என் மலர்
சிவகங்கை
- திருப்பத்தூர் பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
- 8 வார்டுகளிலும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து தகவல் தெரிவிக்க உறுப்பினர்களை சேர்த்து ஒரு குழு அமைக்கப்பட உள்ளது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு துறை சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. பேரூராட்சி சேர்மன் கோகிலா ராணி நாராயணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நகர் காவல் ஆய்வாளர் சுந்தர மகாலிங்கம் பங்கேற்று குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்.
திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள 18 வார்டுகளிலும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து தகவல் தெரிவிக்க உறுப்பினர்களை சேர்த்து ஒரு குழு அமைக்கப்பட உள்ளது. அந்த குழு வாட்ஸ்ஆப் குரூப் மூலம் தகவல்களை பரிமாறி குழந்தைகள் தொடர்பான குற்றங்கள் நடைபெறாத வகையில் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல் ஆய்வாளர் தெரிவித்தார். மேலும் 18 வயது வரை உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள், 24 மணி நேர இலவச தொலைபேசி எண் 1098, அவசர போலீஸ் எண் 100, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக எண் 04575240166 அறிவிக்கப்பட்டது. இதில் செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், எழுத்தர் ரேணுகாதேவி, சார்பு ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு தள்ளுபடி விற்பனையை சிவகங்ககை லெக்டர் தொடங்கி வைத்தார்.
- ஆடை தயாரிப்பவருக்கு அங்கீகாரம் கிடைப்பதுடன் பொருட்களின் தரம் குறித்தும் மக்கள் எளிதாக தெரிந்து கொண்டு பயன்பெறலாம் என்றார்.
சிவகங்கை
சிவகங்கையில் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். அவர் குத்துவிளக்கேற்றி சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:-
கோ-ஆப் டெக்ஸ் என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், 1935-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு தொடர்ந்து 87 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது.
இந்தியாவிலுள்ள கைத்தறி நிறுவனங்க ளிலேயே முதன்மை நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் திகழ்வதற்கு நெசவாளர்களின் ஒத்துழைப்பும், வாடிக்கையாளர்களின் பேராதரவும்தான் முக்கிய காரணம் ஆகும்.
உடல்நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்ப ரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருத்தியைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஆர்கானிக் புடவை ரகங்கள் விற்பனைக்கு உள்ளது. காஞ்சிபுரம் பட்டு சேலைகள், சேலம் பட்டு சேலைகள், திருப்புவனம் பட்டு சேலைகள் மற்றும் கோயம்புத்தூர் மென்பட்டு சேலைகள் விற்பனைக்கு தயாராக உள்ளது.
அரசுத்துறையின் பணியாளர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாளர்கள் கட்டாயம் கைத்தறி ஆடைகளை வாங்கும்போது உற்பத்தித்திறன் அதிகரிக்கும். அதேபோல் பொதுமக்களும் கைத்தறி ஆடைகளை பயன்படுத்தும்போது நெசவாளர்களின் பொருளாதார வளர்ச்சி அதிக நிலையை எட்டும்.
தற்போது தொழில்நுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்படும் ஆடைகளில் அந்த பணியாளர்கள் பெயர் மற்றும் முன்அனுபவம் குறித்த பதிவுகளும் வெளிவருகின்றன. இதன்மூலம் ஆடை தயாரிப்பவருக்கு அங்கீகாரம் கிடைப்பதுடன் பொருட்களின் தரம் குறித்தும் மக்கள் எளிதாக தெரிந்து கொண்டு பயன்பெறலாம். ஒவ்வொருவரும் கைத்தறி ஆடைகளை வாங்கி தனது பங்களிப்பு நெசவாளர் வளர்ச்சிக்காக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் பாலசுப்பிரமணியன் (ரகம் மற்றும் பகிர்மானம்), மேலாளர் முல்லைக்கொடி (பொறுப்பு) மற்றும் கோ-ஆப்டெக்ஸ் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- இளையான்குடி பேரூராட்சி தலைவர், துணைதலைவர் போட்டியின்றி தேர்வாயினர்.
