என் மலர்
திருப்பூர்
- வடகிழக்கு பருவமழையால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- வடகிழக்கு பருவமழையால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை வழியாக திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் கல்லாபுரம், ராமகுளம், கொமரலிங்கம், கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய 8 ராஜ வாய்க்கால்களுக்கு உட்பட்ட 7 ஆயிரத்து 520 ஏக்கர் நிலங்களுக்கு கடந்த ஜூன் மாதம் நீர் திறக்கப்பட்டு அக்டோபர் வரை நீர் வழங்கப்பட்டது. நடப்பாண்டு, தென் மேற்கு பருவ மழை ஏமாற்றியதால் அணைக்கு நீர்வரத்து பெருமளவு பாதித்தது. இதனால் வழக்கமாக ஆகஸ்டு- செப்டம்பர் மாதங்களில் மீதம் உள்ள நிலங்களுக்கு பாசனம், பழைய ராஜவாய்க்கால் பாசனத்தில் சம்பா நெல் சாகுபடிக்கு நீர் திறப்பது கேள்விக்குறியானது. இதனால் அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் தாராபுரம், கரூர், அரவக்குறிச்சி தாலுகாவில் அலங்கியம் முதல் கரூர் வரை 10 பழைய வாய்க்கால் பாசனத்துக்கு உட்பட்ட 21 ஆயிரத்து 867 ஏக்கர் நிலங்களுக்கு இரு முறை உயிர்த்தண்ணீர் மட்டும் வழங்கப்பட்டது.
புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவில் பயன்பெறும் 25 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்களுக்கும் உயிர்த்தண்ணீர் மட்டும் வழங்கப்பட்டது.இந்நிலையில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து கடந்த 15 நாட்களாக அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி அமராவதி அணையில் மொத்தம் உள்ள 90 அடியில், 74.12 அடி நீர்மட்டம் உள்ளது. மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கனஅடியில் 2,705.89 மில்லியன் கனஅடி நீர் இருப்பும், நீர்வரத்து வினாடிக்கு 709 கன அடியாக உள்ளது. அமராவதி பழைய ஆயக்கட்டு, ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு இரண்டாம் போகம் நெல் சாகுபடிக்கும், பழைய ஆயக்கட்டு வலது கரை கால்வாய்கள் பாசனம் மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களில், நெல், கரும்பு, வாழை, மஞ்சள் உள்ளிட்ட பயிர் சாகுபடிக்கு நீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழையால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போதைய நீர் இருப்பு எதிர்பார்க்கும் நீர்வரத்து அடிப்படையில் வாட்டர் பட்ஜெட் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அணையில் தற்போதைய நீர் இருப்பு மற்றும் எதிர்பார்க்கும் நீர்வரத்தை பொருத்தும், பாசன பகுதிகளிலும் பருவ மழை பெய்யும் போது நீர் தேவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வட கிழக்கு பருவ மழை காலத்தில் அணை நிரம்பி நீர் வீணாகாமல் முழுமையாக பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது. பழைய ஆயக்கட்டு ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு இரண்டாம் போகம் நெல் சாகுபடிக்கும், வலது கரை பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு நீர் வழங்குவதற்கான கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஒரு வாரத்தில் பாசனத்திற்கு நீர் திறக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
குன்னத்தூர்:
குன்னத்தூர் பகுதியில் நாளை (சனிக்கிழமை)மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே குன்னத்தூர், 16 வேலம்பாளையம், குறிச்சி பகுதிகளுக்குட்பட்ட குன்னத்தூர், ஆதியூர், தாளப்பதி, காவுத்தாம்பாளையம், வெள்ளிரவெளி, செம்மாண்டம்பாளையம், சின்னியம்பாளையம், கணபதிபாளையம், 16 வேலம்பாளையம், கருமஞ்செரை, நவக்காடு, செட்டிகுட்டை, குறிச்சி,தண்ணீர் பந்தல்பாளையம், கம்மாளகுட்டை, ஆயிகவுண்டம்பாளையம், சொக்கனூர் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படும். இத்தகவலை மின்சார வாரிய பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- பாதிக்கப்பட்ட விவசாயிகள் அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
- நிறுவனத்தின் சார்பில் மாதக்கணக்கில் பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூரை அடுத்த கொடுவாய் செங்காட்டுப்பாளையத்தில் தனியார் பால் பண்ணை நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் சார்பில் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள 450-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்து வந்தனர்.
