என் மலர்tooltip icon

    சிவகங்கை

    அறந்தாங்கியில் இருந்து காரைக்குடி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ. 10 லட்சத்து 85 ஆயிரம் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி உரிய ஆவணங்களின்றி பணம் மற்றும் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.

    பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். காரைக்குடி அருகே உள்ள கண்டனூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரியும், வேளாண்மை துணை இயக்குநருமான அழகுராஜா தலைமையில் வடக்கு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அறந்தாங்கியில் இருந்து காரைக்குடி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ. 10 லட்சத்து 85 ஆயிரம் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து காரைக்குடி கருவூல அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அறந்தாங்கியை சேர்ந்த கண்ணன் என்பவர் குடும்பத்தாருடன் திருமணத்திற்காக காரைக்குடியில் நகைகள் வாங்க வந்தனர் என்பது தெரிய வந்தது.

    பயணிகளை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறி அரசு பஸ்சை வழிமறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
    திருப்பத்தூர்


    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அய்யாதுரை சந்து பகுதியில் வசித்து வரும் சிக்கந்தர், குடும்பத்தினருடன் மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் அரசு பஸ்சில் திருப்பத்தூர் வருவதற்காக ஏறினார். 

    அப்போது கண்டக்டர் திருப்பத்தூர் பயணிகளை ஏற்ற முடியாது என்று கூறினார்.  காரணம் கேட்டபோது கண்டக்டர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. 

    இதுகுறித்து சிக்கந்தர் திருப்பத்தூரில் தனது ஊர்க்காரர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் பொதுமக்கள் திருப்பத்தூர் காவல் நிலையம் முன்பு தஞ்சாவூர் செல்லும் அரசு பஸ்சை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

    திருப்பத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம், சப்இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர்.  அதன் பின்னர் சம்பவ இடத்தில் இருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். 


    மேலும் இதுகுறித்து சிக்கந்தர், திருப்பத்தூர் டவுன் போலீசில் அரசு பஸ் களண்டக்டர் குமரன் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு கொடுத்தார். மதுரையில் இருந்து திருப்பத்தூருக்கு தனியார் பஸ்கள் இயக்க  மறுக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் பல போராட்டங்கள் நடத்தினர். 

    தற்போது இதுபோன்ற பிரச்சினைகள் இல்லாமல் இருந்து வந்த நிலையில் அரசு பஸ் கண்டக்டர்  இதுபோன்று பயணிகளை அலைக்கழிப்பு செய்வது வேதனையாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் கணினி பட்டா திருத்த முகாம் நாளை நடக்கிறது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கணினி திருத்த சிறப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற உள்ளது. 

    அதன்படி  நாளை (2ந்தேதி) காரைக்குடி வட்டத்தில் ஜெயங்கொண்டான் கிராமத்திலும், தேவகோட்டை வட்டத்தில் சிறுகானூர் கிராமத்திலும், திருப்பத்தூர் வட்டத்தில் சிராவயல் கிராமத்திலும், சிங்கம்புணரி வட்டத்தில் மேலவண்ணாரிருப்பு கிராமத்திலும், சிவகங்கை வட்டத்தில் புதுப்பட்டி கிராமத்திலும், மானாமதுரை வட்டத்தில் கட்டிக்குளம் கிராமத்திலும், திருப்புவனம் வட்டத்தில் கானூர் கிராமத்திலும், இளையான்குடி வட்டத்தில் குமாரக்குறிச்சி கிராமத்திலும், காளையார்கோவில் வட்டத்தில் சேதாம்பல்  கிராமத்திலும் கணினி பட்டா திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

    பொதுமக்கள் மேற்கண்ட கிராமங்களில் நடைபெறும் முகாமில்  கலந்து கொண்டு கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன் அடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் இன்று அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன. பல மாதங்களுக்கு பின் 1ம் வகுப்பு மதல் 12ம் பகுப்பு வரை பள்ளிகள் திறக்ப்பட்டதால் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வந்தனர். 

    அவர்களை பள்ளி நுழைவு வாயிலில் தெர்மல் ஸ்கேன் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டும், கிருமிநாசினி மருந்து மூலம் கைகளை சுத்தப்படுத்திய பின் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டன.

    வகுப்பறைகளில் சமுக இடைவெளிவிட்டு அமர வைக்கப்பட்டனர்.

    இதே போல கல்லூரிகளும் திறக்கப்பட்டு இருந்தன.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தனியார் திருமண மஹாலில் சிவகங்கை காவல் துறை சார்பாக தேர்தல் பணி பாதுகாப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தனியார் திருமண மஹாலில் சிவகங்கை காவல் துறை சார்பாக தேர்தல் பணி பாதுகாப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. 

    இதில் தேர்தல் பாதுகாப்பு பணிகள் மற்றும் ஏனைய வழிகாட்டுதல் குறித்த ஆலோசனைகள் காவலர்களுக்கு வழங்கப்பட்டது .இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அன்பு, ராமசாமி, வெற்றிச்செல்வன் மற்றும் திருப்புத்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன், திருப்புத்தூர் உட்கோட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், போக்குவரத்து ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள், என பலரும் பங்கேற்றனர்.

