என் மலர்
தேனி
- அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டும், கைரேகை நிபுணர்களை கொண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தேனி:
தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டி ஆஞ்சநேயா நகரை சேர்ந்தவர் சீனிவாசன்(63). இவர் தனது குடும்பத்துடன் வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று ராஜபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்காக குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். மீண்டும் திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் சிதறிகிடந்தன.
பீரோவில் பார்த்தபோது 31 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1லட்சத்து 10 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(62). இவர் வெல்லம் வியாபாரம் பார்த்து வருகிறார். இவரது மகனும், மகளும் வெளிநாட்டில் உள்ளனர். ராமகிருஷ்ணன் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று அழகாபுரிக்கு சென்றுவிட்டு மீண்டும் திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6.5 பவுன் தங்கநகை, 350 கிராம் வெள்ளிபொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்தும் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டும், கைரேகை நிபுணர்களை கொண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
- தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் நடத்தப்படும் தொழிற்கடன் முகாமினை தொழில்முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
- தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.
தேனி:
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் நடத்தப்படும் தொழிற்கடன் முகாமினை தொழில்முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு மாநில நிதிக் கழகம் ஆகும். 1949ம் ஆண்டு முதல் இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தமிழகத்தின் தொழில் வளர்ச்சி முன்னோடியாக திகழ்கிறது. இக்கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும். தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.
மேலும் இந்த நிறுவனம் கடனுதவிக்கு அப்பாற்பட்ட சேவைகளையும் செய்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் திண்டுக்கல் கிளை அலுவலகத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் கடந்த 21ந் தேதி முதல் அடுத்த மாதம் 1ந் தேதி வரை நடைபெறுகிறது. இச்சிறப்பு தொழில் கடன் முகாமில் டி.ஐ.ஐ.சி. யின் பல்வேறு கடன் திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.
தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும். மேலும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் எஸ்.சி., எஸ்.டி. தொழில் முனைவோருக்கு திட்ட மதிப்பில் 35 சதவீதம் முதலீட்டு மானியம் மற்றும் 6சதவீதம் வட்டி மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும். இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50சதவீதம் சலுகை அளிக்கப்படும்.
இந்த அரிய வாய்ப்பினை மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி தங்களது தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய மாநில அரசுகளின் மானிய சேவைகளை பெற்று பயனடையுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
- வெவ்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து சென்றபோது 3 பேரை பிடிபட்டனர்.
- அவர்களிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தேனி:
தேனி போலீசார் காட்டுபத்திரகாளியம்மன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற கம்பம் வடக்குப்பட்டியை சேர்ந்த யோக்கியன் (58) என்பவரை கைது செய்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கோம்பை போலீசார் பண்ணைபுரம்-பல்லவராயன்பட்டி சாலை யில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற ஈஸ்வரன் (51) என்பவரை கைது செய்து 7 மதுபாட்டி ல்களை பறிமுதல் செய்த னர். வருசநாடு போலீசார் முறுக்கோடை பகுதியில் ரோந்து சென்றபோது மதுவிற்ற பாண்டி என்ப வரை கைது செய்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- பிடிபட்ட நபர் வைத்திருந்த பையில் சோதனை நடத்தியபோது அதில் 11 கையெறி குண்டுகள் இருந்தது தெரிய வந்தது.
- தப்பி ஓடியவர் இவரது கூட்டாளி எனவும் தெரிய வந்தது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக 2 வாலிபர்கள் பையுடன் சுற்றிக்கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். இதனை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட நபர் வைத்திருந்த பையில் சோதனை நடத்தியபோது அதில் 11 கையெறி குண்டுகள் இருந்தது தெரிய வந்தது.
இதனை பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை விரட்ட வைத்திருந்ததாக அவர் கூறினார். பிடிபட்டவர் போடியை சேர்ந்த சடையன் (வயது40) என்பதும் தப்பி ஓடியவர் இவரது கூட்டாளி எனவும் தெரிய வந்தது. உண்மையில் இந்த கையெறி குண்டுகளை பன்றிகளை பிடிப்பதற்காக வைத்திருந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக வைத்திருந்தாரா? என விசாரித்து வருகின்றனர்.
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை சமாதானம் செய்து மீண்டும் குடும்ப நடத்த அழைத்து வந்தார்.