இந்த நிலையில் தனியார் நிறுவனத்துக்கு பால் கொடுத்த விவசாயிகளுக்கு, அந்த நிறுவனத்தின் சார்பில் மாதக்கணக்கில் பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர். அதன்பிறகு பால் பண்ணையை மூடிவிட்டு அதன் உரிமையாளர்கள் தலைமறைவானார்கள்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். லட்சக்கணக்கில் மோசடி நடந்துள்ளதால் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்குமாறு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி மற்றும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் 450-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் ரூ.40 லட்சத்துக்கு மோசடி நடந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக தனியார் பால் பண்ணை உரிமையாளர்களான செங்காட்டுப்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார்(வயது 34), அவருடைய தம்பி சுந்தரமூர்த்தி(32), பண்ணை மேலாளரான இவர்களின் உறவினர் ஜெகதீஷ்(28) ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்களது சொந்த ஊர் திருச்சி மாவட்டம் துறையூராகும். மேலும் இதில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
- 13.5 கி.மீ., நீளத்துக்கு துணை கால்வாய் மற்றும் ஆற்றுக்குள் கட்டுமானம் (பண்ட் லைனிங்) ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
- சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் ஏற்படுத்த வேண்டியுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- திருப்பூர் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நொய்யல் கரை மேம்பாடு செய்யும் திட்டம் 160 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அணைமேடு பகுதியில் இருந்து மணியகாரம்பாளையம் பாலம் வரையிலான 6.5 கி.மீ., தூரத்துக்கு ஆற்றின் இரு கரைகளிலும் தார் ரோடு அமைக்கப்படுகிறது. இது தவிர கரையை பலப்படுத்தும் விதமாக கான்கிரீட் சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது. நொய்யலில் வந்து சேரும் கழிவு நீர் கால்வாய்கள், துணை கால்வாய் (பேபி கால்வாய்) மூலம் ஆங்காங்கே சேகரம் செய்து, பம்பிங் செய்யப்பட்டு, சுத்திகரிப்பு செய்து ஆற்றில் விடும் வகையில் திட்ட மிடப்பட்டுள்ளது. 6 இடங்களில் இம்மையம் அமைக்கப்படுகிறது. இதற்காக 13.5 கி.மீ., நீளத்துக்கு துணை கால்வாய் மற்றும் ஆற்றுக்குள் கட்டுமானம் (பண்ட் லைனிங்) ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் 20 சிறு பாலங்கள் அமைக்கப்படுகின்றன. இத்திட்டத்தில் ஏற்கனவே கரையோரம் பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கும் வகையில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. இருப்பினும் தார் ரோடு முன்னர் திட்டமிட்ட அகலம் 7 மீட்டர் தற்போது 10 மற்றும் 14 மீ., என மாற்றப்பட்டுள்ளது. அவ்வகையில் பொழுதுபோக்கு அம்சத்துக்கான நிதியாதாரம் தார் ரோடு பணிக்கு மாற்றப்பட்டு விட்டது.இருப்பினும் நொய்யல் கரையில் மரங்கள் நட்டு பராமரித்தல், பூங்கா அமைத்தல், நடைப் பயிற்சி மேடை, வாகன பார்க்கிங், கேண்டீன் உள்ளிட்ட சிறு கடைகள், அலங்கார விளக்குகள், ஓய்வு எடுக்க இருக்கை வசதிகள், ஆங்காங்கே நிழல் தரும் அலங்கார குடைகள்,
சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், ஆம்பி தியேட்டர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஏற்படுத்த வேண்டியுள்ளது. நொய்யல் ஆற்றின் கரையை மேம்படுத்தி திருப்பூர் மக்களின் சிறந்து பொழுது போக்கு இடமாக இதை மாற்ற வேண்டும் என்ற திட்டம் உள்ளது. தனியார் நிறுவனம் மூலம் இது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை பெறப்பட்டுள்ளது. கரையை மேம்படுத்தி அழகுபடுத்தும் விதமாக பகுதி வாரியாக மாதிரி வடிவங்கள் சிறப்பான முறையில் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் தனியார் அமைப்புகள், தொழில் துறையினர் உள்ளிட்டோர் பங்களிப்பை வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மேலும் ஒரு கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் இத்திட்டம் செயல்படுத்துவதற்கான இறுதி வடிவம் முடிவாகும்.இத்திட்டம் முழுமை பெறும் நிலையில், நொய்யல் கரை மேம்படுத்தும் மாநகராட்சி மக்களின் கனவு மிக விரைவில் நிறைவேறும். இந்த இடம் மாநகரில் மட்டுமின்றி மக்கள் மனதிலும் முக்கிய இடத்தை பெறும் என்பது உறுதி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முகாம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடை–பெற உள்–ளது.