    திருப்பத்தூரில் தேர்தல் பாதுகாப்பு கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு  சிவகங்கை காவல் துறை சார்பில் தேர்தல் பணி பாதுகாப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  செந்தில்குமார் தலைமையில் நடந்தது. 

    தேர்தல் பாதுகாப்பு பணிகள் மற்றும் ஏனைய வழிகாட்டுதல் குறித்த ஆலோசனைகள் காவலர்களுக்கு வழங்கப்பட்டன.

    இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அன்பு, ராமசாமி, வெற்றிச்செல்வன் மற்றும் திருப்பத்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன், திருப்பத்தூர் உட்கோட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், போக்குவரத்து ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் பங்கேற்றனர்.
    மானாமதுரை பகுதி கோவில்களில் சனி பிரதோஷம் நடைபெற்றது.
    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றங்கரையில் உள்ள ஆனந்தவல்லி&சோமநாதர் சுவாமி கோவிலில் தை பிரதோச விழா நடந்தது. அதைத்தொடர்ந்து சுவாமி- அம்பாள் கோவிலில் வலம் வந்தனர். 

    அனைத்து  நாட்களிலும் கோவிலில் வழிபாடு செய்யலாம் என்பது நடைமுறைக்கு வந்ததால் ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமிதரிசனம் செய்தனர்.

    இதேபோல் பரமக்குடி சாலையில் உள்ள குறிச்சி காசிவிஸ்வநாதர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் கங்கை நீரால் அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்தனர். அதைத்தொடர்ந்து காசி நந்திக்கு 16 வகையான அபிஷேகமும், 500 லிட்டர் பால் அபிஷேகமும் நடந்தது. 

    மேலநெட்டூர் சொர்ண வாரிஸ்வரர்,  இடைக்காட்டூர் மணிகண்டேஸ்வரர். ரெயில் நிலையம் எதிரே உள்ள பூர்ணசக்ரவிநாயகர் கோவிலில் உள்ள விஸ்வநாதர், தாயமங்கலம் ரோட்டில் உள்ள நம்பிநாகம்மாள் கோவில், மானாமதுரை சிருங்கேரி சங்கரமடம் ஆகிய இடங்களில் நடந்த சனிபிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
    நெற்குப்பை பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து வட்டார மேற்பார்வையாளர் ஆய்வு செய்தார்.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் 3,150 நபர்களும், பெண் வாக்காளர்கள் 3,281 நபர்களும், மூன்றாம் பாலினத்தவர் 1 நபரும் என மொத்தம் 6,432 வாக்காளர்கள் இருந்து வருகின்றனர். 

    இதில் 4&வது வார்டில் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் மட்டும் போட்டியிட முடியும் என்றும், 9&வது வார்டில் ஆதிதிராவிட இனத்தை சேர்ந்த ஆண், பெண் இருபாலரும் போட்டியிடலாம் என்றும், மீதமுள்ள 10 வார்டுகளில் பொதுப்பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று செயல் அலுவலர் கணேசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    தேர்தலுக்கான வேட்புமனு படிவங்களை போட்டியிட விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் நேற்று முன்தினம் முதல் பெற்று வரும் நிலையில், தேர்தல் பணிகள் நிலவரம் குறித்து தேர்தல்  வட்டார மேற்பார்வையாளர் குமார் ஆய்வு மேற்கொண்டார். 

    இந்த ஆய்வில் தேர்தல் பணிகள் நிலவரம் குறித்து செயல் அலுவலரிடம்  கேட்டறிந்தார்.   இதில் இளநிலை உதவியாளர் சேரலாதன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
    சிவகங்கை மாவட்டத்தில் கடனுதவி பெற புதிய தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட  கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

    தமிழ்நாடு அரசு ஒவ்வொரு  இளைஞரையும் தொழில் முனைவோராக உருவாக்குவதற்கு புதிய தொழில் தொடங்க முதல் தலைமுறை இளைஞர்களுக்கான புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தை மாவட்டத் தொழில் மையம் மூலமாக செயல்படுத்தி வருகிறது.

    இந்த திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் முதல் ரூ. 5 கோடி வரை வங்கிகள் மூலம் கடனுதவி பெறவும், தமிழக அரசின் மானியமாக திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது அதிகபட்ச மானியம் ரூ.75 லட்சமாக உயர்த்தி வழங்கவும்,  மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கூடுதலாக 10 சதவீத  மானியம் வழங்கவும்  தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 

    மேலும், வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில்¢ 3 சதவீத வட்டி மானியமாகவும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வரையறுக்கப்பட்ட வங்கிகள், தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி,  தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் மற்றும் தமிழ்நாடு கிராம வங்கிகள் மூலமாகவும் கடனுதவி வழங்கப்படுகிறது. மகளிருக்கு 50 சதவீத ஒதுக்கீடும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு சிறப்பு ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் மூலம்  கடனுதவி பெற முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும். தற்போது குறைந்தபட்ச கல்வி தகுதியாக 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.  21 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். 

    பொதுப்பிரிவினர் 35 வயதுக்குள்ளும் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். 

