என் மலர்tooltip icon

    சிவகங்கை

    திருப்புவனம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
    மானாமதுரை:

    திருப்புவனம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டி (வயது 37). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி காளீஸ்வரியுடன் மோட்டார் சைக்கிளில் சக்குடியில் உள்ள ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள சென்றார். அங்கு திருமணம் முடிந்ததும் இருவரும் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

    இவர்கள் மதுரை-ராமேசுவரம் செல்லும் நான்கு வழிச்சாலையில் திருப்புவனம் அருகே சென்று கொண்டு இருந்தனர். அப்போது திருப்புவனம் கழுகேர்கடையை சேர்ந்த முஸ்ரப்(19) என்பவர் அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார். 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சுந்தரபாண்டி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். காளீஸ்வரி படுகாயம் அடைந்தார். தனது கண் முன்னே கணவர் இறந்ததை அறிந்த அவர் கதறி அழுதார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த முஸ்ரப்பும் படுகாயம் அடைந்தார்.

    விபத்து பற்றி அறிந்ததும் அக்கம், பக்கத்தினர் போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்சு விரைந்து வந்து காயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முஸ்ரப் நேற்று பரிதாபமாக இறந்தார். காளீஸ்வரிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து திருப்புவனம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி அருகே தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 178 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி அண்ணா சிலை அருகே மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தடை உத்தரவு அமலில் இருக்கும் போது ஏ.ஐ.டி.யு.சி மாநில துணைச்செயலாளர் பி.எல்.ராமச்சந்திரன் உள்பட அனைத்துக்கட்சியை சேர்ந்த 157 பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்கள் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கிராம நிர்வாக அதிகாரி அபிநயா வடக்கு போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் 157 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதேபோல் சாக்கோட்டை போலீஸ் சரகம் புதுவயல் மேட்டுக்கடைப்பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் பாண்டித்துரை, மாவட்ட குழு உறுப்பினர் சிதம்பரம் ஆகியோர் உள்பட 21 பேர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    இவர்கள் மீது கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் சாக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்து உள்ளார்.
    சிவகங்கை:

    கலெக்டர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் வசிக்கும் பெண்கள் பணியிடங்களுக்கும், பிற இடங்களுக்கும் எளிதில் சென்று வர ஏதுவாக இருசக்கர வாகனம் வாங்க 50 சதவீத மானியம் வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் 50 சதவீத மானியம் அல்லது ரூ.25 ஆயிரம் இவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்திற்கு இந்த ஆண்டு 1,919 பேருக்கு அம்மா இருசக்கர வாகனம் மானிய உதவியுடன் வழங்கப்பட உள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் அம்மா இருசக்கர வாகனம் பெற விரும்புபவர்கள் கல்வி தகுதி ஏதும் பெற்றிருக்க வேண்டியதில்லை. 18 வயதிற்கு மேல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.

    விண்ணப்பம் செய்யும் பொழுது இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் அல்லது பழகுனர் ஓட்டுனர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்குள் இருத்தல் வேண்டும்.

    மேலும் இத்திட்டத்தில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் பெண்களின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், உதவி சமையலர்கள், கூட்டுறவு சங்கம் மற்றும் கடைகளில் பணிபுரியும் பெண்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறைகள், நிறுவனங்களில் பணிபுரிபவர், ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணிபுரியும் பெண்கள் ஆகியோரும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியானவர்கள். குடும்பத்தில் உள்ள ஒரு நபருக்கு மட்டுமே இருசக்கர வாகன மானியம் வழங்கப்படும்.. மாற்றுத்திறனாளி மகளிர் மூன்று சக்கர வாகனத்திற்கு ரூ.31 ஆயிரத்து 250 மானிய தொகை வழங்கப்படும்.