- www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்,
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்க சிறப்பு கல்விக்கடன் முகாம் வருகிற 23-ந்தேதி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
மாவட்டத்தின் முன்னோடி வங்கியான கனரா வங்கி மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளின் சார்பில் இந்த முகாம் நடைபெற உள்ளது.
கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாம் நடைபெறும் நாளில் விண்ணப்பத்தின் நகல், மற்றும் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.
விண்ணப்ப நகல், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோரின் இரண்டு புதிய புகைப்படம், வங்கிக்கணக்கு புத்தக நகல், ஆண்டு வருமான சான்று நகல், சாதிச்சான்று நகல், பான் கார்டு நகல், ஆதார் கார்டு நகல், கல்விக்கட்டண விவரம், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருந்தால் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆவணம் போன்றவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும்.
இதில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் கலந்து கொண்டு மாணவர்களின் விண்ணப்பங்களை பெற்று கல்விக்கடன் வழங்க, மாவட்ட முன்னோடி வங்கி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உரிய சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு கல்விக்கடன் பெற்று பயன்பெறலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- ருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உட்பட 6 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
- தீபாவளி விடுமுறை முடிந்து நிறுவனங்கள் இயக்கத்துக்கு வருகின்றன.
திருப்பூர்:
திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உட்பட 6 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை தங்கள் சொந்த ஊரில் கொண்டாடுவதையே வெளி மாவட்ட மக்கள் விரும்புகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு கடந்த 10-ந்தேதியே புறப்பட்டு சென்றனர். பின்னலாடை நிறுவனங்களில் வழக்கம் போல் அவசரகதியில் முடிக்க வேண்டிய ஆர்டர்கள் இந்த முறை இல்லை. இயக்கம் சீராக இருப்பதால் நிறுவனங்களும் தாராளமாக, 10 நாட்கள் வரை விடுமுறை அளித்துள்ளன. வடமாநில தொழிலாளர்களும் சொந்த ஊர் சென்றுள்ளனர். இருப்பினும் தீபாவளி விடுமுறை முடிந்து நிறுவனங்கள் இயக்கத்துக்கு வருகின்றன. குறிப்பாக நிர்வாகம் மற்றும் அலுவலக பணியாளர்கள் பணிக்கு வரத்தொடங்கி உள்ளனர். கைவசம் உள்ள உள்ளூர் தொழிலாளர் மற்றும் வடமாநில தொழிலாளரை கொண்டு சில நாட்களுக்கு, வழக்கமான பணிகளை செய்ய நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளனர். விடுமுறையில் சென்றவர்கள் 18, 19 ஆகிய தேதிகளில் திருப்பூர் திரும்ப உள்ளனர். அதன்படி, வருகிற 20-ந்தேதி முதல் பின்னலாடை நிறுவனங்கள் இயல்பான இயக்கத்தை துவக்கும். ஜாப் ஒர்க் நிறுவனங்கள், அதற்கு பிறகே தங்கள் இயக்கத்தை தொடங்க முடிவு செய்து உள்ளனர்.
