என் மலர்
சிவகங்கை
- வைர மூக்குத்திகளை திருடிய மர்ம நபருக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.
- அதனை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இங்கு எதிரிகளை பழிவாங்க காசு வெட்டி போடும் வழக்கம் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள்.வெள்ளி, செவ்வாய், ஞாயிறு கிழமைகளில் பெண் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இந்த நிலையில் பத்ரகாளி அம்மன் சிலையில் இருந்த வைர மூக்குத்திகளை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இதுபற்றி நேற்று காலை தெரியவந்ததும் கோவில் செயல் அலுவலர், திருப்பு வனம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் வளாகம் முழுவதும் உள்ள கண்கா ணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் ஒரு மர்ம நபரின் உருவம் பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். மேலும் இரவு பணியில் இருந்த முன்னாள் ராணுவ வீரர் சீனிவாசன் மற்றும் 2 காவலாளிகளிடம் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருட்டு போன வைர மூக்குத்திகள் பல லட்சம் மதிப்புடையது. அதனை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- போதை மருந்து ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- இதில் 230 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை
சிவகங்கை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், போதைப்பொருள் எதிர்ப்பு கழகம் மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் இணைந்து போதை மருந்து ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி வரவேற்றார். சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆய்வுக்குழு செயலாளர் சார்பு நீதிபதி பரமேஸ்வரி தலைமை உரையாற்றினார். இளையான்குடி வட்டார மருத்துவ அலுவலர் அருண் அரவிந்த் ரிஷிஸ், சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முகம்மது, அப்ரோஸ், சேக் அப்துல்லா, பாத்திமா கனி, கல்லூரி போதைப்பொருள் ஒழிப்பு கழக ஒருங்கிணைப்பாளர் அஸ்மத்து பாத்திமா, இளையோர் செஞ்சிலுவைச்சங்கம் ஒருங்கிணைப்பாளர் நர்கீஸ் பேகம் ஆகியோர் செய்திருந்தனர். இதில் 230 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- கால்நடைகளுக்கு 21 நாட்கள் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
- 12 ஊராட்சி ஒன்றிய தலைமை கால்நடை மருந்தகங்களில் பாதுகாப்பான முறையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், கண்டாங்கிப்பட்டி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் கீழ், கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் 3-வது சுற்று தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கால்நடைகளின் நலன் காத்திடும் பொருட்டு, எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அரசின் தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சார்பில் கால்நடை பரா மரிப்புத்துறையின் மூலமாக 3-வது சுற்று (கோமாரி) தடுப்பூசி போடும் பணி, சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து மாட்டினங்க ளுக்கும் இலவசமாக 21 நாட்கள் தொடர்ச்சியாக மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடத்திட திட்டமிடப்பட்டு, அதற்கான பணி சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்டாங்கிப்பட்டி கிராமத்தில் தொடங்கி உள்ளது.
இதன்மூலம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பசுக்கள் 2 லட்சத்து11 ஆயிரத்து 458 மற்றும் எருமை மாடுகள் 742 என மொத்தம் 2 லட்சத்து 12 ஆயிரத்து 200 மாடுகள் பயன்பெற உள்ளன. இதற்கான தடுப்பூசிகள் மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றிய தலைமை கால்நடை மருந்தகங்களில் பாதுகாப்பான முறையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள 57 குழுவினர் மூலம் ஒவ்வொரு கிராமத்திற்கும் வழங்கு வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை கால்ந டைகளுக்கு செலுத்து வதனால், இதன் வாயிலாக தங்களது கால்நடைகளை, கால் மற்றும் வாய்க்காணை (கோமாரி) நோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்திட முடியும்.
இதனால் கறவை மாடுகள் பால் உற்பத்தி, எருதுகளின் வேலைத்திறன், கறவை மாடுகளின் சினை பிடிப்பு போன்றவைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு பாதுகாக்கப்படும். இதனை கால்நடை வளர்ப்போர் கருத்தில் கொண்டு, தங்களது பகுதிகளில் நடைபெறும் முகாமை நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டு, அனைத்து மாட்டினங்களுக்கும் இலவசமாக கோமாரி தடுப்பூசியினை செலுத்தி, உங்கள் கால்நடைகளை கோமாரி நோயில் இருந்து பேணி பாதுகாத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் நாகநாதன், துணை இயக்குநர் முகமதுகான், துணைப்பதிவாளர் (பால்வளம்) செல்வம், பொது மேலாளர், ஆவின் (காரைக்குடி) சாமமூர்த்தி, கண்டாங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தலைவர் மந்தக்காளை, உதவி இயக்குநர்கள், கால்நடை ஆய்வாளர்கள், பொமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது.
