என் மலர்
சேலம்
- ஏற்காட்டில் நேற்று காலை தொடங்கிய மழை இன்று காலை வரை இடி, மின்னலுடன் சாரல் மழையாக கொட்டியது.
- நேற்றிரவு 10 மணியளவில் வீட்டில் இடி விழுந்தது. இதில் வீடு மற்றும் வீட்டில் இருந்த பொருட்களும் எரிந்து சாம்பலானது.
ஏற்காடு:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. குறிப்பாக ஏற்காட்டில் நேற்று காலை தொடங்கிய மழை இன்று காலை வரை இடி, மின்னலுடன் சாரல் மழையாக கொட்டியது.
இந்தநிலையில் ஏற்காடு மாரமங்களம் பஞ்சாயத்து கொம்புதூக்கி கூத்து முத்தல் கிராமம் மந்திரி தெருவை சேர்ந்த தொழிலாளி வெங்கட்ராமன் (52) என்பவர் நேற்றிரவு வீட்டின் வெளியில் படுத்திருந்தார். வீட்டிற்குள் அவரது மனைவி தனம் (46), மற்றும் அவ ரது குடும்பத்தினரான ராஜேந்திரன் (29), சந்தியா (24), பிரபாகரன் (27), மகேஷ்வரி (24), வர்ஷிணி (3), கனிஷ்கா (1) ஆகியோர் படுத்திருந்தனர்.
எரிந்து சாம்பல்
இந்தநிலையில் நேற்றிரவு 10 மணியளவில் வீட்டில் இடி விழுந்தது. இதில் வீடு மற்றும் வீட்டில் இருந்த பொருட்களும் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தால் வீட்டில் வெளியில் படுத்திருந்த வெங்கட்ராமனின் கை மற்றும் கால் செயலிழந்தது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வீட்டில் படுத்திருந்தவர்கள் அனைவரும் காயமின்றி தப்பினர்.
ஆனால் வீட்டில் இருந்த அத்தியாவசிய பொருட்கள் எரிந்து சாம்பலானது. தகவல் அறிந்த ஏற்காடு போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காவிரி பாசன பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்து வருகிறது.
- இதனால் இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெல், மக்காசோளம், கரும்பு, பருத்தி, வாழை, மரவள்ளி கிழங்கு வயல்களில் தண்ணீர் சூழ்ந்து சேதம் அடைந்துள்ளன.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி கூடக்கல், குப்பனூர், மோளப்பாறை, பில்லுக்குறிச்சி உள்ளிட்ட காவிரி பாசன பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்து வருகிறது.
இதனால் இப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் நேற்று இரவு பூலாம்பட்டி சுற்று வட்டார பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்தது.
இதனால் இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெல், மக்காசோளம், கரும்பு, பருத்தி, வாழை, மரவள்ளி கிழங்கு வயல்களில் தண்ணீர் சூழ்ந்து சேதம் அடைந்துள்ளன.
இதேபோல் பூலாம்பட்டி அடுத்த குப்பனூர் பகுதியில் விவசாயி சக்திவேல் என்பவர் வீட்டு அருகில் இருந்த தென்னை மரத்தில் இடி தாக்கியதில் தென்னை மரம் பற்றி எரிய தொடங்கியது. அப்போது சக்திவேலின் வீட்டிலிருந்த மின்சாதன பொருட்கள் அனைத்தும் வெடித்து சிதறின. மேலும் அப்பகுதியில் உள்ள பல வீடுகளில் மின்சாதன பொருட்கள் பழுதடைந்தது.
பூலாம்பட்டி மற்றும் சுற்று வட்டார காவிரி பாசன பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.
- சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் விளையும் பாக்குக்காய்களை பதப்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ‘கொட்டைப்பாக்கு’ தமிழகத்தில் வாசனை பாக்கு தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறது.