- அழகுசின்னு ராஜதானி போலீசில் சரண் அடைந்தார்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ராயவேலூரை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது37). இவரது மனைவி அழகுசின்னு (31). இவர்களுக்கு பிளஸ்-2 மற்றும் 6-ம் வகுப்பு படிக்கும் 2 மகன்கள் உள்ளனர். கணவன் மனைவி 2 பேரும் கூலித்தொழில் செய்து வந்தனர்.
சண்முகவேல் குடிபழக்கத்துக்கு அடிமையானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியை தாக்கி ரகளையில் ஈடுபட்டார். இதனால் வேதனையடைந்த அழகுசின்னு கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை சமாதானம் செய்து மீண்டும் குடும்ப நடத்த அழைத்து வந்தார். சில நாட்கள் அமைதியாக சென்ற நிலையில் மீண்டும் மது குடித்துவிட்டு வந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். பொறுத்து பொறுத்து பார்த்த அழகுசின்னு கணவரை திரும்பி தாக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அவர் அருகில் இருந்த அரிவாளை எடுத்து சண்முகவேலை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சண்முகவேல் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் அழகுசின்னு ராஜதானி போலீசில் சரண் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சண்முகவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். குடிபோதையில் தொல்லை கொடுத்த கணவரை மனைவியே வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சில மாதங்களுக்கு முன்பு விரிவாக்கப்பணிகள் நடைபெற்றது. அப்போது சென்டர்மீடியன் அமைக்க ப்பட்டு உயர்கோபுர மின்வி ளக்குகள் பொருத்தப்பட்டது.
- இதில் வட்டாட்சியர் அலுவ லகம் முதல் கொண்டம நாயக்கன்பட்டி வரை அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்குகள் எரிவதில்லை.
ஆண்டிபட்டி:
மதுரை-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விரிவாக்கப்பணிகள் நடைபெற்றது. அப்போது சென்டர்மீடியன் அமைக்க ப்பட்டு உயர்கோபுர மின்வி ளக்குகள் பொருத்தப்பட்டது.
இதில் வட்டாட்சியர் அலுவ லகம் முதல் கொண்டம நாயக்கன்பட்டி வரை அமைக்கப்பட்ட உயர்கோ புர மின்விளக்குகள் எரிவதில்லை.
இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த உயர்கோபுர மின்விளக்கு களை விரைவில் பயன்பா ட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பைக், ஜீப் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து நடைபெற்றது.
- இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே போடியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (28). தேனி மெயின்ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகே சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தினேஷ்குமார் படுகாயம் அடைந்து போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்ப ட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ப ட்டது. இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்குப்ப திவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.
போடியை சேர்ந்தவர் சிந்தாமணி (70). ராசிங்கா புரம்-மல்லிங்காபுரம் சாலையில் நின்று கொண்டி ருந்தார். அப்போது ஒரு ஜீப் பின்பக்கமாக எடுத்த போது எதிர்பாராத விதமாக சிந்தாமணி மீது மோதியது. இதில் அவர் காயமடைந்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உத்தமபாளையத்தை சேர்ந்தவர் சடையாண்டி (39). இவர் தனது நண்பர் முத்துவேல் (42) என்பவருடன் பஸ்நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணன் என்பவர் எதிரே ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது மோதியது. இதில் 3 பேரும் காயம் அடைந்தனர். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.
பெரியகுளத்தை சேர்ந்தவர் ராமன் (60). இவரது மனைவி சரஸ்வதி (52). இவர்கள் பழைய இரும்பு சாமான்கள் மற்றும் காலி பாட்டில்கள் சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று வத்தலக்குண்டு-பெரிய குளம் சாலையில் பழைய ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே நின்று கொண்டி ருந்தபோது அவ்வழியாக வந்த பைக் மோதியதில் படுகாயம் அடைந்தார். பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்டு பின்னர் மேல்சிகி ச்சைக்காக தேனி மற்றும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பெரியகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- மாவட்ட கலெக்டர் உள்பட பல்வேறு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
- எனவே மாணவ-மாணவிகள் நலன் கருதி இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரி உள்ளது. தேனி-ஆண்டிபட்டி மெயின்ரோ ட்டில் இருந்து சுமார் ½ கி.மீ. தூரத்தில் கல்லூரி உள்ளது.