- பின்னலாடை தொழிலாளருக்கு 4 சதவீத சம்பள உயர்வு முழுமையாக வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- கூட்டுக்கமிட்டி சார்பில் அனைத்து தொழிலாளருக்கும், 4 சதவீத சம்பள உயர்வு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
திருப்பூர்:
தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு பிறகு, பின்னலாடை தொழிலாளருக்கு 4 சதவீத சம்பள உயர்வு முழுமையாக வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா), திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் (டீ), பின்னலாடை துணி உற்பத்தியாளர் சங்கம் (நிட்மா), திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா), தென்னிந்திய இறக்குமதி எந்திர துணி உற்பத்தியாளர் சங்கம்(சிம்கா), திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம் (டெக்மா) உள்ளிட்ட தொழில் அமைப்புகள் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப்., அண்ணா தொழிற்சங்கம், எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., எம்.எல்.எப்., பி.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்று, இவற்றின் பிரதிநிதிகள் சம்பள ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
கடந்த 2021 செப்டம்பர் மாதம் உருவான ஒப்பந்தப்படி, 2023 அக்டோபர் 1 முதல் நடைமுறை சம்பளத்தில் இருந்து 4 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும். அடிப்படை சம்பளம், பஞ்சப்படி, பயணப்படி மற்றும் 4 சதவீத சம்பள உயர்வுடன் புதிய சம்பளம் வழங்க வேண்டும். தொழிலாளர்களும் அந்தந்த நிறுவனங்களில் சம்பளத்தை கேட்டுப்பெற வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. தீபாவளி பண்டிகை ஆர்டர் ஓரளவுக்கு சாதகமாக இருந்தது. இருப்பினும் 10 நாட்கள் வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போனஸ் கணக்கீடு செய்வதற்காக புதிய சம்பள உயர்வு இடையில் வழங்கப்படாமல் இருந்தது. அதன்படி இவ்வாரத்தில் இருந்து புதிய சம்பள உயர்வை கணக்கிட்டு வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து சி.ஐ.டி.யு., பனியன் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சம்பத் கூறுகையில், தொழிற்சங்கம் இயங்கும் நிறுவனங்களில் ஒப்பந்தப்படி கடந்த மாதமே 4 சதவீத சம்பள உயர்வு கிடைத்துவிட்டது. பெரும்பாலான நிறுவனங்களில் தீபாவளிக்கு பிறகு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். எப்படியிருந்தாலும் ஒப்பந்தம் செய்தபடி 4 சதவீத சம்பள உயர்வு வழங்கியாக வேண்டும். எனவே கூட்டுக்கமிட்டி சார்பில் அனைத்து தொழிலாளருக்கும், 4 சதவீத சம்பள உயர்வு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சம்பள ஒப்பந்தப்படி கட்டிங், டெய்லர், அயர்ன், பேக்கிங், சிங்கர், நிட்டிங் மெஷின் தொழிலாளருக்கு ஷிப்டுக்கு 512.66 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும். செக்கிங் பணியாளருக்கு 391.08 ரூபாய், லேபிள் தொழிலாளிக்கு 375.89 ரூபாய், கை மடித்தல் பணிக்கு 371.95 ரூபாய், டேமேஜ் தொழிலாளிக்கு 343.67 ரூபாய், அடுக்கி கட்டும் தொழிலாளிக்கு 312.34 ரூபாய் அளவுக்கும், லோக்கல் மெஷின் பிரிவுக்கு 493.98 ரூபாயும் சம்பளம் வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
- பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட தேங்காய்களை தனது பற்களால் கடித்து உறித்தார்.
- பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டதோடு தங்கள் செல்போன்களில் படம் பிடித்து அந்த வடமாநில இளைஞரை பயபக்தியுடன் வழிபட்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொங்கலூர் ஊராட்சிக்குட்பட்ட அலகுமலை கோவில் பிரசித்தி பெற்ற முருகர் தலமாக இருந்து வருகிறது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. கந்த சஷ்டி விழாவின் நான்காம் நாளான நேற்று காரிய சித்தி ஆஞ்சநேயர் சந்நிதி முன்பு வட மாநில இளைஞர் ஒருவர் தரிசனம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருள் ஏற்பட்ட நிலையில் ஆஞ்சநேயர் போலவே பாவனை செய்து ஆஞ்சநேயர் சிலையிடம் இந்தியில் பேசியவாறு பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட தேங்காய்களை தனது பற்களால் கடித்து உறித்தார்.