- அவர்களுக்கு, தமிழரசி எம்.எல்.ஏ. வாழ்த்து தெரிவித்தார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சி யில் பெண்தலைவர் மற்றும் துணை தலைவராக இருந்த செய்யதுஜமிமா, சபுரியத்பீவி ஆகியோர் கடந்த மாதம் ராஜினாமா செய்து பதவிவிலகினார்கள். அதைதொடர்ந்து 13-வதுவார்டில் இடைதேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. நகர்செயலாளர் நஜீமுதின் மற்றும்14வதுவார்டு தி.மு.க. கவுன்சிலர் இபுராஹிம் ஆகியோர்பேரூராட்சி உறுப்பினர்களால் இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் போட்டியின்றி தலைவர், துணைதலைவராக தேர்வு செய்யப்பட்டனர்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட பேரூராட்சி தலைவர் நஜீமுதின், துணைத்தலைவர் இபுராஹிம் ஆகியோருக்கு மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, முன்னாள் எம்.எல்.ஏ. ஒன்றியசெயலாளர் சுபமதியரசன், பேரூராட்சி செயல்அலுவலர் கோபிநாத், மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் முக்கிய பிரமுகர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
- சிங்கம்புணரி அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
- இந்த விபத்து குறித்து எஸ்.வி. மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கம்புணரி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பிச்சங்காளபட்டியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மகன் ராவணன் (வயது 22). இவர் தனது தந்தை ஆறுமுகம் இறந்த பிறகு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மருதிபட்டியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் ராவணன் மருதிபட்டியில் இருந்து சிங்கம்புணரியை நோக்கி தனது மோட்டார்சைக்கிளில் சென்றார். அவர் அ.காளாப்பூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிர்பாராதமாக மோட்டார்சைக்கிள் மின்கம்பம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ராவணனை மீட்டு சிங்கம்புணரி தாலுகா தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து எஸ்.வி. மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விமானத்தில் இன்று மதுரை வருகிறார்.
- என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனைகளை விளக்கி பேசுகிறார்.
காரைக்குடி:
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விமானத்தில் இன்று(வியாழக்கிழமை) மதுரை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்குடிக்கு புறப்படுகிறார். மாலை 3.30 மணிக்கு காரைக்குடி எம்.ஏ.எம். மகாலில் நடைபெறும் பா.ஜனதா மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசுகிறார்.
மாலை 4.45 மணி முதல் 5.30 மணி வரை மகளிர் அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இரவு என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனைகளை விளக்கி பேசுகிறார். நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7.45 மணிக்கு பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் மகாலில் பகல் 11 மணிக்கு பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் அணிகளின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த நிகழ்ச்சிகளில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் சோழன் சித.பழனிசாமி, பா.ஜனதா கட்சி மாநில பொறுப்பாளர் ரவி, துணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மத்திய மந்திரி முருகன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை பா.ஜனதா. சிவகங்கை மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி தலைமையில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
- காரைக்குடியில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
- வீட்டிற்குள் முருங்கை மரம் விழுந்தது தொடர்பான பிரச்சினையில் செல்வி மகன் பாலாஜி மற்றும் சிலர் மகாலிங்கத்தை தாக்கினார்களாம்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் அசோக் நகர் பகுதியில் வசிப்பவர் மகாலிங்கம் (வயது 55). இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் செல்வி (42) என்பவருக்கும் வீட்டிற்குள் முருங்கை மரம் விழுந்தது தொடர்பான பிரச்சினையில் செல்வி மகன் பாலாஜி மற்றும் சிலர் மகாலிங்கத்தை தாக்கினார்களாம். இதுகுறித்து கடந்த 11-ந் தேதி வடக்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் செல்வி, பாலாஜி மற்றும் சிலர் மீது வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டபிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் வழக்கில் தொடர்பில்லாத பொறியியல் கல்லூரி மாணவர் தமிழ்ச்செல்வன் (20) மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து கைது செய்ததை எதிர்த்து 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தை
- இளையான்குடி பேரூராட்சியில் விழிப்புணர்வு சுவர் ஓவியம் பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.
- பிளாஸ்டிக் தீமைகள் பற்றியும் மஞ்சள் பைகள் பயன்பாடு அவசியம் பற்றியும் அழகிய ஓவியங்களுடன் அமைந்துள்ளது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் இளையான்குடி பேரூராட்சி உள்ளது. தற்போது பேரூராட்சி அலுவலகம் அருகே குழந்தைகளுக்காக சுற்றுச்சூழல் பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அலுவலகம் அருகில் கிழக்கு பகுதிகளில் உள்ள பெரிய ஊரணி சீரமைக்கப்பட்டு தற்போது பெய்தமழையால் நிரம்பி ரம்மியமாக காணப்படுகிறது.
இவற்றை பாதுகாக்கும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேரூராட்சி அலுவலக சுற்றுச்சுவர் மற்றும் தனியார் சுவர்களில் அனுமதி பெற்று மழைநீரின் அவசியம் பற்றியும், முழுசுகாதாரத்தை கடைபிடிக்கவேண்டியும், பிளாஸ்டிக் தீமைகள் பற்றியும் மஞ்சள் பைகள் பயன்பாடு அவசியம் பற்றியும் அழகிய ஓவியங்களுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுவர் ஓவியம் வரையப்பட்டு உள்ளது.
