என் மலர்
திருப்பூர்
- திருப்பூரில் இருந்து சிறப்பு பஸ் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- கந்தசஷ்டி விழா கடந்த 13ந் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது.
திருப்பூர் :
கந்த சஷ்டி, சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, திருச்செந்தூருக்கு தினசரி இரவு திருப்பூரில் இருந்து சிறப்பு பஸ் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில். இங்கு கந்தசஷ்டி விழா கடந்த 13ந் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. இன்று சூரசம்ஹாரமும், 21-ந்தேதி திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.
திருப்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் வசதிக்காக, சிறப்பு பஸ்கள் போக்குவரத்து கழகம் வாயிலாக இயக்கப்படுகிறது. தினமும் இரவு 7மணி முதல் 10 மணி வரை கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ் இயங்கும். தாராபுரம், ஒட்டன்சத்திரம், மதுரை, தூத்துக்குடி வழியாக திருச்செந்தூருக்கு இயக்கப்படும். பஸ்சில் பயணி ஒருவருக்கு 300 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 5 துணி ரோல்கள் வேண்டும் என்று பணியில் இருந்த ஊழியரிடம் கூறி உள்ளார் டிப் டாப் ஆசாமி.
- திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் துணி வாங்கிக் கொண்டு பணம் செலுத்தாமல் காரில் பறந்த டிப்டாப் ஆசாமி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் சிவன் தியேட்டர்- பிச்சம்பாளையம் ரோட்டில் பிரபல பாலியஸ்டர் துணி விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் துணி வாங்க வருவதால் எந்த நேரமும் பரபரப்பாகவே இருக்கும். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த நிறுவனத்திற்கு சுமார் 40 வயது மதிக்கத்தக்க டிப்டாப் ஆசாமி ஒருவர் துணி வாங்க சென்றுள்ளார்.
அவர் வழக்கம் போல எல்லா வாடிக்கையாளரையும் போன்று தனக்கு தேவையான துணிகளை பார்வையிட்டுள்ளார். பின்னர் 5 துணி ரோல்கள் வேண்டும் என்று அங்கு பணியில் இருந்த ஊழியரிடம் கூறி உள்ளார் அந்த டிப்டாப் ஆசாமி. இதைத் தொடர்ந்து தான் பணம் செலுத்திவிட்டு வருவதாகவும், அதற்குள் துணி ரோல்களை தனது காரில் ஏற்றுமாறும் அந்த ஆசாமி கூறி உள்ளார். இதை நம்பிய ஊழியர் அந்த துணிகளை அவருடைய காரில் ஏற்றி உள்ளார்.
ஆனால் அந்த டிப்டாப் ஆசாமி பணத்தை செலுத்தாமல் கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் ஏறி அங்கிருந்து சிட்டாக பறந்தார். அதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். இதுகுறித்து திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் துணிகளை வாங்கிக் கொண்டு, அதற்கான பணத்தை செலுத்தாமல் காரில் பறந்த டிப்டாப் ஆசாமியின் வீடியோ வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
- கோவையின் பல்வேறு இடங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கேரளா துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள் தனியார் கிளினிக் மற்றும் ஆஸ்பத்திரிகளில் சேர்ந்து சிகிச்சை பெற வாய்ப்பு உள்ளது.
கோவை:
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம், அய்யன்குளம் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக அதிரடிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 மாவோயிஸ்டுகள் பிடிபட்டனர். மற்றவர்கள் தப்பியோடி விட்டனர்.
தொடர்ந்து அதிரடிப்படை போலீசார் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருந்த இடத்தில் சோதனை செய்து பார்த்தனர். அப்போது 2 பேர் குண்டுகாயங்களுடன் தப்பிச்சென்றது தெரியவந்தது.
