search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிப்பது எப்படி? கலெக்டர் தகவல்

    அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்து உள்ளார்.
    சிவகங்கை:

    கலெக்டர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் வசிக்கும் பெண்கள் பணியிடங்களுக்கும், பிற இடங்களுக்கும் எளிதில் சென்று வர ஏதுவாக இருசக்கர வாகனம் வாங்க 50 சதவீத மானியம் வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் 50 சதவீத மானியம் அல்லது ரூ.25 ஆயிரம் இவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்திற்கு இந்த ஆண்டு 1,919 பேருக்கு அம்மா இருசக்கர வாகனம் மானிய உதவியுடன் வழங்கப்பட உள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் அம்மா இருசக்கர வாகனம் பெற விரும்புபவர்கள் கல்வி தகுதி ஏதும் பெற்றிருக்க வேண்டியதில்லை. 18 வயதிற்கு மேல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.

    விண்ணப்பம் செய்யும் பொழுது இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் அல்லது பழகுனர் ஓட்டுனர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்குள் இருத்தல் வேண்டும்.

    மேலும் இத்திட்டத்தில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் பெண்களின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், உதவி சமையலர்கள், கூட்டுறவு சங்கம் மற்றும் கடைகளில் பணிபுரியும் பெண்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறைகள், நிறுவனங்களில் பணிபுரிபவர், ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணிபுரியும் பெண்கள் ஆகியோரும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியானவர்கள். குடும்பத்தில் உள்ள ஒரு நபருக்கு மட்டுமே இருசக்கர வாகன மானியம் வழங்கப்படும்.. மாற்றுத்திறனாளி மகளிர் மூன்று சக்கர வாகனத்திற்கு ரூ.31 ஆயிரத்து 250 மானிய தொகை வழங்கப்படும்.

    இந்த திட்டத்தில் கிராமபுறத்திலிருந்து வெகுதொலைவில் வசிக்கும் பெண்கள், மலைவாழ் பகுதியில் வசிக்கும் பெண்கள், குடும்ப தலைவியாக ஆண் ஆதரவில்லாத நிலையில் உள்ள பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளி பெண்கள் 35 வயதிற்கு மேற்பட்ட 45 வயதிற்குட்பட்ட திருமணமாகாத பெண்கள், ஆதிதிராவிட பழங்குடியின பெண்கள், திருநங்கையர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் வயது பிறந்த தேதிக்கான சான்று (கட்டாய ஆவணம்), இருப்பிடச்சான்று (வாக்காளர் அடையாள அட்டை, வாகன ஓட்டுனர் உரிமம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவைகள்), வட்டார போக்குவரத்து அலுவலரால் வழங்கப்பட்ட இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம், பழகுனர் ஓட்டுனர் உரிமம் (கட்டாய ஆவணம்), வருமானச்சான்று, பணிபுரியும் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட பணிச்சான்று, கல்வித் தகுதிக்கு (மாற்றுச்சான்று உள்ளிட்டவை அடங்கியது), பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், சாதிச்சான்று (ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் மட்டும்), மாற்றுத்திறனாளி அடையாள அட்டை இருசக்கர வாகன விலைப்புள்ளி மாதிரி விலைப்பட்டியல் ஆகிய ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

    ஊரக பகுதிகளில் பணிபுரிந்து வரும் பெண்கள் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், நகர்புறத்தில் உள்ள பெண்கள் நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த அலுவலகத்திலேயே வழங்க வேண்டும்.

    மேலும் இது தொடர்பான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை சிவகங்கை மாவட்ட இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இவ்வறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×