என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினார்
    • சிறையில் அடைத்தனர்

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அடுத்த திருமாஞ்சோலையை சேர்ந்தவர் பிரியங்கா (வயது 24). இவர் கடந்த 4-ந் தேதி சிகிச்சைக்காக சி எல் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மொப்பட்டில் சென்றார்.

    அப்போது செல்போன் மற்றும் தங்க கம்மல் ஆகியவற்றை பைக் சீட்டின் அடியில் வைத்து விட்டு ஆஸ்பத்திரிக்குள் சென்றுள்ளார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர் பைக்கில் இருந்த செல்போன் மற்றும் தங்க கம்மலை திருடிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.

    சிறிது நேரம் ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை முடிந்து வெளியே வந்த பிரியங்கா மொபட்டின் சீட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் அதிலிருந்த நகை மற்றும் செல்போன் மாயமானது தெரியவந்தது. பின்னர் பிரியங்கா அங்கு பொருத்த ப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து பார்த்தார்.

    அப்போது அந்தப் பகுதியில் நீண்ட நேரம் நின்றிருந்த நபர் மொபட்டின் அருகில் வந்து ஆள் நடமாட்டம் இல்லாத போது அதிலிருந்து நகை மற்றும் செல்போனை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதுகுறித்து பிரியங்கா வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சங்கர் (45), என்பவரை நேற்று இரவு கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து செல்போன் மற்றும் கம்மல் ஆகியவற்றை பறிமுதல் செய்து சங்கரை சிறையில் அடைத்தனர்.

    • அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது
    • மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டார அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் நடந்தது.

    இதில் அரசின் பல்வேறு நல திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு சென்றடைகிறதா? சென்றடையாதவை ஏதேனும் இருந்தாலோ, பின்னடைவு இருந்தாலோ அதை சரி செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் போட்டிகளை தொடக்கி வைத்தார்
    • முதல் 3 இடம் பிடித்தவர்களுக்கு கோப்பைகள் மெடல்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் தடகள போட்டிகள் திருப்பத்தூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட தடகள சங்க தலைவர் கே. சி. வீரமணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜி. செந்தில்குமார் வரவேற்றார். இதில் மாவட்ட கலெக்டர் தெ. பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி போட்டிகளை தொடக்கி வைத்தார். போட்டிகளில் முதல் 3 இடம் பிடித்தவர்களுக்கு கோப்பைகள் மெடல்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    ேஜாலார்பேட்டை விளையாட்டு அறக்கட்டளை 43 பதக்கங்கள் பெற்று ஒட்டுமொத்த சாம்பின்ஷிப் பதக்கத்தை தட்டிச்சென்றது.

    இதற்கு அறக்கட்டளை தலைவர் சுசிகர், செயலாளர் தென்னரசு, பயிற்சியாளர்கள் சபரிகுமார், ஏசுராஜ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் வி. சேது ராஜன், நகராட்சி ஆணையர் ஜி. பழனி, திருப்பத்தூர் மாவட்ட தடகள சங்க கவுரவத் தலைவர் எஸ். பி. சீனிவாசன், பொருளாளர் ஏ. பார்த்திபன் செயலாளர் எம். சிவப்பிரகாசம், தேர்வு குழு தலைவர் கே. மதன்குமார், உள்பட பலர் கலந்த கொண்டனர். முடிவில் மாவட்ட தடகள சங்க செயலாளர் எம் .சிவப்பிரகாசம் நன்றி கூறினார்.

    • வாகன ஓட்டிகள் கடும் அவதி
    • பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவில் ஆலங்காயம் நிம்மியம்பட்டு, வெள்ள க்குட்டை சுண்ணாம்பு பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது.

    இந்த கன மழை காரணமாக நிம்மியம்ப ட்டிலிருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு மழை நீர் குளம் போல் தேங்கியது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    அதே போல் வாணியம்பாடி நியூடவுன், பஸ்நிலையம், ஜனதாபுரம் , செட்டியப்பனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

    இந்த கனமழை யால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • முன் விரோதம் காரணமாக விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 28).கூலி தொழிலாளி. இவருக்கும் நடராஜபுரத்தை சேர்ந்த சரவணன் (50). ஆட்டோ டிரைவர். என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.

