என் மலர்
உள்ளூர் செய்திகள்

காரைக்குடி அருகே வாகன சோதனையில் ரூ.10 லட்சம் சிக்கியது
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி உரிய ஆவணங்களின்றி பணம் மற்றும் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.
பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். காரைக்குடி அருகே உள்ள கண்டனூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரியும், வேளாண்மை துணை இயக்குநருமான அழகுராஜா தலைமையில் வடக்கு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அறந்தாங்கியில் இருந்து காரைக்குடி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ. 10 லட்சத்து 85 ஆயிரம் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து காரைக்குடி கருவூல அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அறந்தாங்கியை சேர்ந்த கண்ணன் என்பவர் குடும்பத்தாருடன் திருமணத்திற்காக காரைக்குடியில் நகைகள் வாங்க வந்தனர் என்பது தெரிய வந்தது.