- மாற்றுத்திறனாளிகள் நீல நிற வேலை அட்டையை பெற்று பயன்பெறலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயற்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இந்த துறையின் அரசாணையின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பணிகள் வழங்கப்பட்டு வருவது தேசிய அளவில் முன்னோடி முயற்சியாகும்.
இந்த திட்ட வேலை அட்டை கோரும் 18 வயது நிரம்பிய மாற்றுத்தி றனாளிகள் அனைவருக்கும் பிரத்யேக நீல நிறத்திலான வேலை அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் இன்றைய தேதி வரை 4 ஆயிரத்து 796 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை முன்னதாக வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் வகையில் மாதந்தோறும் 2-வது செவ்வாய்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும், 2 மாதங்களுக்கு ஒரு முறை 2-வது செவ்வாய்கிழமை திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்கள் முன்னிலையிலும் குறைகேள் முகாம்கள் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நேற்று (1-ந்தேதி) தொடங்கி 10-ந்தேதி வரை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமை பயன்படுத்தி தாங்கள் வசிக்கும் பகுதியை சேர்ந்த ஊராட்சிமன்ற அலுவலகத்தை அணுகி தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் நீல நிற வேலை அட்டையை பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
- காரைக்குடி நகர்மன்ற தலைவர் வழங்கினார்.
காரைக்குடி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி-சேலை உள்ளிட்ட புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
அதனை முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமையில் காரைக்குடி நகர்மன்ற தலைவர் சே.முத்துத்துரை வழங்கினார்.
இதில் நகராட்சி ஆணையாளர் லட்சுமணன், பொறியாளர் கோவிந்தராஜன், உதவி பொறியாளர் சீமா, நகர் நல அலுவலர் மாலதி, சுகாதார ஆய்வாளர் சுந்தர், நகராட்சி அதிகாரிகள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், துரை.நாகராஜன், அனனை மைக்கேல், தெய்வானை இளமாறன், சாந்தி நாச்சியப்பன், மங்கையற்கரசி அடைக்கலம், கலா காசி நாதன், நாச்சம்மை சிவாஜி, மெய்யர், ராதா பாண்டியராஜன், முகமது சித்திக், பசும்பொன் மனோகரன், பிலோமினாள், ராணி சேட், ஹரிதாஸ், அஞ்சலிதேவி, ஹேமாதா செந்தில், அமுதா சண்முகம், கனகவல்லி, மலர்விழி பழனியப்பன், பூமிநாதன், திவ்யா சக்தி, அமுதா, மஞ்சுளா, சத்தியா கார்த்திகேயன், லில்லி தெரசு, தனம் சிங்கமுத்து, ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆலங்குடி யார் நகர்மன்ற நடுநிலை பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை நகர்மன்ற தலைவர் முத்துதுரை தொடங்கி வைத்தார். நகரின் பல்வேறு இடங்களில் கட்சி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு கள் வழங்கப்பட்டது.
- தேசிய விளையாட்டு போட்டியில் சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மாணவர் சாதனை படைத்தனர்.
- இதில் 65 பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
காரைக்குடி
அகில இந்திய வேளாண் பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், அரியானா மாநிலம் ஹிஸாரில் உள்ள சி.சி.எஸ். அரியானா வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்தது.
இதில் 65 பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அங்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன.
காரைக்குடி சேதுபாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் 2-ம் ஆண்டு மாணவர் கார்த்தீஸ்வரன் தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் கலந்து கொண்டு வட்டு எறிதல் போட்டியில் 2ம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கத்தை வென்றார்.
வெற்றி பெற்ற மாணவருக்கு சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தாளாளர் சேது குமணன், கல்லூரி முதல்வர் கருணாநிதி, இயக்குனர் கோபால், ஆலோசகர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
- மர வேலைபாடுகள், குளம், கல் இருக்கைகள், பசுமையுடன் புல்தரைகள், அழகு செடிகள், சிறு மரங்கள் வைக்கப்பட்டு உள்ளன.
- முதலமைச்சர் வருகையை முன்னிட்டு மதுரை, சிவகங்கை மாவட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ளது கீழடி கிராமம். கடந்த 5 ஆண்டுகள் முன்பு தமிழக அரசு சார்பில் அகழ்வாராய்ச்சி பணி தொடங்கியது. தி.மு.க. ஆட்சியில் இந்த பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் விரிவுபடுத்தப்பட்டது.