    இந்த திட்டத்தில் கிராமபுறத்திலிருந்து வெகுதொலைவில் வசிக்கும் பெண்கள், மலைவாழ் பகுதியில் வசிக்கும் பெண்கள், குடும்ப தலைவியாக ஆண் ஆதரவில்லாத நிலையில் உள்ள பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளி பெண்கள் 35 வயதிற்கு மேற்பட்ட 45 வயதிற்குட்பட்ட திருமணமாகாத பெண்கள், ஆதிதிராவிட பழங்குடியின பெண்கள், திருநங்கையர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் வயது பிறந்த தேதிக்கான சான்று (கட்டாய ஆவணம்), இருப்பிடச்சான்று (வாக்காளர் அடையாள அட்டை, வாகன ஓட்டுனர் உரிமம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவைகள்), வட்டார போக்குவரத்து அலுவலரால் வழங்கப்பட்ட இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம், பழகுனர் ஓட்டுனர் உரிமம் (கட்டாய ஆவணம்), வருமானச்சான்று, பணிபுரியும் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட பணிச்சான்று, கல்வித் தகுதிக்கு (மாற்றுச்சான்று உள்ளிட்டவை அடங்கியது), பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், சாதிச்சான்று (ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் மட்டும்), மாற்றுத்திறனாளி அடையாள அட்டை இருசக்கர வாகன விலைப்புள்ளி மாதிரி விலைப்பட்டியல் ஆகிய ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

    ஊரக பகுதிகளில் பணிபுரிந்து வரும் பெண்கள் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், நகர்புறத்தில் உள்ள பெண்கள் நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த அலுவலகத்திலேயே வழங்க வேண்டும்.

    மேலும் இது தொடர்பான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை சிவகங்கை மாவட்ட இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இவ்வறு அவர் கூறியுள்ளார்.

    சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 409 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சிவகங்கை:

    பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., தொ.மு.ச. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் இந்தியா முழுவதும் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த விஸ்வம் சந்திரன், காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன், மகளிரணியை சேர்ந்த ஏலம்மாள், சி.ஐ.டி.யு.வை சேர்ந்த வீரையா மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த வீரபாண்டி காளை, லிங்கம் வீரகாளை உள்ளிட்டவர்கள் பஸ் நிலையத்துக்கு ஊர்வலமாக சென்றனர்.

    அங்கு எம்.ஜி.ஆர். சிலை அருகில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் 120 பேரை சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மறியல் போராட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கலை கண்டித்தும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும், நகர்ப்புறங்களையும் விரிவாக்கி கூலியை உயர்த்தி வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.

    இது போல ஒரு சில தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அதிகாரிகள் மட்டும் வேலைக்கு வந்து இருந்தனர். ஆனால் வங்கி பணிகள் நடைபெறவில்லை. தேசிய அஞ்சல் ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகளுக்கு இணங்க சிவகங்கை கோட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்களின் எழுத்தர் சங்கம், தபால்காரர் சங்கம் மற்றும் அகில இந்திய புறநிலை ஊழியர் சங்ககங்களை சார்ந்த அஞ்சல் ஊழியர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.

    வேலைநிறுத்த போராட்டத்தில் தேசிய அஞ்சல் ஊழியர் கோட்ட செயலர் மதிவாணன், தபால்காரர் நான்காம் பிரிவு ஊழியர்களின் கோட்ட செயலாளர் நடராஜன், அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க உதவி தலைவர் செல்வன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு, சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் சிவக்குமார், ஏ.ஐ.டி.யு.சி மாநில துணைச்செயலாளர் பி.எல்.ராமச்சந்திரன், ஐ.என்.டி.யூ.சி மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு அண்ணாசிலையை அடைந்தனர். அங்கு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து வடக்கு மற்றும் தெற்கு போலீசார் மறியலில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்பட 175 பேரை கைது செய்தனர்.

    இளையான்குடி கண்மாய்க்கரை பஸ் நிறுத்தத்தில் மத்திய அரசை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் ஆகியவை இணைந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.போராட்டத்திற்கு விவசாய சங்கங்களின் மாவட்ட செயலாளர் கண்ணகி தலைமை தாங்கினார். அப்பொழுது அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 15 பெண்கள் உள்பட 60 பேரை இளையான்குடி போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் இருந்து தபால் நிலையத்துக்கு ஊர்வலமாக சென்ற தொழிற்சங்கத்தினர் பஸ் நிலையம் அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்திய மீனாள் சேதுராமன், லட்சுமணன், பொன்னுச்சாமி, அஜிஸ், வக்கீல் கணேசன், துரைராஜ் உள்பட 34 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் புதுவயல் மேட்டுக்கடை பகுதியில் சாக்கோட்டை ஒன்றியச் செயலாளர் பாண்டித்துரை தலைமையில் மறியலில் ஈடுபட்ட 20 பேரை சாக்கோட்டை போலீசார் கைது செய்தனர்

