என் மலர்
திருப்பத்தூர்
- தொழிற்சாலை இடம் மாற்றத்தை கண்டித்து நடந்தது
- போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியில் தனியார் ஷூ தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இதில் 600-க்கும் மேற்ற பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு சம்பளம், நிலுவைத் தொகை மற்றும் தொழிற்சாலை இடம் மாற்றம் செய்யப்படுவதை கண்டித்து, 300-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 1 மணி நேரம் போராட்டம் நடத்தியும் தொழிற் சாலை நிர்வாகம் எந்த ஒரு பதிலும் அளிக்காததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையில், உமராபாத் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் உடன் பாடு ஏற்படாததால் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
இன்று வேலை நிறுத்தம் செய்ய போவதாக தொழிலாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- வனத்துறை எச்சரிக்கை
- காப்புக்காடுகளில் நுழைய தடை
ஆம்பூர்:
ஆம்பூர் வட்டம் பைரப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் ஆம்பூர் வனச்சரகர் பாபு தலைமையிலான வனத்துறையினர் நேற்று விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மலையோர கிராம மக்களிடையே வனச்சரகர் பாபு பேசும்போது காப்புக்காடுகள் பகுதிக்குள் பொதுமக்கள் யாரும் அத்துமீறி நுழையக்கூடாது.
இரவு நேரங்களில் காப்புக்காடு பகுதிகளில் கையில் 'டார்ச்லைட்' வெளிச்சத்துடன் மர்ம நபர்கள் சுற்றித்திரிவதாக வனத்துறையினருக்கு அவ்வப்போது தகவல்கள் வருகின்றன.
எனவே வெளி நபர்கள் நடமாட்டம் காப்புக்காடு களில் தெரிந்தால் உடனடியாக வனத்துறையினர், காவல் துறையினர் அல்லது கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஆம்பூர் வனச்சரக பகுதிகளில் தற்போது யானைகள், சிறுத்தைகள், கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளன.
கால்நடை மேய்ப்போர், விறகு சேகரிப்போர், சுள்ளி பொறுக்குவோர், கிழங்கு எடுப்போர்,தேன் சேகரிப்போர் என யாரும் காப்புக்காடு பகுதிக்குள் இனி போகக்கூடாது.மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாடுவோர் பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இந்த பகுதிகளில் யாரேனும் உரிமை பெறாத நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்தால் அது குறித்தும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
வனத்துறையினருக்கு தகவல்
வனப்பகுதியில் உள்ளூரை சேர்ந்தவ ர்களோ, வெளியூரை சேர்ந்தவர்களோ சாராயம் காய்ச்சுவது அல்லது விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.யானைகள் மற்றும்மான்கள் போன்ற வனவிலங்குகள்,மக்கள் வசிப்பிடங்கள், வயல்வெளிகள் மற்றும் தோப்புக்கள் பகுதிகளுக்கு வந்தால் அதை துரத்தும் முயற்சியில் யாரும் ஈடுபடக்கூடாது. வன விலங்குகளை கண்டால் உடனடியாக வனத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
அதன் பேரில் வனத்து றையினர் சம்பவ இடத்திற்கு வந்து வனவிலங்குகளை பாதுகாப்பாக மீட்டு காப்பு காட்டுக்குள் திருப்பி அனுப்பும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.
'காடு செழித்தால் நாடு செழிக்கும்' என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வனவர்கள் முருகன்,சுரேஷ்குமார், சம்பத்குமார் வனக்காப்பாளர்கள் மூர்த்தி,ராஜ்குமார், கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சாவியை எடுத்து மர்ம கும்பல் கைவரிசை
- கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஹாயாத் நகரை சேர்ந்தவர் பியாரோ(வயது 56). மிளகாய் பொடி வியாபாரி. இவரது மனைவி சமிம் இவர்களுக்கு இர்பான் என்ற மகனும், சல்லூர், நிகார், அம்ரின் 3 மகள்களும் உள்ளனர்.
வருகிற 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நிகாரின் நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது. இதனால் அவருக்கு அணிவிப்ப தற்காக 8 பவுன் நகையை வாங்கி பீரோவில் வைத்திருந்தனர். இந்த நிலையில் கடைசி மகளான அம்ரினுக்கு ஆதார் கார்டு எடுக்க நேற்று திருப்பத்தூர் தலைமை தபால் நிலையத்திற்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சாவியை அருகே உள்ள பாக்கெட்டில் வைத்தனர். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் பக்கத்தில் இருந்து சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே புகுந்தனர். பீரோவில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றனர்.