இங்கு நடத்தப்பட்ட ஆய்வில் பண்டைய காலத்தில் தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள், அணிகலன்கள், இரும்பு துண்டு உள்பட பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்தன. அப்போதைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட உறை கிணறு, சுடுமண், செங்கல் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கீழடி அருகே உள்ள கொந்தகை, மணலூர் போன்ற வைகை ஆற்று கரை பகுதியிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கி தற்போது நிறைவு பெற்றுள்ளன.
இதில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்தும் வகையிலும், பண்டைய தமிழர்களின் வாழ்வில் முறைகளை தற்போது நம் தலைமுறையினர் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையிலும் தமிழக அரசு சார்பில் கீழடியில் சுமார் ரூ.11 கோடி மதிப்பில் பிரம்மாண்டமான அகழ்வாராய்ச்சி வைப்பக கட்டிடம் செட்டிநாடு கட்டிட கலையில் அமைக்கப்பட்டுள்ளது.
சிற்ப கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தமிழகத்தில் உள்ள கோவிலில் உள்ள கல்மண்டபங்கள் போல் இங்கும் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மர வேலைபாடுகள், குளம், கல் இருக்கைகள், பசுமையுடன் புல்தரைகள், அழகு செடிகள், சிறு மரங்கள் வைக்கப்பட்டு உள்ளன.
பள்ளி மாணவ-மாணவிகள், முதியோர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் ஆகியோர் எளிதாக பார்வையிடுவதற்கு லிப்ட் வசதி, அழகிய வடிவைப்பில் மரபடிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. தனித்தனி கட்டிடங்களில் காட்சிபடுத்தப்படும் பொருட்களான மண்பாண்ட குடுவைகள், முதுமக்கள் தாழி, ஓடுகள், அணிகலன்கள், இதுதவிர சுவரில் வண்ண ஓவியங்கள், தத்ரூபமாக ஜல்லிக்கட்டு காளை சிலை மற்றும் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அறைக்கும் எளிதில் வந்துசெல்லும் வகையில் வழிகள், குளிர்ச்சி தரும் செட்டிநாடு ஆத்தங்குடி தரைகற்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு கேமரா, தீ தடுக்கும் சென்சார் கருவி, அலாரம் போன்றவை அமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது கீழடியில் சாலை அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணிகள் நாளை (3-ந்தேதி) நிறைவு பெறுகிறது.
வருகிற 5-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கீழடி அகழ்வாராய்ச்சி வைப்பகத்தை திறந்துவைத்து பார்வையிடுகிறார். அவரது வருகையை முன்னிட்டு மதுரை, சிவகங்கை மாவட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில் பஸ் வசதியே இல்லாமல் இருந்தது. தற்போது கீழடி அகழ்வாராய்ச்சி பணியால் இப்பகுதியில் கிராமங்களில் பஸ் வசதி, சாலை மற்றும் குடிநீர் வசதி, அரசு பள்ளிகள் மேம்படுத்தப்படும் பணிகள் நடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பண்டைய தமிழர்கள் தங்கள் பகுதியில் வாழ்ந்ததை பெருமையாக கருதுகின்றனர். கீழடி பகுதியில் அகழ்வாராய்ச்சியின்போது கிடைத்த பொருட்கள் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
- சிங்கம்புணரி அருகே மகன் இறந்த துக்கத்தில் தாய் பரிதாபமாக இறந்தார்.
- இளங்கோவன் பிறவியில் இருந்தே ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலம் வேளார் தெருவில் வசிப்பவர் சுந்தர வடிவேலு(வயது52). இவரது மனைவி மாணிக்கவல்லி(50). இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் இருந்தனர்.
இந்தநிலையில் ஒரே மகனான இளங்கோவன் பிறவியில் இருந்தே ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று மாணிக்கவள்ளி சிகிச்சை அளித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம்(27-ந்தேதி) இளங்கோவன் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். மகன் திடீரென இறந்துவிட்டதால் மாணிக்கவள்ளி மிகுந்த மனவேதனை அடைந்தார். அவர் சாப்பிடாமல் அழுது கொண்டே இருந்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று இரவு மாணிக்க வள்ளியும் இறந்துவிட்டார். மகன் இறந்த துக்கத்தில் மறுநாளே தாயும் பலியான சம்பவம் சிங்கம்புணரி பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பஞ்சாயத்து தலைவர்கள் நிலுவை இல்லாமல் பணிகளை நிறைவு செய்ய வேண்டும்.
