என் மலர்
திருப்பூர்
- பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது.
- போலீசார் யாசர் அராபத்(39) என்பவரை கைது செய்தனர்
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து பெட்டிக்கடையில் இருந்த 17 பொட்டலம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து கடை உரிமையாளர் யாசர் அராபத்(39) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு திட்டப் பணியை துவக்கி வைத்தார்.
- ரூ 4.2 லட்சம் மதிப்பில் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள பருவாய் ஊராட்சி 5-வது வார்டு பகுதியில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் மங்கையர்க்கரசி கனகராஜ் பொது நிதியில் ரூ 4.2 லட்சம் மதிப்பில் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
இதில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு திட்டப் பணியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவம், ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் ஜெயந்தி லோகநாதன், ஒன்றிய கவுன்சிலர் மங்கையர்கரசி கனகராஜ், 5-வது வார்டு, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- குளக்கரைகளில் குப்பைகள் மற்றும் கட்டிட கழிவு பொருட்களை கொட்டிச் செல்கின்றனர்.
- அத்திக்கடவு- அவினாசி திட்டம் செயல்படத் தொடங்கினால் குளத்திற்கு தண்ணீர் நிரப்பபடுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அவினாசி:
அவினாசி ராயம்பாளையம் அருகே 250 ஏக்கர் பரப்பளவில் சங்கமம் குளம் உள்ளது. அவ்வப்போது பெய்த மழையால் இக்குளத்தில் சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இனி வரும் பருவமழை தொடங்க உள்ளது. அவ்வாறு மழை பெய்யும் சமயம்அத்திக்கடவு- அவினாசி திட்டம் செயல்படத் தொடங்கினால் குளத்திற்கு தண்ணீர் நிரப்பபடுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் இரவு நேரங்களில் குளக்கரைகளில் குப்பைகள் மற்றும் கட்டிட கழிவு பொருட்கள் ஆகியவற்றை டிராக்டர் மற்றும் மினி லாரிகளில் வந்து கொட்டிச் செல்கின்றனர். இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தன்னார்வ அமைப்புகள் சார்பில் காது கேளாமை சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
- காது பரிசோதனை நிபுணர் டாக்டர் கார்த்திக், காது பற்றிய விழிப்புணர்வு வழங்கினார்.
உடுமலை:
உடுமலைப்பேட்டை பொறுப்பாறு மலைக்கிராம மக்களுக்கு திருப்பூர் மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் காது கேளாமை சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமை தாங்கினார். மேலும் காது பரிசோதனை நிபுணர் டாக்டர் கார்த்திக், காது பற்றிய விழிப்புணர்வு வழங்கினார்.
முனைவர் நெல்சன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பற்றி சிறப்புரை ஆற்றினார். இதில் தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர்கள், நக்சல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொறுப்பாறு மலைக்கிராம மக்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை பெற்றனர்.
- இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி வரவேற்றார்.
- போக்சோ சட்டம், குழந்தை திருமண தடைச் சட்டம், போதை ஒழிப்பு போன்ற தலைப்புகளின் கீழ் முகாம் நடைபெற்றது.
உடுமலை:
உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், போக்சோ சட்டம், குழந்தை திருமண தடைச் சட்டம், போதை ஒழிப்பு உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் மாணவ மாணவிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது.
துங்காவி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி வரவேற்றார். சார்பு நீதிபதி மணிகண்டன் தலைமையில் மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலமுருகன், குற்றவியல் நடுவர்கள் விஜயகுமார், மீனாட்சியம்மா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். வக்கீல்கள் தம்பி பிரபாகரன், எம்.எஸ்.காளீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என வார்டு கவுன்சிலர் முதல் பொதுமக்கள் வரை புகார் அளித்து வந்தனர்.
- கடந்த 3 தினங்களில் சுமார் 60க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து சென்றுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக தெரு நாய்கள் இருந்து வருகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரு நாய்களால் விரட்டி விரட்டி கடிக்கும் சம்பவம் திருப்பூர் மாநகர் பகுதியில் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இதனால் திருப்பூர் மாவட்ட மருத்துவமனையில் தினமும் ஏராளமானோர் நாய் கடிக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்தநிலையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என வார்டு கவுன்சிலர் முதல் பொதுமக்கள் வரை மாநகராட்சிக்கு புகார் அளித்து வந்தனர். பொதுமக்களின் இந்த புகாரை அடுத்து திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உத்தரவின் பேரில் தனியார் நிறுவனம் மூலம் தெரு நாய்களை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலத்துக்கு உட்பட்ட 13, 24, 22 வார்டுகளில் உள்ள பிச்சம்பாளையம் பிரிவு சிங்காரவேலன் நகர் , அங்கேரிபாளையம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 தினங்களாக மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் ஊழியர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவன ஊழியர்கள் தெரு நாய்களை பிடித்து வருகின்றனர்.
