என் மலர்tooltip icon

    சிவகங்கை

    ஆயுர்வேதம் படித்த டாக்டர்கள் நவீன அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி காரைக்குடியில் டாக்டர்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்.
    காரைக்குடி:

    ஆயுர்வேதம் படித்த டாக்டர்கள் நவீன அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி காரைக்குடி நகராட்சி அலுவலகம் முன்பு இந்திய மருத்துவ சங்கம் செட்டிநாடு கிளை சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 

    போராட்டத்திற்கு டாக்டர் ஆர்.வி.எஸ். சுரேந்திரன் தலைமை வகித்தார். உண்ணாவிரதத்தில் டாக்டர்கள் தேவகுமார், ஜோதி, நடேசன், கணேசன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
    காரைக்குடி அருகே நகராட்சி முன்பு குப்பை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி நகரின் சுகாதார சீர்கேடுகளை கண்டித்தும், காந்தி திடல் பகுதியில் நீண்டகாலமாக அப்புறப்படுத்தாமல் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்தக் கோரியும் மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் ராசகுமார் தலைமையில் நகராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு குப்பைகளை கொட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    சுகாதார சீர்கேடு குறித்து எழுதப்பட்ட வாசகங்களை பதாகையில் ஏந்தி ேகாஷமிட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் காரைக்குடி வடக்கு போலீசார் அங்கு சென்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் ராசகுமார், செயலாளர் ஆறுமுகம் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பாச்சேத்தி அருகே கண்மாயில் மூழ்கி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்புவனம்:

    திருப்பாச்சேத்தி அருகே உள்ள கொத்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி (வயது 63). விவசாயி. இவர் சம்பவத்தன்று காலை வயல் பகுதிக்கு சென்று விட்டு அங்குள்ள கண்மாய்க்கரை பக்கம் நடந்து சென்று உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால்தவறி கண்மாய்க்குள் விழுந்து விட்டார். இதில் நீரில் மூழ்கி அவர் பலியாகி விட்டார். அவரது உடல் கண்மாயில் மிதப்பதை அறிந்து அவரது குடும்பத்தினர் திருப்பாச்சேத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் திருப்பாச்சேத்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி, பலியான காந்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
    காரைக்குடி அருகே பெண்ணிடம் சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரை சேர்ந்தவர் பாரதி (வயது 28) இவர் அப்பகுதியில் உள்ள தனது உறவினரின் விசேஷத்திற்கு சென்றுவிட்டு சிவன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த வாலிபர் ஒருவர் பாரதி கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறித்தார் அப்போது பாரதி அணிந்திருந்த 3 தங்க சங்கிலிகளில் 2 சங்கிலி அறுந்து கீழே விழுந்தது. 6 பவுன் மதிப்புள்ள ஒரு சங்கிலி மட்டும் பறித்து கொண்டு அவன் தப்பி ஓடி விட்டான். இது குறித்த புகாரின் பேரில் பள்ளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இளையான்குடி அருகே விபத்தில் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இளையான்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடியை சேர்ந்த சந்திரன் மனைவி பாண்டியம்மாள் (வயது 45.).இவர் தாயமங்கலத்தில் தனது உறவினர் வீட்டிற்கு காதணி விழாவில் தனது மகன் சதீஷ்குமாருடன்(25) கலந்து கொண்டார். பின்னர் வீடு திரும்பும் போது சதீஷ்குமார் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து இருந்தார். இளையான்குடி கண்மாய் கரையில் வந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிறந்தநாள் கேக்கில் புழு இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த கேக்கை சாப்பிட்ட சிறுவனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
    காரைக்குடி:

    காரைக்குடி சத்யா நகரை சேர்ந்தவர் சோலையம்மாள். இவர் இரு மகன்களுடன் வசித்து வருகிறார். மூத்த மகன் குணால். 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    குணாலின் பிறந்தநாளை முன்னிட்டு தாயார் நேற்று காரைக்குடி அம்மன்சன்னதி மணிக்கூண்டு அருகில் உள்ள ஒரு பேக்கரி கடையில் கேக் வாங்கினார்.

    மாலையில் வீட்டில் கேக்கை வெட்டி உறவினர்கள் சிறுவனுக்கு ஊட்டி விட்டனர்.

    குணாலின் மாமா காளிதாஸ் கேக்கை வெட்டும் போது உள்ளே புழுக்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    புழுக்கள் இருந்த கேக்கை தின்ற குணாலுக்கு வாந்தி மற்றும் லேசான மயக்கம் ஏற்பட்டது.

    சோலையம்மளின் உறவினர்கள் பேக்கரி உரிமையாளரிடம் இது குறித்து கேட்டபோது, அவர் சரிவர பதில் கூறாமல் அலைக்கழித்துள்ளார்.