- சிவகங்கை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் சிவகங்கையில் நடந்தது. அந்த கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராமப்புற வளர்ச்சியின் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து, அதில் தனிகவனம் செலுத்தி அனைத்து திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகளையும் துரிதமாக மேற்கொள்வ தற்கான பணிகளை மேற்கொண்டு வரு கிறார்.
2021-22-ம் நிதியா ண்டில் மத்திய நிதிக்குழு மானியம், 14-வது நிதிக்குழு மானியம் மற்றும் உபரிநிதி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளில் சிவகங்கை மாவட்டத்தில் 12 ஊராட்சிகள் 100 சதவீத பணிகளை நிறைவு செய்துள்ளது. அந்த ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுபோன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மொத்தம் 445 ஊராட்சி களிலும் 100 சதவீத பணிகளை நிறைவு செய்வ தற்கான நடவடிக்கைகளை அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும். நிலுவை இல்லாமல் பணிகளை நிறைவு செய்ய வேண்டும். அவை அடுத்த பணிகளை மேற்கொள்வ தற்கு அடிப்படையாக அமையும்.
ஒவ்வொரு ஊரா ட்சிகளிலும் பள்ளிகள், நூலகங்கள், அங்கன்வாடி மைய கட்டிடங்கள் ஆகி யவைகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், ஊராட்சிகளை மேம்படுத்துவதற்கு அடிப்படையான அரசின் திட்டங்கள் குறித்தும், ஊராட்சி மன்றத்தலைவர்கள் புரிதலுடன் இருக்க வேண்டும்.
அரசின் திட்டங்கள் குறித்த கையேட்டை ஒவ்வொரு ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கும் துறைரீதியாக வழங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கான சேவைகளை சிறந்த முறையில் வழங்குவதற்கு, பிற துறையுடன் ஒருங்கிணைத்து, அதற்கான சேவைகளை வழங்க வேண்டும்.
அரசால் செயல்படு த்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் அதன் பயன்களை பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் ஒவ்வொரு ஊராட்சி மன்ற தலைவர்களும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, முழு ஈடுபாடுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- திருப்பத்தூர் அருகே கண்மாய் பராமரிப்பு நிதிக்காக நடந்த மீன்பிடி திருவிழா நடந்தது.
- கிடைத்த மீன்களை சமையல் செய்வதற்காக கிராம மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டு சென்றனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கீழசெவல்பட்டியில் புது கண்மாய் பராமரிப்பு பணிக்காக நிதி திரட்டுவ தற்கு ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடத்தப் படுவது வழக்கம். இந்த ஆண்டும் விவசாய தேவைக்கு கண்மாய் நீரை பயன்படுத்தியதால் வற்றியது.
இதனைத்தொடர்ந்து கிராமமக்கள் ஒற்றுமையாக மீன் பிடிக்க முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் அறிவிப்பு செய்தனர். கண்மாய் மடை பராமரிப்பு மற்றும் இதர பராமரிப்புக்கு நிதி திரட்ட முடிவு செய்து ஊத்தா கூடை மூலம் முதலில் மீன் பிடிக்கவும், தொடர்ந்து கிராமமக்கள் மீன்பிடித்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டு மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடந்தது.
கீழ செவல்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரிய வர்கள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போட்டி போட்டுக்கொண்டு ஊத்தா கூடை, கச்சா, அரி, மீன்பிடி வலை உள்ளிட்ட உபகர ணங்களை கொண்டு ஜாதி, மத வேறுபாடின்றி ஒற்று மையாக கண்மாயில் மீன்களை பிடித்தனர்.
இதில் கட்லா, ரோகு, ஜிலேபி, கெளுத்தி, கெண்டை மீன்கள் கிடைத் தன. கிடைத்த மீன்களை சமையல் செய்வதற்காக கிராம மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டு சென்றனர்.
- துணிப்பைகளின் பழக்கத்தை பொதுமக்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சிவகங்கை கலெக்டர் அறிவுறுத்தினார்.
- ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்குக்கு தடை விதித்து 1.1.2019 முதல் இந்த நடைமுறை அமலில் உள்ளது.
சிவகங்கை
பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையிலும், பாரம்பரிய துணிப்பைகளை பயன்படுத்தும் பழக்கத்தை மீண்டும் நடைமுறைப் படுத்தும் விதமாகவும், சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் மஞ்சப்பை தானியங்கி எந்திரம், நிறுவப்பட்டு உள்ளது.