    பிறந்த சில மணி நேரத்தில் முட்புதரில் ஆண் குழந்தை வீசப்பட்டது. காயம் அடைந்த அந்த குழந்தைக்கு தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே காரையூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமின் எதிர் புறத்தில் உள்ள முட்புதரில் இருந்து நேற்று காலையில் பச்சிளம் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. உடனே அந்த வழியாக சென்றவர்களும், அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் முட்புதருக்குள் சென்று பார்த்தனர். அதில் பிறந்து சில மணி நேரமே ஆன அழகான ஆண் குழந்தை முட்கள் கீறப்பட்ட காயங்களுடன் கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக குழந்தையை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து திருப்பத்தூர் நகர் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன் ரகுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும், கண்டவராயன்பட்டி போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும், இது தொடர்பாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    குழந்தையை முட்புதரில் வீசிச் சென்றது யார், எதற்காக குழந்தையை வீசினர், குழந்தையின் தாய் எங்கே? என்பது குறித்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை முட்புதரில் வீசப்பட்ட சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கார்த்திகை தீபதிருநாளையொட்டி காரைக்குடி பகுதியில் பித்தளையால் செய்யப்படும் அகல்விளக்கு செய்யும் பணி மும்முரம் அடைந்து உள்ளது. இதையொட்டி வெளிமாவட்டங்களில் இருந்து இங்கு ஆர்டர்கள் வந்து குவிய தொடங்கி உள்ளது.
    காரைக்குடி:

    கார்த்திகை தீப திருநாள் என்பது இந்துக்களின் முக்கிய விழாவாக கருதப்பட்டு வருகிறது. அன்றைய தினம் வீடுகள் முழுவதும் பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபாடு செய்வது வழக்கம். இதேபோல் அன்றைய தினம் கோவில்களிலும் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. கார்த்திகை தீப திருநாள் அன்று மண் விளக்கு மற்றும் பித்தளை விளக்குகளில் பெண்கள் விளக்கேற்றி வழிபாடு செய்வார்கள்.

    அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற 29-ந்தேதி அன்று கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காரைக்குடியை அடுத்த அரியக்குடி பகுதியில் செட்டிநாட்டு முறைப்படி பித்தளையால் ஆன அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தற்போது தீவிரமடைந்து உள்ளது.

    பொதுவாக காரைக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை செட்டிநாடு என்று அழைப்பது வழக்கம். இந்த பகுதி கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றதோடு மட்டுமல்லாமல் உணவு வகைகளுக்கும் பெயர் பெற்றதாகும். அந்த வகையில் காரைக்குடி பகுதியில் தயாரிக்கப்படும் பித்தளை பொருட்களும் சிறப்பு வாய்ந்தது.

    காரைக்குடியை அடுத்த அரியக்குடி பகுதி மக்கள் பித்தளை பொருட்கள் தயார் செய்யும் பணியை ஒரு குடிசை தொழிலாக மேற்கொண்டு வருகிறார்கள். பித்தளையில் சிறிய குத்துவிளக்கு முதல் பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. மேலும் அந்தந்த கால சீசனுக்கு ஏற்றவாறு இங்கு பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது கார்த்திகை தீப திருநாள் வர உள்ளதால் அகல் விளக்கு தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. 

