search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எல்லாபுரம் ஒன்றிய குழு கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த உறுப்பினர்கள்

    • கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் பங்கேற்கவில்லை.
    • துறை அதிகாரிகளுக்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே கடிதம் அனுப்பியும் பங்கேற்கவில்லை என குற்றச்சாட்டு

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது. 20 ஒன்றிய குழு உறுப்பினர்களையும், 2 மாவட்ட குழு உறுப்பினர்களையும் உள்ளடக்கியது எல்லாபுரம் ஒன்றிய குழு ஆகும். இந்நிலையில், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது, குறைகளை அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டி நிவர்த்தி செய்வது என்பது உள்ளாட்சி அமைப்பைச் சேர்ந்த இவர்களது பணி ஆகும்.

    அந்த வகையில் 60 நாட்களுக்கு ஒரு முறை இவர்கள் ஒன்று கூடி விவாதம் மேற்கொள்வது வழக்கம். இவ்வாறு நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு சாதாரண ஒன்றிய குழு கூட்டம் என்பர். இக்கூட்டத்தில் பங்கேற்க வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, மின்வாரியத் துறை, வேளாண்மை துறை, காவல்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட 19 துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். இதற்கான கடிதத்தை ஒரு வாரத்திற்கு முன்னதாகவே வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் அடிப்படையில் கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கூறும் குறைகளை தங்களது துறையின் மூலம் தீர்த்து வைப்பர்.

    கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஒன்றிய குழு கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் பங்கேற்கவில்லை. இதனால் ஒன்றிய குழு உறுப்பினர்கள் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்க வேண்டும் என்று பல கூட்டங்களில் வலியுறுத்தி வந்தனர். இது குறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தி அனைவரும் கூட்டத்தில் கலந்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்வதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூறி வந்தனர்.

    இந்நிலையில், இன்று மதியம் ஒன்றிய குழு கூட்டம் மன்ற வளாகத்தில் ஒன்றிய குழு பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. துணை பெருந்தலைவர் வக்கீல் கே.சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் சுபதாஸ் அனைவரையும் வரவேற்று மன்ற பொருட்களை வாசிக்கலாமா? என்று கேட்டார். அப்போது ஒன்றிய குழு உறுப்பினர்கள் அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாமக கட்சிகளைச் சேர்ந்தவர்களான குழந்தைவேலு, சரவணன், தட்சிணாமூர்த்தி, குணசேகரன், சுரேஷ், ரவி, வித்யாலட்சுமி, ஜெயலட்சுமி, லதா, தனலட்சுமி, ஜமுனா, திருமலை, கல்பனா, புஷ்பா ஆகியோர் எந்தெந்த துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர் என்பதை முதலில் தெரியப்படுத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

    குறிப்பாக வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வந்துள்ளார்களா? என கேட்டனர். ஆனால், போக்குவரத்து துறை, வேளாண்மை துறை, கல்வித்துறை ஆகியவற்றை தவிர மற்றவர்கள் யாரும்? பங்கேற்கவில்லை என கூறினர். அப்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே கடிதம் அனுப்பியும் பங்கேற்கவில்லை. இது தொடர்கதையாக உள்ளது. எனவே, இது கண்டிக்கத்தக்க செயல் என்று கூறி கோஷம் எழுப்பினர். ஒன்றிய பெருந்தலைவர், துணைப் பெருந்தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் உறுப்பினர்களை அமைதிகாக்கும்படி கேட்டுக்கொண்டனர். கலெக்டரிடம் கூறி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அனைவரும் அடுத்த கூட்டத்தில் பங்கேற்பார்கள் என உறுதி கூறினர்.

    ஆனால், இதனை ஏற்காத ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தக் கூடாது, கூட்டத்தை ஒட்டு மொத்தமாக நாங்கள் அனைவரும் புறக்கணிக்கிறோம், அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்கும் வகையில் ஒரு தேதியை குறிப்பிட்டு கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்று கூறி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர், அனைத்து ஒன்றிய குழு உறுப்பினர்களும் அமைதியாக கலைந்து சென்றனர். இப்பிரச்சனையால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×