இதற்கான முயற்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் மற்றும் அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர், தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் முழுசுகாதாரத்தை வழியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்களுடன் செய்து வரும் பிரசாரம் பொதுமக்களிடேயே பாராட்டை பெற்று இளையான்குடி பேரூராட்சி நிர்வாகத்திற்கும் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.
- திருப்பத்தூரில் நாளை மின்தடை ஏற்படும்.
- இந்த தகவலை திருப்பத்தூர் மின் பகிர்மான செயற்பொறியாளர் செல்லதுரை தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (22-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி, கருப்பூர், தென்கரை, திருக்கோஷ்டியூர் மற்றும் மல்லாக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று திருப்பத்தூர் மின் பகிர்மான செயற்பொறியாளர் செல்லதுரை தெரிவித்துள்ளார்.
- சிவகங்கை செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் குழந்தைகளுக்கான கலை போட்டிகள் நடந்தது.
- பாட்டு, மாறுவேடம், நடனம் மற்றும் பேச்சுப்போட்டி என 4 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
காரைக்குடி
காரைக்குடி செல்ல ப்பன் வித்யா மந்திர் சர்வதேசப்பள்ளி மற்றும் காரைக்குடி சிட்டி லயன்ஸ் சங்கம் இணைந்து, 2 முதல் 6 வயது வரையிலுள்ள குழந்தைகளுக்கான பல்வேறு போட்டிகளை நடத்தியது.
பாட்டு, மாறுவேடம், நடனம் மற்றும் பேச்சுப்போட்டி என 4 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்பகுதியிலுள்ள பள்ளிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இதில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு ரொக்கப்பரிசு, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.மொத்தம் 72 வகையான பரிசுகள் வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவுக்கு பள்ளியின் தாளாளர் சத்தியன் தலைமை தாங்கினார். காரைக்குடி லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் மாவட்ட கவர்னர் ஜானகிராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முதல்வர் ராணி போஜன் வரவேற்றார். பள்ளியின் கல்வி அதிகாரி டாக்டர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். காரைக்குடி லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் கேபினட் செயலாளர் பாதம் பிரியன், மாவட்ட லியோ தலைவர் மதிவாணன், மண்டலத்தலைவர் முத்துகுமார், ஜோன் தலைவர் முத்துகண்ணன், பொருளாளர் லட்சுமணன், செயலா ளர் பழனிவேல், பிரெ சிடெண்ட் சண்முகசு ந்தரம், லியோ செயலாளர் தீப்ஷா, ஒருங்கிணைப்பாளர் ஆஷிஷ் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சாகிர் உசேன் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது.
- நிகழ்வினை தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் அப்துல் ரஹீம் ஒருங்கிணைத்தார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி இளங்கலை மற்றும் முதுகலை 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது. முதல்வர் அப்பாஸ் மந்திரி, தாவரவியல் துறைத்தலைவர் அஸ்மத்து பாத்திமா, துணைமுதல்வர் ஜஹாங்கிர், விலங்கியல் துறைத்தலைவர் ஆபிதீன் ஆகியோர் ஆலோசனைகள் வழங்கி பேசினர். தமிழ்த்துறை தலைவர் இப்ராஹிம் நன்றி கூறினார். நிகழ்வில் துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். நிகழ்வினை தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் அப்துல் ரஹீம் ஒருங்கிணைத்தார்.
- சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கராத்தே பயிற்சி முகாம் நடந்தது.
- இந்த முகாமை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி தொடங்கி வைத்தார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்ட கராத்தே சங்கம் சார்பில் சிறப்பு கட்டா பயிற்சி முகாம் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் நடந்தது. சங்க தலைவர் ருக்மா சரவணன் தலைமை தாங்கினார்.காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மதுரையில் இருந்து வருகை புரிந்த பிளாக் பெல்ட் 3-வது டான் பயிற்சியாளர் தன நாராயண பிரபு குழுவினர், சிறப்பு பயிற்சி அளித்தனர். இதில் சிவகங்கை மாவட்ட கராத்தே சங்க நிர்வாகிகள் வீரசேகர், தியாகராஜன், சிரஞ்சீவி, சந்தீப், அயயாரு, சண்முகவேல், கஸ்பாரவி உள்பட பலர் கலந்துகொண்டனர். பங்கேற்றவர்களுக்கு சான்றிதழை ஜே.சி.ஐ. காரைக்குடி கிங்ஸ் இயக்க தலைவர் ராஜீவ் வழங்கினார்.சங்க செயலாளர் சென்டாய் சுகுமார் நன்றி கூறினார்.