- எஞ்சிய பாக்குத்தோலை சாலையோரம், மயானம், ஏரிகள், ஆறு, ஓடை, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள், பொது இடங்களில் கொட்டுவது வாடிக்கையாகி விட்டது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் விளையும் பாக்குக்காய்களை பதப்படுத்தி உற்பத்தி செய்யப்படும் 'கொட்டைப்பாக்கு' தமிழகத்தில் வாசனை பாக்கு தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, மஹாராஷ்டிரா, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பீகார், குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களில் பான்பராக், பான் மாசாலா, குட்கா போன்ற பாக்கு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம், கொட்டவாடி, குறிச்சி, பொன்னாரம்பட்டி பகுதியில் பாக்குக்காய்களின் இருந்து கொட்டைப்பாக்கு பிரித்தெடுத்த பிறகு எஞ்சிய பாக்குத்தோலை சாலையோரம், மயானம், ஏரிகள், ஆறு, ஓடை, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள், பொது இடங்களில் கொட்டுவது வாடிக்கையாகி விட்டது. இதுமட்டுமின்றி இந்த பாக்குத்தோலை சிலர் தீ வைத்து எரிக்கவும் செய்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு மழை காலத்தில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
எனவே பொது இடங்களில் பாக்குத்தோல் கொட்டுவதை தடுத்து இவற்றை பதப்படுத்தி ஊதுபத்தி, சாம்பிராணி, கொசுவிரட்டிகள், கலப்பு உரம் தயாரிக்கவும், நாரை பிரித்தெடுத்து இன்னும் பிற மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதற்கும் தோட்டக்கலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணைந்து வழிவகை செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பாக்குத் தோலை பொது இடங்களில் கொட்டுவதை தவிர்க்கவும், முதற்கட்டமாக இதனை பதப்படுத்தி எரிபொருளாக பயன்படுத்துவதற்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்களும், ஊராட்சி மன்றமும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சேலம் கலெக்டர் கார்மேகம் கடந்தாண்டு உத்தரவிட்டார். ஆனால் இத்திட்டம் இதுவரை செயல்வடிவம் பெறவில்லை.
குறிப்பாக பெத்த நாயக்கன்பாளையம் ஒன்றியம் கொட்டவாடி மற்றும் பேளூர் கரடிப்பட்டி ஊராட்சி எல்லையில் உள்ள வசிஷ்ட நதியால் நீர்வரத்து வரும் கொட்டவாடி ஏரியிலும் பாக்குத் தோல் குவியல்கள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருவதால் சுற்றுச்சூழல் பாதிப்பும், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.
எனவே கொட்டவாடி ஏரியில் கொட்டப்பட்டுள்ள பாக்குத்தோல் குவியல்களை அகற்றவும், இனிவரும் காலங்களில் பாக்குத்தோல் கொட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் வாழப்பாடி கோபிநாத் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வாழப்பாடி ஒன்றியம் காட்டுவேப்பி லைப்பட்டி ஊராட்சியில் காளியம்மன் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
- இப்பள்ளியில் கடந்த 2019–-ம் ஆண்டில் 3 மாணவர்கள் மட்டுமே படித்ததால் மூடப்படும் நிலையில் இருந்தது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றியம் காட்டுவேப்பி லைப்பட்டி ஊராட்சியில் காளியம்மன் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கடந்த 2019–-ம் ஆண்டில் 3 மாணவர்கள் மட்டுமே படித்ததால் மூடப்படும் நிலையில் இருந்தது.
அர்ப்பணிப்பு
இந்நிலையில் இப்பள்ளிக்கு நியமிக் கப்பட்ட தலைமை யாசிரியர் ஸ்ரீதர், இடைநிலை ஆசிரியர் புவனேஸ்வரி ஆகியோரது முயற்சி, அர்ப்பணிப்பு கல்விப் பணியால், மாணவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது.
இதுகுறித்து தகவலறிந்த முத்தம்பட்டி தனியார் பால் பண்ணை இயக்குனர் கோபால்சாமி இப்பள்ளி கட்டிடத்தை புதுப்பிக்க உதவினார். கிராம மக்கள், மாணவர்களின் பெற்றோர்கள், தன்னார்வ லர்கள் ஒத்துழைப்பால் பள்ளி வளாகம் புதுப்பொலிவு பெற்றது.
சிறந்த தொடக்கப் பள்ளி விருது
இப்பள்ளி பள்ளி தலைமையாசிரியர் ஸ்ரீதருக்கு தமிழக அரசு டாக்டர் ராதா கிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தது. இதனைத் தொடர்ந்து 2022- 2023- ம் ஆண்டிற்கான தமிழக பள்ளி கல்வித்துறை வழங்கும் மாவட்ட அளவில் சிறந்த தொடக்கப் பள்ளி விருதுக்கு காளியம்மன் புதூர் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வருகிற 14-ந் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சிறந்த பள்ளிக்கான கேடயத்தை வழங்க உள்ளார். இவ்விருதை பள்ளி தலைமையாசிரியர் ஸ்ரீதர், வட்டார கல்வி அலுவலர்கள் நெடுமாறன், வித்யா, ஆசிரியை புவனேஸ்வரி ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.