    இந்த நிலையில் சரவணனுக்கும், செந்தில் குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒரு தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

    ஆத்திரமடைந்த சரவணன், செந்தில்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சரவணன் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இது சம்பந்தமாக ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணனை நேற்று இரவு கைது செய்தனர்.

    • 2 மர்ம நபர்கள் இனியவள் வீட்டின் மீது கம்பிகள் சுற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் ஆபிசர்ஸ் லைன் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் ரெயில்வே ஊழியர். அவரது மனைவி இனியவள் (வயது 52) இவர்களுக்கு ஆர்த்தி மற்றும் பிரீத்தி என்ற 2 மகள்களும் குகன் என்கின்ற ஒரு மகனும் உள்ளனர்.

    இரு மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. ஓய்வு பெற்ற சந்திரன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் அவரது மகன் குகன் தந்தையின் ரெயில்வே பணியில் சேர்ந்தார். அவர் சேலத்தில் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் ஆபிசர்ஸ் லைன் பகுதியில் இனியவள் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

    நேற்று இரவு பைக்கில் ஹெல்மெட் போட்டு கொண்டு வந்த 2 மர்ம நபர்கள் இனியவள் வீட்டின் மீது கம்பிகள் சுற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.

    வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், பல்புகள் மற்றும் கதவு உடைந்து சேதமானது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அப்போது 2 பேர் தப்பி சென்று விட்டனர்.

    இனியவள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனார்.

    வாணியம்பாடி டி.எஸ்.பி. விஜயகுமார், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

    அங்கு வெடித்து சிதறிய வெடியின் துகள்கள் ஆகியவற்றை கைபற்றினர். நாட்டு சரவெடி வீசி சென்ற மர்ம நபர்கள் யார்? காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தவறி விழுந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஈரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (வயது 55). இவர் சென்னையில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வருகிறார்.

    இவர் ஈரோடுக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து நேற்று மாலை ரெயில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

    ரெயில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்ச குப்பம் அருகே வரும்போது திடீரென ரெயிலில் இருந்து தவறி விழுந்தார்.

    இதில் ராஜீவ் காந்தி ரெயிலில் சிக்கி கால் துண்டானது. படுகாயம் அடைந்து அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீயணைப்பு துறையினர் பிடித்தனர்
    • காப்பு காட்டில் விடப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த குடியான குப்பத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 48).

    நேற்று திடீரென இவரது வீட்டில் பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ் வீட்டை விட்டு வெளியே ஓடினார். இது குறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வீட்டின் அருகே இருந்த 3 அடி நீளமுள்ள பாம்பை பிடித்தனர்.

    இதனை திருப்பத்தூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர் அவர்கள் பாம்பை அருகில் உள்ள காப்பு காட்டில் கொண்டு போய் விட்டனர்.

    • தூண் மீது டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது
    • போலீசார் விசாரணை

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அடுத்த புல்லூர் பகுதியில் ஊராட்சி சார்பில் பேவர் பிளாக் ரோடு போடும் பணி நடந்து வருகிறது.

    இதற்காக பேவர் பிளக் கற்களை அருகே உள்ள மாரியம்மன் கோவில் அருகில் அடுக்கி வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் அந்த கற்களை அங்கிருந்து முருகன் என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் ஏற்றி உள்ளனர். டிராக்டரை சங்கராபுரம் பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி (வயது 48) என்பவர் ஓட்டி சென்றார்.

    கற்களை ஏற்றி கொண்டு வெளியே வரும் போது கோவில் தூண் மீது டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தூண் கீழே படுத்துக் கொண்டிருந்த மரம் ஏறும் தொழிலாளி கந்தசாமி (45) என்பவர் மீது விழுந்து அவர் படுகாயம் அடைந்தார்.