அதன்படி கடந்த 3 தினங்களில் சுமார் 60க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து சென்றுள்ளனர். இது பொதுமக்கள் இடையே சற்று ஆறுதல் பெற்றுள்ளது. தொடர்ந்து மாநகர் முழுவதும் இது போன்ற தெருநாய்களை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- அரசுக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தி வாழ்ந்து வருகிறேன்.
- நான் குடியிருக்கும் இடம் பழைய ஆவணங்களில் வண்டிப்பாதை என்று உள்ளது
திருப்பூர்:
திருப்பூர் கல்லம்பாளையத்தை சேர்ந்த பீட்டர் என்பவர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- கல்லம்பாளையம் ரெயில்வே லைன் அருகே அரசுக்கு சொந்தமான வண்டிப்பாதையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி அரசுக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தி வாழ்ந்து வருகிறேன்.
நான் கூலி வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வருகிறேன். எனக்கு வேறு வீடோ,சொத்துக்களே இல்லை. நான் குடியிருக்கும் இடம் பழைய ஆவணங்களில் வண்டிப்பாதை என்று உள்ளது. அதனை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் நான் குடியிருக்கும் இடத்துக்கு வீட்டுமனை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாணவர்களின் பெற்றோரை வரவழைத்த ஆசிரியர்கள், மாணவர்கள் பற்றி புகார் அளித்ததுடன், மாணவர்களை எச்சரித்து அனுப்பினர்.
- 9-ம் வகுப்பு மாணவனை இரும்பு கம்பியால் தாக்கியதில் அவனது மண்டை உடைந்தது.
திருப்பூர்:
திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேட்டில் வி.கே.அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 2500 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் அங்கு படிக்கும் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த மாணவர்களின் பெற்றோரை வரவழைத்த ஆசிரியர்கள், மாணவர்கள் பற்றி புகார் அளித்ததுடன், மாணவர்களை எச்சரித்து அனுப்பினர்.
இருப்பினும் நேற்று மாணவர்கள் இருதரப்பினருக்கிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் 9-ம் வகுப்பு மாணவனை இரும்பு கம்பியால் தாக்கியதில் அவனது மண்டை உடைந்தது.
இதுபற்றி தகவலறிந்த ஆசிரியர்கள் காயமடைந்த மாணவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்பினர். மேலும் மாணவனை தாக்கிய மாணவர்கள் மீது பள்ளி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
போலீசார் விசாரணையில், யார் தலைவர் என்கிற போட்டியில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது தெரிய வந்தது.
இந்தநிலையில் இன்று காலை இறைவணக்கத்தின்போது அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா, மாணவர்களிடையே ஏற்படும் மோதலை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
திருப்பூர் அரசு பள்ளியில் இருதரப்பு மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
- மத்திய அரசு 60 சதவீத நிதியும். மாநில அரசும், ஏற்றுமதியாளர் அமைப்பும் தலா 20 சதவீத பங்களிப்பை அளிக்கும்.
திருப்பூர்:
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் ஏற்றுமதி வர்த்தகம் முக்கிய பங்கு வகிக்கிறது. பின்னலாடை ஏற்றுமதியில் தேசிய அளவில் திருப்பூர் மாவட்டம் முன்னோடியாக இருக்கிறது.இதேபோல் பல்வேறு வகைகளிலான ஏற்றுமதி வர்த்தகத்தை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் வகையில் நாடு முழுவதும் 200 மாவட்டங்களில் ஏற்றுமதி மையங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது.
நடப்பு நிதியாண்டில் முதல் கட்டமாக 75 மாவட்டங்களில் ஏற்றுமதி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தேவையான நிலம் தேர்வு செய்வதற்கான ஆயத்த பணி தொடங்கியுள்ளது.