இந்த கல்லூரியில் ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராள மான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் தார் சாலை பெயர்ந்து கற்கள் காணப்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகளின் டயர் அடிக்கடி பஞ்சர் ஆகிறது. மேலும் விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் உள்பட பல்வேறு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
எனவே மாணவ-மாணவிகள் நலன் கருதி இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது.
- தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யததால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டு ள்ளது.
கூடலூர்:
கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை ப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி யில் 14707 ஏக்கர் நிலத்தில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.
மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டு ள்ளது. அவ்வ ப்போது கண்ணாமூச்சி காட்டும் மழை ஏமாற்றி வருவதால் அணையின் நீர்மட்டம் 119.35 அடியாக குறைந்து ள்ளது. 95 கன அடி நீர் வருகிறது. 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 47.56 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 69.70 அடி. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
- இந்த கண்மாய் நீரை சார்ந்து இப்பகுதியில் நெல், சோளம், மக்காச்சோளம், தென்னை மற்றும் பல்வேறு காய்கறி வகைகள் பயிரிடப்பட்டு வருகிறது.
- சுமார் 5 சதுர கி.மீ பரப்பளவு உள்ள கண்மாய் நீர் முற்றிலும் வறண்டு சிறு குட்டையாக காட்சி காட்சியளித்து வருவதால் விவசாயிகள் வேதனையடை ந்துள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகிலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் மீனாட்சியம்மன் கண்மாய் அமைந்துள்ளது. சுமார் 5 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் மீனாட்சிபுரம் அருகே அமைந்திருந்தாலும் அம்மா பட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு உட்பட்டது.
தற்போது தமிழ்நாடு மீன்வளத்துறை கட்டு ப்பாட்டில் மீன் குத்தகைக்கு விடப்பட்டு வருகிறது. தினமும் இந்த கண்மாயி லிருந்து சுமார் 750 கிலோ முதல் 1 டன் வரை கெண்டை, கெளுத்தி, கட்லா, ரோகு போன்ற மீன்கள் பிடிக்கப்பட்டு வெளியூர்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும் இந்த கண்மாயைச் சுற்றிலும் அயல்நாட்டு பறவைகளான பெலிக்கன், கரண்டி மூக்கன், கொக்கு சென்நாரை, கருநாரை, மீன் கொத்தி பறவைகள், நீர்காகம் போன்ற பல்வேறு பறவை இனங்கள் இன ப்பெருக்கம் செய்து வருகிறது.
இப்பகுதியில் உள்ள மீனாட்சிபுரம், அம்மாபட்டி, பத்ரகாளி புரம், விசுவாச புரம், டொம்புச்சேரி போன்ற கிராமங்களை சுற்றியுள்ள சுமார் 5000 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாய நிலங்களின் முக்கிய நீர் பாசனத்திற்காக இந்த கண்மாய் நீர் பயன்ப டுத்தப்பட்டு வருகிறது.
இந்த கண்மாய் நீரை சார்ந்து இப்பகுதியில் நெல், சோளம், மக்காச்சோளம், தென்னை மற்றும் பல்வேறு காய்கறி வகைகள் பயிரிடப்பட்டு வருகிறது.
தற்போது போடிநாய க்கனூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தென்மே ற்கு பருவ மழை பொய்த்து விட்டதால் முற்றிலும் மழை இல்லாமல் உள்ளது. இதனால் கண்மாய்க்கு வரும் நீர்வரத்து முற்றிலும் நின்று விட்டது. எனவே கோடை காலம் முடிந்தும் இன்னும் வெப்பமான சூழ்நிலை காணப்படுகிறது. இதனால் கண்மாய் நீர் முற்றிலும் வறண்டு ஆடுக ளின் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது. சுமார் 5 சதுர கி.மீ பரப்பளவு உள்ள கண்மாய் நீர் முற்றிலும் வறண்டு சிறு குட்டையாக காட்சி காட்சியளித்து வருவதால் விவசாயிகள் வேதனையடை ந்துள்ளனர்.