- காரைக்குடியில் அரசு சட்டக் கல்லூரி திறப்பு விழா நடந்தது.
- போட்டி மிகுந்த கல்வியாக சட்டக்கல்வி திகழ்கிறது என விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசினார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு சட்டக்கல்லூரிகாரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
அதை அமைச்சர்கள் ரகுபதி, பெரியகருப்பன், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். கார்த்தி சிதம்பரம் எம்.பி., காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி, மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி, சட்டத்துறை செயலர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். சட்டக்கல்வி இயக்குனர் விஜயலட்சுமி வரவேற்றார்.
இதில் அமைச்சர் ரகுபதி பேசியதாவது:-
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அன்று நான் டெல்லியிலிருந்து சிவகங்கையை பார்க்கிறேன் என்று சொன்னார். இன்று சிவகங்கையில் இருந்து கொண்டு டெல்லியையும் பார்க்கிறார். சிவகங்கையையும் பார்க்கிறார். சிவகங்கை மண்ணுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்ற பணியாற்றி வருவது, அவரை விட நாங்கள் இன்னும் உற்சாகத்தோடு பணியாற்ற வேண்டும் என்பதை நினைவு படுத்துகிறது. காரைக்குடிக்கு சட்டக்கல்லூரி வந்திருப்பதற்கு முழு காரணம் ப.சிதம்பரம்தான்.
என்னுடைய மாவட்டத்திற்கு கொண்டு வர முடியாவிட்டாலும் பக்கத்து மாவட்டத்திற்கு கொண்டு வந்துள்ளோம். நல்ல கல்லூரி கிடைக்க வேண்டும் என்றால் நல்ல மதிப்பெண் பெற வேண்டும். மதிப்பெண்கள்தான் மதிப்பை உயர்த்தும். இல்லையென்றால் பெற்றோரின் பர்சுதான் காலியாகும். அரசு கல்லூரியில் 10 ஆயிரம் ரூபாயில் படிப்பை முடித்து சென்று விடலாம். ஸ்காலர்ஷிப் இருந்தால் அந்த பணமும் திரும்ப கிடைத்து விடும். தனியார் கல்லூரியில் பல லட்சங்களை செலவு செய்ய வேண்டிவரும். பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான படிப்பு சட்ட படிப்பு என்றார்.
அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் மாணவர்கள் அனைவரும் தரமான கல்வி பெற வேண்டும் என்ற அடிப்படையில் புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நாட்டின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் சட்டக்கல்லூரியின் தேவை அத்தியாவசியமானதாக திகழ்கிறது.
பொறியியல், மருத்துவ படிப்புக்கு இணையாக சட்ட படிப்பும் முக்கிய அங்கம் வகிக்கிறது. இக்கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது, என்றார்.
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசுகையில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் காரைக்குடியில் புதிய அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 15-வது அரசு சட்டக்கல்லூரியான இதில் 80 இடங்கள் ஒதுக்கப்பட்டு முதல் கவுன்சிலிங் முடிந்து முதல் கட்டமாக 22 மாணவர்கள் குறிப்பாக சிவகங்கை, புதுக்கோட்டையை சேர்ந்த மாணவர்கள் இன்று சேர்ந்துள்ளனர்.
போட்டி மிகுந்த கல்வியாக சட்டக்கல்வி திகழ்கிறது. சட்ட கல்வி பயின்ற பெண்கள் அதிக அளவில் நீதிபதிகளாக உள்ளனர். இதுபோன்று இன்னும் புதிதாக பல்வேறு கல்லூரிகள் இந்த ஆட்சியில் தொடங்கப்பட வேண்டும்.
விரைவில் கட்டிடப் பணிகள் முடிந்து அதன் திறப்பு விழா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்க விரும்புகிறேன் என்றார்.
கார்த்தி சிதம்பரம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மாங்குடி, தமிழரசி ஆகியோரும் பேசினர்.
அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா, கோட்டையூர் பேரூராட்சி தலைவர் கார்த்திக்சோலை, சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த், நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் மற்றும்
உள்ளாட்சி பிரதிநிதிகள், தொழில் வணிக கழகத்தினர், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், தி.மு.க.- காங்கிரஸ் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். கல்லூரின் தனி அலுவலர் ராமபிரான் ரஞ்சித்சிங் நன்றி கூறினார்.