அரசு வழங்கும் மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான விருது பெறும் காளியம்மன் புதூர் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர் மற்றும் மாண வர்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் சிவராஜ், துணைத் தலைவர் சரவணன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சரண்யா மற்றும் கிராம மக்கள், பெற்றோர்கள், தன்னார்வ லர்கள், கல்வியாளர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
- தற்கொலை செய்வதற்கு முன்பு நவீன் தனது அண்ணனுக்கு போன் செய்து தூக்குப்போட்டு சாகப் போவதாக தெரிவித்துள்ளார்.
- போலீஸ்காரர் நவீன் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
மகுடஞ்சாவடி:
சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா அ.புதூர் கிராமம் சுண்டமேட்டூரில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவரது மகன் நவீன் (வயது 25). போலீஸ்காரர்.
இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் போலீஸ் ஆக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் நவீன் நேற்று இரவு 10 மணியளவில் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பு நவீன் தனது அண்ணனுக்கு போன் செய்து தூக்குப்போட்டு சாகப் போவதாக தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு வீட்டிற்கு ஓடி வந்து பார்த்த அவரது அண்ணன், தனது தம்பி நவீன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு நவீனை கொண்டு சென்றார். அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
போலீஸ்காரர் நவீன் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் நவீன் உடலை கைப்பற்றி பிரேத பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து நவீன் தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தமிழகத்துக்கு இந்த மாதம் திறந்து வேண்டிய தண்ணீரும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடவில்லை.
- தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து கடந்த மாதம் 10-ந் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் குறைந்தது.
இதற்கிடையே தமிழகத்துக்கு இந்த மாதம் திறந்து வேண்டிய தண்ணீரும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடவில்லை. ஆனாலும் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
அணைக்கு வரும் நீர்வரத்தை விட குறைந்த அளவிலேயே அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 498 கனடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர்மட்டம் 54.55 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- லாரிகள் உள்பட இலகு ரக வாகனங்களுக்கு காலாண்டு வரி உயர்த்தப்பட்டுள்ளது.
- தமிழகம் முழுவதும் நாளை ஒரு நாளில் பல ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கும், பல ஆயிரம் டன் பொருட்கள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சேலம்:
தமிழகத்தில் 6 லட்சம் லாரிகள், 25 லட்சம் இலகு ரக வாகனங்கள் உள்ளன. இதில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் வட மாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன.
வடமாநிலங்களில் இருந்து வெங்காயம், பருப்பு, துணி வகைகள், மளிகை பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. இதே போல தமிழகத்தில் இருந்து ஜவ்வரிசி, கல்மாவு, துணி வகைகள், இரும்பு தளவாடங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
லாரிகள் உள்பட இலகு ரக வாகனங்களுக்கு காலாண்டு வரி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் வாகனங்களுக்கு வரி விதிக்கப்படுகிறது. டீசல் விலை, உதிரி பாகங்கள் விலை உயர்வு, காப்பீட்டு கட்டண உயர்வு, லாரிகளுக்கு சரக்குகள் கிடைக்காமை உள்பட பல்வேறு காரணங்களால் லாரி தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வரிகளால் தொழில் மேலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள் மற்றும் இலகு ரக வாகன உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் நாளை (9-ந்தேதி) ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
இதனால் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகம் முழுவதும் லாரிகள், இலகு ரக வாகனங்கள், ஆம்னி பஸ்கள் ஓடாது. இதனால் தமிழகம் முழுவதும் நாளை ஒரு நாளில் பல ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கும், பல ஆயிரம் டன் பொருட்கள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் டிரைவர்கள், கிளீனர்கள், தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் கூறியதாவது:-
வாகனங்களுக்கான காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் வழக்குப்பதிவை ரத்து செய்ய வேண்டும், அரசு மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை(9-ந் தேதி) தமிழகம் முழுவதும் லாரிகள், ஆம்னி பஸ்கள், இலகு ரக வாகனங்களை நிறுத்தி வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம்.
இதனால் தமிழகத்தில் 6 லட்சம் லாரிகள், 25 லட்சம் இலகு ரக வாகனங்கள் இயங்காது, தமிழக அரசு இதுவரை எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. மாநில அரசுக்கு எங்களது கோரிக்கையை தெரிவிக்கும் வகையில் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.