இதை கலெக்டர் மதுசூதன்ரெட்டி பொது மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
தமிழக அரசு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் சார்பில் வெளியிட்டுள்ள அரசாணையின்படி, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்குக்கு தடை விதித்து 1.1.2019 முதல் இந்த நடைமுறை அமலில் உள்ளது. வருங்கால சந்ததி யினர்களின் நலனுக்கா கவும், பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கப்பதற்கும், பாரம்பரிய துணிப்பைகளை பொதுமக்கள் பயன்படுத்தும் பழக்கத்தை மீண்டும் கொண்டு வரவும், தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 23.12.2021 அன்று "மீண்டும் மஞ்சப்பை" பிரசாரத்தை தொடங்கி வைத்தார். இந்த மஞ்சப்பை தானியங்கி எந்திரத்தில்10 ரூபாய் நாணயங்களாகவோ அல்லது இரண்டு 5 ரூபாய் நாணயங்களாகவோ அல்லது ஐந்து 2 ரூபாய் நாணயங்களாகவோ அல்லது பத்து 1 ரூபாய் நாணயங்களாகவோ செலுத்தி பொதுமக்கள் மஞ்சப்பை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த எந்திரம் 24 மணி நேரமும் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும். இதனை பொதுமக்கள் பயன்படுத்தி அரசின் அறிவுரையின்படி, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதற்கு முழு ஒத்துழைப்பு அளித்து பாரம்பரிய வகையில் துணிப்பைகளின் பழக்கத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு பங்களிப்பை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (கூடுதல் பொறுப்பு) ராஜராஜேஸ்வரி, உதவிப்பொறியாளர் சவுமியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்கள், 2600 ஆண்டுகளுக்கு முந்தயவை என அறிவிக்கப்பட்டு்ள்ளன.
- செட்டிநாடு கலை நயத்துடன் ரூ.11.03 கோடி மதிப்பீட்டில் புதிய அகழ் வைப்பக கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.
திருப்புவனம்:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் பல்வேறு கட்டங்களாக அகழாய்வு நடந்து பல்லாயிரக்கணக்கான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இவற்றை காட்சிப்படுத்த அகழ் வைப்பகம், 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.11 கோடியே 3 லட்சம் செலவில் கட்டப்பட்டு இருக்கிறது. உலோக பொருட்கள், மண்பாண்ட பொருட்கள், பழங்கால கட்டிட மாதிரிகள், காதணிகள், தங்க பொருட்கள் ஆகியவற்றுக்கு தனித்தனி கட்டிடங்களுடன் இந்த அகழ் வைப்பகம் கட்டப்பட்டு உள்ளது.
கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்கள், 2600 ஆண்டுகளுக்கு முந்தயவை என அறிவிக்கப்பட்டு்ள்ளன.
எனவே அதற்கு ஏற்ப பழமை மாறாமல் பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏற்ப மர வேலைப்பாடுகளும் செய்யப்பட்டு்ள்ளன.
செட்டிநாடு கட்டுமான பாணியில் தேக்கு மரங்களால் தட்டு ஓடுகளுடன் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறையிலும் கண்காணிப்பு கேமராக்கள், தானியங்கி தீ எச்சரிக்கை கருவிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த அகழ் வைப்பகத்தை வருகிற 5-ந்தேதி மாலையில், நேரில் வந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை பார்வையிடுவதுடன், காட்சிப்படுத்தப்பட்டுள்ள கீழடி அகழாய்வு பொருட்களையும் பார்வையிடுகிறார்.
இந்தநிலையில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி கீழடி அகழ் வைப்பகத்தில் நடைபெற்று வரும் திறப்பு விழா முன் ஏற்பாடுகள் தொடர்பாக நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-
கீழடி அகழாய்வு பணியில் கிடைக்கப்பெற்ற தொல்பொருட்கள் மூலம் தமிழர்கள் 4000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நாகரிகத்துடன் வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாகவும், அப்பொருட்களை உலகத்தில் பல்வேறு பகுதியிலிருந்து இங்கு வரும் மக்கள் பார்த்து எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், செட்டிநாடு கலை நயத்துடன் ரூ.11.03 கோடி மதிப்பீட்டில் புதிய அகழ் வைப்பக கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவுக்கான முன் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், வருவாய் அலுவலர் மணிவண்ணன், தொல்லியல் துறை ஆணையர்(பொறுப்பு) சிவானந்தம், கீழடி கட்டிட மையம் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் மணிகண்டன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, திருப்புவனம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.