    இதனால் அங்கிருந்த பொதுமக்கள் கடைக்காரரிடம் வாக்குவாதம் செய்யவே அங்கு வந்த ரோந்து போலீசார் தலையிட்டு சமாதானம் செய்தனர்.

    தகவலறிந்த உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துக்குமார் கடை மற்று பொருட்களை ஆய்வுசெய்து பரிசோதனைக்கு மாதிரிகளை எடுத்துச்சென்றார்.

    இதுபற்றி சமூக ஆர்வலர் ஜான்பால் கூறுகையில், காரைக்குடி முழுவதும் பல பேக்கரி கடைகளில் இது போல காலாவதியான பொருட்களை விற்பனை செய்கிறார்கள்.

    உணவு பொருட்களை தயாரிக்கும் இடமும் சுகாதாரமில்லாமல் மோசமாக இருக்கிறது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சமத்துவபுரம் அமைத்து தரப்படும் என்று முகஸ்டாலின் கூறியுள்ளார்.
    சிவகங்கை:

    சிவகங்கையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசியதாவது, 

    சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சமத்துவபுரம் அமைத்து தரப்படும். கருணாநிதி ஒரு திட்டத்தை கொண்டு வந்தார் என்றால் அதை அதிமுக ஆட்சி நிறுத்திவிடும். 

    விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியவர்தான் முதல்வர் பழனிசாமி. விவசாயத்திற்கு முக்கியமான முல்லைபெரியாறு திட்டம் சிவகங்கை மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும். 

    தமிழர்களின் பெருமைகளை அழிக்க நினைக்கும் மத்திய அரசுடன் கூட்டு வைத்துள்ளது அதிமுக அரசு. சிவகங்கை அமைச்சரை நான் பலமுறை சட்டப்பேரவையில் தேடி பார்ப்பேன், ஆனால் கிடைக்க மாட்டார். எதுவும் செய்யாததுதான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயிய சாதனை. மக்களை பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு எந்த கவலையும் இல்லை. நீட்டு தேர்வு, 7 பேர் விடுதலை , விவசாயிகள் , சிறுபான்மை மக்களிடம் ஈபிஎஸ் நாடகம் நடத்தி வருகிறார் என்றார்.
    தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்ததால் நடப்பாண்டில் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகளிடம் இருந்து நெல்வரத்து குறைந்துள்ளது.
    கல்லல்:

    சிவகங்கை மாவட்டம் முழுவதும் கடந்த ஆண்டு சுமார் 80 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர். பொதுவாக ஜனவரி மாதம் முதல் விளைந்த நெல்பயிர்களை அறுவடை செய்வது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டு விளைந்த நெற்பயிர்களை கடந்த மாதம் அறுவடை செய்ய காத்திருந்த விவசாயிகளுக்கு புயல், மழை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து பெய்த மழையினால் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலப்பரப்பில் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நெல்பயிர்கள் தரையில் சாய்ந்தும், தண்ணீரில் மூழ்கியும், அழுகியும் ேபானது. பல நெற்பயிர்கள் மீண்டும் முளைத்து போனது. சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை இளையான்குடி, காளையார்கோவில், கல்லல், மானாமதுரை, சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதியில் இந்த பாதிப்பு அதிகளவில் இருந்தது.

    இதன் காரணமாக மீதம் எஞ்சியுள்ள பயிரை காப்பாற்றுவதற்காக விவசாயிகள் வயலில் தேங்கி மழைநீரை பம்பு செட் மூலம் அகற்றி ஓரளவு நெல்பயிரை காப்பாற்றி அதை தற்போது அறுவடை செய்து வருகின்றனர். இவ்வாறு அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு கொள்முதல் நிலையம் சார்பில் வாங்குவதற்காக மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமங்களில் உள்ள விவசாயிகளை சந்தித்து அங்கு நேரடியாக சென்று நெல்லை கொள்முதல் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கல்லல் அருகே வேப்பங்குளம் பகுதியில் இருந்து விவசாயிகளிடம் இருந்து அரசே ெநல் கொள்முதல் செய்து வருகிறது.

    ஆனால் கடந்தாண்டை விட இந்தாண்டு மிகவும் குறைவான நெல் மட்டுமே விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டதாக கொள்முதல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இந்தாண்டு போதிய அளவு விவசாயிகளிடம் இருந்து நெல்லை பெற முடியவில்லை. அதற்கு காரணம் பருவம் தப்பி பெய்த மழை தான். நடப்பாண்டில் நல்ல மழை பெய்து கண்மாய்கள் நிரம்பினாலும் கூட அவற்றினால் பாதிப்பு அதிகளவில் இருந்தது. இதனால் பெரும்பாலான விவசாயிகளிடம் இருந்து நெல்லை வாங்க முடியவில்லை. தற்போது ஒரு கிலோ நெல் ரூ.19.50-க்கு வாங்கி உள்ளோம். மேலும் தனியார் வியாபாரிகளிடம் விவசாயிகள் நெல்லை கொடுத்து ஏமாற வேண்டாம். அவர்கள் இடைத்தரகர் உதவியோடு மிகவும் குறைந்த விலைக்கு நெல்லை வாங்கி அவற்றை வெளிமார்க்கெட் பகுதியில் அதிகளவில் விற்பனை செய்வார்கள். எனவே விவசாயிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பொதுத்துறை வங்கியை தனியார் மயமாக்கும் முடிவு தவறானது என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
    சிவகங்கை:

    காங்கிரஸ் கட்சி சார்பில் சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் சிவகங்கையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன் வரவேற்று பேசினார். கூட்டத்தி்ல் கலந்து கொண்ட முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது:-

    சட்டமன்ற தேர்தல் வரஉள்ளது. இது மிக முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியிலும் நாம் வெற்றி பெற வேண்டும். கடந்தமுறை சிவகங்கை மற்றும் மானாமதுரை தொகுதிகளை நாம் இழந்து விட்டோம்.

    எனவே அந்த முறை அந்த 2 தொகுதியையும் நாம் கைப்பற்ற வேண்டும். சிவகங்கை, மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் நான் கூடுதலாக பிரசாரம் செய்ய உள்ளேன். சிவகங்கை மற்றும் மானாமதுரை தொகுதியில் நாம் வெற்றி பெற்றால் தான் முழு வெற்றி பெற்றதற்கு அடையாளம். 10 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சி செய்துள்ளது. ஆனால் கடந்த 3 மாதமாக தான் பல திட்டங்களை அறிவிக்கின்றனர்.

    3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியதை எதிர்த்து விவசாயிகள் போராடுகின்றனர். கடைசியில் விவசாயிகள் தான் வெற்றி பெறுவார்கள். மத்திய அரசின் பொம்மையாக மாநில அரசு உள்ளது. மத்திய அரசின் பட்ஜெட் முதலாளிகளுக்கான பட்ஜெட்டாக உள்ளது. தற்போது அறிவிக்கப்பட்ட பொதுத்துறை வங்கியை தனியார்மயமாக்கும் திட்டம் தவறான முடிவாகும். தேவையென்றால் புதிதாக தனியார் வங்கி தொடங்க அனுமதிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம், காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ. ராமசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரெத்தினம், மாவட்ட செயலாளர் கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    சிவகங்கையில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 5-வது நாளாக அரசு ஊழியர்கள் மறியலில் ஈடுபட்ட சம்பவம் குறித்து 47 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2-ந்தேதி முதல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தொடர் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    5-வது நாளான நேற்று சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற தொடர் மறியல் போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் பாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட இணைச்செயலாளர் வினோத் ராஜா முன்னிலை வகித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட 31 பெண்கள் உள்பட 47 பேரை சிவகங்கை நகர் போலீசார் கைது செய்தனர்.

    திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலக சுவற்றில் ஏறி வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    நெற்குப்பை:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி பஸ் நிலையத்தில் சுமார் ரூ.3.30 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு ஒப்பந்தப் புள்ளி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்து.

    ஒப்பந்தப்புள்ளி நடத்துவதற்காக நேற்று பேரூராட்சி அலுவலகம் முன்பு 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் குவிந்தனர்.

    இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகளுக்காக பழைய வியாபாரிகளும், புதிதாக ஒப்பந்தப்புள்ளி கோரியவர்களும் ஒரே நேரத்தில் கடைகள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் 2 மணி நேரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

    அப்பாது திடீரென பேரூராட்சி காம்பவுண்ட் சுவரில் ஏறி இடைய மேலூரைச் சேர்ந்த பூக்கட்டும் தொழிலாளி தினேஷ் என்பவர் தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார்.

    இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தமிழக சட்டசபை தேர்தலில் 3-வது அணிக்கு வாய்ப்பு இல்லை என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
    சிவகங்கை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சிவகங்கையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தைப் பொறுத்தவரை 2 அணிகள் தான். 3-வது அணிக்கு வாய்ப்பு இல்லை. ஒன்று தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி. இந்த கூட்டணி கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இருந்து தொடர்ந்து நீடித்து வருவது மட்டுமின்றி பலமாகவும் இருக்கிறது. மற்றொரு அணி அ.தி.மு.க. தலைமையில் இருக்க வேண்டும். ஆனால் இதுவரை அவர்கள் கூட்டணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

    சாதி மற்றும் மத ரீதியிலான கலவரங்களை தூண்டி விட்டு சிலர் அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர். அது தமிழகத்தில் நிறைவேறாது. வருகிற சட்டசபை தேர்தலில் 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என கூறும் அ.தி.மு.க. அரசு, உள்ளாட்சி தேர்தலையே சரிவர நடத்தி முடிக்கவில்லை. காரணம் அவர்களுக்கு தேர்தலைக் கண்டு அச்சம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×