கேரளாவில் போலீசார் தேடுதல் வேட்டை அதிகரித்து உள்ளது. எனவே அவர்கள் எல்லையோர சோதனைச்சாவடி வழியாக தமிழகத்துக்குள் புகுந்து, இங்கு உள்ள ஏதேனும் ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வாய்ப்புகள் உள்ளன என்று தமிழக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இதையடுத்து தமிழகம்-கேரளாவில் உள்ள எல்லையோர சோதனைச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கேரள மாநிலத்தில் இருந்து வாளையார், வேலந்தாவளம், க.க.சாவடி வழியாக கோவை வரும் வாகனங்கள் மற்றும் கேரளாவில் இருந்து மீனாட்சிபுரம், கோபாலபுரம், நடுப்புணி வழியாக பொள்ளாச்சி வரும் வாகனங்கள் ஆகியவை தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
இதுதவிர தமிழகம்-கேரளா மாநில எல்லையோரத்தில் அமைந்து உள்ள ஆனைக்கட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட 14 சோதனைச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய 90 போலீசார் உள்பட 160 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே கோவையின் பல்வேறு இடங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு சிகிச்சை பெறவரும் நோயாளிகள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
மாநகர எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
கேரளா துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள் தனியார் கிளினிக் மற்றும் ஆஸ்பத்திரிகளில் சேர்ந்து சிகிச்சை பெற வாய்ப்பு உள்ளது. எனவே கோவை மாநகரில் உள்ள அனைத்து மருத்துவ நிறுவனங்களுக்கும் யாராவது குண்டு காயங்களுடன் சிகிச்சை பெற வந்தாலோ, சந்தேக நபர்கள் சிகிச்சை பெற்றாலோ உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- காரில் இருந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
- ரேஷன் அரிசியை வாங்கி கள்ளச்சந்தையில் வடமாநிலத்தவர்களுக்கு விற்பனை செய்ய கடத்தி வந்தது தெரியவந்தது.
திருப்பூர்:
திருப்பூர் நல்லிக்கவுண்டன்பாளையம் பிரிவில் அரசால் இலவசமாக வழங்கக்கூடிய ரேஷன் அரிசியை காரில் கடத்தி செல்வதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேனகா, சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்தி, கிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் நல்லிக்கவுண்டன்பாளையம் பிரிவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசால் இலவசமாக வழங்கக்கூடிய 635 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து காரில் இருந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருப்பூரை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 52) என்பதும், அவர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கள்ளச்சந்தையில் வடமாநிலத்தவர்களுக்கு விற்பனை செய்யவும், மாட்டு தீவனத்துக்கு கொடுக்கவும் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை போலீசார் கைது செய்து 635 கிலோ ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
- தண்ணீர், பாக்டீரியா, வைரஸ் உட்பட பிற காரணங்களாலும் காய்ச்சல் வரலாம்.
திருப்பூர் :
பருவ மழை காரணமாக வரும் காய்ச்சல் தடுப்பது குறித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:-
இந்த பருவ காலத்தில் காய்ச்சல் அதிகமாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குழந்தைகளை பாதுகாப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர், பாக்டீரியா, வைரஸ் உட்பட பிற காரணங்களாலும் காய்ச்சல் வரலாம்.
முதலில் அது எந்த வகை காய்ச்சல் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். சாதாரணமாக காய்ச்சல் என்றால் இரண்டு, மூன்று நாட்களில் சரியாகிவிடும். கிருமிகளால் காய்ச்சல் ஏதேனும் வந்தால், அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
குறிப்பாக, நான்கு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல் வந்தால் கஞ்சி, இளநீர், மோர் போன்ற நீர் ஆகாரங்களை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும். முக கவசங்கள் அணிந்து கொள்வதும் நல்லது என்றனர்.
- எனது பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
- நாம் எங்காவது சென்று வாழலாம் என ஆஷிக் ஆசை வார்த்தைகள் கூறினார்.
திருப்பூர்:
திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது தாய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் நான் மற்றும் தங்கை, தம்பி ஆகியோர் எனது தந்தை மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறோம். நான் கடந்த ஆண்டு பள்ளிக்கு செல்லும்போது பனியன் பிரிண்டிங் நிறுவன தொழிலாளியாக வேலை பார்க்கும் ஆஷிக் (வயது 19) என்பவர் என்னிடம் நட்பாக பழகினார். இருவரும் அடி க்கடி போனில் பேசி வந்தோம்.
பள்ளி படிப்பு முடிந்தும் எங்களது நட்பு தொடர்ந்தது. இந்தநிலையில் கடந்த மாதம் தன்னை காதலிப்பதாக ஆஷிக் கூறினார். முதலில் மறுத்த நான் பின் காதலை ஏற்றுக்கொண்டேன். இந்த நிலையில் எனது தந்தைக்கு காதல் விவகாரம் தெரிந்ததால் எனது போனை என்னிடம் இருந்து பறித்து வைத்துக்கொண்டார்.
சிறிது நாட்கள் கழித்து வேறு ஒரு போன் நம்பரை மாற்றி அதை பயன்படுத்தி வந்தேன். இதனை அறிந்து கொண்ட ஆஷிக் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார். நான் என்னிடம் பேச வேண்டாம் என மறுத்து விட்டேன்.
இந்த நிலையில் எனது பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதனால் எனது தந்தை மற்றும் தம்பி, தங்கை ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் எனது பாட்டியுடன் தங்கி இருந்து வருகின்றனர்.