    உடனடியாக கந்தசாமியை அப்பகுதி மக்கள் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி கந்தசாமி இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த திம்மாம்பேட்டை போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிராக்டர் டிரைவர் சக்கரவர்த்தியை தேடி வருகின்றனர்.

    • ஆம்பூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்து நடந்தது
    • டிரைவர் சிறுகாயங்களுடன் தப்பி தலைமறைவானார்

    ஆம்பூர்:

    சென்னை பூந்தமல்லி பகுதியில் உள்ள தனியார் பீர் கம்பெனியில் இருந்து கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மதுபான கடைக்கு பீர் பாட்டிகள் ஏற்றிச் சென்றத.

    லாரி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் அருகே சோலூர் ஊராட்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாரா விதமாக சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் லாரி டிரைவர் சிறுகாயங்களுடன் தப்பி தலைமறைவானார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் தாலுகா போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் லாரியை 20 மணி நேரத்திற்கு பிறகு இன்று அதிகாலை கிரேன் மூலமாக பள்ளத்தில் இருந்து லாரியை மீட்டு மாற்று லாரியின் மூலம் ரூ.46 லட்சம் மதிப்புள்ள பீர் பாட்டிகளை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பீர் பாட்டில்கள் உடைந்து சேதமானது.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய லாரி லாரி டிரைவர் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • 9 பேர் படுகாயம்
    • போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போலீசார் ஈடுப்பட்டனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் அருகே சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது பின்னால் வந்த மினி லாரி மோதியது.

    அப்போது 2 வாகனங்களையும் டிரைவர்கள் நிறுத்தி இறங்கி பார்த்து ெகாண்டிந்தனர். அப்போது திடீரென அதே வழியாக பின்னால் வந்த கண்டெய்னர் லாரி ஏற்கனவே விபத்துக்குள்ளாகி நின்றிருந்த மினிலாரி மற்றும் கார் மீதும் வேகமாக மோதியது.

    இதில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த கண்டெய்னர் லாரி டிரைவர் மணி கண்டன்(வயது 48) மினி லாரியில் பயணம் செய்த ராகுல் (18) யோகராஜ் (20) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்,

    அதேபோல் காரில் பயணம் செய்த 6 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.இந்த விபத்து காரணமாக பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவது பாதித்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாகன இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி க்கொண்டிருந்த கண்டெய்னர் லாரி டிரைவர் உட்பட 9 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுப்பட்டனர்.

    இதுகுறிந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமண முகூர்த்த புடவை எடுக்க சென்றபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன்(வயது 37).

    இவர் தனது உறவினர் திருமண விழாவிற்கு புடவை எடுக்க முடிவு செய்தார். அதன்படி குணசேகரன் தனது மனைவி ஜெயக்குமாரி (28), மகன் நிஷாந்த் (3), மற்றும் உறவினர்களான சுதா (34), எழிலரசி (37), உஷா (43), ஜான்சி ராணி (45) புவனேஸ்வரி (23) ஆகிய 7 பேருடன் திருமண முகூர்த்த புடவை வாங்க கொத்தூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி காரில் சென்றனர்.

    காரை மேல் பச்சூர் பகுதியைச் சேர்ந்த கவுஸ்கர் (வயது 35) என்பவர் ஓட்டிச் சென்றார்.

    கொத்தூர் அடுத்த மேலூர் டாஸ்மாக் கடை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தரிக்கெட்டு ஓடி 3 பல்டி அடித்து தலைகீழாக குப்புற கவிழ்ந்தது.

    இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த, 3 வயது சிறுவன் உட்பட 7 பேர் பலத்த காயமடைந்தனர்.

    காரில் சிக்கிக்கொண்ட அனைவரும் வலி தாங்க முடியாமல் கதறி துடித்து கூச்சலிட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் ஓடிவந்து, குப்புற கவிழ்ந்த கார் கண்ணாடிகளை உடைத்து அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் ஜெயக்குமாரி, நிசாந்த், சுதா, எழிலரசி ஆகிய 4 பேர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×