இன்று நிச்சயதார்த்த செலவிற்காக பீரோவில் வைக்கப்பட்டிருந்த பணத்தை தேடும் போது பணம், நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் மர்ம கும்பல் கொள்ளை யடித்து சென்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு பியாரோ தகவல் தெரிவித்தார். திருப்பத்தூர் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.
வீட்டின் சாவியை எடுத்து பீரோவை திறந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கலெக்டர் ஆய்வு
- உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த புள்ளானேரி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பண்ணை குட்டைகள் அமைக்கும் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து தொண்ணையனூர் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரூ.4.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கழிவறை கட்டுமான பணியை பார்வையிட்டார். மேலும் கந்திலி ஊராட்சி ஒன்றியம் சின்னாரம்பட்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 1400 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணியை அமைச்சர் ஏவா வேலு கடந்த 9-ந்தேதி 1400 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
மேலும் புள்ளானேரி ஊராட்சிக்குட்பட்ட தொண்ணையனூர் அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடினார். மேலும் பள்ளி மாணவர்கள் திருக்குறள் மற்றும் வகுப்பின் சுவரில் அமைந்திருந்த சிறு பலகையில் உள்ள தமிழ் சொற்களை படிக்க வைத்தார்.
ஆய்வுகளின்போது உதவி இயக்குநர் ஊராட்சிகள் விஜயகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் துரை, புள்ளானேரி ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் தணிகாசலம், பள்ளியின் தலைமை ஆசிரியர் தனபதி உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
- 500 கிலோ சிக்கியது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன் ரெயில் நிலையம் அருகே கர்நாடகாவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் ஜங்களாபுரம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் பைக்கில் இருந்த 2 பேர் வாகனத்தை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். சந்தேகம் அடைந்த போலீசார் பைக்கில் இருந்த மூட்டைகளை சோதனை செய்தனர்.
அதில் 500 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. பின்னர் பைக்கையும், ரேசன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.
- சமூக வலைதளங்களில் வைரலானது
- போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் விசாரணை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் சாராய வியாபாரி ஒருவரிடம் உளவுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், 'தனக்கு தினமும் ஆயிரம் ரூபாய் தர வேண்டும். 4 அல்லது 5 நாளைக்கு ஒருமுறை மொத்தமாக கொடுத்திடு.
யார் பிடிச்சாலும் என் பெயரை சொல்லக்கூடாது' என்று பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த ஆடியோ விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சாராய வியாபாரியிடம் பேசியது திருப்பத்தூர் உளவுத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து ரங்கநாதனிடம், வேலூர் உளவுத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் 3 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ரங்கநாதனை, வேலூர் உளவுதுறை அலுவலகத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பைக்கில் வந்த கும்பல் அட்டூழியம்
- போலீஸ் விசாரணை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் டவுன் திரு.வி.க.நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 62), தொழிலதிபர். இவர் அதே பகுதியில் உள்ள புதுப்பேட்டை சாலையில் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதன் காரணமாக மின்தடை செய்யப்பட்டது.
சண்முகம் பெயிண்ட் கடையை மூடி விட்டு வீட்டுக்கு செல்ல முடிவு செய்தார்.
அதன்படி நேற்று இரவு 9.30 மணி அளவில் கடையில் வசூல் ஆன ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தை பணப்பையில் போட்டு, அதனை தனது பைக் முன்பகுதியில் மாட்டிக் கொண்டு பைக்கில் வீட்டுக்கு சென்றார்.
கடைக்கும், அவரது வீட்டுக்கும் சுமார் 300 மீட்டர் தொலைவு மட்டுமே உள்ளது.
வீட்டின் வாசலுக்கு சென்றதும் சண்முகம் பைக்கை நிறுத்தி இறங்க முயன்றார். அப்போது பின்னால் பைக்கில் வந்த 2 பேர் மோதுவது போல் சண்முகம் அருகில் வந்து நின்றனர்.