நான் மட்டும் வீட்டில் தனியாக இருந்தேன். இதனை அறிந்து கொண்ட ஆஷிக் நேரடியாக எனது வீட்டிற்கு வந்தார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த அவர் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன். நாம் எங்காவது சென்று வாழலாம் என ஆசை வார்த்தைகள் கூறினார். அப்போது திடீரென என்னை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். அதேபோல் நேற்று முன்தினமும் எனது வீட்டிற்கு வந்து என்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.
பின்னர் எனது வீட்டிலிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து எனது சித்தப்பாவிடம் நான் கூறினேன். என்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த ஆஷிக் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து ஆஷிக்கை கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.
- உங்கள் கடையில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்து கிறீர்களா, புகையிலைப்பொருட்கள் பயன்படுத்துகிறீர்களா என பல்வேறு கேள்விகளை கேட்டனர்.
- புகாரை தொடர்ந்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற நபர்களை தேடி வந்தனர்.
முத்தூர்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாராபுரம் சாலை களிமேடு பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் சிவசாமி. இவரது மனைவி தனலட்சுமி (வயது 43). சம்பவத்தன்று தனலட்சுமி கடையில் இருந்தபோது அவரது கடைக்கு ஒரு ஆண் மற்றும் பெண் ஒருவர் காரில் வந்தனர்.
அவர்கள் நாங்கள் கோவை மண்டல மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் என கூறியதுடன், உங்கள் கடையில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்து கிறீர்களா, புகையிலைப்பொருட்கள் பயன்படுத்துகிறீர்களா என பல்வேறு கேள்விகளை கேட்டனர்.
மேலும் ரூ.2 ஆயிரத்து 500 பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதனால் பதறிப்போன தனலட்சுமி கடையில் இருந்த பணம் ரூ.2500-ஐ அவர்களிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கி கொண்டு அந்த 2 பேரும் காரில் ஏறி சென்றுவிட்டனர்.
இதில் சந்தேகம் அடைந்த தனலட்சுமி அக்கம் பக்கத்தில் உள்ள கடைகளில் விசாரித்து பார்த்துள்ளார். அப்போது மற்ற கடைகளுக்கு இதுபோல் கூறி யாரும் வரவில்லை என கூறியதை அடுத்து தனலட்சுமி தனது கணவரிடம் தெரிவித்தார். பின்னர் காங்கயம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரை தொடர்ந்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற நபர்களை தேடி வந்தனர். தொடர்ந்து அவர்கள் வந்த கார் எண்ணை வைத்து தேடி வந்தனர்.
அப்போது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கள் என ஏமாற்றி பணம் பறித்து சென்றது கோவையை சேர்ந்த சக்திவேல்(24), அவரது மனைவி சத்தியபிரியா(23) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடை த்தனர். மேலும் அவர்கள் கூலி வேலைக்கு சென்று வந்ததுடன், இது போல் பணம் கேட்டு மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் காங்கயம் பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- லாபம் ஈட்டும் முயற்சியை கட்டுப்படுத்தி பொதுமக்களின் சிரமங்களை குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது
- யூனிட்டுக்கு 12 ரூபாய் கட்டணத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது
திருப்பூர்:
திருப்பூர் கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுமதி தலைமை தாங்கினார். செயற் பொறியாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மின்நுகர்வோர் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர். குறிப்பாக மின்வாரியம் லாபம் ஈட்டும் முயற்சியை கட்டுப்படுத்தி பொதுமக்களின் சிரமங்களை குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு மின்சார வாரியம் கட்டிடம் கட்டும் போது தற்காலிக மின் இணைப்பு வழங்குகிறது. ஒருமுனை இணைப்புக்கு 2,200 ரூபாய் டெபாசிட், மும்முனை இணைப்புக்கு 4,400 ரூபாய் டெபாசிட் செலுத்தி இணைப்பு பெற வேண்டும். யூனிட்டுக்கு 12 ரூபாய் கட்டணத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பயன்படுத்தினாலும் இல்லாவிட்டாலும் மாதம் 1,200 ரூபாய் வாடகை வசூலிக்கப்படுகிறது.
தற்காலிக மின் இணைப்புக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் கூடுதல் டெபாசிட் தொகை வழங்கப்படும். கடந்த சில நாட்களாக மாதா மாதம், கூடுதல் டெபாசிட் என்ற பெயரில், அதிக தொகை வசூலிப்பதாக மின்நுகர்வோர் அமைப்புகள் புகார் அளித்தன. மின்சார வாரியம் பல்வேறு வகையில் கட்டண உயர்வு செய்துள்ளது. இந்நிலையில் தற்காலிக இணைப்புகளுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூடுதல் டெபாசிட் தொகை வசூலிக்கப்படுவது குறித்து முறையிடப்பட்டது.