    இதுகுறித்து அரியக்குடியைச் சேர்ந்த மாரிக்கண்ணு என்பவர் கூறியதாவது:-

    இங்கு யானை விளக்கு, பாவை விளக்கு, கேரளா பகுதியில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஆமை வடிவ விளக்கு, ஓம் வடிவ விளக்கு, அன்னம் விளக்கு, குமுள் விளக்கு, 1, 4 மற்றும் 5 முக விளக்கு, அகல் விளக்கு, சர விளக்கு, லெட்சுமி விளக்கு, காமாட்சி விளக்கு, பிரதோஷ விளக்கு, கிளி விளக்கு, செடி விளக்கு, அஷ்ட விளக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர இந்த விளக்குகள் 5 இன்ஞ் முதல் 6 அடி வரை தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விளக்குகள் தமிழகத்தில் திருச்சி, மதுரை, சென்னை, கோவை, தஞ்சாவூர், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் ஆர்டர்கள் வந்து குவிகிறது. இதுதவிர மற்ற மாவட்டங்களில் இருந்து போன் மூலம் ஆர்டர்கள் கொடுப்பவர்களுக்கு பார்சல் மூலமும் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக கடந்த 5 மாத காலமாக முடங்கி கிடந்த இந்த பித்தளை பொருட்கள் தயாரிக்கும் பணி தற்போது கார்த்திகை விழாவிற்காக மீண்டும் புத்துயிர் பெற்று வேகமாக நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சிவகங்கை மாவட்டத்திற்கு கூடுதலாக வழங்கப்பட்ட 3 ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவைகளை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட மருத்துவத்துறையின் மூலம் 108 ஆம்புலன்ஸ் வாகன சேவைக்கான புதிய வாகனங்கள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் 3 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

    பின்னர் அரசு குடும்ப நலத்துறையின் மூலம் ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பின்னர் அவர் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கனவே 20 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது இந்த 3 வாகனங்களும் காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கும், எஸ்.எஸ்.கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கும், சருகனி ஆரம்ப துணை சுகாதார மையத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மருத்துவத்துறை இணை இயக்குனர் டாக்டர் இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குனர் குடும்பநலத்துறை டாக்டர் யோகவதி, மாவட்ட 108 வாகனசேவை மேலாளர் ரஞ்சித் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 40 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

    தேவகோட்டையில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    தேவகோட்டை:

    தேவகோட்டை வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் பிரபாவதி தலைமையில் நகராட்சி அலுவலர்கள் நேற்று தியாகிகள் சாலை, திருப்பத்தூர் சாலை, பஸ் நிலையம் ஆகிய இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணியாதவர்களை பிடித்து தலா ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் பஸ்களில் ஏறி சோதனை நடத்தினர். பின்னர் இது குறித்து டாக்டர் பிரபாவதி கூறும் போது, இன்று (திங்கட்கிழமை) முதல் அனைத்து வணிக வளாகங்கள், வியாபார நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். வாடிக்கையாளர்கள் முககவசம் அணிந்து வந்தால் தான் பொருட்கள் தர முடியும் என்பதை வியாபாரிகள் உறுதியாக அறிவிக்க வேண்டும். இது போன்ற சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றார்.
    சிவகங்கை அருகே இடையமேலூர் ஊராட்சியில் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமில் கலெக்டர் ஆய்வு நடத்தினார்.
    சிவகங்கை:

    சிவகங்கை அருகே இடையமேலூர் ஊராட்சியில் வாக்காளர் பெயர் சேர்த்தலுக்கான சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமை கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் பார்வையிட்டார். அங்குள்ள வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வாக்காளர் பெயர் பட்டியலில் சேர்க்கை விவரம், நீக்கல் விவரத்தை கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, கடந்த 16-ந்தேதி அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று முன்தினமும், நேற்றும் புதிய வாக்காளர் சேர்ப்பு, திருத்தம், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பெயர் நீக்கம் உள்ளிட்டவைகளுக்காக சிறப்பு முகாம் நடந்தது. இதில் பலர் ஆர்வமாக கலந்து கொண்டு விண்ணப்பம் செய்து உள்ளனர். அடுத்த மாதம் 12, 13-ந்தேதிகளில் அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.

    புதிய வாக்காளர்களுக்கான பெயர் சேர்த்தல் படிவம்-6, பெயர் நீக்கத்திற்கான படிவம் -7, பெயர் திருத்தத்திற்கான படிவம்- 8, முகவரி மாற்றத்திற்கான படிவம் -8 யு ஆகிய படிவங்கள் உள்ளன.

    பொதுமக்கள் தங்களுக்கு தேவையான படிவத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது கலெக்டருடன் சிவகங்கை தாசில்தார் மைலாவதி, வட்ட துணை ஆய்வாளர் முருகன், மண்டல துணை வட்டாட்சியர்கள் லெனின் (சிவகங்கை), கலையரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    காரைக்குடி அருகே விஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்தவர் ஜான் தேவதாசன் (வயது 52). பெயிண்டர். இவர் சமீப காலமாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். 

    பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து விட்டார். 

    இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்குடி ஐந்துவிளக்கு அருகே அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    காரைக்குடி:

    காரைக்குடி ஐந்துவிளக்கு அருகே அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணைச்செயலாளர் பி.எல்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் மாங்குடி, தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட நிர்வாகிகள் திருநாவுக்கரசு, மலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    இதில் மத்திய அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவதை கண்டித்தும், வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கண்டித்தும், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக மாற்ற கோரியும், அதற்கு சம்பளமாக ரூ.500- ஆக உயர்த்த கோரியும், இந்த திட்டத்தை நகராட்சி பகுதிக்கு விரிவுப்படுத்த கோரியும், வெங்காயம், பெட்ரோல் விலையை கட்டுப்படுத்த கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

    இதில் சி.ஐ.டி.யு. சார்பில் தட்சிணாமூர்த்தி, ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் மூர்த்தி, ஐ.என்.டி.யு.சி. சார்பில் ரமேஷ், காங்கிரஸ் தொழிற்சங்கம் சார்பில் புஷ்பராஜ், ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் சண்முகம், கண்ணன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் 2-வது நாளாக மறியல் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வை சேர்ந்த 348 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சிவகங்கை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினமும் தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையொட்டி சிவகங்கை நகர கழக செயலாளர் துரைஆனந்த் தலைமையில் சிவகங்கை அரண்மனை வாசலில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட துணை செயலாளர் கே.எஸ்.எம்.மணிமுத்து, வடக்கு ஒன்றிய செயலாளர் ஆ.முத்துராமலிங்கம், தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.ஜெயராமன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சேதுபதிராஜா உள்பட 51 பேரை சிவகங்கை போலீசார் கைது செய்தனர்.

    காரைக்குடி பெரியார் சிலை பகுதியில் தி.மு.க. நகர செயலாளர் குணசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் காரைக்குடி அருகே கோவிலூரில் கல்லல் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட இலக்கிய அணி தலைவர் புலிக்குட்டி சீனிவாசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பரணி கிட்டு, மகளிரணி அமைப்பாளர் கலாகாசிநாதன், ஒன்றிய பொருளாளர் பழனியப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு, இலக்கிய அணி துணை அமைப்பாளர் முத்துராமன் உள்பட 50 பேரை குன்றக்குடி போலீசார் கைது செய்தனர்.

    மானாமதுரை தேவர்சிலை பகுதியில் நேற்று யூனியன் துணைத்தலைவர் முத்துச்சாமி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் ராஜாமணி, ஒன்றிய கவுன்சிலர் மலைச்சாமி, மீனவரணி பாஸ்கரன், தொண்டரணி மூர்த்தி உள்ளிட்ட தி.மு.க.வினரை மானாமதுரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் திருப்புவனத்தில் மாவட்ட துணைச்செயலாளர் சேங்கைமாறன் தலைமையில் திருப்புவனம் பிள்ளையார்கோவில் அருகே மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். இளையான்குடி கண்மாய்கரை பகுதியில் ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சுப.மதியரசன், நகர செயலாளர் நஜீமுதீன் ஆகியோர் தலைமையில் சாலை மறியல் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் திருப்பத்தூர் போலீஸ் நிலையம் அருகில் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் உதயசண்முகம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் சாக்ளா, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சோமசுந்தரம் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சிங்கம்புணரியில் தி.மு.க.வினர் 4 ரோடு சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையில் படுத்தும், அமர்ந்து கொண்டும் உதயநிதி ஸ்டாலின் கைது செய்ததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த மறியல் போராட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர்கள் அம்பலமுத்து, சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறியலில் துணை ஒன்றியச்செயலாளர் சிவபுரி சேகர், நகர பொருளாளர் கதிர்வேல், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கதிர்காமம், ஒன்றிய பொருளாளர் மனப்பட்டி பாஸ்கரன், இளைஞர் அணி மனோகரன், குடோன் சுப்பிரமணியன் உள்பட 38 பேரை சிங்கம்புணரி போலீசார் கைது செய்தனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக தி.மு.க.வை சேர்ந்த 348 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் மாலை 6 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.

    ×