சுங்க கட்டணம் அதிகரிப்பு, டீசல் விலை உயர்வால் லாரி தொழிலை நடத்த முடியாத நிலை உள்ளது. தமிழக அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் பொதுக்குழு கூடி அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்வோம்.
ஆந்திரா, கேரளா, கர்நாடகம், தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை அந்தந்த மாநில எல்லைகளில் நிறுத்தி வைக்க கேட்டுள்ளோம், அதே போல தமிழகத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு லாரிகள் இயக்கப்படாது.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக ஒரே நாளில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் பாதிக்கும். லாரி உரிமையாளர்களுக்கு ரூ.200 கோடி இழப்பு ஏற்படும். அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, கியாஸ் சிலிண்டர் லாரிகள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினர்.
- கணேசன் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் 18 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.
- ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.30 லட்சம் வரை பணத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேட்டூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கோவிந்தபாடியை சேர்ந்தவர் கணேசன் (49). இவருக்கு சிவகாமி (45) என்ற மனைவியும், 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். கணேசன் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் 18 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் ஓசூரில் இருந்து பஸ் மூலம் மேட்டூர் வந்த கணேசன் சொந்த கிராமத்தில் உறவினர்களை சந்தித்து விட்டு நீர்தேக்க பகுதியான பண்ணவாடி காவிரி ஆற்றுக்கு நேற்று மாலை வந்தார். பின்னர் திடீரென காவிரி ஆற்றில் குதித்து விட்டார். இதனைக் கண்ட மீனவர்கள் உடனடியாக கொளத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீனவர்கள் உதவியுடன் கணேசனை தேடினர். நள்ளிரவு ஒரு மணி அளவில் கணேசன் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவிரி கரையில் இருந்த கணேசனின் உடைமைகளை கைப்பற்றி போலீசார் சோதனை செய்தனர். அதில் கணேசன் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
அந்த கடிதத்தில், ராஜேஷ் கண்ணா என்பவருக்கு ரூ.8 லட்சம் ரூபாய் கடன் கொடுக்க வேண்டும். கடனை அடைக்க ஓசூரில் உள்ள வீட்டை விற்பனை செய்து விடலாம் என மனைவியிடம் கேட்டபோது அவர் மறுத்துவிட்டார். வாங்கிய கடனை கொடுக்க முடியாததால் கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறேன். நான் இறந்தவுடன் நான் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து வரும் பணத்தை கடன் வாங்கியவர்களிடம் தரவேண்டும். எனது வேலையை என்னுடைய 2-வது மகளுக்கு வழங்க வேண்டும் என எழுதி வைத்திருந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கணேசன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கணேசனின் உறவினர்கள் கூறுகையில், ஆன்லைன் சூதாட்டத்தில் மோகம் கொண்ட கணேசன் வீட்டில் இருந்த தங்க நகைகளை விற்றும், உறவினர்களிடம் பணத்தை கடன் வாங்கியும் விளையாடினார். ஆன்லைன் சூதாட்டத்தில் சுமார் ரூ.30 லட்சம் வரை இழந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டதால் வீட்டை விற்று கடனை அடைக்கலாம் என மனைவி சிவகாமியிடம் யோசனை தெரிவித்தார். இதற்கு மனைவி சம்மதம் தெரிவிக்காததால் கடனை கட்ட முடியாமல் மன உளைச்சலில் காவிரி ஆற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவித்தனர்.
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.30 லட்சம் வரை பணத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேட்டூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சேலம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக வெள்ளித்தொழில் முக்கிய தொழிலாக உள்ளது.
- இதனை நம்பி மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக வெள்ளித்தொழில் முக்கிய தொழிலாக உள்ளது. இதனை நம்பி மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.
குறிப்பாக சேலம் செவ்வாய்பேட்டை, குகை, சிவதாபுரம், பனங்காடு, நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், இளம்பிள்ளை உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளி பட்டறைகள் உள்ளன.
சேலம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளி கொலுசுக்கு தனி மவுசு உண்டு என்பதால் வட மாநில வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்வார்கள். இதனால் இங்கு உற்பத்தி செய்யப்படும் கொலுசு, அரைஞான் கொடி, மெட்டி உள்ளிட்ட வெள்ளி பொருட்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் வட மாநிலங்களுக்கும் அதிக அளவில் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.