அனுமன் போலவே பாவனை செய்து அவர் தேங்காய்களை பற்களால் உறித்ததை கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டதோடு தங்கள் செல்போன்களில் படம் பிடித்து அந்த வடமாநில இளைஞரை பயபக்தியுடன் வழிபட்டனர். சிறிது நேரத்திற்கு பின்பு அந்த இளைஞர் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு இயல்பு நிலைக்கு திரும்பினார். இதனால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆஞ்சநேயர் போலவே பாவனை செய்து தேங்காயை பற்களால் உறித்து வழிபட்ட பக்தர்.
- 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கட்டணமில்லா இலவச பேருந்தில் மகளிர் பயணம் செய்து வருகிறார்கள்.
- மூன்றாம் பாலினத்தவர்கள் 60 ஆயிரத்து 848 பேர் பயணம் செய்துள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தின் கீழ் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி படிக்கும் மாணவிகள் உள்ளிட்ட அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகர பஸ்களில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பயணம் செய்து வருகிறார்கள். அதன்படி மாவட்டத்தில் திருப்பூர் பணிமனை-1, பணிமனை-2, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை பணிமனைகளில் மொத்தம் 254 நகர பஸ்கள் இயக்கப்படுகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை முதல் கடந்த மாதம் வரை மாவட்டத்தில் 12 கோடியே 34 லட்சத்து 16 ஆயிரத்து 20 மகளிரும், 7 லட்சத்து 25 ஆயிரத்து 671 மாற்றுத்திறனாளிகளும், 43 ஆயிரத்து 591 மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள், 60 ஆயிரத்து 848 பேர்பயணம் செய்துள்ளனர்.மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 12 கோடியே 42 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இந்த பஸ் பயணத்தால் மகளிர் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- திருப்பூர் மாநகரம் இடுவாயில் பயிா் சாகுபடி, ராபி பருவத்துக்கான முதற்கட்ட தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
- வட்டார வேளாண்மை அலுவலா் சுகன்யா, அட்மா திட்ட உதவி வேளாண்மை அலுவலா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் , ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் குறித்து பேசினா்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரம் இடுவாயில், தேசிய உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து மிக்க சிறு தானியங்கள் திட்டத்தின் கீழ் பயிா் சாகுபடி, ராபி பருவத்துக்கான முதற்கட்ட தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. இதில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்ட ஆலோசகா் அரசப்பன், வட்டார உதவி வேளாண்மை உதவி இயக்குநா் அன்பழகி, வேளாண் விற்பனை-வணிக துறை வேளாண்மை அலுவலா் ரம்யா, வட்டார வேளாண்மை அலுவலா் சுகன்யா, அட்மா திட்ட உதவி வேளாண்மை அலுவலா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் வேளாண்மை திட்டங்கள் மற்றும் மானியங்கள், ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் குறித்து பேசினா். இதில் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
- திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
- மாவட்ட செயலாளா் ஆா்.சித்ரா, மாவட்ட பொருளாளா் சத்தியசீலன் மற்றும் மாவட்ட துணை செயலாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
திருப்பூர்:
திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:- 1999-ம் ஆண்டு வழங்கப்பட்டு, கடந்த 23 ஆண்டுகளாக பெற்று வந்த கருணை அடிப்படையிலான வாரிசுக்கு வேலை கடந்த மாா்ச் 8-ந்தேதி நிறுத்தப்பட்டதை திரும்ப வழங்க வேண்டும். 7-வது ஊதிய குழு மாற்றுத் திறனாளி கிராம உதவியாளா்களுக்கு வழங்கிய எரிபொருள் படி ரூ. 2 ஆயிரத்து 500-ஐ நிறுத்தம் செய்ததை திரும்ப வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கிராம நிா்வாக அலுவலா் பதவி உயா்வு என்பதை 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும். ஓட்டுநா் உரிமம் வைத்திருக்கும் கிராம ஊழியா்களுக்கு ஊா்தி ஓட்டுநா் பதவி உயா்வு வழங்க வேண்டும். காலியாக உள்ள கிராம ஊழியா்கள் பணியிடத்தை தோ்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும். அதில் குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு என நிா்ணயம் செய்ய வேண்டும். கடந்த ஜனவரியில் 2 ஆயிரத்து 748 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு, புதிதாக பணிக்கு வந்தவா்களுக்கு முறையாக சிபிஎஸ்., கணக்கு எண் வழங்கி ஊதியம் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா். அப்போது வருவாய் கிராம ஊழியா் சங்க மாவட்ட தலைவா் கே.நடராஜன், மாவட்ட செயலாளா் ஆா்.சித்ரா, மாவட்ட பொருளாளா் சத்தியசீலன் மற்றும் மாவட்ட துணை செயலாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
- பக்தர்கள் கடைகளில் துளசிமணிமாலை, வேட்டி, துண்டு மற்றும் பூஜை பொருட்களை நேற்று முதலே வாங்கினர்.