ஏற்றுமதி வர்த்தகத்தின் தற்போதைய நிலை, தொடர் மேம்பாட்டு ஆய்வு, உற்பத்தி தர நிர்ணயம், கண்காட்சி வளாகம், கூட்ட அரங்கம், திறன் மேம்பாட்டு பயிற்சி என பல்வேறு வசதிகளுடன் ஏற்றுமதி மையம் அமைய உள்ளது.அதற்காக தலா 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திருப்பூர் உட்பட சில மாவட்டங்கள் தேர்வாகியுள்ளன. திருப்பூர் நகரப்பகுதியில் கூடுதல் தொழில்நுட்ப வாய்ப்புகளுடன் பிரமாண்டமான ஏற்றுமதி மையம் அமையும். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்துடன் இணைந்து இத்திட்ட பணிக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது.
இது குறித்து இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறுகையில், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் இத்திட்ட பணிகளை மேற்கொள்ளும்.மத்திய அரசு 60 சதவீத நிதியை ஒதுக்கும். மாநில அரசும், ஏற்றுமதியாளர் அமைப்பும் தலா 20 சதவீத பங்களிப்பை செலுத்தி திட்டம் நிறைவேற்றப்படும்.
ஏற்றுமதி மையம் வாயிலாக புதிய தொழில்நுட்ப உதவி எளிதாக கிடைக்கும் என்பதால் திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் அடுத்தகட்டத்தை நோக்கி நிச்சயம் பயணிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
- எழுத்து தேர்வு மட்டுமே தேர்வர்கள் எதிர்கொள்ள இயலும்.
- செய்முறை பிரிவில் தேர்ச்சி பெறாதவர்கள் எதிர்கொள்ள இயலாது.
திருப்பூர்:
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் சிறப்பு அரியர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு மட்டுமே தேர்வர்கள் எதிர்கொள்ள இயலும்.
செய்முறை பிரிவில் தேர்ச்சி பெறாதவர்கள் எதிர்கொள்ள இயலாது.
இதன்படி 2018-19ல் எம்.எஸ்சி., சாப்ட்வேர் சிஸ்டம், 2020-21 இளநிலை பிரிவினர், 2021-22 முதுநிலை பிரிவினர் ஒரு பாடத்தில் மட்டும் அரியர் வைத்திருப்பின், இத்தேர்வை எதிர்கொள்ளலாம். சிறப்பு அரியர் தேர்வு செப்டம்பர் 3-ந் தேதி பல்கலைக்கழக வளாகத்திலும், கோவை அரசு கலை கல்லூரியிலும் நடைபெறவுள்ளது.
விண்ணப்பங்களை ஆகஸ்டு 16-ந் தேதிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவம் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான கட்டணம் பிற விபரங்களை மாணவர்கள் https://b-u.ac.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
- நகரை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் பல வகை பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
- நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புக்குள் பாம்புகள் நநுழைந்தால் உடனடியாக தீயணைப்புத்துறை, வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் நகரப்பகுதி, அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் பாம்புகள் ஏராளமாக உள்ளன. சாரை பாம்பு துவங்கி, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், மலைப்பாம்பு என விஷமுள்ள, கொடிய விஷம் நிறைந்த பாம்புகள் என அனைத்து வகை பாம்புகளும் ஆங்காங்கே உள்ள விவசாய நிலங்கள் மற்றும் பிற இடங்களில் காணப்படுகின்றன.
இவை அவ்வப்போது அருகேயுள்ள நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புக்குள் நுழைந்துவிடுவது வழக்கம்.தகவலறியும் தீயணைப்புத்துறை, வனத்துறையில் பயிற்சி பெற்ற வீரர்கள், பாம்புகளை பிடித்து செல்கின்றனர். அதேபோல் பாம்பு பிடிப்பதில் பயிற்சி பெற்ற இளைஞர்கள் பலரும், பாம்புகளை பிடித்து, வனத்துறையினரின் ஒப்புதலுடன் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுகின்றனர்.
இது குறித்து திருப்பூர் வனத்துறை ரேஞ்சர் சுரேஷ்கிருஷ்ணன் கூறியதாவது:-
சாரை பாம்பு துவங்கி கட்டுவிரியன், கண்ணாடி விரியன், மலைப்பாம்பு என விஷமுள்ள, கொடிய விஷம் நிறைந்த, விஷமில்லாத பாம்புகள் என அனைத்து வகை பாம்புகளும் ஆங்காங்கே உள்ள விவசாய நிலங்கள் மற்றும் பிற இடங்களில் காணப்படுகின்றன. இவை அவ்வப்போது அருகேயுள்ள நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புக்குள் நுழைந்துவிடுவது வழக்கம்.