கொள்ளையர்கள் சண்முகத்தை கீழே தள்ளிவிட்டு, அவர் பைக் முன்பக்கத்தில் மாட்டி இருந்த பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதனால் பதறிப்போன அவர் கூச்சலிட்டார். இருப்பினும் கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை. இது குறித்து சண்முகம் திருப்பத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பைக் கொள்ளையர்களில் ஒருவர் ஹெல்மெட் அணிந்தபடியும், மற்றொருவர் முகத்தை மறைத்தபடி இருந்ததால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை என சண்முகம் தெரிவித்தார்.
மேலும் சண்முகம் வீட்டு வாசலில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
மின்தடை செய்யப்பட்ட நேரம் என்பதால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை. கும்பல் திட்டமிட்டு மின்தடை ஏற்படுத்தி பணம் பரித்தார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவரது வீடு இருக்கும் பகுதியில் பழைய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், கடைகள் என பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியாக விளங்குகிறது. பரபரப்பாக காணப்படும் டவுன் பகுதியில் இந்த வழிப்பறி கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மாற்று திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்காததை கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் ஜாபர் சாதிக் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல், தாலுகா
செயலாளர் காசி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினார்கள்.
இதில் தமிழக அரசின் உதவித் தொகையை நம்பி வாழ்ந்து வரும் அதிக உடல் ஊனம் உள்ள மாற்று திறனாளிகளுக்கு ஐந்து மாதகாலமாக உதவித் தொகை வழங்காததை கண்டித்தும், உடனடியாக உதவித் தொகை வழங்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினார்கள்.
ரங்கன், ரஹமான், ஈசாக். சிங்காரம், கரிசித்தன், கேசவன், ஜோதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- நாளை கடைசி நாள்
- கலெக்டர் தகவல்
திருப்பத்தூர்:
தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், 330
தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில்
தற்போது 2023-24-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடை பெற்று வருகிறது. தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீடு சேர்க் கைக்கான விவரங்கள் www.skilltraining. tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்ப தாரர்கள் தற்காலிக ஒதுக்கீடு ஆணையை மேற்குறிப்பிட்ட இணை யதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
அதன் பிறகு சம்பந்தப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு அசல் சான்றிதழுடன் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி சேர்க்கையினை உறுதி செய்ய வேண்டும். இதற்கான கடைசி நாள் நாளை (புதன்கிழமை) ஆகும். இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- ராணிப்பேட்டையை சேர்ந்தவர்கள்
- 40 மூட்டைகள் கேட்பாரற்று கிடந்தது
ஜோலார்பேட்டை:
சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ஜோலார்பேட்டை அருகே நேற்று இரவு வந்து கொண்டிருந்தது.
ரேசன் அரிசி கடத்தல்
குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை போலீசார் ரெயிலில் பொதுப் பெட்டியில் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது சீட்டுக்கு அடியில் 40 மூட்டைகள் கேட்பாரற்று கிடந்தது. சந்தேகத்தின் பேரில் போலீசார் அதனை சோதனை செய்தபோது 1 டன் ரேசன் அரிசி இருந்தது.
விசாரணையில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த சுமதி (வயது 38), கிருஷ்ணவேணி (37) சரவணன் (30) ஆகியோர் ரேசன் அரிசியை கடத்தி வந்தது தெரிந்தது.
குற்ற புலனாய்வுத் துறை போலீசார் அரிசி மூட்டைகளையும், அதனை கடத்தி வந்தவர்களையும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். ரெயில்வே போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
- 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வாணியம்பாடி:
வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் மன்ற அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பேரூராட்சி மன்றத் தலைவர் ஆ.பூசாராணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ரேவதி அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் வரவு, செலவு உள்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் தங்களது வார்டு பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்தனர். கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் ஆ.பூசாராணி கூறினார்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் ஆ.செல்வராஜ், ஏ.மரியஜோசப், ஆர்.சரவணன், ஜெ.கீதா, வி.ஆர்.சரவணன், ஏ.ரமேஷ், ஆர்.மகேஸ்வரி, எம்.பரிமளா,பி.சந்தியா உட்பட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது
- மாணவ- மாணவிகள் மழையில் நனைந்த படி சென்றனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளி வேலை முடிந்த நேரத்தில் மழை பெய்ததால் மாணவ- மாணவிகள் மழையில் நனைந்த படி சென்றனர்.
இதேபோல் நாட்டறம்பள்ளி ஆத்தூர்குப்பம், ஜங்கலாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஜோலார்பேட்டை ஏலகிரி மலை மற்றும் நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.