- இன்று முதல் மார்கழி 11-ந்தேதி வரை தினசரி காலை 5.30 மணிக்கு கோவிலில் நெய் அபிஷேகம் நடைபெற உள்ளது.
வெள்ளகோவில்:
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து வருடந்தோறும் செல்வது வழக்கம். குறிப்பாக மகர ஜோதிக்கு லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் செல்வார்கள். அதன்படி கார்த்திகை மாத பிறப்பான இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
இ்ன்று காலை திருப்பூரில் உள்ள அய்யப்பன் ேகாவில், ஈஸ்வரன் கோவில் மற்றும் பல்வேறு கோவில்களில் அதிகாலை முதல் அய்யப்ப பக்தர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் கடைகளில் துளசிமணி மாலை, வேட்டி, துண்டு மற்றும் பூஜை பொருட்களை நேற்று முதலே கடைகளில் வாங்கினர்.
விரதம் இருக்கும் அய்யப்பபக்தர்கள் அவரவர் வசதிக்கு தகுந்தவாறு ஒரு மண்டலம் (41 நாட்கள்), அரைமண்டலம் (21 நாட்கள்)விரதமும், இன்னும் சிலர் கார்த்திகை மாதம் முதல் தேதியில் இருந்து மகரஜோதி வரைக்கும் 2 மாதமும் விரதம் இருக்க தொடங்கி உள்ளனர். சபரிமலைக்கு செல்பவர்கள் கோவில்களில் குருசாமியின் மூலம் துளசிமணி மாலைகளை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர். இன்று முதல் தினமும் அதிகாலையிலும், மாலையிலும் இருவேளை குளித்து அருகாமையில் உள்ள கோவில்களுக்கு சென்று அய்யப்ப சரணகோஷமிட்டு வழிபடுவார்கள்.
இதேப்போல் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட உடுமலை, பல்லடம், காங்கயம், தாராபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ேகாவில்களில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
வெள்ளகோவில் தர்மசாஸ்தா அய்யப்பசாமி கோவிலில் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் குவிந்தனர். பின்னர் நீண்ட வரிசையில் நின்று ஒவ்வொருவராக மாலை அணிவித்துக் கொண்டனர். மண்டலகால பூஜையை முன்னிட்டு இன்று முதல் மார்கழி 11-ந்தேதி வரை தினசரி காலை 5.30 மணிக்கு தர்மசாஸ்தா அய்யப்பசாமி கோவிலில் நெய் அபிஷேகம் நடைபெற உள்ளது.
பக்தர்கள் மிகுந்த பயபக்தியுடன், சபரிமலை செல்வதற்காக விரதம் மேற்கொண்டு கருப்பு மற்றும் புளு கலரில் வேட்டி துண்டுகளை கட்டிக்கொண்டனர். மேலும் துளசி மற்றும் சந்தன மாலைகளை அணிந்து கொண்டனர். இக்கோவிலில் கார்த்திகை 1-ந்தேதியை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் பக்தர்களின் வருகை அதிகரித்த வண்ணம் காணப்பட்டது.