    ஏற்கனவே மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ் மானியத்துடன் கடன் பெற்றவர்கள் கடனுதவி பெற இயலாது. விவசாயம், வாகனம் மற்றும் மாசினை ஏற்படுத்தும் தொழில்கள் தவிர்த்து ஏனைய உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம்.  

    தகுதியுள்ள முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் விபரங்களை பூர்த்தி செய்து அதன் நகல் மற்றும் சான்றிதழ்களுடன் இணை இயக்குநர் - பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சிவகங்கை-630 562 என்ற விலாசத்திற்கு அனுப்ப வேண்டும்.

    மேலும் விபரங்களுக்கு சிவகங்கை மாவட்டத் தொழில் மைய பொது மேலாளரை நேரிலோ அல்லது அலுவலர்களை 89255 33991, 89255 33990 மற்றும் 89255 33989 என்ற செல்லிடபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    மகிபாலன்பட்டி ஊராட்சி, மற்றும் சிங்கம்புனரி வட்டத்திற்கு உட்பட்ட முறையூர் ஊராட்சி ஆகிய இரண்டு ஊராட்சிகளிலும் நடத்தப்பட்ட முகாமில் பெறப்பட்ட முப்பத்தி ஐந்து மனுக்களில் 14 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் பட்டா கணினி திருத்தம் முகாம் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் சுழற்சி முறையில்  வருவாய்த் துறையினரால் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் திருப்பத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட மகிபாலன்பட்டி ஊராட்சி, மற்றும் சிங்கம்புனரி வட்டத்திற்கு உட்பட்ட முறையூர் ஊராட்சி ஆகிய இரண்டு ஊராட்சிகளிலும் நடத்தப்பட்ட முகாமில் பெறப்பட்ட முப்பத்தி ஐந்து மனுக்களில் 14 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மேலும் மீதமுள்ள மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட நபர்களிடம் வருவாய்த் துறையினரால் நேரடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதற்கும் தீர்வு என்காணப்படும் என உறுதியளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருப்பத்தூர் வட்டாட்சியர் பஞ்சாபிகேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, மகிபாலன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், சிங்கம்புணரி வட்டாட்சியர் கயல்செல்வி,மண்டல துணை வட்டாட்சியர் சிவராமன், முறையூர் ஊராட்சி மன்ற தலைவர்  என்.எம்.சுரேஷ் மற்றும் வருவாய் அலுவலர்கள், கிராம அலுவலர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என பலரும் பங்கேற்றனர்.
    சிவகங்கை கிராபைட் ஆலையில் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கனிமவளத்துறை நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.
    சிவகங்கை

    சிவகங்கை யூனியன் கோமாளிப்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு கனிம நிறுவன கிராபைட் மேம்பாட்டு ஆலையை  கலெக்டர் மதுசூதன் ரெட்டி  முன்னிலையில்  கனிம வளத்துறை நிர்வாக இயக்குநர்  சுவித்ஜெயின்  பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

    அப்போது அவர்,  கனிம நிறுவன கிராபைட் ஆலையில் கனிம கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருவதை பார்வையிட்டதுடன், ஆலையில் கனிம பொடியாக தயாரிக்கப்பட்டு வருவதையும், கனிம பொருட்கள் சுத்திகரிக்கப்பட்டு வரும் பணிகளையும் பார்வையிட்டார். 

    அவர் கூறுகையில், தற்போது உற்பத்தி திறனுடன் கூடுதலாக உற்பத்தி திறனை அதிகரிக்க அலுவ லர்கள் மற்றும் பொறியாளர்கள் திட்டமிட வேண்டும். மேலும் திட்டப்பணிகளை விரிவுபடுத்துவதற்கும், ஆலையின் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் அரசிற்கு அறிக்கை சமர்ப்பித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். 

    இந்த பகுதியில் உள்ள கனிம நிறுவன கிராபைட் ஆலை அதிகஅளவு மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் பணிகளை திட்டமிட வேண்டும் என்று  அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின்போது உதவி பொது மேலாளர்கள்  ஹென்றி  ராபர்ட்,  சந்தானம், தொழிலக மேலாளர்கள்  முத்து சுப்பிரமணியன்,  ஜெயசேகர், கனிமவள மேலாளர்  ஹேமந்குமார் மற்றும்  பலர் உடன் சென்றனர்.
    மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் தேவகோட்டையில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை  உபகோட்டத்திற்குட்பட்ட  பூசலாக்குடி துணை மின் நிலையத்தில் நாளை(29-ந்தேதி) காலை 10 மணி முதல் மாலை 2  மணி வரை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. 

    இதன் காரணமாக  இந்த துணை மின் நிலையத்தில இருந்து மின் விநியோகம் செய்யப்படும்  கண்ணங்குடி, கப்பலு£ர், அனுமந்தகுடி, கண்டியூர், நாரணமங்களம், மு.சிறுவனூர், சாத்தனக்கோட்டை, தேரளப்பூர், சிறுவாச்சி, தேர்போகி, குடிக்காடு, கொடூர், வெங்களூர், மன்னன்வயல், தாழையூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என்று தேவகோட்டை மின்வாரிய உதவி செயற் பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்தார்.

    ×