வாழ்வாதாரம் பாதிப்பு
தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மக்கள் வெள்ளிப் பொருட்கள் அதிக அளவில் வாங்குவார்கள். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடப்பதால் வட மாநிலங்களுக்கு வெள்ளி பொருட்கள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .
இதனால் வழக்கத்தை விட வெள்ளி ஆர்டர்கள் குறைந்துள்ளதால் வெள்ளி தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனால் அவர்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
5 மாநிலங்களில் தேர்தல்
இதுகுறித்து சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர் கைவினை நல சங்க தலைவர் ஆனந்தராஜன் கூறியதாவது,
வெள்ளி பொருள்களுக்கு பண்டிகை காலங்களில் ஆர்டர்கள் அதிகமாக கிடைக்கும். அதன்படி தீபாவளியை முன்னிட்டு வியாபாரிகளிடமிருந்து ஆர்டர்களை எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடப்பதால் ஆர்டர்கள் குறைந்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக ஆர்டர்கள் வழங்க வியாபாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். வெள்ளிக்கான ரசீது இருந்தாலும் தேர்தல் அதிகாரிகளால் சில நேரங்களில் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.
தெலுங்கானா மத்திய பிரதேசத்தை கடந்துதான் பல மாநிலங்களுக்கு செல்ல வேண்டும். தீபாவளி பண்டிகைக்காக இதுவரை 50 சதவீதம் மட்டுமே ஆர்டர் கிடைத்துள்ளது. இதனால் நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம் .மேலும் கடந்த 4-ந் தேதி ஒரு கிராம் வெள்ளி 77 ரூபாய். பார்வெள்ளி ஒரு கிலோ 77 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது .
இந்த நிலையில் நேற்று வெள்ளி கிராமிற்கு 20 காசு உயர்ந்து 77 ரூபாய் 20 காசுக்கும், பார்வெள்ளி 200 ரூபாய் உயர்ந்து 77 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையானது .
வேலை இழப்பு
தேர்தல் அறிவிப்பு மற்றும் நிலையற்ற வெள்ளி விலையால் வெள்ளி விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. இதனால் வெள்ளி தொழிலாளர்கள் பலர் வேலை இழந்துள்ளனர். இதனால் இனிவரும் நாட்களில் தேர்தல் கமிஷன் வெள்ளி தொழிலாளர்கள் போதுமான ஆதாரங்கள் வைத்திருந்தால் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்வதை தவிர்த்து வெள்ளி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினர்.
- ராமசாமி (வயது 73). இவர் கடந்த மாதம் 26 -ந் தேதி சேலம் அரியானூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
- அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
சேலம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஜே.கே. கே. ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 73). இவர் கடந்த மாதம் 26 -ந் தேதி சேலம் அரியானூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அவரை கொண்டலாம்பட்டி போலீசார் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று இரவு ராமசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் அஸ்தம்பட்டி நேதாஜி நகரை சேர்ந்தவர் சரஸ்வதி அம்மாள் (வயது 75). இவரது வீட்டின் மேற்கூரை கீற்று கொட்ட கையால் வேயப்பட்டதாகும். இவர் சமீபகாலமாக திருச்செங்கோட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு சேலத்தில் உள்ள அவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைப் பார்த்த அந்த பகுதியினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அக்கம் பக்கம் பரவ விடாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர் . ஆனாலும் அதற்குள் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்து குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சேலம் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் இரும்பாலை ரோடு தளவாய்பட்டி பகுதியில் இயங்கி வருகிறது.
- இந்த அலுவலகத்தில் வருகிற 10-ந்தேதி மாதாந்திர குறைதீர்கூட்டம் நடைபெறுகிறது.
சேலம்:
சேலம் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் இரும்பாலை ரோடு தளவாய்பட்டி பகுதியில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வருகிற 10-ந்தேதி மாதாந்திர குறைதீர்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதி ெதாடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தங்களது பெயர் , நிறுவன முகவரி, வருங்கால வைப்பு நிதி எண், யு.ஏ.என். மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்போன் எண் ஆகிய விபரங்களை நாளை மறுநாள் (9-ந்தேதி) -க்கு முன்னதாக இந்த அலுவலகத்தின் மக்கள் ெதாடர்பு அதிகாரிக்கு தெரியப்படுத்தவும் அல்லது ro.salem@epfindia.gov.in என்ற மின்னஞ்சலில் பதிவு செய்யலாம். இந்த தகவலை சேலம் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் டாக்டர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.






