனைவர் சுருளி முருகாநந்தன் மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியை சண்முகப்பிரியா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியினை திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் மரிய இராயப்பன் ஏற்பாடு செய்திருந்தார்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • கொலைக்கான காரணம் என்ன? கூட்டாளிகள் யார்? யார்? என்று விசாரணை நடந்து வருகிறது.

    பொன்னேரி:

    சோழவரம் அருகே உள்ள நெடுவரம்பாக்கம் பெரிய காலணியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 32). இவரது தம்பி இளங்கோவன். தி.மு.க.வை சேர்ந்த இவர் ஊராட்சி துணைத்தலைவராக உள்ளார்.

    நேற்று முன்தினம் அப்பகுதியில் தேவாலயத்தில் நடந்த விழாவில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

    இது தொடர்பாக சகோதரர்கள் லட்சுமணன், இளங்கோவன் ஆகியோர் சோழவரம் போலீசில் புகார் அளித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தனர்.

    நெடுவரம்பாக்கம் காலனி அருகே வந்தபோது மர்மகும்பல் அவர்களை வழிமறித்து சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே லட்சுமணன் இறந்தார். அவரது தம்பி இளங்கோவனுக்கு பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவருக்கு சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 3 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் என்ன? கூட்டாளிகள் யார்? யார்? என்று விசாரணை நடந்து வருகிறது. கொலை தொடர்பாக மேலும் சிலரை தேடி வருகிறார்கள்.

    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணிநேரம் போராடி சிறுமிகள் கோமதி, ஹேமலதாவை பிணமாக மீட்டனர்.
    • திருத்தணி பெரியார் நகரில் உள்ள கல்குவாரி குட்டைகளில் மழை நீர் தேங்கி குளம்போல் காணப்படுகிறது.

    திருத்தணி:n

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சந்தை வாசல் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மனைவி மல்லிகா (வயது 65). இவரது உறவினரான திருத்தணி பெரியார் நகரில் வசித்து வந்த முதியவர் ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக இறந்து போனார். இவரது 30-வது நாள் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மல்லிகா மற்றும் அதே பகுதியை சேர்ந்த உறவினர்களான மாரிமுத்து மகள் கோமதி (14), விநாயகம் மகள் ஹேமலதா (15) ஆகியோர் திருத்தணிக்கு வந்தனர்.

    இவர்களில் கோமதி தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பும், ஹேமலதா 10-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை மல்லிகா, கோமதி, ஹேமலதா 3 பேரும் பெரியார் நகர் பகுதியில் உள்ள கல்குவாரி குட்டைக்கு குளிக்க சென்றனர். தற்போது அந்த குட்டையில் அதிக அளவு தண்ணீர் உள்ளது.

    குளித்து கொண்டு இருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்ற சிறுமிகள் கோமதியும், ஹேமலதாவும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மல்லிகா சிறுமிகள் 2 பேரையும் காப்பாற்றி முயன்றார். இதில் அவரும் தண்ணீரில் மூழ்கினார்.

    அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள நகராட்சி உரக்கிடங்கில் பணியாற்றி வரும் மணிகண்டன் மற்றும் தொழிலாளர்கள் மீட்க முயன்றனர். இதில் மல்லிகாவை மட்டும் பிணமாக மீட்டனர். சிறுமிகள் 2 பேரும் நீரில் மூழ்கி மாயமாகி விட்டனர்.

    இதுகுறித்து திருத்தணி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணிநேரம் போராடி சிறுமிகள் கோமதி, ஹேமலதாவை பிணமாக மீட்டனர்.

    பலியான சிறுமிகள் உள்பட 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகா, சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உறவினர் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சிறுமிகள் உள்பட 3 பேர் கல்குவாரி குட்டையில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருத்தணி பெரியார் நகரில் உள்ள கல்குவாரி குட்டைகளில் மழை நீர் தேங்கி குளம்போல் காணப்படுகிறது. இதில் அப்பகுதி மக்கள் குளிக்கும்போது அடிக்கடி அசம்பாவிதம் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க கல்குவாரி குட்டைகளை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×