- இந்த புழு தாக்குதலால், மக்காச்சோளம் மட்டுமின்றி பிற பயிர்களையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது.
- புழுவின் இறுதிப்பகுதியில் சதுர வடிவிலான நான்கு வெண்ணிறப்புள்ளிகளும் தென்படும்.
உடுமலை:
படைப்புழு தாக்குதலால், மக்காச்சோளம் பாதிக்கப்படுவதை கட்டுப்படுத்த, பயிர் மேலாண்மை முறைகளை கடைப்பிடிக்க வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. படைப்புழு தாக்குதலால் மகசூல் 50 சதவீதத்துக்கும் மேல் குறையும் வாய்ப்புள்ளது. இந்த புழு தாக்குதலால், மக்காச்சோளம் மட்டுமின்றி பிற பயிர்களையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது. படைப்புழு ஆறு நிலைகளை கொண்டது. இளம்புழுப்பருவம் கருப்புத்தலையுடன் பச்சை நிறத்தில் காணப்படும். ஆறாம் நிலையில் உள்ள புழுவின் தலைப்பகுதியில் வெண்ணிறக்கோடுகளும், புழுவின் இறுதிப்பகுதியில் சதுர வடிவிலான நான்கு வெண்ணிறப்புள்ளிகளும் தென்படும்.புழுக்கள் வெயில் அதிகமாக இருக்கும் போது இலையின் அடிப்பகுதியில் சென்று மறைந்து கொண்டு பாதிப்பை உண்டாக்கும். தாய் அந்துப்பூச்சி தன் வாழ்நாளில் 1,500 முதல் 2,000 முட்டைகளை குவியலாக இடுகிறது. பெரும்பாலும் இலையின் அடிப்பகுதியில் இடும். முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள், இலையின் அடிப்பகுதியை சுரண்டி உட்கொள்ளும். இளம்புழுக்கள் நூலிழைகளை உருவாக்கி அதன் வாயிலாக காற்றின் திசையில் ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு செல்லும். இளம் செடிகளில் குருத்து மற்றும் முதிர்ந்த செடியில் கதிரின் நூலிழைகளையும், நடு மற்றும் காம்பு பகுதிகளையும் அதிகம் சேதப்படுத்தக்கூடியது. இரவு நேரங்களில் அதிகமாக சேதத்தை விளைவிக்கும்.
இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குனர் நாக பசுபதி கூறியதாவது:-
படைப்புழுவினை கட்டுப்படுத்தும் முறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும். உழவு செய்த பின், கடைசி உழவில், 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை ஒரு ஏக்கருக்கு இட வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 4 மி.லி., சையாண்டரினிலிபுரோல் - 19.8 மற்றும் தியோமெத்தாக்சம் - 19.8 மருந்துடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஊடு பயிர், வரப்புப் பயிராக தட்டை பயறு, எள், சூரியகாந்தி, துவரை பயறுகளை சாகுபடி செய்ய வேண்டும். தாய் அந்து பூச்சிகளை கண்காணித்து கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு ஐந்து இனக்கவர்ச்சி பொறிகளை நிலத்தில் நிறுவ வேண்டும். பயிரின் 15 முதல் 20 நாட்கள் வளர்ச்சி நிலையில் குளோராண்ரடினிலிபுரோல் 18.5 எஸ்.சி., அல்லது புளுபெண்டமைட் 480 எஸ்.சி., பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தலாம். பயிரின் 35 முதல் 45 நாட்கள் வளர்ச்சி நிலையில் மெட்டாரைசியும், அணி சோபிளே என்ற பூச்சிகளை தாக்கும் பூஞ்சையை ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். பிறகு எமாமெட்டின் பென்சோயாட் அல்லது நல்லூரான் அல்லது ஸ்பைனிடோரம் போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகளை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.காலை அல்லது மாலையில் மட்டும் ஒட்டு பசை கலந்து தெளிக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாகவும், ஒரு முறை தெளித்த மருந்தை மறுமுறை பயன்படுத்தக்கூடாது. கைத்தெளிப்பான் அல்லது பேட்டரி கைத்தெளிப்பான்களை கொண்டு செடியின் குருத்து பகுதியில் நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு உதவி வேளாண் அலுவலர்கள், தெற்கு வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
- தீபிகாஸ்ரீ 2-வது பரிசும், காங்கயம் அரசு கல்லூரி மாணவர் ஜெயசூர்யா 3-வது பரிசும் பெற தேர்வானார்கள்.
- திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவி செண்பகம் 3-வது பரிசும் பெற தேர்வு செய்யப்பட்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள் நடந்தது.இதில் நடந்த பேரறிஞர் அண்ணா பேச்சுப்போட்டியில் பள்ளி மாணவர்கள் பிரிவில் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பரங்கிரி முதல் பரிசும், பெருமாநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் ரூபன் 2-வது பரிசும், திருப்பூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவி வினித்தா 3-வது பரிசும், அய்யன்காளி பாளையம் வி.கே.அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ரேணுகா மற்றும் குமார்நகர் மாநகராட்சி பள்ளி மாணவி பானுப்பிரியா ஆகியோர் சிறப்பு பரிசும் பெற தேர்வு பெற்றனர். கல்லூரி மாணவர்கள் பிரிவில் தாராபுரம் அரசு கல்லூரி மாணவர் பிரவீன் முதல் பரிசும், மாணவி தீபிகாஸ்ரீ 2-வது பரிசும், காங்கயம் அரசு கல்லூரி மாணவர் ஜெயசூர்யா 3-வது பரிசும் பெற தேர்வானார்கள்.
பின்னர் நடந்த பெரியார் பேச்சுப்போட்டியில் பள்ளி மாணவர்கள் பிரிவில் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மவுனிகா முதல் பரிசும், வேலம்பாளையம் ஜெய்சாரதா மேல்நிலைப்பள்ளி மாணவி ஜிஷப்பிரியா 2-வது பரிசும், பெருமாநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் அன்பரசு 3-வது பரிசும், விஜயாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் முகமது அஜிம், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி இந்துஜா ஆகியோர் சிறப்பு பரிசும் பெற தேர்வானார்கள்.
கல்லூரி மாணவர்கள் பிரிவில் பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவி காயத்திரி முதல் பரிசும், தாராபுரம் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் கவுதமன் 2-வது பரிசும், திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவி செண்பகம் 3-வது பரிசும் பெற தேர்வு செய்யப்பட்டனர்.
- பண்ணைப் பள்ளியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
- பயிற்சியின் இறுதியில் நேரடியாக பல்கலைக்கழக பேராசிரியா்களுடன் கலந்தாலோசிக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.
அவிநாசி:
கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத் தலைவா் மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- திருப்பூா் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையம் மற்றும் கோவை அகில இந்திய வானொலி சாா்பில் உற்பத்தியை பெருக்கும் நாட்டுக்கோழி வளா்ப்பு முறைகள் எனும் தலைப்பில் வானொலி பண்ணை பள்ளி வகுப்புகள் நாளை (சனிக்கிழமை) முதல் வாரந்தோறும் ஒரு வகுப்பு என மொத்தம் 13 வகுப்புகள் நடைபெறவுள்ளன. இதன் ஒரு பகுதியாக பயிற்சியின் இறுதியில் நேரடியாக பல்கலைக்கழக பேராசிரியா்களுடன் கலந்தாலோசிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். மேலும், பயிற்சி கையேடு மற்றும் எழுதுகோல் வழங்கப்படும். இந்த பண்ணைப் பள்ளியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவா்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த பண்ணை பள்ளி வகுப்புகளுக்கான கட்டணத்தை இம்மையத்தின் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது இணைய வங்கி சேவை வழியாகவோ செலுத்தலாம். இணைய வழியில் கட்டணம் செலுத்தியவா்கள் அலுவலக மின்னஞ்சல் முகவரியில் உரிய பணப் பரிவா்த்தனை எண்ணுடன் தங்களுடைய பெயா், முழு முகவரி மற்றும் கைப்பேசி எண் ஆகிய தகவல்களை சோ்த்து அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9443551869, 9442350740, 0421-2248524 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கான்கிரீட் உடைந்து கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.
- அதிகாரிகள் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டு பழுதடைந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும்.
முத்தூர்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம், சென்னிமலை சாலை, புதூர் பிரிவு பஸ் நிறுத்தம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் மின்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின்கம்பம் தற்போது பழுதடைந்த நிலையில், கான்கிரீட் உடைந்து கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.
அப்பகுதியில் வீடுகள் அதிகம் உள்ளதாலும், மழைக்காலம் என்பதாலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறுவதற்கு முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டு பழுதடைந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்தி, புதிய மின்கம்பத்தை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