தற்போது மழைக்காலம் என்பதால், பாம்புகள் அதிக அளவில் தென்படும். பாம்புகளை மனிதர்கள் சீண்டாத வரை பாம்பு மனிதர்களை எதுவும் செய்யாது. இருப்பினும், கண்ணில் தென்படும் பாம்பு, விஷத்தன்மை உள்ளதா, விஷத்தன்மை இல்லாததா என்ற அடிப்படை புரிதலை மக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக கண்ணாடி விரியன் பாம்பு மிகுந்த விஷத்தன்மை கொண்டது. அந்த பாம்பு சீண்டினால், உடனடியாக மரணம் நிகழும் அளவுக்கு அதன் விஷம் வேகமாக உடலில் பரவும். கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரித்தனர்.
இதுபோல் கண்ணில் தென்படும் பாம்புகளை அடையாளம் கண்டு அவற்றின் பண்புகளை அறிந்து கொள்ள வேண்டும். குடியிருப்பு பகுதிக்கு பாம்புகள் நுழையும் போது, அதுகுறித்த தகவலை வனத்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும். விஷத்தன்மை நிறைந்த பாம்பு எனில் சற்று தொலைவில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
தற்போது மழைக்காலம் என்பதால் வீடுகளை சுற்றி புதர்செடிகள் அதிகம் வளரும். அங்கு பாம்புகள் தங்குவதற்கு வாய்ப்புண்டு. எனவே சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பாம்பு பிடிப்பதில் பயிற்சி பெற்ற சில இளைஞர்களும், ஆங்காகே பொதுமக்கள் வசிப்பிடங்களுக்கு செல்லும் பாம்புகளை பிடிக்கின்றனர். அந்த தகவலை வனத்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2.50 லட்சம் கலப்பின கறவை மாடுகள் பால் உற்பத்திக்காக வளர்க்கப்படுகின்றன
- மடிநோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பாலை, மனிதர்கள் கன்றுகளுக்கு கொடுக்கக்கூடாது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் 2.50 லட்சம் கலப்பின கறவை மாடுகள் பால் உற்பத்திக்காக வளர்க்கப்படுகின்றன. மடிவீக்க நோயால் கறவை மாடுகள் பாதிக்கின்றன என பால் உற்பத்தியாளர்கள் கூறி வரும் நிலையில் பொங்கலூர் கே.வி.கே., திட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜன் மேற்பார்வையில், கால்நடை மருத்துவ அறிவியல் துறை இணை பேராசிரியர் சித்ரா விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மடிவீக்க நோயில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பது குறித்த வழிமுறைகளை விளக்கினார். மாட்டுத்தொழுவம், அதன் சுற்றுப்புறத்தை சுத்தமாகவும், உலர்ந்த நிலையிலும் வைக்க வேண்டும். சாணம், சிறுநீர் தேங்காமல் உடனுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும்.
கறவைக்கு முன், கறவை மாடுகளின் மடியை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கிருமிநாசினி மருந்தை தண்ணீரில் கலந்து நன்கு கழுவி உலர்ந்த சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். பால் கறப்பவரின் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும். பால் கறந்தவுடன் மாடுகள் உடனடியாக படுத்தால் மடி நோய் ஏற்படும். எனவே அவை படுக்காமல் இருக்க பசுந்தீவனம் அல்லது உலர் தீவனம் ஏதாவது ஒன்றை மாடுகளுக்கு கொடுக்க வேண்டும். மடிநோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பாலை, மனிதர்கள் கன்றுகளுக்கு கொடுக்கக்கூடாது. அந்த பாலை கன்றுகள் குடிக்கும் போது தீவிர இதய தசை அலர்ஜியால் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடும்.
சோற்று கற்றாழையை 250 கிராம் அளவுக்கு சிறு, சிறு துண்டுகளாக வெட்டி அதனுடன் 50 கிராம் விரலி மஞ்சள், 5 கிராம் சுண்ணாம்பு ஆகியவற்றை சேர்த்து, நன்கு அரைத்து இந்த கலவையை 100 மி., தண்ணீரில் கலந்து பாதிக்கப்பட்ட மாடுகளின் மடிப்பகுதி முழுக்க, நோய் தாக்குதல் குறையும் வரை தினமும் 8 முதல் 10 முறை பூச வேண்டும்.
நோய் தாக்குதல் அதிகமாக இருந்தால் கால்நடை மருத்துவரின் உதவியை நாட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