6 அடி ஆழத்திற்கு மேல் நீர் வற்றியதால் மதகுகள் வழியாக விவசாயத்திற்கு கண்மாய் நீரை பயன்படுத்த முடியவில்லை. எனவே இப்பகுதியை சுற்றியுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக இந்த கண்மாய் நீர் வற்றி விவ சாயம் பாதிக்கப்பட்டு ள்ள தால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
- தற்போது போடிநாயக்கனூர் சுற்றுப்பகுதியில் மழை இன்றி வறண்ட சூழ்நிலை ஏற்பட்டு கடுமையான வெப்பநிலை நிலவுவதால் போதிய தண்ணீர் வசதி இன்றி செடிகள் கருகி வருகின்றன.
- வருகின்ற 29ஆம் தேதி கேரளாவில் ஓணம் பண்டிகை காரணமாக தமிழகத்தில் பூக்கள் விலை தற்போது அதிகரித்து வருகிறது.
போடி:
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் மஞ்சள் செவ்வந்தி மற்றும் மாட்டுச் செவ்வந்தி என்று அழைக்கக்கூடிய சிவப்பு செவ்வந்தி பூக்கள் பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது போடிநாயக்கனூர் சுற்றுப்பகுதியில் மழை இன்றி வறண்ட சூழ்நிலை ஏற்பட்டு கடுமையான வெப்பநிலை நிலவுவதால் போதிய தண்ணீர் வசதி இன்றி செடிகள் கருகி வருகின்றன.
மேலும் செடியில் பூத்த மஞ்சள் செவ்வந்தி மற்றும் சிவப்பு செவ்வந்திப் பூக்கள் கடுமையான வெயில் காரணமாக வெப்பத்துடன் காற்று பலமாக வீசுவதால் செடியிலேயே வாடி கருகி உதிர்ந்து விடுகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் மன வேதனை அடைந்துள்ளனர்.
மேலும் வருகின்ற 29ஆம் தேதி கேரளாவில் ஓணம் பண்டிகை காரணமாக தமிழகத்தில் பூக்கள் விலை தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்ற மஞ்சள் செவ்வந்தி மற்றும் சிவப்பு செவ்வந்தி பூக்கள் தற்போது ரூ.40 முதல் ரூ.50 வரை விலை அதிகரித்து கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் ஓணம் பண்டிகை வரை விலை உயரலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
- சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் தீப்பந்தங்களை ஏற்றியும் சத்தம் எழுப்பியும் புலிகளை விரட்ட முயன்றும் 3 புலிகளும் கண்டுகொள்ளாமல் அதே இடத்திலேயே இருந்தது.
- புலிகள் நடமாட்டத்தை நிரந்தரமாக கட்டுபடுத்தினால் மட்டுமே குடியிருப்பு பகுதியில் அச்சமின்றி வாழ முடியும்
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணை உபரி நீர் செல்லும் வல்லக்கடவு, வண்டிபெரியாறு கரையோரப்பகுதிகளில் குடியிருப்புகள், சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் உள்ளன. இந்த பகுதியில் தாய் மற்றும் 2 குட்டிகள் என 3 புலிகள் சுற்றித் திரிந்தன.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் தீப்பந்தங்களை ஏற்றியும் சத்தம் எழுப்பியும் புலிகளை விரட்ட முயன்றனர். ஆனால் 3 புலிகளும் கண்டுகொள்ளாமல் அதே இடத்திலேயே இருந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் மற்றும் வனத்துறையினர் அப்பகுதி மக்களுடன் இணைந்து பட்டாசு வெடித்தனர். அந்த சத்தத்தை கேட்டு 3 புலிகளும் வனப்பகுதிக்குள் சென்றது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், புலிகள் நடமாடும் இடம் பெரியாறு அணை உபரி நீர் செல்லும் பகுதியாகும். வண்டி பெரியாறு, பீர்மேடு, குமுளி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புலிகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து கால்நடைகளை அடித்து கொன்று வருகிறது.
இதனால் குடியிருப்பு வாசிகள் பீதியடைந்துள்ளனர். வனத்துறையினர் புலிகளை கண்காணித்து வந்தாலும், பொதுமக்களின் அச்சம் குறையவில்லை. புலிகள் மீண்டும் வர வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். இரவில் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புலிகள் நடமாட்டத்தை நிரந்தரமாக கட்டுபடுத்தினால் மட்டுமே குடியிருப்பு பகுதியில் அச்சமின்றி வாழ முடியும் என்றனர்.






